You are here
Home > செய்திகள் > அடியவர் குழாத்திற்கு மு.பெ.சத்தியவேல் முருகனின் அருந்தமிழ்ப் பகிர்வு பெரியபுராணம் – முருகநாயனார்

அடியவர் குழாத்திற்கு மு.பெ.சத்தியவேல் முருகனின் அருந்தமிழ்ப் பகிர்வு பெரியபுராணம் – முருகநாயனார்

     இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று ஒளவையார் கூறியபோது யாரும் கேட்கவில்லை. இப்போது ஒரு கிருமி சொன்னால் உலகமே கேட்டு தனிமையில் முடங்கிக் கிடக்கிறது. ஒளவையார் சொன்ன தனிமை இனிமை உடையது. கிருமி துரத்தும் தனிமை இனிமையானதல்ல. விடிவிற்கு ஏங்குகிறோம். தனிமைக்கு இனிமையை அளிக்கக் கூடியது தமிழ் தான்! ‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்’ என்பர். எனவே இந்தத் தனிமையை இனிமையாக்கப் பெரியபுராணச் சேக்கிழாருடன் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறேன். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நம் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

     பெரியபுராணத்தில் முருக நாயனாரை எனக்கு சேக்கிழார் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். தமிழின் இனிமையை எல்லாம் பிழிந்து கொடுக்கிறார். ஆ! அதை என்னென்று விவரிப்பேன்!

  முருக நாயனார் தலைகீழாக நின்று கடுந்தவம் செய்து கடவுளை அடைந்தவர் அல்லர். அவர்செய்த முயற்சியின் எளிமையே எளிமை! ஒன்றுமில்லை! நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறித்து வந்து விதவிதமான மாலை கட்டி ஆண்டவனுக்கு அணிவிப்பார். இதுக்கு போய் தமிழ்நாட்டுக் கடவுள் முத்தியை வாரி வழங்கிவிட்டாராம்! சரி, அது ஒரு புறம்! அதனால் தான் அவருக்கு பித்தன் என்று பேர் வந்தது போலும்!

     இனி! முருக நாயனார் பூக்களை பறிக்கிறார் என்று சேக்கிழார் விவரிக்கிறார். அங்கே தான் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.

பூக்களில் நாலுவகை !  1) கோட்டுப் பூ 2) கொடிப் பூ 3) நிலப் பூ  4) நீர்ப் பூ

     இவற்றில் முதல் மூன்றும் நிலத்தோடு தொடர்புடையவை நாலாவது நீரில் பூக்கும் பூ. எனவே நிலவகைப் பூக்களைப் பறிப்பதற்கு ஒரு பாட்டு; நீர்ப்பூவைப் பறிப்பதற்கு ஒரு பாட்டு. நிலப்பூவைப் பறிப்பதற்கான பாட்டு இதோ!

நண்ணும் இசைதேர் மதுகரங்கள்
        நனைமென் சினையின் மருங்கலைய
வண்ண மதுரத் தேன்பொழிவ
        வாச மலர்வா யேயல்ல
தண்ணென் சோலை எம்மருங்கும்
        சாரும் மடமென் சாரிகையின்
பண்ணின் கிளவி மணிவாயும்
        பதிகச் செழுந்தேன் பொழியுமால்

     மதுகரம் என்றால் வண்டு. வண்டுகள் ரீங்காரம் இடுகின்றன. தமிழ்நாட்டு வண்டுகள் சும்மா ரீங்காரம் இடவில்லையாம்! எது சிறந்த இசை கொடுக்கும் பண் என்று தேர்ந்து அதற்குச் சுருதி போல் ரீங்காரம் இடுகின்றனவாம். அது கேட்டு ஓரறிவு உயிரான செடியின் மலரின் மொக்குகள் மெல்ல விரிகின்றனவாம். அதற்கு நனை என்று தமிழில் பெயர். அது மலர்ந்தும் மலராது மலரத் தொடங்கும் நிலை. அந்நிலையில் வண்டுகள் சுற்றிச் சுற்றி எங்கனும் ரீங்காரம் செய்ய மலர் இதழ்கள் அதனுடன் அலைகின்றன. அலைவதால் மலரின் தேன் ஒழுக ஆரம்பிக்கிறதாம். நனை எனப்படும் மலரின் பக்கங்கள் பாட்டுக் கேட்டு கேட்டு விரிய மலரின் சொத்தாகிய தேன் பொழிகிறதாம்! இது பாடலைக் கேட்டு மலர் கொடுத்த பரிசு என்க.

