You are here
Home > தமிழ் வேள்வி > வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (4)

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (4)

முருகா

வெளிச்சத்தின் வீச்சில் . .

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

“வேள்வி” – (4)

     சென்ற பகுதியில் ஆரியர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நுழைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னமே ஏறத்தாழ 20000 ஆண்டுக்கு முற்காலத்தில் தமிழர்கள் வேள்வியினைக் கடல்கோளால் மூழ்கிப் போன குமரிக்கண்டம் என்ற தென்கோடியில் ஆற்றினர் என்பது நிறுவப்பட்டது. அப்படி வேள்வி செய்த மன்னர்களில் முதன்மையானவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் என்பதும் அவன், ஆரிய வேதங்கள் இந்தியாவின் வடபகுதியை எட்டிக் கூடப் பார்ப்பதற்கு முன்னரே வழங்கி வந்த தமிழ் வேதங்கள் ஆகிய நால் வேதங்களால் வேள்வி செய்திருக்கிறான் என்பதும் சான்றுகளுடன் நிறுவப்பட்டது.

     இனி, தமிழர், ஆரியர் இருவரிடையே இவ்வேள்வித் தொடர்பாக கால ஒப்பீடு செய்ய வேண்டுமானால் தமிழர் வேள்வியின் காலம் ஒரு பக்கத்தில் ஏற்கெனவே விஞ்ஞான ரீதியாக நிறுவப்பட்டுவிட்டதால் ஆரியர் வேள்வி பற்றிய காலமே ஒப்பீட்டிற்கு ஆய்வு செய்யப்பட எஞ்சி நிற்கிறது.

     ஆரியர்கள் யார்? அவர்கள் இந்தியாவின் பூர்வகுடிகளா? இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்களும், உலகின் பல்வேறு மொழி இலக்கியங்களும்.

     ‘ஆரியரைத் தேடி’ என்று ஒரு ஆய்வு நூலே வெளி வந்துள்ளது. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல். மூல நூலின் பெயர் ‘Looking for Aryans’ என்பது. ஆசிரியர் பெயர் R.S.சர்மா. கேரளத்தில் உள்ள ராஜாஸ்ரீ ராமவர்மா அரசினர் சமஸ்கிருத கல்லூரியில் மேற்குறிப்பிட்ட ஆசிரியர் நிகழ்த்திய ஆய்வுச் சொற்பொழிவே முதலில் ஆங்கில நூலாகவும் பின்னர் தமிழிலும் வெளியானது.

      மேற்கூறிய நூல் ஆரியர்களை ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவையும் உள்ளடக்கிய பகுதியில் குறிப்பாக ஈரான் நிலப்பரப்பில் தொடர்புடையவர்களாய் காட்டி சான்றுகள் கூறுகின்றன. இவர்கள் குதிரை, செம்பு முதலிய பொருள்களுடன் அடையாளம் காணப்பட்டனர். தொழில் குதிரை, ஆடு, மாடு ஆகியவைகளைப் பராமரித்தல்; உழவு அதிக அளவில் தெரியாதவர்கள். ஆனால் மண் பானைகளைத் தம் பாத்திரமாகப் பயன்படுத்தி வந்தனர். அதிலும் நிறம் பூசப்பட்ட சாம்பல் சட்டிகள் (Painted Grey ware – PGW) தாம் இவர்கள் அதிகம் பயன்படுத்தினர் என்று அகழ்வாய்வுகள் சான்றுகள் பகர்வதாக நூல் கூறுகிறது. தட்ப வெப்பம் காரணமாகவும், தாம் பராமரித்த கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் தேட வேண்டிய காரணத்தாலும் அவர்கள் அவ்வப்போது இடம் பெயர வேண்டியிருந்தது.

      இதை அந்நூல், ‘எனவே ஆரியர்கள் ஆங்காங்கே நின்று நின்று அதாவது தங்கித் தங்கிக் குடிபெயர்ந்து வந்ததற்கான காரணங்களையும், ஆக்கிரமித்த நிலப்பரப்பின் படிப்படியான விரிவாக்கத்தையும் மனதில் இருத்திக் கொண்டு ஆய வேண்டியுள்ளது’ என்று கூறுகிறது. (மேற்படி நூல்; பக்:26)

      அவர்கள் எங்கெங்கு இடம் பெயர்ந்தாலும் அவர்கள் கையாண்ட பானைகள் அவர்களை அந்தந்த இடத்தில் அடையாளம் காட்டியதால் அவர்களின் இடப்பெயர்வு ஆய்வில் உறுதிப்படுத்தப்படுகிறது என்கிறது நூல்.

