You are here
Home > சேய்த்தொண்டர் > சேய்த்தொண்டர் புராணம் – அருணகிரிநாதர் – செந்தமிழ் மாருதன்

சேய்த்தொண்டர் புராணம் – அருணகிரிநாதர் – செந்தமிழ் மாருதன்

‘இளந்தமிழன் செழுங்கொண்டல் என உலகம் பரவும்

எம்பெருமான் அருணகிரி நாதர்க்கும் அடியேன்’

                                    – சேய்த்தொண்டத் தொகை

முருகனடியார் என்றாலே நம் கண்முன் நிற்பவர் அருணகிரிநாதர் தான் என்பதை எல்லோரும் ஒப்புவர். இறைவனைப் புகழ்ந்து பாடுவது அனைத்துமே திருப்புகழ் தான்.

சுந்தரர் தாம் பாடிய பதிகங்களைத் திருப்புகழ் என்றே கூறினார்.

“தேடிய வானோர் சேர்திரு முல்லை

வாயிலாய் திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே”

என்பது அவரது வாக்கு. எனவே இறைவனைப் பாடியதெல்லாம் திருப்புகழ் என்றாலும் அது பொதுச்சொல். ஆனால் திருப்புகழ் என்றால் அது சிறப்பாக அருணகிரியார் பாடிய பாடல்களையே தமிழ் கூறும் நல்லுலகம் குறிப்பிடுவது யாவரும் அறிந்ததே.

முருகப்பெருமானால் நேரடியாக உய்மொழி (உபதேசம்) மந்திரம் ஓதப் பெற்றவர்கள் மூன்று பேர் என்று முருகர் அந்தாதி கூறுகிறது. பாடல் வருமாறு:

வேலா சரணம் சரணம் என்மேல் வெகுளாமல் இனி

மேலாயினும் கடைக்கண் பார்பருப்பத வேந்தன்மகள்

பாலா குறுமுனி யார்க்கும் திருப்புகழ்ப் பண்ணவர்க்கும்

ஆலால உண்டவர்க்கும் உபதேசித்த என் ஆண்டவனே!

குறுமுனி – அகத்தியர்; ஆலாலம் உண்டவர் – சிவபெருமான்; திருப்புகழ் பண்ணவர் – அருணகிரி நாதர்.

இதனை வாரியார் சுவாமிகள் இப்படிச் சிறப்பாக விளக்கி அருள்வார்: முருகன் ஏன் இப்படி மூன்று பேர்க்கு மட்டும் உய்மொழி நேரடியாக நல்கினாராம்?

பேசப்படும் கடவுளர் பலரில் உண்மைக் கடவுள் – சிவபெருமான்

பேசப்படும் முனிவர்கள் பலரில் சிறந்தவர் – அகத்தியர்

பேசப்படும் மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவர் – அருணகிரிநாதர்.

எனவே வகைக்கொன்றாகத் தேர்ந்தெடுத்து முருகன் நேரடியாக உய்மொழி நல்கினானாம்.

இவ்வாறாக மனித இனத்தில் இதுவரை தோன்றிய மனிதர்களில் எல்லாம் தலைசிறந்தவர் என்று முருகப் பெருமானால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அருணகிரிநாதர் என்றால் அவருடைய பெருமைக்கும் விழுமைக்கும் இதற்கு மேல் ஒரு சான்று கூற வேண்டுமா என்ன?

சிலர் இப்படிச் சொல்வது ரொம்ப மிகை என்று சிலர் கூறக் கூடும். அல்லது, கூறாமல் நழுவினாலும் நினைக்கக் கூடும். அகத்தியரை விடவா அருணகிரியார் பெருமை உடையவர் ? முனிவர்களும் மனிதர்கள் தாமே! அப்படியிருக்க மனிதர்கள் அனைவரிலும் அருணகிரியார் சிறந்தவர் என்பது எப்படி சரியாகும்?

அட, போங்காணும்! அகத்தியர் என்ன பெரிய அகத்தியர்? சிவபெருமானை விடவும் அருணகிரியார் சிறந்தவர் தெரியுமா? என்கிறார் ஒருவர். இது மிகையிலும் மிகை! அநியாயத்திலும் அநியாயம்! என்று கூறுவதற்கு முன் இப்படிச் சொன்னவர் யார் என்று சற்றுத் திரும்பிப் பாருங்கள்! அட! தாயுமானவர்!! ஆம், அவர் தான் இப்படிக் கூறியவர்!

