You are here
Home > தமிழ் வேள்வி > வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி(1)

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி(1)

முருகா

வெளிச்சத்தின் வீச்சில் . . .

 முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

“வேள்வி” – (1)

                வேள்வி தமிழர்களுக்கு உரியதல்ல என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது; அதுவும் சைவத்தின் பெயரால்! இந்த வேள்வி பற்றிய உண்மையை ‘வெளிச்சத்தின் வீச்சில்’ என்ற தொடர் தலைப்பில் முதலாவதாகக் காண்போம்.

             வேள்வி ஆரியர்க்கே உரியது என்று நெடுங்காலமாக சிலர் அறியாமையாலும், சிலர் உள்நோக்கம் கொண்டும் கூறி வருகின்றனர். அவர்கள் வடவேதம் நான்கையும் அறியாதவர்கள்; தமிழர் வரலாற்றையும் அறியாதவர்கள்.

              இரிக் : 6: 47 : 20 : இந்திரனே ! வழி தவறிய வழிபடுபவனுக்கு வழியைக் காட்டவும்.

              இரிக் : 6: 65 : 1 : . . . அவன் அந்த அறிவை, துதி எங்ஙனம் செய்வது என்பதை எங்களுக்கும் புலப்படுத்துவாயாக.

              இரிக் : 6: 47 : 20 : நேரான வழியிலே நாங்கள் குற்றமற்றுச் செல்ல இந்த இரகசியமான வழியிலே எங்களுக்கு எது உத்தம வழி என்பதைப் புலப்படுத்தவும்.

         இது போன்ற வேண்டுதல்கள் இரிக் வேத ம் முழுதும் பரக்கக் காணலாம். ஆரியர்கள் சிந்துவெளியில் வந்த போது நாடோடிகளாகவே வந்தார்கள். அவர்களுக்குக் கோயிலே கிடையாது; தெய்வமும் கிடையாது. இயற்கைச் சத்திகளை உருவகப்படுத்தி அந்தத் தேவர்களை மட்டுமே வணங்கினார்கள். ஆனால் சிந்துவெளியில் தமிழர்களின் செழிப்பான வாழ்வைக் கண்டு அது வேள்வி வழிபாட்டாலும், கோயில் வழிபாட்டாலும் வந்தது என்று எண்ணி அந்த வழிபாட்டைத் தாங்கள் அறியக் கற்றுத் தரும்படி இந்திரனை வேண்டியது தான் இரிக் வேதத்தின் மேற்படி சொலவடைகள் (சுலோகங்கள்)

(குறிப்பு: பொதிந்த பொருளை ஒரு சொல் அகத்திலே உடையது – சொல்லகம். அதுவே நன்றாகச் செய்யப்பட்டது என்ற பொருளிலான சமஸ்கிருதத்தில் சுலோகம் என்று ஆயிற்று. சொல்லகம் – சுலோகம். இதை அடைவான பொருளுடைச் சொற்கள் என்ற பொருளில் சொலவடை என்பதும் உண்டு.)

        ஆக நாடோடிகளான ஆரியர்க்கு வழிபாடு செய்வது எப்படி என்று தெரியாது. ஆனால் அவன் சிந்துவெளியில் சந்தித்த தமிழனோ வேள்வி செய்திருக்கிறான். இதைச் சிந்துவெளி அகழ்வாய்வில் வெளியான ஒரு முத்திரை காட்டுகிறது. சிந்துவெளி அகழ்வாய்வில் ஒரு சிவன் கோயிலும் அதை ஒட்டிய கட்டடங்களும் காணப்பட்டன.

எனவே கோயிலும், கோயிலில் பிரதிட்டைக்குரிய வேள்வியும் தமிழர்க்கே உரியவை

     ஆரியர்கள் தமிழர்களைப் பார்த்து வேள்வி செய்ததால் முதலில் அவர்களது வேள்வியில் வேள்வி மேடையே கிடையாது; மேடையில் கடவுளை எழுந்தருளச் செய்யும் கலசங்கள் கிடையாது. அவர்கள் காடுகளில் குண்டம் மட்டும் பறித்து நெருப்பை மூட்டி தேவர்களை வணங்கினர்.