     இது மட்டுமல்ல என்பதனை, தேன் பொழியும் மலர் வாயே அல்ல என்றார். அடுத்து வேறு என்ன?

     இது சோலையில் நடக்கிறது என்கிறார். சோலை என்றால் மேலே வண்டின் பண்ணிசைந்த ரீங்காரத்திற்குப் பரிசாக தனது தேனைக் கொடுத்த மலர்கள் நிலத்தில் உள்ள கோட்டுப் பூ, கொடிப் பூ, நிலப் பூ என்ற வகைகளைச் சேர்ந்தவை; அவை பாட்டு கேட்டுப் பரிசளிக்கின்றனவாம்! பாட்டு கேட்டால் பரிசளிக்க வேண்டும். ஓரறிவுயிரான மலரே பரிசளிக்கின்றதே! என்ன ரசனை அதற்கு! ஆனால் நம் ஆட்களோ பாடறயா ஓடறேன் நான் என்கிறார்கள் சிலர்!

  அடுத்து அது சோலை அல்லவா? அதனால் சோலையில் பறவைகள் இருக்குமே! அப்பறவைகளில் இரண்டு, கற்றுக் கொடுத்ததைத் திருப்பிச் சொல்லும் ஆற்றல் உடையவை. ஒன்று கிளி; மற்றது நாகணவாய்ப் பறவை என்று பழந்தமிழ் இலக்கியங்களில் வரும் பூவை (அ) மைனா. சில மேலை நாடுகளில் இதனைச் சிண்ட்ரெல்லா என்பர்.

     இந்தச் சோலையில் இறைவனுக்குத் தொடுக்க மலர் பறிக்க அடியார்கள் வருகிறார்கள். அந்த அடியார்களின் பத்தி வயத்தால் அவர்கள் திருமுறைப் பதிகங்களைப் பாடிக் கொண்டே வருகிறார்கள். அதைக் கேட்டுக் கேட்டுக் கேட்டதைப் பாடும் மைனாக்கள் தாமாகப் பாடிக் கொண்டிருக்கின்றனவாம். மைனாவிற்கு இன்னொரு பெயர் சாரிகை. ஆக இந்தச் சாரிகைகள் பண்ணோடு பதிகங்களைக் கேட்டுப் பாடிக் கொண்டு இருக்கின்றனவாம்! அது கேட்பதற்குத் தேனாக இருக்கிறதாம்!

    ஆக, வண்டுகள் ரீங்காரமாகிய சுருதி கூட்ட, சோலையில் உள்ள மைனாக்கள் பதிகமாகிய தேனைப் பொழிய, நல்ல சுருதியில் நல்ல பண்ணில் பதிகங்களைக் கேட்டு ஓரறிவுயிராகிய மலர்கள் தன வயமிழந்து தேனைப் பரிசாக அளிக்கிறதாம்! மைனா பொழிவது பதிகத்தேன்; மலர் பொழிவது மதுரத்தேன்! ஒன்று சொற்சுவைத் தேன்; மற்றது நாச்சுவைத் தேன்!

      ஆ! கேட்பதற்கு நன்றாக இருக்கிறதே! அப்புறம் ?

     அப்புறம் என்ன ? முருக நாயனார் சோலைக்குள் வருகிறார். அவர் வாய் எப்போதும் பதிகத்தை ஓதிக் கொண்டே இருக்குமாம்! “பதிகம் திகழ்தரு பஞ்சாக்கரம் பயில் நாவினன்” என்று அவரைக் கூறுவர். நம்பியாண்டார் நம்பி அப்படித்தான் அவரைச் சொல்கிறார்.

     ஆனால் இது என்ன ஆச்சர்யம்! சோலைக்குள் மலர்ச் செடிகள் முன் வந்து நிற்கும் முன் அவர் வாயைக் துணியினால் கட்டிக் கொள்கிறார். அப்படித் தான் பூவைப் பறிக்க வேண்டும் என்று புட்ப விதி என்ற நூல் சொல்கிறதாம். இறைவனுக்கு ஆகும் பூவில் தவறி எச்சில் பட்டு விடக்கூடாதாம்!