      ”எப்போது இந்தோ – ஈரானிய கூட்டத்தார் தென் – மத்திய ஆசியாவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தோன்றினார்களோ அப்போது இப்பானை வகைகளை அவர்கள் கையாண்டிருக்க வேண்டும். இந்துகுஷ் மலையைக் கடந்து பலுசிஸ்தானத்தில் குடியேற்றம் நிகழ்த்தி பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளுக்கு வந்த பிறகும் அப்பானைப் பண்பாட்டை நிலைநிறுத்தி வைத்திருக்க வேண்டும்.” – (மேற்படி நூல்; பக்:27.)

      இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆரியர்களின் நுழைவு எக்காலத்தில் நடைபெற்றிருக்கும் என்பது பற்றியும் ஆய்வு நூல் தன் கருத்தை இப்படித் தெரிவிக்கிறது.

      “கி.மு. 1600 – 1000 காலகட்டத்திலேயே இது போன்றவை வெளி தெரியத் தொடங்கின. அப்போது தான் வேத கால மக்களும், துணைக் கண்டத்தின் தென்மேற்குப் பகுதியில் வந்து தங்கினார்கள்.”

       இவ்வாறு ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானம் வழியாக இந்தியாவின் வடமேற்கு எல்லையில் நுழைந்ததை P.T. சீனிவாச ஐயங்கார் என்ற வரலாற்று ஆசிரியரும் இவ்வாறு வழிமொழிந்து அதில் மேலும் சில தகவல்களைத் தருகிறார்:

       “The original home of the Indo-Germanic language was the long stretch of Grassland extending from the north of the Carpathians and the lower Danube to the foot-hills below Altai and Tianshan in Central Asia skirting the shores of the Black Sea and Caspian and extending South to Caucasus and the steep north edge of Persia. This was the area of Characterization of a race of tall, fair skinned, blue-eyed, narrow-headed giants to whom the name Proto-Nordics has been given. The grass-land made them develop a pastoral life, modified by some hunting on the one hand and some very primitive agriculture on the other. Their one notable contribution to the growth of world civilization was that the domesticated horses”.

இதன் தமிழாக்கம்:

      இந்தோ-ஜெர்மானிய மெழியின் தாயகம் மிக நீண்ட மேய்ச்சல் நிலப்பரப்பு எனலாம். இந்த மேய்ச்சல் நிலவெளி மத்திய ஆசியாவில் உள்ள அட்லாய் மற்றும் டியான்ஷன் என்ற மலைகளின் அடிவாரத்தில் கார்பேதியன் வடக்கே என்ற இடம் தொடங்கி தெற்கே டனுப் என்ற இடம் வரை நீண்டிருந்தது எனலாம். இப்பகுதிகள் எல்லாம் கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடல் ஆகியவற்றின் கடற்கரை ஒட்டி நீண்டு பெர்சியாவின் வடமுனை வரை நீண்டிருந்தது.

      இந்தப் பகுதிதான் ஒரு குறிப்பிட்ட இனத்தின் தோற்றமும் வாழிடமும் ஆகிய இயல்புகளுடன் அமைந்திருந்தது. அந்த இன மனிதர்கள் வெண்ணிறத் தோல் உடையவர்களாகவும், நீலக் கண்களுடனும், கூம்பி எழும் தலைகளுடனும் நல்ல உயரமான உடல்வளத்துடன் காணப்பட்டனர். இவர்களுக்கு மானிட இயலார் நோர்டிக் என்னும் பூர்வ குடிகள் (Proto-Nordics) என்று பெயரிடுகின்றனர். இவர்கள் மேய்ச்சல் நிலத்திற்குரிய வாழ்முறைகளைக் கைக்கொண்டு வாழ்ந்ததுடன் சற்று மாற்றத்துடன் வேட்டையாடுதலை ஒரு புறமும் சிறிதளவில் தொடக்கநிலை உழவை ஒரு புறமும் மேற்கொண்டனர். இவர்கள் உலக நாகரிகத்திற்குக் கொடுத்த கொடையாக குதிரைப் பயன்பாட்டை அளித்தனர் எனலாம்.

      இங்கே பூர்வ நோர்டிக் என்று மேலை நாட்டு ஆய்வாளர்கள் குறிப்பிடுவது ஆரியர்களை. இவர்கள் தான் இந்தோ-ஜெர்மானிய மொழிக்கு உரியவர்கள் என்றும் ஆய்வுகள் அறுதியிட்டுக் கூறுவதால் இவர்களது வேதமான செண்ட் அவெஸ்தாவில் இவர்கள் ஆர்ய என்று குறிப்பிடுவதே சான்று. இந்த ஆர்யர்கள் மேற்கூறிய மேய்ச்சல் நிலவெளிகளில் தொடர்ந்து வாழவில்லை என்றும் அவர்கள் தட்ப வெப்ப நிலை காரணமாக பல குழுக்களாகப் பிரிந்து மேற்கிலிருந்து தென்கிழக்காக வந்தனர் என்றும் திரு.பி.டி.சீனிவாச ஐயங்கார் தமது ‘Age of Mantras’ என்கிற அதாவது தமிழில் ‘மந்திரங்களின் தொன்மை வரலாறு’ எனப்படும் நூலில் கூறுகிறார். ஆங்கிலத்தில் அவரது கூற்று வருமாறு:

