You are here
Home > அறத்தமிழ் > அடக்கம் உடையார் – மூதுரை – இளம்பூரணன்

அடக்கம் உடையார் – மூதுரை – இளம்பூரணன்

குழந்தைகளே!

இன்று நாம் பார்க்கும் மூதுரைப் பாடல் இதோ!

அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.

இந்தப் பாடலில் கூறப்படும் செய்தி நம் வாழ்க்கைக்கு மிக மிக அவசியமானது. அதாவது அறிவும் ஆற்றலும் உடைய பெரியவர்கள் எப்போதும் அடக்கமாய் இருப்பார்கள்; ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். அரைகுறை அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள் தான் துள்ளுவார்கள். குடம் முழுதும் நீர் இருக்குமானால் தளும்பாது; குடத்தில் பாதி அளவிற்குத் தான் நீர் இருக்குமானால் குடத்தைத் தொடும் போதெல்லாம் நீர் சலசலத்து ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும். வேறு விதத்தில் சொல்லப் போனால் சில்லறைக் காசுகள் பையில் இருக்குமானால் பையிலிருந்து ‘சலங், சலங்’ என்று சத்தம் எழும்பிக் கொண்டே இருக்கும்; ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றைப் பையில் வைத்திருப்போமானால் அது இருப்பதே தெரியாது.

அது போலத் தான் குறையறிவும் குறையாற்றலும் உடையோர் தான் கூத்தாடுவார்கள்; பெரியோர்கள் அமைதியாய் அடக்கமாய் இருப்பர். அதனால் பெரியோரை இந்தக் காலத்துப் பிள்ளைகள் எளிதாக எண்ணி ‘பெரிசு’ என்று கேலி பேசக் காண்கிறோம். ‘பெரிசில்’ அறிவாகிய பரிசு ஒளிந்து கொண்டிருக்கும். அதாவது ‘பெரிசு’ என்ற சொல்லிலேயே ‘பரிசு’ என்ற சொல் முன் கொக்கி (பெ) இடப்பட்டு உள்ளே இருப்பதே சான்று. ’மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’ என ஔவை கூறியதே அதனால் தானே!

வயல்களில் பயிரிடப்பட்ட நெற்கதிர்களைப் பாருங்கள்! கதிரிலே நெல்மணி இல்லையானால் அது நிமிர்ந்து நிற்கும்; அதைப் பதர் என்று உழவர் தூற்றி ஒதுக்கி விடுவர். ஆனால் கதிரிலே நெல்மணி இருக்குமானால் கதிர் வளைந்து தாழும். எல்லோரும் அதைப் போற்றிப் பாதுகாப்பர்.

நேராக உள்ள மூங்கில்கள் பாடை கட்டப் பயன்பட்டு பிணத்தைச் சுமக்கும்; வளைந்த மூங்கில் பல்லக்காகிப் பெரியவர்களைச் சுமக்கும். இறைவனால் அனுப்பப்பட்ட முத்துப் பல்லக்கைக் கண்டவுடன் திருஞானசம்பந்தர் மூன்று முறை சுற்றி வந்து ஏறி அமர்ந்தார் என்று பெரிய புராணம் கூறுகிறது. வளைந்த மூங்கில் பெறும் பெருமையைப் பாருங்கள்! அதனால் தான் வள்ளுவர் ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்றார். சிறுவர்களே! ஆகவே என்றும் பணிவோடு இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! அத்துடன் பணிவுடன் உள்ள பெரியோர்களை எளிதாக எண்ணியும் விடாதீர்கள்! அவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

மகாபாரதத்தில் வரும் ஒரு பகுதி இங்கே நினைக்கத் தக்கது. பாண்டவர்களும் துரியோதனாதிகளும் அப்போது சிறுவர்கள். எல்லோருமாக சேர்ந்து பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென பந்து ஒரு பாழுங் கிணற்றில் விழுந்து விட்டது. பந்து ஆழத்தில் தெரிகிறது; ஆனால் பாழுங் கிணறாதலால் இறங்கி எடுக்க முடியாது. அரசிளங் குமாரர்கள் திகைத்தனர். கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் முதுகைத் தொட்டார் ஒரு பெரியவர். திரும்பிப் பார்த்தனர். கிழிந்த ஆடையுடன் ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தனர். ‘என்ன எட்டிப் பார்க்கின்றீர்கள்?’ என்று அவர் கேட்டார். அவர் ஆடையும் அவரும்! அவரை மதிக்கவே தோன்றவில்லை அவர்களுக்கு!

‘ஐயரே! உம் வேலையைப் பார்த்துக் கொண்டு போம்! என்றனர். அவரோ விடவில்லை! இறுதியில் வேண்டா வெறுப்பாக அந்தப் பாழுங் கிணற்றில் அவர்கள் தவறவிட்ட பந்தைப் பற்றிச் சொன்னார்கள். அவர் சிரித்துக் கொண்டே அருகில் இருந்த மூங்கில் குச்சிகளை அடுக்கிக் கொண்டு வந்து ஒன்றில் ஒன்றைச் சொருகினார். கிணற்றின் ஆழத்திற்கு மூங்கில் குச்சிகளின் கோப்பு ஆயத்தமாகி விட்டது. உடனே அதைக் கிணற்றில் இறக்கி அதனால் பந்தைக் குத்தி மேலே எடுத்துப் போட்டார். அரசிளம் சிறுவர்கள் அதிசயித்துப் போனார்கள். அட! நமக்கு இது தோன்றாமல் போயிற்றே! என்று வெட்கப் பட்டனர். அப்புறம் தான் அந்தப் பெரியவர் அவ்வளவு எளிதானவர் அல்ல என்று புரிந்து கொண்டார்கள்.