      மிகப் பிற்காலத்தில் தமிழர்கள் கோயில்களில் செய்த வேள்வியில் பார்த்தவாறு தாமும் வேள்வி மேடை கட்டி அதன் மீது வேள்வித் தீயில் இடும் இறைச்சித் துண்டுகளை அடுக்கி வைத்தனர். பின்னர் கலசத்தை வைக்கும் பழக்கம் ஏற்பட்டது; கலசத்தில் விந்துநீர் முதலில் ஊற்றினர்; பின்னர் உதிரம் நிறைக்கப்பட்டது. இவற்றை எல்லாம் இரிக் வேதத்தில் காணலாம். இப்படி வேள்வியை அறியாத ஆரியர்களா வேள்விக்கு உரியவர்கள்.

     மாறாக வேள் என்ற தமிழ் வேர்ச்சொல்லின் அடியாக வேள்வி என்ற சொல் பிறந்தது. குண்டு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து குண்டம் என்ற சொல் பிறந்தது. குண்டும் குழியுமாக என்ற வழக்குச் சொற்றொடர் நாம் அறிந்ததே. குழி பறித்து நெருப்பை இட்டு வேள்வி செய்வதால் அதற்குக் குண்டம் என்று பெயர். வடசொல்லிற்கும் அதற்கும் தொடர்பே இல்லை. வேள்வியில் இடும் பொருள் ஆவதைச் செய்யும் என்ற நம்பிக்கையில் அதை ஆவுதி என்றனர். அதுவும் தமிழ்ச்சொல்லே. இதையும் தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் காணலாம். ஆவுதியை வடவர் ஆஹீதி என்று திரித்தனர். அதை ஆகுதி என்று பிற்காலத் தமிழர்கள் திரித்துக் கூறியது கொடுமையிலும் கொடுமை.

   யாக்கப்படுவது யாகம். வடவர் மொழியில் யாகம் என்ற சொல்லே கிடையாது. அவர்கள் யஞ்ஜம் என்பர்; யஜிக்கப்படுவது யஞ்ஜம் என்று ஆகுமே ஒழிய யாகம் என்று ஆகாது. ஆக, யாகம் என்பது தமிழ்ச்சொல்லே. இவ்வாறு வேள்வி தொடர்பாக 22-க்கும் மேற்பட்ட சொற்கள் தமிழ் வேர்ச்சொற்களையே உடையவை என்று மொழியியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

   எனவே, இந்த வேள்வி தமிழர்களுக்கே உரியதாக இருக்க இதை ஆரியர்களுக்கே உரியது என்பது எத்தனை பேதைமை! தமிழர்களுக்குக் கோயில்கள் உரியதானதால் கோயிலை ஒட்டிய சடங்குகளுக்காகவே வேள்விகள் பெரும்பாலும் கோயில்களிலேயே தமிழர் செய்தனர். ஆனால் ஆரியர்களுக்குக் கோயில்கள் இல்லாமையால் கோயில் வழிபாட்டிற்காக இல்லாமல் தம் சொந்தத் தேவைகளுக்காக அடிக்கடி தவறான வேள்விகளைக் காடு மேடுகளில் எல்லாம் செய்து வந்ததால் அடிக்கடி அதைச் செய்கிற இவர்களே வேள்விக்கு உரியவர்கள் என்பது போல ஒரு மாயத் தோற்றம் தோன்றி மக்களிடையே நிலவி வந்தது. அவை எல்லாம் தவறான வேள்விகள் என்பதைத் திருவள்ளுவரும்,

       அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
       உயிர்செகுத்து உண்ணாமை நன்று
என்று அந்த ஆரிய வேள்வியை விலக்கிப் பாடினார்.

       அடுத்து வேள்வி தமிழருக்கே உரியது என்றால் தமிழ் இலக்கியங்கள் வேள்வி பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறதா என்ற கேள்வி எழுவது இயல்பே. அதை இனி காண்போம்.

. . . தொடரும்

Top