சிற்றம்பல அன்பர்: ஐயா! இடையிலே தாங்கள் வெளியூர் சென்றுவிட்டீர்கள்! எனவே சிற்றம்பலம் வெற்றம்பலமாக இங்கே வெறிச்சோடி இருந்தது. இப்போது தாங்கள் வந்தவுடன் சிற்றம்பலம் களை கட்டி விட்டது. நாங்களும் சில சமயத் தத்துவங்களை நாங்களாகவே படித்து நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டோம். எனவே இப்போது கேள்விக் கணைகளோடு காத்திருக்கிறோம். வழக்கம் போல் அன்பர்களுக்குப் பதிலியாக நானே கேள்விகளை முன் வைக்கிறேன்.
அறிவாகரர்: சுவையான உணவு படைக்கும் போது இடையில் இலையில் ஊறுகாயும் வைப்பார்கள். பல சுவைகளுக்கிடையே ஊறுகாயைத் தொட்டுக் கொண்டால் அடுத்து உணவை எடுத்துக் கொள்ளும் போது சுவை கூடிவிடும். ஆக இடைவேளையும் நல்லது தான். தங்களின் சுவையான கேள்விகளுக்காகக் காத்திருக்கிறேன்.
சிற்றம்பல அன்பர்: உலக வழக்கில் சமய நூல்களை எல்லாம் கற்ற ஒருவரை அறிமுகப்படுத்தும் போது இவர் வேத வேதாந்தங்களை எல்லாம் கரைத்துக் குடித்தவர் என்று கூறக் கேட்டிருக்கிறோம். வேதங்களைப் பற்றி ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டீர்கள். வேதாந்தங்கள் என்பன யாவை?
அறிவாகரர்: வேதத்தின் அந்தத்தை வேதாந்தம் என்பர். இங்கே சொல்லப் படுகிற வேதத்திற்கும் தமிழ் வேதத்திற்கும் தொடர்பில்லை. இங்கே சொல்லப் படுபவை வடவேதங்கள் தாம். இவ்வாறு வேதாந்தம் என்று கூறப்படுபவை நான்கு. அவை: 1) சங்கர வேதாந்தம் 2) இராமாநுச வேதாந்தம் 3) மத்துவ வேதாந்தம் 4) உபநிடதங்கள். இவற்றில் உபநிடதங்களைப் பற்றி ஏற்கெனவே ஓரளவிற்கு இதே அம்பலத்தில் சொல்லி இருக்கிறேன். எனவே இப்போது ஏனைய மூன்று வேதாந்தங்களைப் பற்றிச் சிந்திக்கலாம். அவற்றிலும் முதலாவதாக சங்கர வேதாந்தத்தைப் பற்றிச் சிந்திப்போம்.
சிற்றம்பல அன்பர்: நீங்கள் சொன்ன மூன்று வேதாந்தங்களும் ஒரு புறம் இருக்கட்டும். வறட்டு வேதாந்தம் என்று உலக வழக்கில் சொல்கிறார்களே, அது என்ன? அது நாலாவதா?
அறிவாகரர்: இல்லை. சங்கர வேதாந்தம் தான் வறட்டு வேதாந்தம் எனக் கூறப்படுவது. அது எந்த அளவிற்கு உலக வழக்கில் பதிந்து போன கருத்து என்றால், வேதாந்தத்தைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாத கவிஞர் கண்ணதாசன் இந்த உலக வழக்கை உள்வாங்கி “தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம்” என்று ஒரு திரைப்படப் பாடலிலேயே பாடி விட்டார்.
சிற்றம்பல அன்பர்: அதை ஏன் வறட்டு வேதாந்தம் என உலகம் கூறியது?
அறிவாகரர்: நாம் கண்ணெதிரே காணும் உலகை அது மறுக்கிறது. இந்த உலகம் உண்மை அல்ல; இது ஒரு தோற்றம்; எல்லாம் மாயை எனக் கூறுகிறது சங்கர வேதாந்தம். எனவே தான் உலகத்தினர் இதை வறட்டு வேதாந்தம் என்று பெயர் சாற்றினர்.
சிற்றம்பல அன்பர்: வேதமும் அந்தமும் சேர்ந்தது வேதாந்தம் என்றீர்கள். இதில் வேதம் எவை என்றும் தெளிவுபடுத்தினீர்கள். அந்தம் என்பதைத் தெளிவுபடுத்தினீர்களானால் மேலும் தெளிவு ஏற்படும்.
