பெறுநர்
மாண்பமை திரு. V.V.சுவாமிநாதன் அவர்கள்,
மேனாள் அறநிலையத்துறை அமைச்சர்,
3, 2வது தெரு, ராமகிருஷ்னாபுரம்,
ஆதம்பாக்கம், சென்னை -600088
பெருமதிப்பிற்குரிய பெரியீர்!
வணக்கம். தங்களின் 21-2-2024 ஆம் நாளிட்ட கடிதமும் உடன் “திருப்பதி அருள்மிகு பாலாஜி தொன்மமும் புதிர்களும்” என்ற நூலும் கிடைத்து அதன் தொடர்பான தங்கள் அன்பு வேண்டுகோளையும் அறிந்தேன். சொல்லப்பட்ட நூலினை முழுமையாகப் படித்தேன். அதன் பின்னணியில் தாங்கள் வேண்டியபடி எனது கருத்தை தங்களுடன் அடியிற்கண்டவாறு பகிர்ந்து கொள்கிறேன்.
அடியேன் முதலில் நூல் முழுமைக்கும் ஆய்வுக்கருத்துக்களை அறிவிக்க எண்ணினேன். ஆனால் அது ஒரு தனி நூலாக விரியும் என்ற எண்ணத்தினால் திட்டத்தை மாற்றி சுருக்கமாக இங்கே விவரிக்கின்றேன்.
இது திருப்பதி வேங்கட நாதனைப் பற்றிய நூல். இதை அறிவியல் அடிப்படையில் ஆராய்வோம் என்று ஐந்தாறு புள்ளிகளாக நூலாசிரியர் நூலை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் தொடங்கி இருக்கிறார். அவற்றில் அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் கொள்ளுவனவும் சரி, தள்ளுவனவும் சரி, விரவிக் கிடக்கின்றன. நூலின் முதல் அத்தியாயமே நூலின் அடிப்படை..
திருவையாறு தியாகராஜ சங்கீத சுவாமிகள் திருவேங்கடநாதனைப் பற்றி ஒரு பாடலில் “நீ யார்? சிவனா? விஷ்ணுவா? அல்லது சக்தியா ? உன்னை என்னால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை” என்று கூறியிருப்பதை மேற்கோள் காட்டி, திருவேங்கடப் பெருமானுக்குக் குறிப்பிட்ட பெயர் எதுவும் இல்லை என்று நூலை முதல் ஆய்வுப் புள்ளியுடன் தொடங்குகிறார்.
புகழ்பெற்ற இராமபக்தியுடைய ஒரு சங்கீத கீர்த்தனாசிரியரே வேங்கடநாதன் யார் என்று தெரியவில்லை என்றால் பிரச்சனை அங்கிருந்தே ஆரம்பித்து விடுகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக அறிகிறோம். ஆனால் தியாகராஜர் எழுப்பிய கேள்வியில் நீ முருகனா என்ற ஒரு கேள்வியும் சேர்க்கப்படவேண்டும் என்பது நூல் காட்டும் குறிப்புகளால் அறியக்கிடக்கிறது.
யார் இந்த திருவேங்கட முதலியார்? முதலியாரா? கடவுளில் கூட முதலியார் கடவுளா? கடவுளுக்கு ஏது சாதி? அவர் யார் என்றே தெரியாதபோது அவரோடு எப்படி ஒரு சாதிப்பெயர் வந்து ஒட்டிக் கொண்டது? இதையும் சேர்த்தே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
நூலாசிரியர் சில இடங்களில் வரலாற்றை மேற் கொள்கிறார்; சில இடங்களில் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாத செவிவழிச் செய்திகளை மேற்கொள்கிறார்; சில இடங்களில் அறிவியலுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி மேற்கொள்கிறார்; சில இடங்களில் அறிவுக்குப் பொருந்தாமல் அறிவியல் என்ற பெயரில் அடித்து நசுங்கிய அறிவியலை மேற்கொள்கிறார். இவற்றை அனைத்தையும் வரிக்கு வரி ஆய்வு அளவில் காட்டுவதோ வாட்டுவதோ வதக்குவதோ வேக வைப்பதோ சரியாக இராது; அதற்கு இங்கே இடமும் காணாது.
அதனால், ஏழுமலையான் என்பது “ஒரு” தெய்வம் அல்ல; அவன் சில தெய்வங்களின் கூட்டணி என்பது உறுதி ஆகிறது. அது என்ன ஒரு பரம்பொருளின் விஸ்வரூபத்தில் உள்ள பிற தெய்வங்கள் மாதிரியா என்றால் அப்படியும் இல்லை. காரணம் அண்டாண்ட கோடி தெய்வங்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கங்கே அங்குள்ள படிமத்தில் பிரதிநிதித்துவம் பெறவில்லை. நாம் அறிந்தவரை காளி, அலர்மேல்மங்கை, சக்தி, சிவன், திருமால், முருகன் ஆகிய ஆறு தெய்வங்களின் கூறுகள் தான் திருவேங்கட முதலியார் படிமத்தில் இடம் பிடித்திருக்கின்றன. இன்னும், நூலாசிரியரே இந்த முதலியார் இந்த மலையின் ராஜா என்கிறார். அதேசமயம் இங்கே எப்ப வந்தார் தெரியுமா என்று இவரை இங்கு வந்தேறி என்கிறார். இன்னோரிடத்தில் இங்கே இவர் தானே தோன்றிய சுயம்பு என்கிறார். இரண்டும் ஒத்துப் போகவில்லை; சுயம்பு என்றால் கடவுள்; வந்தேறி ராஜா என்றால் மனிதர்.