ஐயா! அருணகிரி அப்பா உனைப்போல்

மெய்யாக ஓர்சொல் விளம்பினர்யார் – வையகத்தோர்

சாற்றரிதுஎன் றேசற்றார் தன்னையாய் முக்கண் எந்தை

நாற்றிசைக்கும் கைகாட்டி னான்!

தாயுமானவர்

‘உடல் பொய்யுறவு’ என்ற தலைப்பில் வரும் 83 பாடல்களில் தாயுமானவர் பாடியது இந்தவொரு பாடல்.

பலவேறு வேத நூல்களையும் ஞான நூல்களையும் கரைத்துக் குடித்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற சனகாதி முனிவர்கள் நால்வரும் உய்யுநெறியை உண்மைநெறியைத் தேடி அலைந்து இறுதியில் சிவபெருமானை வந்தடைந்தார்கள். அவர்களுக்கு உண்மை நெறியை உபதேசிக்கிறேன் என்று ஓர் ஆலமரத்தடியில் தெற்கு பார்த்து அமர்ந்தார் சிவபெருமான். கைகட்டி வாய் பொத்தி நால்வரும் அவரடியில் அமர்ந்து ஏதோ சொல்லப் போகிறார் என்று ஆயத்தமானார்கள். சிவபெருமான்,

‘நன்னல மைந்தர்காள் ஞான போனகம்

சொல்நடை யன்றது . . . ’                        – கந்தபுராணம்

என்று கூறிக் கையை வீசி மெளனமான சின்முத்திரையைக் காட்டினார்.

அட! ஏதோ சொல்லப் போகிறார் என்று ஆவலாகக் காதைத் தீட்டிக் கொண்டு அமர்ந்தால், இவர் அதெல்லாம் சொல்ல முடியாது என்று கையால் ஏதோ சைகை காட்டுகிறாரே, என்று முனிவர்களும் முனிவர்கள் வழியாக நாமும் தெரிந்து கொள்ளலாம் என்று காத்திருந்த உலகர் அனைவர்க்கும் ‘சப்’ என்று ஆகிவிட்டதாம்!

இதெல்லாம் நடந்து பல யுகங்கள் கடந்து போயின. அப்புறம் அருணகிரிநாதர் வந்தார். முருகன் அவர்க்கு உபதேசித்தான். அதை உலகத்தவர்க்கு அருணகிரியார் மறைக்க நினைக்கவில்லை. முருகன் உபதேசித்தது வேறு எதுவுமில்லை என்று அருணகிரியார் அதைச் சொல்லட்டுமா எனத் தொடங்கினார். அவ்வளவு தான்! ஆன்றோர் பெருமக்களுக்கு ஒரே ஆர்வம்! அதுவா இதுவா என்று தொளைக்க ஆரம்பித்து விட்டனர். இல்லையப்பா! நீர் சொல்வதெல்லாம் இல்லை என்று நிறுத்தினார்.

தேனென்று பாகென்று உவமிக் கொணா மொழித் தெய்வவள்ளிக்

கோனன்று எனக்கு உபதேசித்தது ஒன்றுண்டு கூறவற்றோ

வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று

தானன்று நானன்று அசரீரி யன்று சரீரியன்றே – கந்தரலங்காரம்.

இந்தக் கூட்டத்தில் தாயுமானவரும் இருந்தார் போல் இருக்கிறது. முருகன், உங்களுக்கு உபதேசித்தது என்னவென்று கேட்டால் இவர் என்னவோ, ஒரு மண்ணுமன்று என்கிறாரே என்று மனதுக்குள் நொந்து கொண்டார்கள். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு மண்ணுமன்று என்று நான் சொன்னது முருகன் சொன்னதையல்ல; நான் அப்படிச் சொல்வேனா? நான் சொன்னது நீங்கள் எல்லாம் சொன்ன ஒரு மண்ணுமன்று என்று தான் சொன்னேன் என்றார்.

“அப்படியானால் முருகன் என்ன தான் சொன்னான் என்று கேட்கிறீர்களா?” ‘ஆம், ஆம்!’ என்று மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. ‘வள்ளிச் சன்மார்க்கம்!’ என்றார். ‘அப்படியென்றால்?’ என்றது கூட்டம்.