     அதனால் என்ன? அவர் பாடும் பதிகங்களைத் தான் அங்கே மைனாக்கள் பாடிக்கொண்டு இருக்கின்றனவே! அதனால் தானே நிலப்பூக்கள் எல்லாம் தேன் தந்தன!

       இப்போது முருக நாயனார் சோலையைத் தாண்டி உள்ளே உள்ள பொய்கைக்குப் போகிறார். அங்கே நீர்ப்பூவான தாமரையை பறிக்க வேண்டும். அவர் தாமரையைப் பறிக்கும் போது என்ன நடந்ததாம்? சேக்கிழார் கூறுகிறார்.

வண்டு பாடப் புனல்தடத்து
      மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகையவிழ்ந்த
     குளிர்பங் கயங்க ளேயல்ல
அண்டர் பெருமான் திருப்பாட்டின்
     அமுதம் பெருகச் செவிமடுக்குந்
தொண்டர் வதன பங்கயமுந்
     துளித்த கண்ணீர் அரும்புமால்

     முன்னே வண்டு பாட நிலப்பூக்கள் எப்படி மலர்ந்தனவோ அப்படியே நீர்ப் பூவாகிய தாமரையும் மலர்ந்ததாம். அதே சூழல் தானே! எனவே வண்டு சுருதி கூட்டி ரீங்காரம் செய்கின்றன. உடன் மைனாக்கள் பதிகங்களை பண்ணோடு தேனாகப் பொழிந்து கொண்டிருக்கின்றன.

  இதைக் கேட்டு கடினமான நிலத்தில் பூக்கும் பூக்களே மனமகிழ்ந்து மதுரத்தேனைப் பொழிகின்றன என்றால் தாராளமான நீர்குளத்தில் பூக்கும் தாமரை தேனைப் பொழியாதா? அதிலும் தாமரை பெரிய பூ! எனவே தாமரை ஏராளமான தேனைப் பொழியுமல்லவா ? ஆம் ! அப்படித்தான் பொழிந்ததாம்!

     ஆ! இது என்ன! நிலப்பூக்களில் காணாத ஒன்று இங்கே காணப்படுகிறதே! ஆம்! பதிகங்களை மைனாக்கள் பாடக் கேட்டுப் பரிசாக தாமரை ஏனைய மலர்களை போல, இன்னும் அவைகளை விட ஏராளமாகத் தேனைப் பொழிவதோடு பதிகங்களைக் கேட்டு உருகி கண்ணீர் வடிக்கின்றதாம்! தாமரை இலைத் தண்ணீர் என்பார்களே, அது போல நீர்த்துளிகள் தாமரை இதழ்களின் மேல் பட்டு முத்து முத்தாகச் சொரிவது அவை கண்ணீர் விடுவது போல தெரிகிறதாம்!

   அதை பார்த்த முருக நாயனாரின் தாமரை போன்ற முகமும் கண்ணீர் வடித்ததாம்! நிலப்பூக்களில் பதிக ரசனையைத் தான் கண்டோம் இங்கே தாமரையாகிய நீர்ப் பூ உருகி கண்ணீர் வடிப்பதையும் காண்கிறோம். ஓரறிவுயிராகிய தாமரை மலரே பதிகத்தை ரசிப்பதுடன் உருகி கண்ணீர் வடிக்கிறதே என்று பார்த்த முருக நாயனார் இதுவல்லவா பத்தி என்று நினைத்த மாத்திரத்தில் அவருடைய தாமரையாகிய முகத்திலும் கண்ணீர் சொரிய ஆரம்பித்ததாம்!

    அடடா! என்ன அழகான காட்சிகள்! இப்படிப் பத்தியில் திளைத்த பூக்களைத் தான் முருக நாயனார் பறித்துக் கோர்த்துத் தொடுத்து மாலையாக்கி இறைவனுக்கு அணிவித்தாராம்! அதனால் தான் அவர் முத்தி பெற்றார் போலும்!

        (இது மாதிரி ஒரு பாடலை வேறு காவியத்தில் காட்டுங்கள் பார்ப்போம்)

இவண் 
செந்தமிழ் வேள்விச் சதுரர், 
முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top