தான் தோன்றி என்பதற்கு இரு சிலாதோரா என்ற பாறை ஓட்டையிலிருந்து தோன்றியவர் என்கிறார். இந்தப் பாறையை கரியமில வாயு சோதனை செய்து 2500 மில்லியன் ஆண்டு பழைமையானவர் இந்த வந்தேறி தெய்வம் என்கிறார். இது அறிவியல் மாதிரி போக்குக் காட்டி புராண சந்துக்குள் ஒளிந்து கொள்வதை உணர முடிகிறது. அந்த கரியமில் வாயு சோதனை முடிவு பாறைக்குத்தான் அறிவியல்படி ஏற்கும். கடவுளின் பழைமை கரியமில வாயு சோதனைக்கு அப்பாற்பட்டது. இல்லை, கடவுளின் பழைமையையும் அப்படியே அளந்து விடலாம் என்றால் கடவுளின் வயது 2500 மில்லியன் ஆண்டுகள் தாம்; அதற்கு முன் கடவுளே இல்லை என்றாகி பெரியாரின் தாடிக்குள் மறைந்து விடுவார். இப்படியாக நூலாசிரியரின் முதற்புள்ளி முனகி முடங்கிவிடுகிறது.
அடுத்து ஆசிரியர் கட்டும் இரண்டாவது புள்ளி பச்சைக் கற்பூரப் புள்ளி. பச்சைக் கற்பூரம் பூசினால் சிலாதோரப் பாறையில் எந்த விரிசலும் ஏற்படாது. திருப்பதியான் கற்சிலையில் எந்த விரிசலும் இல்லை. எனவே திருப்பதியான் வயது சிலாதோரப் பாறையின் வயதாகிய 2500 மில்லியன் ஆண்டு என்கிறார். ஆனால் இதை இவரே அடுத்த சில வரிகளிலேயே மறுத்துக் கூறுவது வேடிக்கை! அதாவது பச்சைக்கற்பூரம் திருப்பதியானுக்கு இப்போது பூசப்படுவதில்லை. ஏதோ ஓர் எரிச்சலூட்டும் இரசாயனம் தான் பூசப்படுகிறது. அந்த இரசாயனப் பூச்சு பாறைகளில் விரிசலை உண்டாக்கிவிடும் என்கிறார். அப்படியானால் திருப்பதியான், பாவம் விரிசல் கண்டிருக்க வேண்டுமே! இந்தக் கேள்வியைத் தவிர்க்க சிலாதோரப் பாறையில் இரசாயனப் பூச்சு பூசினாலும் விரிசல் அடையாது என்று கூறுகிறார். இது, ஏற்பார் “ஆம்” என்க, மறுப்பார் “இல்லை” என்க என்று ஓட்டுக்கு விட்டுக் கடந்து போக முடியாது. ஆதாரங்கள் காட்ட வேண்டும். அப்படி ஒன்றும் இங்கே காணோம். எனவே இந்தப் புள்ளியும் ஆசிரியர் கருத்தை நிரம்பச் செய்யாது.
அடுத்து மூன்றாவது புள்ளியில் திருப்பதியான் சிலையில் உளி பட்ட அடையாளங்களே இல்லை, எனவே இந்தச் சிற்பம் சொர்க்கத்தில் இருந்துதான் இறங்கி இருக்க வேண்டும் என்கிறார். சொர்க்கத்தில் சிற்பங்களில் உளிபட்ட அடையாளமே இராது என்பதை ஆசிரியர் எப்படி உறுதி செய்கிறார்? அது எந்த சொர்க்கம் அல்லது எந்த சொர்க்கத்தின் பகுதி என்று கூறுவாரா என்று தெரியவில்லை. இவர் எப்போது சொர்க்கத்துக்கு போய் வந்தார் என்று தெரியவில்லை.
இதோடு நான்காவது புள்ளியாக ஆசிரியர் ஒன்றை முன் வைக்கிறார். அதாவது திருப்பதியான் சிற்பம் பள பளப்பாக வழு வழுப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது வேறு கோயில் தெய்வங்கள் எல்லாம் கரடு முரடானவர்கள். பளபளப்பும், வழவழப்பும் இயந்திர மெருகூட்டலால் வரும். இந்த இயந்திர மெருகூட்டும் அதாவது பாலிஷ் செய்யும் தொழில்நுட்பம் ஏறத்தாழ சில முப்பது வருடங்களுக்கு முன்னால் தான் வந்தது. ஆனால் திருப்பதியானோ 2500 மில்லியன் ஆண்டுகட்கு முன் சொர்க்கத்தில் இருந்து இறங்கியதால், அப்படி இறங்கும் போதே பள பளப்பும், வழு வழுப்பாகவும் இறங்கியது. ஆக 2500 மில்லியன் ஆண்டுகட்கு முன்பே சொர்க்கத்தில் பள பளப்பாக பாலிஷ் செய்து நிலவுலகிற்கு இறக்குமதி செய்தார்கள் என்று ஆசிரியர் கருதுகிறார். அது உண்மையானால் இச்சிற்பத்தை சொர்க்கத்திலிருந்து டெலிவரி எடுத்தவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை தெரிந்திருக்க வேண்டும். அவர்களோடு ஆசிரியருக்குத் தொடர்பு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அல்லது சொர்க்கத்திலிருந்து வரும்போதே சிற்பம் இன்று காணும் பாலிஷில் பளபளத்தே வந்தது என்று ஏதாவது ஆவணத்தை ஆசிரியர் யாரிடமிருந்தாவது பெற்றிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.
அடுத்தது ஐந்தாவது புள்ளி; சிற்பத்தின் உடல் வெப்ப நிலை 43.3º செல்சியஸ்; இது அப்படியே மாற்றமின்றி பேணப்பட்டு வருகிறது என்கிறார். 3000 அடி உயரத்தில் மலை உச்சியில் சூழலே குளிராக இருக்கும். அந்த சூழலில் திருப்பதியானுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்; சிற்பத்தின் உடலே வெப்பமாக இருப்பதால் உடல் முழுதும் வியர்த்து பூசகர் உலர்ந்த துணியால் அசைத்துத் துடைத்துக் கொண்டிருக்கிறார். அதோடு அபிஷேகத்தின் போது களையப்படும் ஆபரணங்கள் எல்லாம் கூட சூடாக இருக்கின்றன என்கிறார் ஆசிரியர். இதிலும் நமக்கு ஒன்று புரியவில்லை. நாத்திகர் அல்ல நாம்; ஆனாலும் சந்தேகம் எழுகிறதே! உடல் சூடு பராமரிக்கப் படுகிறது என்றால் அடிஷேகத்தில் மட்டுமன்றி எப்போதுமே வியர்க்க வேண்டுமே! சொல்லப்போனால், அபிஷேகத்தில் குளிர்ந்த நீர் விட்டால் வியர்வை ஓய வேணுமே!