அருணகிரியார், ‘சும்மா இரு!’ என்றார். எல்லாரும் அவர் அதட்டுகிறார் போலும் என்று அடங்கினார்கள். அருணகிரியார் சிரித்துக் கொண்டே மீண்டும் சொன்னார்: “சும்மா இரு! சொல்லற!” இதைத் தான் முருகன் எனக்கு உபதேசித்தார் என்று எடுத்துக் கூறினார்.(கந்தரநுபூதி) இது கேட்பதற்கு எளிதாய் இருக்கிறது அல்லவா? ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதனுள்ளே அடங்கி இருப்பது ‘அம் மாபொருள்’ தானே விளங்கும் என்றார்.

“இதைக் கடைப்பிடித்தால் மெய்நெறி தானே வசப்படும். இதை விட்டுவிட்டு தாடி வளர்த்து காவி உடுத்து காட்டிற்குப் போய் தவம் அது இது என்று அவமே சிரமப்படாதீர்கள்! வீட்டின்பத்தைப் பெறுவது மிக எளிது! மூச்சை எல்லாம் அடக்க வேண்டுயதில்லை” என்று அம் மாபொருளை மேலும் விளக்கினார்.

துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்து

அருத்தி உடம்பை ஒறுக்கில் என்னாம் சிவயோகம் என்னும்

குருத்தை அறிந்து முகம்ஆறுடைக் குருநாதன் சொன்ன

கருத்தை மனத்தில் இருத்தும் கண்டீர் முத்தி கைகண்டதே!

– கந்தரலங்காரம்

இதைக் கேட்டுத் தான் போலும் தாயுமானவர் ‘ஐயா! அருணகிரி அப்பா! உனைப் போல் மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்?’ என்று வியந்து வியந்து பாடினார். எத்தனை பேர், இப்படி மூச்சை இழுத்து இவ்வளவு நேரம் என்று கணக்கெல்லாம் போட்டு மூச்சு முட்ட நிறுத்தி விபரீத ராஜயோகம் என்றெல்லாம் யோகம் இருந்து உடம்பை இப்படியும் அப்படியும் முறுக்கி உட்கார்ந்து கொண்டு இறைவனை அடையலாம் என்று கற்ப கோடி காலம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! அருணகிரியார் வந்தார், அதிலெல்லாம் ஒரு மண்ணுமில்லை, ‘சும்மா ,இரு! சொல்லற’ என்று அம் மாபொருளை விளக்கி வீட்டில் புகுதல் மிக எளிதாக சொல்லால் சொல்லி விளங்க வைத்து விட்டாரே! என்று எண்ணிப் பார்க்கிறார், தாயுமானவர்! இப்படி தென்முகக் கடவுளான சிவபெருமான் கூட சொல்லவில்லையே! அவர் அதைச் சொல்ல முடியாதென்று கையை அல்லவா காட்டி விட்டார்!

சில சங்கீத வித்துவான்கள் மேல் ஸ்தாயிக்குக் குரலை உயர்த்துவார்கள். அவர்கள் நினைத்த படி மேல் ஸ்தாயிக்கு எட்ட முடியாத படி மேலே கையை ஆட்டி விட்டுப் போவார்களே அப்படியல்லவா சிவ பெருமான் கையை ஆட்டிக் காட்டி விட்டு மௌனியானார்! அப்படியானால் சிவபெருமானை விட அருணகிரியார் மேலானவர் தானே என்று விளக்குகிறார் தாயுமானவர், தான் பாடிய வெண்பாவில். அதாவது வையகத்தார் சாற்றரிது என்று ஏசற்றார், தன்னை ஆய் முக்கண் எந்தை நாற்றிசைக்கும் கை காட்டினார்; ஆனால் ஐயா! அருணகிரி அப்பா! உனைப் போல் மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்? என்று மிக நயம்பட அருணகிரியாரின் பெருமையை எடுத்துக் கூறினார்.

இனி, அகத்தியரோ சிவபெருமானுக்குச் சமம் என்று புராண கதைகள் கூறுகின்றன. ‘சிவனை நிகர் பொதிய வரை முனி’ என்று அருணகிரியாரும் திருப்புகழில் பாடி இருக்கிறார். எனவே சிவனை விட அருணகிரியார் மேலானவர் மெய்ப்பொருளை விளக்கியதில் என்று ஆனால் அவர் அகத்தியரை விட மேலானவர் என்பது தானே விளங்கும்.