     “About 2500 BC, a great wave of desertation seems to have passed over Asia which converted steppes of north as well as the Semites of Arabian grass-land in search of pastures new. This great displacement of tribes included the ‘Cananite’ invasion of Syria referred to in the ‘Genesis’ as the Semite migration into Messapotamia leading to the establishment of powerful Babylonian monarchy. From the northern Steppes, the Nordics went out in many branches”

இதன் தமிழாக்கம்:

      ஏறத்தாழ கி.மு.2500 என்ற காலகட்டத்தில் ஆசிய கண்டத்தில் மிகப் பெரிய பனிப்புயலின் அலைகள் தாக்கிச் சென்று அலைக் கழித்தன. இது வளமான ஸ்டெப்பி என்ற வடக்கு மேய்ச்சல் வெளியைத் தலைகீழாக மாற்றி அமைத்தது. இதே போல அந்தப் பனிப்புயல் அரபு நாட்டின் செமைட் இனத்தவரின் மேய்ச்சல் வெளிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதனால் இப்பகுதி மக்கள் வேறு புதிய மேய்ச்சல் நிலங்களைத் தேட வேண்டிய அவசியத்தை எதிர்கொண்டனர். இது இப்பகுதியில் வாழ்ந்த பல பூர்வகுடிகளை மிகப்பெரிய இடப்பெயர்விற்கு ஆளாக்கியது. இதில் ஒன்று தான் ‘ஜெனிஸிஸ்’ என்று வரலாற்றில் குறிப்பிட்ட ‘கெனான்’ குடிகளின் சிரியா நாட்டின் ஆக்கிரமிப்பு எனலாம். இதனால் மற்றொரு செமைட் இனத்தவர்களும் (இன்றைய ஈரான் இராக் பகுதிகள் எனப்படும் பகுதிகள்) மெசபடோமியா என்ற அன்றைய நிலப்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்து அங்கே பாபிலோனியர் என்ற பேரரசை ஏற்படுத்தினர் எனலாம். ஆனால் ஸ்டெப்பி என்ற மேய்ச்சல் வெளியைச் சேர்ந்த ஆரிய இனமான பூர்வ நோர்டிக் இனமோ அதன் போக்கில் பல கிளைகளாக வேறிடத்திற்குப் பெயர்ந்து சென்றது.

    மேலே கண்ட தகவல்களினால் ஆரியர்கள் தாங்கள் வாழ்ந்து வந்த இடமான ஸ்டெப்பி மேய்ச்சல் வெளியில் இருந்து ஆசியாவையே ஆட்டிப் படைத்த பனிப்புயல் காரணமாக பரந்துபட்ட அக்கண்டத்தின் வடபகுதிகளில் கிழக்கு மேற்காக வாழ்ந்து வந்த பலவேறு பூர்வ குடிகளைப் போலவே கி.மு. 2500 என்ற காலகட்டத்தில் பலவேறு குழுக்களாகப் பிரிந்து ஆசியாவின் தெற்கு நிலப்பரப்புகளில் வாழிடம் தேடி வந்தனர் என்பது உறுதி ஆகிறது.

    இந்த வரலாற்றுக் கருத்தை பி.டி.சீனிவாச ஐயங்கார் கூறுவதற்கேற்ப மறைமலை அடிகள் மிகச் சுருக்கமாக இப்படி ‘இந்தியாவின் வடமேற்கே குடி புகுந்த ஆரியரின் புலையொழுக்கம்’ என்ற தலைப்பில் ‘வேளாளர் நாகரிகம்’ என்ற தமது நூலில் குறிப்பிடுகிறார்.

     “இமய மலைக்கும் வடக்கே நெடுந்தொலைவில் இந்நில உருண்டையின் வடமுனை நாடுகளில் இருந்த ஆரியர், அந்நாடுகள் வரவரக் குளிர் மிகுந்து உயிர் வாழ்வதற்கு ஏற்றதன்றாய் மாற, அவர்களுள் பலர் தாம் இருந்த இடத்தை விட்டுத் தெற்கு நோக்கி வந்து இவ்விந்திய நாட்டின் வடமேற்கு எல்லையிலுள்ள பெலுசித்தானத்தின் வழிப் புகுந்து பஞ்சாபிலுள்ள சிந்துயாற்றங்கரையில் குடியேறினார்கள்.”