இதைச் சொல்லி இதற்கு ஆதாரமாக யாரோ இரு பூசகர்கள் தம்மிடம் இந்தச் செய்தியைச் சொன்னதாகக் கூறுகிறார். இது செவிவழிச் செய்தி; இவ்வகை செய்திகள் ஆதார கால்கோளில் எழும் மாளிகைகளாக கொள்ளப்படா.
அடுத்து தானே உணர்ந்து ஒரு அறிவியல் உண்மையை இதற்கு ஆசிரியர் தொடர்பு படுத்துகிறர். அதாவது சில கற்கள் இயற்கையிலேயே சூரியனிடமிருந்து வெப்பத்தை வாங்கிச் சேமித்து வெளிவிடாது; அப்படியே சில கற்கள் சந்திரனின் குளிர்ந்த கிரணங்களை வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்ளும். இதில் வெப்பம் தொடர்பானது சூரிய காந்தக்கல்; குளிர்ச்சி தொடர்பானது சந்திரகாந்தக்கல். இதைப் பல தமிழ் இலக்கியங்களில் காணலாம். அவ்வளவு ஏன்! இன்றும் கூட செட்டிநாட்டில் வீடுகளில் இக்கற்களைப் பயன்படுத்திக் கட்டிய வீடுகள் இருக்கின்றன. அவற்றில் ஓர் அறை எப்போதும் வெப்பம்; ஓர் அறை எப்போதும் குளிர்ச்சி. குளிர்காலத்தில் வெப்ப அறை, வெயில் காலத்தில் குளிர் அறை என்று மாற்றி மாற்றிப் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
அதன்படி திருவேங்கடமுடையாரின் உடல் எப்போதும் சூடாக இருக்கும் சந்திரகாந்தக் கற்களால் ஆனவை என்று பிறழ்ச்சியாக ஆசிரியர் எழுதி இருக்கிறார். சூடாக இருக்கும் கல் சூரியகாந்தக்கல்; சந்திரகாந்தக்கல் அல்ல.
இந்தக் கற்கள் எல்லாம் இயற்கை அளித்த வரங்கள். அவை எப்போதும் உள்ளவை. ஆனால் ஆசிரியரோ இதை வைத்து திருப்பதியான் வயது 2500 மில்லியன் ஆண்டுகள் என்பது அறிவியலுக்கு ஒவ்வாதது.
அதோடு சிற்ப சாஸ்திரத்தில் சாமுத்ரிகா லட்சணம் என்ற விதி முறைகளின் படி இப்படி தெய்வச் சிலைகள் வடிக்கப்படுகின்றன என்கிறார். சாமுத்ரிகா லட்சணம் வேறு; கல்லின் தன்மைகள் வேறு. இரண்டையும் ஆசிரியர் குழப்பிக் கொள்கிறார்.
இவ்வாறெல்லாம் ஆய்வு முறைகளுக்கு ஒவ்வாத படி, புள்ளிகளை அடுக்கிவிட்டு, “ஆக, இறைவன் சொர்க்கத்தில் இருந்து சிற்ப வடிவில் அனைத்துச் சிறப்புகளுடன் அவதரித்துள்ளார் என்பது உறுதி.” என்று முடிப்பது வேடிக்கை!
திருப்பதி இறை படிமம் யார் என்று கேள்வி கேட்டுத் தொடங்கி அதைப் பற்றிய விவரங்களுக்கு மாறாக தொடர்பின்றி வேறு புள்ளிகளை இணைத்துக் கோலம் காட்டி இருக்க வேண்டாம்.
சரி! இப்ப, விஷயத்திற்கு வருவோம்! திருப்பதி இறைவன் யார்? ஒவ்வொரு கருத்தாய் அலசுவோம்.
- இப்போது திருவேங்கடத்தானைத் திருமால் என்று வணங்குவது மரபாய் இருக்கிறது; எனில், அவர் திருமாலா என்றால், இருக்க இயலாது. காரணம் திருமால் கடலோடு அதுவும், பாற்கடலோடு தொடர்புடையவர்; மலையோடு அவர்க்குத் தொடர்பில்லை. மலைமேல் இருப்பவன் பொதுவாக முருகன் தான்; இல்லையேல், கைலாயம் முதல் இன்னும் வடக்கிலிருந்து தென்கோடி வரை பல மலைகளில் வீற்றிருக்கும் சிவன் மலையுடன் தொடர்புடையவன். திருமாலுக்கு உகந்தது துளசி; அது சூடு, குளிர்கடல் தெய்வத்திற்குச் சமன்படுத்த சூடானத் துளசி அவர் வேண்டுவது. குளிர்ச்சியைத் தரும் வில்வம் நெருப்பான மேனியனாகிய சிவனுக்கு உரியது. எனவே மலையும், திருமலை இறைவனுக்கு வில்வார்ச்சனை செய்யப் படுவதும் அவன் திருமால் அல்ல என்று காட்டும் அடையாளங்கள். துளசி தீர்த்தமும் அங்கு வழங்கப்படுவதால் அவன் திருமாலின் அடையாளமும் கொண்டவன். எனவே அந்தச் சிலையில் சிவனும் இருக்கின்றான்; திருமாலும் இருகின்றான் என்று ஆகிறது. எனவே அந்தச் சிற்பம் முழுமையாகத் திருமாலுக்கே உரியது என்று கூற இயலாது. இதனால் தான்,
“தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் – சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து”
என்று பேயாழ்வார் பாடுகிறார். பூதத்தாழ்வாரும் இதை அப்படியே வழிமொழிகிறார். அது வருமாறு:
“இருவரங்காதால் திரிவரேனும் ஒருவர்
ஒருவன் அங்கத்து என்றும் உளன்”
இந்த கருத்தை நானும் பார்த்தேன்; பார்த்தேன் என்று பொய்கையாழ்வாரும் சாட்சி சொல்கிறார்.