ஆக, அருணகிரியாரின் பெருமை அளவிடற்கரியது என்பது வெள்ளிடை மலையென விளங்கும்.

இத்துணை பெருமையை உடைய அருணகிரிநாதர், நல்ல வேளை, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்! தமிழர்கள் எல்லாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டிய ஒன்று இது! அதனால் தான் தேனூரார் அதனை முதலில் வைத்து, ‘இளங்தமிழன், செழுங்கொண்டல் என உலகம் பரவும் எம்பெருமான்’ என்று அருணகிரியாரை அறிமுகப் படுத்தி அளவிலா மகிழ்ச்சி கொள்கிறார்.

ஆனால் தேனூராரே ஒரு விஷயத்தைச் சொல்லி வருத்தப்படுகிறார். அதாவது இத்துணை பெருமை வாய்ந்த அருணகிரியாரைப் பற்றி தெளிவான சான்றுகளுடன் வரலாறு பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள் தமிழர்கள்! இது தேனூராரை வருத்த அதை இப்படிப் பாடினார்:

‘இன்னவர் பின்னைப் பேரும் இருமுது குரவர் சீரும்

பன்னவோர் சரிதம் காணோம் பாரினில் நிகழ்ந்த காலம்’

இந்த அற்புதமான முருகனடியாரின் உண்மைப் பேர் என்ன? தெரியவில்லை. அருணகிரியார் என்பது திண்டிவனத்தார், மதுராந்தகத்தார், மதுரையார் என்பன போல அவருடைய ஊரை வைத்து நாம் அருணகிரியார் என்று அழைக்கிறோமே ஒழிய அவரது பெற்றோர் யார்? அவர்கள் இவருக்கிட்ட பேர் என்ன என்பனவெல்லாம் ஆதாரத்துடன் கூற நம்மிடம் வரலாறில்லை என்பதை ‘பன்னவோர் சரிதம் இல்லை’ என்று பாடி தம் வருத்தத்தைத் தெரிவிக்கிறார் தேனூரார்.

அருணகிரியார் பாடிய திருப்புகழை நடையாய் நடந்து நானிலமெல்லாம் தேடி அளித்த வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளையும், அவரது திருமகனாரான வ.சு.செங்கல்வராயப் பிள்ளையும் ஆகிய இருவருக்குமே இந்த வருத்தம் உண்டு. ‘அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்’ என்ற நூலை எழுதிய தணிகைமணி வ.சு.செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் இதனை அந்நூலில் இப்படிப் பதிவு செய்துள்ளார்:

“திருத்தணிகையாண்டவரது தனிப்பெரும் தொண்டராம் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளது சரித்திரம் கர்ண பரம்பரையாக பலவேறு வகையாகக் கூறப்பட்டு வருகின்றது. புலவர் புராணம் பாடிய ஸ்ரீமுருகதாச சுவாமிகள் முதல் பல அடியார்கள் அருணகிரியாரின் சரித்திரத்தைத் தாம் கேட்டவாறும், தமது உள்ளத்தில் இறைவன் இயக்கியவாறும் எழுதியுள்ளார்கள். உண்மைச் சரித்திரம் இது தான் என்று திடம் பெற உரைக்க இடந்தரவில்லை.”

            ”இவர் திருவண்ணாமலையில் இருந்தவர் என்பதும், கி.பி.1450-ஆம் ஆண்டில் இருந்த பிரபுட தேவ மாராஜர் காலத்தவர் என்பதும் தவிர, இவரது குலம், இவரது தாய் தந்தையர் இன்னார், இவரது இளமைப் பருவத்து நிகழ்ச்சிகள் இவை எனத் தெளிவுறச் சொல்லக் கூடிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை. ஆதலால் இவரது சரித்திர விஷயங்களை எடுத்துச் சொல்லுதற்குத் தக்க ஆதாரங்களாய் இப்பொழுது உள்ளன, இவர் அருளிய திருப்புகழாதிய நூல்களின் அகத்தே உள்ள சான்றுகளும், இவருக்குப் பின்வந்த பெரியார்கள் இவரைப் பற்றிக் கூறியுள்ள விஷயங்களுமே ஆம்.”

தொடரும். . .

Top