அவரைப் பற்றி விசாரித்தார்கள்! அவர் தான் துரோணாச்சாரியார்! வில்வித்தையில் பேர் பெற்ற துரோணாச்சாரியார் இவரா! தொடக்கத்தில் தாங்கள் அவரை அறியாமல் பணிவில்லாமல் நடந்து கொண்டதற்காக மன்னிக்கக் கேட்டுப் பணிந்தார்கள். அதன் தொடர்ச்சியாக அவரே அவர்கள் அனைவர்க்கும் ஆசிரியரானார்! பாருங்கள்! பார்வைக்கு எளிதாகத் தெரிந்த அவரே பின்னால் பேரறிவு படைத்த ஆசான் ஆனார்!

இதைத் தான், ஔவையார் இந்த மூதுரைப் பாடலில், ‘அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா’ என்று பாடினார். ஆக, ஒருவரின் அடக்கத்தைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது!

இன்னொரு நடந்த நிகழ்ச்சியைக் காண்போம். வடக்கே பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சிற்றூரில் ஒரு சீக்கியப் பெரியார் இருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் குருவாக அடைவதற்காக இரண்டு சீக்கியர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். ஊர் மிகச் சிறிய ஊர். எப்படியோ தட்டுத் தடுமாறி அந்த ஊருக்குச் சென்றவர்கள் அந்தச் சீக்கியப் பெரியார் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அலைந்தார்கள். கடைசியில் ஊர் நடுவே இருந்த கடைத்தெருவில் விசாரித்தார்கள். யாரிடமும் சரியான தகவல் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு மொட்டைத் தலையனைப் பிடித்தார்கள். அவன் ஒன்றும் அவ்வளவு மதிக்கத்தக்க ஆடைகளை அணிந்திருக்கவில்லை. எங்கெங்கோ கேட்டு அலுத்தவர்கள் மொட்டைத் தலையனின் தலையில் வெறுப்போடு தட்டி அந்தச் சீக்கியப் பெரியாரைப் பற்றி விசாரித்தார்கள். ‘ஓ! தெரியுமே என்று அவன் சரியான வழியைக் காட்டினான். அவன் காட்டிய இடத்திற்குச் சென்றவர்கள் அவர்களுக்கு முன்னாலே அந்த மொட்டைத் தலையன் அங்கு நின்றிருக்கக் கண்டார்கள்.

‘ஓ! நீ தானா? அந்தச் சீக்கியப் பெரியார் இந்தச் சிறு வீட்டிலா இருக்கிறார்?’ என்று கேட்டார்கள்.

‘ஆம்! நீங்கள் சொல்லும் அந்தச் சிறியவன் நான் தான்!’ என்றார் அந்த மொட்டைத் தலையர்.

பதறிப் போனார்கள், அந்த இருவரும். ‘உங்களைப் பார்த்தறியோம். அதனால் தவறிப் போய் மரியாதைக் குறைவாக உங்கள் தலையில் தட்டிக் கேட்டு விட்டோம். எங்களை மன்னிக்க வேண்டும்’ என்று அடி பணிந்து மன்னிப்பு கேட்டனர்.

அதற்கு அந்தப் பெரியவர் சிரித்துக் கொண்டே, ‘ஒன்றும் தவறில்லை. காலணா பெறுமான பானையை வாங்குகிறவன் கூட அந்தப் பானையை நாலுமுறை தட்டிப் பார்த்து விட்டு வாங்குகிறான். சரியான குருவா என்று என் மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள் என்று எடுத்துக் கொள்வதில் என்ன தவறு?’ என்றாராம் அந்தப் பெரியவர் அமைதியாக. அடடா! எவ்வளவு அடக்கம்! பணியுமாம் என்றும் பெருமை!

எனவே அடக்கத்தைக் கண்டு அவமரியாதை செய்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சிறுவர்களே! என ஔவை கூறி இதற்கு ஓர் உவமையைக் கூறுகிறார். மடைத்தலையில், அதாவது ஓர் ஓடையில் கொக்கு ஒற்றைக் காலில் பேசாமல் நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்! அது பேசாமல் நிற்பது கண்டு சின்னச் சின்ன மீன்கள் அதைச் சுற்றி இப்படியும் அப்படியும் ஓடிக் கொண்டிருக்கும். சுற்றி வரும் மீன்களிலே எது பெரியது என்று தேர்ந்தெடுக்கும் வரை கொக்கு பேசாமல் நின்றிருக்கும். ஒரு பெரிய மீன் அருகே வரும் போது – அவ்வளவு தான்! – பாய்ந்து அதன் அலகினால் அதைக் கொத்தி எடுத்துக் கொண்டு பறந்து விடும். எனவே யாரையும் அவரது அடக்கம் கருதி எளிதாக எடை போட்டுவிட வேண்டாம் என்கிறார் ஔவையார்!

                                                         தொடரும். . .

 

Top