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்”
சிவன் சிவப்பு; திருமால் கறுப்பு; அல்லது அதை ஒட்டிய நீல நிறம் எனலாம். என் தெய்வம் திருமால் எனக்கு தெரிந்து நீல நிறம்; இந்த நீலக்கண்ணனிடம் இன்று சிவனது பொன்னார் மேனியையும் கண்டேன் என்கிறார் அவர்.
ஆக, திருப்பதியான் சிலையில் சிவனும், திருமாலும் இசைந்திருக்கிறார்கள் என்பதை திருமாலை நேரில் கண்டு பாடிய முதலாழ்வார் மூவரும் சான்று பகர்கிறார்கள்.
ஆக திருமலையான் சிலையில் சிவன் கூறுகளும் உண்டு, மாலின் கூறுகளும் உண்டு.
- திருமலையான் கையில் உள்ள நாகாபரணம் சிவனின் கூறு;
- திருமலையான் சிலை எப்போதும் சூடாய் இருப்பதும் நெருப்பான மேனியன் எனப்படும் சிவன் இவன் என்று சான்று காட்டும் கூறு
- சிவன் அம்மையப்பன்; மாதொருகூறன் அதற்கேற்ப திருமலையான் ஒரு கை அபயம் கூறும் கை; அதுவும் சிவனின் வலக்கை; இடக்கை கட்டியவிளம்பித அஸ்தம் எனப்படும் அம்மனின் ஒடுங்கிய கை. ஆக, திருமலையானே சிவன் வடிவான அர்த்தநாரியாகவும் காட்சி அளிக்கிறான்.
- இடப்பால் அம்மன் என்பதற்கு ஏற்ப அங்கே நீண்ட கூந்தல் உண்டு. பெண்ணின் ஆபரணங்கள் உண்டு
- இறைவன் திருவடிதான் இறைவனோடு கூட்டுவிக்கும்; திருவடி என்பது அம்மனைக் குறிக்கும். அதற்கேற்ப திருமலையானின் திருவடியில் கொலுசும், மெட்டியும் காணலாம். எனவே இவை பெண்ணின் கூறாய், திருவடியாயிற்று.
இவை எல்லாம் திருமலையான் சிவசத்தி வடிவானவன் என்பதற்கான சான்றுகள்.
அடுத்து திருமலையான் திருமால் மட்டுமே இல்லை என்பதற்கான சான்றுகளை காணலாம்.
- திருமால் கடற்பள்ளி வண்ணனே தவிர மலையோடு தொடர் இல்லாதவன்; இந்த ஒரிடத்திலே தான் மலைத் தொடர்பும் சிறப்பும் வருகிறது என்பதால் இந்த மூர்த்திக்கு மட்டும்தான் மலையப்பன் என்று வேறுபடுத்தி காட்டி வரும் பெயர் அமைந்தது.
- திருமாலுக்கு நான்கு கரங்கள்; விஷ்ணு சஹஸ்ரநாமமே சதுர்ப்புஜன் என்று தான் தொடங்குவதே சாட்சி. ஆனால் திருமலையப்பனுக்கு இங்கே இரண்டே கரங்கள். எனவே இம்மூர்த்தம் முழுமையான திருமால் வடிவமல்ல என்று இதுவே சான்று பகர்கிறது.
- திருமாலை அலங்காரப்பிரியன் என்பதே தவிர அபிடேகப் பிரியன் என்ற பட்டம் சிவனுக்கே உரியது. இங்கே வேறு வைணவத் தலங்களில் இல்லாதவாறு ஆண்டு முழுவதும் அபிஷேகமும், வேண்டிய போது சிவனுக்கு உரிய வில்வத்தால் அர்ச்சனையும் நடைபெறுவதே சான்று
- நாகாபரணம் திருமாலுக்கு உரியதல்ல; அது சிவனுக்கு உரியது; நாகம் திருமாலுக்குப் படுக்கை. எனவே திருமலையான் முழுமையான திருமால் வடிவினன் என்று கூறமுடியாது.
- திருமாலுக்கு உரிய சங்கும் சக்கரமும் இங்கு பிற்சேர்க்கை; இராமானுஜரின் ஏற்பாடு என்று குருபரம்பரா பிரபாவம் என்ற ஆழ்வார்கள் சரிதநூல் கூறுகிறது.
- திருமலையான் கோயிலில் பிற வைணவக் கோயில்கள் போல் தாயார் சந்நிதி மற்றும் சுதர்சன ஆழ்வார் சந்நிதி கிடையாது.
இவ்வாறு திருமலையான் வடிவில் இப்போது எங்கள் தெய்வம் என்று வைணவர்கள் உரிமை கோருவதற்கு ஏற்ப திருமால் உருவம் மட்டும் இல்லை என்பது சைவ வைணவ இரு சமயத்தாரும் உணர வேண்டிய உண்மை.
இனி, இத்திருமலையானை முருகன் என்று கூறுகிறார்களே, அதுபற்றிய கருத்தை அலசலாம்.
- ஒரு தலத்திற்கு வந்தால் அத்தலத்தின் தெய்வத்திற்கு முடி காணிக்கை கொடுப்பது என்பது வைணவத்தலங்களில் இத்தலம் தவிர வேறெங்கும் இல்லை. ஆனால் இந்த முடிகாணிக்கை மரபு முருகனுடைய தலங்களுக்கே உரியது.