      இதை மறைமலை அடிகள் பாலகங்காதர திலகர் ஆய்வு நூலான ‘வேதங்களில் கூறிய வடமுனை இல்லம்’ (Arctic Home in the Vedas) என்ற நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.

      இது போன்று வரலாற்றுப் பதிவுகளுக்கு முந்தைய காலத்தை ஆய்வு செய்த பல்வேறு மேலை நாட்டு வரலாற்றாசிரியர்களும், V.R.இராமச்சந்திர தீட்சிதர், T.R.சேஷையங்கார், S.K.சட்டர்ஜி, முல்க் ராஜ் ஆனந்த், டாக்டர் S.ராதாகிருஷ்ணன் போன்ற நம் நாட்டின் புகழ் பெற்ற ஆய்வறிஞர்களும் ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து குடியேறிய, இந்தியாவின் பூர்வ குடிகள் அல்லாத அயலவர் என்பதை அழிக்கவோ மறுக்கவோ இயலாத திண்ணமான சான்றுகளால் அறுதி இட்டுக் கூறி உள்ளனர். அனைத்தையும் இங்கே விவரித்தல் மிகையாகி விடும் என்று இவ்வளவில் அமைத்துக் கொள்ளலாம்.

      இனி, வடக்கே கி.மு. 2500-ல் ஏற்பட்ட அதீத பனிப்புயலால் இடம் பெயரத் தொடங்கிய ஆரியர்கள் கால்நடையாக நடந்து வந்து கி.மு.2500-லேயே இந்தியாவிற்குள் நுழைந்திருக்க முடியாது. எனவே அவர்களின் சில குழுக்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு சில பல நூற்றாண்டுகள் ஆகி இருக்கும்.

      எப்போது ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காலம் என்பது பற்றி வரலாற்றாசிரியர்கள் பல திறப்பட்ட கருத்துக்களைக் கூறுகிறார்கள். ‘Sanskrit beyond India’ என்ற நூலில் ஆய்வறிஞர் டாக்டர் S.C.பானர்ஜி என்பவர் இது பற்றி தன் ஆய்வுக் கருத்தை இப்படித் தெரிவிக்கிறார்.

      ‘Some scholars would place it around 6000 B.C. or even earlier while others would bring it down to 1000 B.C. or even a little later. The best course perhaps, is to avoid two extremes and to assign the Rig Veda to a period 1500 to 1200 B.C.

      இதன் படி ஆரியரின் ரிக் வேத காலம் கி.மு. 1500 – லிருந்து 1200 – வரை என்ற கால அளவைக் கொள்ளலாம்.

      இதையே ‘Hindu View in art’ என்ற தமது நூலில் (பக்.9) ஆய்வறிஞர் முல்க் ராஜ் ஆனந்த் என்பவரும் கூறுகிறார். அவரது கருத்து: The whole of the Veda, Sruti i.e heard or revealed was compiled during the long period from about 1500 BC to 500 BC.

     இக்கருத்து முடிவை மேலும் பல ஆய்வறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆரியர்களின் வேதமாகிய ரிக் சமஸ்கிருதத்தில் இல்லை என்றும் அது சந்தஸ் (Zend) என்ற வேறு ஒரு மொழியில் இருந்தது என்றும் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலில் மறைந்த காமகோடி மடப் பெரியவரும் உறுதிபடக் கூறி இருப்பது வேத கால மொழி வேறு என்பதை உறுதி செய்கிறது.

    இது வரை ஆய்வு செய்த முடிவுகளை இப்படி உறுதி செய்யலாம்.

1 ஆரியர்கள் பனிப்புயல் காரணமாக தாங்கள் வாழ்ந்திருந்த ஸ்டெப்பி புல்வெளிகளிலிருந்து புறப்பட்டுக் குழுக் குழுவாகப் பிரிந்து வெவ்வேறிடங்களில் குடியேறிய போது அவர்களில் சில குழுக்கள் இந்தியாவின் வடமேற்கே நுழைந்தவர்கள்.

2 இவர்கள் அவர்களை அடையாளப்படுத்துகிற மண் பாண்டங்கள் மற்றும் குதிரைகளுடன் வந்த வெண்ணிற மக்கள்.

3 இவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காலம் ஏறத்தாழ கி.மு. 1500-1200 என்று கூறலாம்.

4 இவர்கள் (Zend) சந்தஸ் என்ற மொழியோடு இந்தியாவிற்கு வந்த பின் ரிக் வேதத்தை ஓதினர். அது சமஸ்கிருதத்தில் இல்லை.

     இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் புறநானூற்றுப் பாடல் 15-ல் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றிய தமிழ் வேள்வியை ஆரியர்கள் செய்ததாக அவர்களின் வேதங்களில் கூறப்படும் வேள்வியை ஒப்பீடு செய்ய வேண்டும்.                                      

   . . . தொடரும்

Top