அறிவாகரர்: உண்மை தான். இங்கே அந்தம் என்ற சொல் இரண்டு பொருள்களிலே பயன்படுகிறது: 1) இறுதி 2) சாரம். வடமொழி வேதங்களைப் படிப்பவர்கள் முதலில் இரிக், யசுர், சாமம், அதர்வணம் என்பனவற்றைப் படிப்பார்கள். பிறகு அவர்கள் படிப்பது பிராமணங்கள். இவை காட்டிலே மந்திரங்களை உச்சரிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய கிரியைகளை எடுத்துக் கூறுவன. அதன் பின் கிரியைகளை மறுக்கும் உபநிடதங்கள் எழுந்தன. அதனால் வேதத்தின் வரிசையில் இறுதியான உபநிடதங்கள் வேத அந்தம் எனப்பட்டன. இதனால் வேதம் என்ற சொல்லால் வேதம், பிராமணம், உபநிடதம் ஆகிய மூன்றையும் குறிப்பிடுவதும் உண்டு.
சிற்றம்பல அன்பர்: ஓ! இதனால் தான் பாம்பன் சுவாமிகள் உபநிடத வாக்கியங்கள் சிலவற்றைச் சொல்லி இப்படி வேதம் சொல்கிறது என்று தமது உரைகளில் கூறி இருக்கிறாரா?
அறிவாகரர்: ஆமாம். ஆனால் அது சரியல்ல. அந்த வாக்கியங்கள் வேதத்தில் இருக்காது. அதோடு அவை வேதங்களுக்கு முரணானவையும் கூட. ஆரியர்கள் பொதுவாக இப்படிக் கூறுவதற்கு எதையும் அறிவால் அலசிப் பார்க்கும் பாம்பன் சுவாமிகளும் இரையாகி விட்டது நம் தவக்குறை எனலாம். இது இளம் வயதில் வடமொழி வேதங்களை சில பிராம்மணர்களிடம் அவர் பயின்றதே காரணமாக இருக்கலாம். இந்த வழக்கம் பாம்பன் சுவாமிகள் மட்டுமன்று; 18-ஆம் நூற்றாண்டிலிருந்து பல அறிஞர்களால் தொடரப்படும் தவறான வழக்கம் எனலாம்.
சிற்றம்பல அன்பர்: அப்பா! ஒரு பெரிய சிக்கலை அவிழ்த்து விட்டீர்கள்! சில சைவ அறிஞர்களே வேதத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று மேற்கோள் காட்டும் போது மலைத்துப் போவோம்.
அறிவாகரர்: ஆமாம், ,இந்த மலைப்பிற்குக் காரணம் அக்காலங்களில் எல்லாம் வேதங்கள் வாய்மொழியாகவே மேற்கோள் காட்டப்பட்டு வந்தனவே ஒழிய அச்சில் ஏறவில்லை. ஒத்திட்டுப் பார்ப்பதற்கு மூலபாடங்கள் அச்சில் இல்லாத காரணத்தால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லி இது வேதத்தில் வருகிறது என்று சொல்லலாம் என்று அவரவர்க்குச் சௌகரியமான நிலைமை இருந்தது. கேட்டவர்கள் அது அப்படி இருக்குமோ என்று மலைக்க வேண்டி இருந்தது. மேற்கோள் காட்டுபவர்கள் எவ்வித சரி பார்ப்புக்கும் ஆளாகாமல் புளுகியும், புனைந்தும் கூற முடிந்தது.
இதைத் தான் தாயுமானவர் சரியாக எடுத்துக் காட்டினார். தமிழில் ஒருவர் ஒரு பெரிய கோட்பாட்டை விளக்கினால், உடனே வேறொருவன் இது வடமொழியில் இருக்கிறது என்று ஒரு சுலோகத்தை மேற்கோள் காட்டுவான். தமிழில் சொன்னவன் அப்படியே மலைத்துப் போவான். வடமொழியில் ஒருவன் விளாசிக் கொண்டிருந்தான்; அங்கே தமிழில் இது இருக்கிறது என்று ஒரு தமிழ்ப் பண்டிதர் சண்டைக்குப் போவார். இதெல்லாம் சரிபார்ப்புக்கு ஆளாகாமல் வெறுமனே பிறரை வெருட்ட – மலைக்க வைக்கப் பயன்படும் உத்திகள் என்று தாயுமானவர் சரியாக எடுத்துக் காட்டியுள்ளார்.
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
கற்றும் அறிவில்லாத என்
கர்மத்தை என் சொல்கேன் மதியை என்சொல்கேன்
கைவல்ய ஞானநீதி
நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியமென்று
நாட்டுவேன் கர்மமொருவன்
நாட்டினாலோ பழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன் வடமொழியிலே
வல்லான் ஒருத்தன்வர வுந்த்ராவி டத்திலே
வந்ததா விவகரிப்பேன்
வல்லதமிழ் அறிஞர்வரின் அங்ஙனே வடமொழியில்
வசனங்கள் சிறிதுபுகல்வேன்
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த
வித்தைஎன் முத்திதருமோ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே!