குன்றின் உச்சியில் குடிகொள்பவன் முருகன்; குன்றின் மேல் ஏற ஏற இந்தப் பரந்த உலகில் தான் எவ்வளவு துரும்பு என்பதை உணர்த்துவது குன்று. இவ்வாறு தன் முனைப்பைக் குன்றச் செய்வது குன்று. எங்கே தன் முனைப்பு குன்றுகிறதோ அங்கே நான் உனக்கு அருள்புரிவேன் என்பதைக் காட்டவே குன்றுதோறாடினான் குமரன். குன்றில் ஏறுவது நற்பண்புகளில் ஏறுவதை ஒக்கும். ஏற ஏற தன்முனைப்பு குன்றும் என்று உணர்த்துவதால் அதற்கு குன்று என்பது வினையால் அணையும் பெயர். தன்முனைப்பைத் கடிந்து உன் காலடியில் அர்ப்பிக்கிறேன் என்பது தான் முடிகாணிக்கையின் உட்பொருள். இது அன்றி நம்ம முடியை வச்சுகிட்டு முருகன் என்ன பண்ணப்போறான்! என்ன சவுரிக்கடையா வைக்கப்போறான்!
தன்முனைப்பை மழித்தாய்; இதோ உனக்கு மறைத்ததை மாற்றி பெருவெளியைக் காட்டி மேலேற்றுவேன் என்பது தான் மொட்டையின் பொருள். இதைத்தான் அருணகிரியார் “எல்லாம் அற என்னை இழந்த நலம்” என்று பாடுகிறார்.
ஆக, இத்துணை பொருள் பொதிந்த முடிகாணிக்கைக்கு முருகனே உரியவன்; அது இங்கே திருமலையிலும் நடக்கிறது எனவே திருமலை ஐயன் முருகனே என்பது சான்றோர் கருத்து.
- ஸ்வாமி என்ற சொல் வடமொழி அகராதிப்படி முருகப் பெருமானை மட்டுமே குறிக்கும் என்று அமரகோசம் என்ற வடமொழி நிகண்டு கூறுகிறது. திருமலையானும் முருகனும் வேறல்ல என்பதற்குச் சான்று பகர்வதாக திருமலையானின் அபிஷேகநீர் அளிக்கும் குளத்திற்கு “ஸ்வாமி புஷ்கரிணி” என்ற பெயரைக் காணலாம்.
- முருகப் பெருமான் சூரபன்மனுடன் போர் புரிவதற்காக திருச்செந்தூர்க்கு தெற்கு நோக்கி வருவதற்கு முன் குழந்தை முருகனாக உலகை வலம் வந்தபோது இந்த திருமலையில் தங்கினான் என்று கச்சியப்பர் கந்தபுராணத்தில் குறிப்பிடுகிறார். இரண்டாம் முறை தெற்கே திருச்செந்தூர் போகும் முன் திருவேங்கடத்தை கடந்து போகும் போது தான் முன் தங்கிய திருமலையினை புன்முறுவலுடன் பார்த்துச் சென்றான் என்று கந்தபுராணம் கூறுகிறது.
- இந்தத் திருமலையில் வந்து முருகனைக் கனவிலும் நனவிலும் கண்ட அருணகிரிநாதர் வணங்கி 4 திருப்புகழ் பாடி இருக்கிறார். அதில் பாடல் பெற்ற வரிகளை மட்டும் இங்கே காணலாம்.
திருப்புகழ்ப் பாடல் 244:
மலர்க்கமல வடிவுள செங்கை
அயிற்குமர குகைவழி வந்த
மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே.
திருப்புகழ்ப் பாடல் 245:
வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்
வேங்கட மாமலையில் உறைவோனே
திருப்புகழ்ப் பாடல் 246:
வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
வேங்கட மாமலையில் உறைவோனே
திருப்புகழ்ப் பாடல் 247:
சிலைவாங்கிய நாரண னார்மரு
மகனாங்குக னேபொழில் சூழ்தரு
திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே.
- வரலாற்றின்படி மிகத் தொன்மையான காலத்தில் இத்திருமலை மேல் வேடர்களே வாழ்ந்தார்கள் எனத் தெரிகிறது, முருகப்பெருமான் வேடர்குல மாப்பிள்ளை; எனவே இம்மலையில் அந்த வேடர்கள் முருகனுக்குக் கோயில் எழுப்பி வணங்கினர் என்பர். எனவே இதுவும் ஒரு சான்று.
- முருகன் ஒருவனுக்கே பாலன் என்ற சொல் தெய்வங்களில் பெருக வழங்கப்படுவது மரபு. குழந்தை வேலன், குழந்தை வேல், பாலகுமாரன், பாலமுருகன் என்றும் இன்றும் பலபடவும் முருகன் முன்னோர்களாலும், முன்னோர்களின் இலக்கியங்களாலும் அழைக்கப்படுவதைக் காண்கிறோம். பாலகிருஷ்ணன் உண்டே என்று ஒரு சிலர் கூறலாம். ஆனால் கிருஷ்ணன் தெய்வம் அல்ல, தெய்வத்தின் அவதாரம். தெய்வத்தில் முருகன் ஒருவனே பாலமுருகன் என்றும் பாலவேல் என்றும் பேசப்படுபவன். எனவே திருமலையானை பழமையான அடையாளத்தோடு பாலாஜி என்று அழைப்பது வழக்கமாயிற்று. இப்படி வேங்கடவன் திருமாலா முருகனா என்று ஓர் ஆய்வு நூலை எழுதிய பேரறிஞர் பெருந்தகை தெய்வத்திரு கி.வா.ஜகந்நாதனே எழுதி இருக்கிறார். இதுவே தனது குருநாதரான தமிழ்தாத்தா உ.வே.சுவாமிநாதன் அவர்களது கருத்து என்றும் எழுதி இருக்கிறார்.
இதற்கு மாறாக நூலாசிரியர் அலர்மேல் மங்கைத் தாயாரை பாலாஜி என்று எழுதுகிறார். பொதுவாக பெண்களை “ஜி” என்ற பின்னொட்டுச் சேர்த்துக் கூறுவது வடக்கிலும் வழக்கில் இல்லை. மரியாதையாக பாலம்மா, பாலாம்பிகை என்பது தான் வழக்கு.
இன்னும் சில பார்த்து முடிவுக்கு வந்துவிடலாமா? அதாவது வரலாறு பார்க்கப்பட வேண்டி இருக்கிறது. சுருக்கமாக அதைக் காணலாம்.
- அக்னிஹோத்ரம் தாதாச்சாரியார் “இந்து மதம் எங்கே போகிறது” என்ற தலைப்பில் அளித்த நூலில் திருமலைக் கோயில் வரலாறு என்று சிலவற்றைத் தொட்டுக் காட்டி இருக்கிறார். அவரது கூற்றுப்படி முன்னொரு காலத்தில் திருமலை மேல் வேடர்கள் மட்டுமே வாழ்ந்தார்கள். அவர்கள் தங்களுக்கு அருள்புரியும் ஒரு காவல் தெய்வமாகக் காளியை கல்லில் வடித்து வணங்கினார்கள். அதுவே சில சில உருமாற்றம் பெற்று இப்போதைய திருமலையானாகக் காட்சி தருகிறார்.
- நூலாசிரியர் கூற்றுப்படி திருமலையான் ஏறத்தாழ 2500 மில்லியன் ஆண்டுகட்கு முன் ஒரு பாறை வெடிப்பிலிருந்து தோன்றியவர்தான் திருவேங்கடமுடையான். இவர் சுயம்பு.
- சுயம்புவான திருவேங்கடமுடையான் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பி அதற்கு வேண்டிய பணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கினார். அதற்கு ஒரு கடன் பத்திரமும், கடனுக்கான வட்டியும் உண்டு. அந்த பெருங்கடனைத் தீர்க்கு முகமாக பக்தர்களிடமிருந்து காணிக்கை பெற்று பருவந்தோறும் வட்டி செலுத்திக் கொண்டு வருகிறார். இதற்கான கணக்கு குபேரன் முன் அவ்வப்போது படிக்கப்படுகிறது.
- இத்திருக்கோயிலில் திருமாலாகக் கருதப்படும் இவருக்கு திருமகள் மனைவி என்று இல்லை. திருமகளுக்கு இங்கே சந்நிதியும் கிடையாது. எனில் திருமலையான் செய்த கல்யாணத்தில் வந்த மனைவி யார் என்றால் அவர்தான் அலர்மேல் மங்கை. அவர் எங்கே என்றால் கீழே திருச்சானூரில் என்பது அவர் கீழே எழுந்தருளியதற்கு ஒரு வரலாறும் கூறப்படுகிறது.
இந்த வரலாறுகளில் பல புரிபடாதவை. இவை எல்லாம் வரலாறு என்றே உறுதியாகச் சொல்வதற்கு இல்லை உதாரணத்திற்கு குபேரனிடம் கடன்வாங்கினார் என்றும் அவனுக்கு தினந்தோறும் கணக்கு படிக்கபடுகிறது என்பதும் நம்புதற்கு இயலாது என்பதை நூலாசிரியர் மிகச் சரியாகப் பலபட எடுத்துக் காட்டி இருக்கிறார். கணக்கு குபேரனுக்குப் படிக்கப்படுகிறது என்றால் எங்கே குபேரன் என்று சரியாக நூலாசிரியர் மடக்குகிறார். அதற்காக அவருக்குப் பாராட்டுகள்!
ஆனால் அலர்மேல் மங்கை வரலாற்றை அவர் ஆழமாக நம்புகிறார். ஒருவருடைய நம்பிக்கையை ஆராய்வது அறிவீனம். நம்பிக்கைக்கு ஆதாரம் நம்புபவன் தான். அது அவனுக்குள்ளே உள்ள உணர்வு; அதை வெளியே தேட முடியாது.
மேற்கண்ட வரலாற்றுக் கூறுகளை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவரை தர்க்கரீதியாகப் பார்த்த தரவுகளைக் கொண்டு இப்படி நாம் முடிவுக்கு வரலாம்.
கருத்துமுடிபு
முதலில் நூலாசிரியர் கூறுகிறவாறு திருவேங்கடமுடையான் ஒரு சுயம்பு என்பதையும் அது சொர்க்கத்தில் இருந்து இறங்கியது என்பதையும் முன்னே காட்டிய வலுவான காரணங்களால் ஏற்க இயலாது. அது ஆசிரியரின் ஊகமே தவிர ஆசிரியர் என்னதான் அறிவியல் வர்ணத்தை அந்த ஊகத்திற்கு ஏற்றினாலும் அது அம்பலம் ஏறுவதற்கில்லை.
அடுத்து வரலாற்று ரீதியாக அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியவாறு அங்கே முதன் முதலில் வணங்கப்பட்டது வேடர் எழுப்பிய காளிகோயில் என்பதும் தர்க்கரீதியாகவும் ஆதார அடிப்படை இல்லாததாலும் ஏற்கத்தக்கது அல்ல. காரணம், வேடர்கள் காளியை வணங்கினர் என்பதற்கு இலக்கியச் சான்றுகளும் இல்லை; பொதுவான வழக்கில் உள்ள மரபும் இல்லை. வேடர்கள் முருகனையே வணங்குபவர்கள்; சிற்றளவில் தங்கள் இனத்து வீரர்களைக் குலசாமியாக வணங்குவது உண்டு. காளியோ கிராம தேவதை மற்றும் போர் மறவர் வழிபாட்டுக்குரிய தேவதை. எனவே அக்கருத்து புறந்தள்ளக் கூடியது.
அடுத்து, முருகப் பெருமான் குழந்தைப் பருவ ஆடலாக உலகை வலம் வந்த போது திருவேங்கட மலையில் சிறிது காலம் தங்கி இருந்தான் என்ற கந்தபுராணச் செய்தியைப் பார்ப்போம். அது எப்போது? காலக் கணக்கு ஏதும் உண்டா ? நூலாசிரியர் கூறுவது போல 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாய் இருக்கலாமா? என்றால் பாறையின் காலத்தை பரமனுக்கு ஏற்ற முடியாது. கடவுள் காலக் கணக்கிற்குள் அகப் படாதவன். அதுதான் தர்க்க ரீதியாகக் கடவுளைக் கூறும் போது காலகாலன் என்று கூறுகிறோம். அதுவே கடவுளின் இலக்கணமாகத் தர்க்க ரீதியாகப் பெறத்தக்கது. காலத்தைப் படைப்பின் போது கடவுளே படைக்கிறான். எனவே தான், “காலமோ கந்தவேள் கையது” என்று கந்தபுராணம் பாடிய கச்சியப்பர் கடவுள் இலக்கணம் பிறழாமல் சரியாகப் பாடி இருக்கிறார்.