ஆனால் இன்று நிலைமை வேறு. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேதங்களும் உபநிடதங்களும் ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு அச்சேறிவிட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரசீகத்திலும், இலத்தீனிலும், ஜெர்மனிலும் ஏற்கெனவே அச்சிடப்பட்டு வெளியான பின் இருபதாம் நூற்றாண்டில் கிரிஃபித் என்பவராலும் தமிழில் எம்.ஆர்.ஜம்புநாத ஐயர் என்ற சமஸ்கிருத விற்பன்னராலும் வேத மந்திரங்களின் சில பகுதிகள் மந்த்ரப்ரச்சனம் என கடலங்குடி நடேச ஐயராலும் மனுஸ்மிருதி பி.ஸ்ரீ., சுவாமி போன்றவர்களால் பலவேறு பதிப்பகங்களாலும் வெளியிடப்பட்டு விட்டன. அலைகள் வெளியீட்டகம் நான்கு வடமொழி வேதங்களின் ஆங்கில மற்றும் தமிழ் மொழி பெயர்ப்புகளையும் ஒன்றாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
இவையெல்லாம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தலைமுறை அறியாதவை. எனவே வேதம் இதைச் சொல்லி இருக்கிறது என்பதை இன்று சரிபார்த்து விடலாம். அன்று இது முடியாது இருந்தது. எனவே பல தமிழறிஞர்கள் அன்று தவறு செய்ய நேர்ந்தது. சரி பார்க்காமலே ஒன்றை ஏற்க வேண்டியதை அதனால் தான் அது வேத வாக்கு என்று சொல்லும் வழக்கமும் நிலவியது.
ஆகவே, வேதம், பிராம்மணம், உபநிடதம் ஆகிய மூன்றையும் வேதம் என்றே பொதுவாகக் குறிப்பிடுவது இன்று ஏற்கத் தக்கது அல்ல.
சிற்றம்பல அன்பர்: ஐயா! இதன் பின்னணியில் இவ்வளவு தகவல்கள் இருக்கின்றனவா? கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. கண்கட்டு விலகியது போல உணர்கிறோம்.
அறிவாகரர்: இனி வேத வரிசையில் இறுதி என்ற பொருளில் வருகிற வேதாந்தமான உபநிடதங்களும் ஒன்றிற்கொன்று முரணாக இருந்ததால் பல ஐயங்களுக்கு இடம் தந்தன. இதனைப் புகழ் பெற்ற தத்துவ இயல் பேராசிரியர் கி.இலட்சுமணன் இப்படி அவரது நூலில் குறிப்பிடுகிறார்: ”உபடநிடதங்கள் கூறுவனவற்றிலே தெளிவு காணப்படவில்லை. தெளிவு காணப்படாமை மட்டுமன்று; ஒன்றுக்கொன்று முரணான பல வசனங்களும் அங்கு காணப்படுகின்றன. வேத உபநிடதங்களில் காணப்படும் முரண்பாடுகளை நீக்கி ஒருமைப்பாடு காண்பது மிக அவசியமாயிற்று. இக்கைங்கரியத்தில் முதன் முதலில் ஈடுபட்ட பெருமை பாதராயணர் என்பவருக்கே உரியது. வியாசர் எனப்படுபவரும் அவரே எனச் சிலரும், அவர் வேறு; வியாசர் வேறு எனச் சிலரும் கூறுவர். அவரே வேதாந்தம் என்ற சொற்றொடரையும் முதன் முதல் உருவாக்கினார் என்று தோன்றுகிறது. அவர் ஆக்கிய நூலின் பெயர் வேதாந்த சூத்திரம் எனப்படும். ’பிரம்ம சூத்திரம்’ எனப்படுவதும் இதுவே.”
இதிலிருந்து ஒன்று கிளைத்தது தெரிகிறது. இதுவரை அந்தம் என்பது இறுதி என்ற பொருளிலிருந்து மாறி சாரம் என்ற பொருளுக்கு ஏற்றம் பெற்றது. பிரம்ம சூத்திரம் வேதத்தின் அதாவது உபநிடதத்தின் சாரம் எனப் பொருளையும் பெற்றது.
அந்தச் சாரமான பிரம்ம சூத்திரத்திற்கும் விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. அந்த விளக்கமும் வேதாந்தம் என்றே கூறப்பட்டது. விளக்கம் சொன்னவர்களில் முக்கியமானவர்கள் மூன்று பேர்: 1) ஆதி சங்கரர் 2) இராமாநுசர் 3) மத்வர். இவர்களது விளக்கங்கள் இவர்களது பெயரிலேயே வேதாந்தம் என்று வழங்கப்பட்டன. அந்த வேதாந்தங்களில் ஒன்று தான் சங்கர வேதாந்தம். அதைத் தான் இப்போது நாம் அலச இருக்கின்றோம்.
தொடரும். . .