வேற்றுச் சமய நூலான பைபிளில் கூட இந்தக் கருத்தை கடவுளின் படைப்பில் காட்டுவதைக் காணலாம். 6 நாட்களைப் படைத்து ஒவ்வொரு நாளிலும் சில சில உலகப் படைப்புகளை நிகழ்த்தி 7ஆம் நாள் ஓய்வெடுத்துக் கொண்டார் கடவுள் என்பது அது. இதில் கூறியது அனைத்தும் கடவுள் இலக்கணத்திற்கு ஒத்துப் போகிறது என்று கூற முடியாது. காரணம், கடவுள் ஓய்வு எடுத்துக் கொண்டால் இளைப்பாறுதல் என்பது கடவுள் இலக்கணத்திற்கு மாறானது. ஆனால் படைக்கும் போது கடவுளே வார நாட்கள் ஏழையும் படைத்தான் என்பது வரை கடவுள் இலக்கணம் அங்கேயும் பொருந்தி வருகிறது என்பது மட்டுமே கொள்ளத் தக்கது.
எனவே காலவரையறைக்கு அப்பாற்பட்ட கந்தன் ஆகிய கடவுள் எப்போது திருவேங்கட மலையில் வந்து நின்றான் என்பது எந்த C14 சோதனைக்கும் அப்பாற்பட்டது.
ஆனால் காலம் இன்னதென்று வரையறுக்க முடியாத ஒன்றில் முருகன் திருவேங்கட மலையில் வந்து நின்றான் என்பதே ஏற்றுக் கொள்ளத்தக்கது. ஆமாம்! வந்து நின்ற காலமே தெரியாதாம்! ஆனால் கச்சியப்பர் மட்டும் 14ஆம் நூற்றாண்டில் அதைச் சொல்வாராம்! என்று ஒரு கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கிறது. கச்சியப்பர் சொன்னார் என்பதற்காக ஏற்று கொள்ளலாம் என்று கூற முடியாது என்பது உண்மை! ஆனால் இதில் வேறோர் உண்மை ஒளிந்து கொண்டிருக்கிறது. அதுவே இந்தச் செய்திக்கு அழிக்க இயலாத மறுக்க இயலாத ஆதாரம்!
அதாவது, கச்சியப்பர் என்கிற கந்தகோட்டத்து அர்ச்சகர் தினந்தோறும் கந்தபுராணச் செய்யுள்கள் சில நூறு பாடி ஓலைச் சுவடியில் பதிவிட்டு விட்டு, கடவுளே! இதெல்லாம் சரிதான் என்பது எனக்கு என்ன தெரியும்? எனவே இதை உன் பாதத்தில் வைத்து விடுகிறேன் என்று வைத்துவிட்டு அர்த்த ஜாமப் பூசைக்குப்பின் நடையைச் சாத்திவிட்டு வருவாராம்! காலையில் கதவைத் திறந்து பார்த்தால் ஓலைச் சுவடிகளில் சில சில திருத்தங்கள் செய்யப் பட்டிருக்குமாம்! எனில் முருகனே கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தை மெய்ப்பு பார்த்திருக்கிறான்.
இது 14 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒரு தெய்வச்செயல். இதற்கு பல வேறு அசைக்க முடியாத அகச்சான்றுகளும், புறச்சான்றுகளும், இது உண்மையாக இருக்க வாய்ப்புண்டு என்று கூறுவதாக உள்ளது உண்மை. முருகன் தமிழ்க் கடவுள் என்பர்; தமிழ்க்கடவுள் தன்னைப் பற்றிய தமிழ்ச் செய்யுட்களைத் திருத்தி இருக்க வாய்ப்புண்டு அல்லவா? இதைக்கூட செய்ய முடியாதவன் எப்படி எல்லாம் வல்ல பரம்பொருளாக இருக்க முடியும்!
இதைப்பற்றி எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் அது மற்றொன்று விரித்தல் என்ற இலக்கணக் குற்றமாகிவிடும் என்பதால் இதனை வரலாற்றுச் சான்றுகளில் பாதியும், இறைவனது அருளிச் செயல் மீது வைத்த தர்க்கரீதியான நம்பிக்கை என்ற அளவில் மீதியுமாக கொண்டு மேலே செல்வோம். தெரியாத ஒன்றை “X” என்று வைத்துக் கணக்கிட்டுக் கொண்டே பிற தெரிந்தவற்றில் பொருத்தி விடையை இறுதியில் சென்றடைவதைப் போல இதைக் கொள்ளலாம். இதுவரை முருகன் திருவேங்கடமலைக்கு வந்து நின்ற காலம் பற்றி அலசி ஆய்ந்தோம்.
இனி, முருகன் வந்தது சரி, முருகன் சிலை வந்தது எப்படி என்று ஒரு கேள்வியையும் கவனிக்க வேண்டும். மலைமேல் இருந்த வேடர்கள் முருகன் சிலையை உருவாக்கி வணங்கினர் என்றும் கூறமுடியாது. காரணம், சிலையின் பளபளப்பும், வழுவழுப்பும், மற்றும் சிற்ப அமைதியும் வேடர்கள் அறியாதது. அவர்கள் வேடர்களே தவிர சிற்பிகள் அல்லர். ஆனால் இத்தனை சிற்ப நுட்பத்துடன் அமைந்த ஒரு சிலையின் அடையாளம், சில மாற்றங்களுடன் இன்னும் இருக்கிறதே! எனவே, ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் ஊகத்தை சில அடிப்படைச் சான்றுகளை வைத்து, வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்வதைப் போல நாமும் இங்கே மேற்கொள்ளலாம்.
அதாவது முருகன் அருள் பெற்ற வேடர்கள் அவரைப் பிரியமாட்டாதவராய் என்றும் எமக்கும் எம்குடிக்கும் அருள் புரிய இங்கே கண்காண எழுந்தருள வேண்டும் என்று வேண்டி இருக்கலாம். முருகப் பெருமானைப் பத்தர்கள் “முன்னியது முடிக்கும் முருகு” என்று புறநானூறு விவரிக்கிறது. எனவே அங்கிருந்த பக்குவப்பட்ட வேடர்களில் சிலர்க்கு சிற்ப நுட்ப அறிவையும், அதற்குரிய கருவி அறிவையும் கருவிகளையும் கூட்டி அமைத்து அருள் புரிந்திருப்பான். அதன் வழியே பன்னிரு கர பரமனை சில இடங்களில் அவன் தோற்றம் காட்டுவது போல இருகர இயவுளாகப் படைத்து சிறு கோயில் எழுப்பப் பட்டிருக்கலாம். இப்படி காலவெள்ளத்தில் சில மாற்றங்களோடு ஆனால் தொடக்கத்தில் முருகன் சந்நிதியே இது என்ற அளவில் ஸ்வாமிபுஷ்கரிணி குளம், முடிகாணிக்கை, பாலாஜி, போன்ற முருக அடையாளங்கள் எஞ்சி இருக்க இன்றைய சிலை உருமாறி இருக்கலாம்.
ஆனால், 15 ஆம் நூற்றாண்டு வரை, அதாவது அருணகிரிநாதர் சென்று வணங்கிய காலம் வரை அங்கே முருக வழிபாடே இருந்திருக்கிறது என்பதற்கு மேல் காட்டிய திருப்புகழ் பாடல் வரிகளே சான்று.
இதிலேயும் சின்ன திருத்தம் செய்ய வேண்டும் என்பதற்கு ஏதுவாக ஓர் வரலாற்று உண்மை உண்டு. அதாவது இராமாநுசர் காலம் 12ம் நூற்றாண்டு; அருணகிரியார் காலத்திற்கு முந்தையது. இராமாநுசர் தான் திருமலையானை சங்கு சக்கரம் பொருத்தி திருமாலாக்கினார் என்று வைணவ குருபரம்பரா ப்ரபாவமே ஒப்புக் கொள்கிறது.
இன்னொன்றும் கவனிக்கத்தக்கது; அதாவது இராமாநுசர் திருமாலாக திருமலையானை உருமாற்றம் செய்வதற்கு முன்பாக அத்தெய்வப் படிமம் சிவ பெருமானின் அர்த்தநாரி வடிவாக இருந்தது என்பதை வைணவ குருபரம்பரா ப்ரபாவமே ஒப்புக் கொள்கிறது. எனவே முதலில் தோன்றிய முருகன் சிலையே இராமாநுசர் காலத்தில் மாதொருகூறனான சிவனாக உருமாற்றம் பெற்று விட்டிருக்கிறது. அதைத்தான் இராமாநுசர் திருமாலாக உருமாற்றி இருக்கிறார். அதற்குள்ளே ஒரு பாதியாக அலர்மேல் மங்கையை பின்னாளில் நுழைத்துக் கற்பித்தலும் நிகழ்ந்திருக்கிறது.
எனவே, திருமலையான் படிமத்திலேயே முருகன், சிவன், உமையம்மை, திருமால், அலர்மேல் மங்கை ஆகியவை உருமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதே உண்மை; அதோடு திருமலையான் முழுமையான திருமால் இல்லை என்பதும் உண்மை; திருமாலின் அடையாளங்கள் அதில் பிற்சேர்க்கை என்பதும் முற்ற முழு உண்மை. “எப்பரிசாயினும் ஏத்துமின் ஏத்தினால், அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே” என்ற திருமூலர் வாக்கிற்கு அச்சு இலக்கணச் சான்று திருமலையான்; எதையோ சொல்லி லட்டு சாப்பிடுகிறவர்கள் சாப்பிட்டுப் போகட்டும்!
அடுத்து எஞ்சி இருக்கும் ஓர் ஆய்வுண்மை இதில் உண்டு. அருணகிரியார் சென்ற போது அங்கே முருகன் சிலையே இராமாநுசர் கால ஆய்வுப்படி திருமாலாகவும் இன்னும் பிற பல கடவுளரின் அடையாளங்களோடும் தான் காட்சி அளித்திருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அருணகிரியார் எப்படி அங்கே முருகனைக் கண்டதாகத் திருப்புகழ் பாடினார்? அருணகிரியார் பொய் சொல்லி விட்டாரா? என்றால், இல்லை. எப்படி ? அந்த ஆய்வோடு இதை நிறைவு செய்வோம்.
அருணகிரியார் முருகனின் முழு அருள் பெற்ற அருளாளர் அவர் பொய் சொல்ல வாய்ப்பில்லை. காரணம், “பொய்யர் நெஞ்சில் நில்லான் ஈசன்” என்பர். எனவே அது பொய்யாக இருக்க முடியாது. அருணகிரியாகிய அருளாளர் முக்காலத்தையும் உணரும் வல்லமை படைத்த முழு ஞானி. எனவே திருமலையானைத் தரிசித்த போது அச்சிலை பெற்ற பிற்கால உருமாற்றங்களுக்கும் மேலாக முதலில் வேங்கட மலையில் வந்து நின்ற முருகன் முன்னின்று அருட்காட்சி அளிக்கின்றான். எனவே அந்த முதலில் நின்ற முருகனை அருட்காட்சியால் கண்டு அதையே திருப்புகழ் வரிகளில் வேங்கடவா என்று வியந்து போற்றி பாடினார் என்பதே இது பற்றி ஓர்ந்து ஆய்ந்து அறியத் தக்க உண்மை! இதைவிடுத்து எல்லாமாய் நிற்கக் கூடிய பரம்பொருளைப் பொல்லாச் சமயப் புனுகு சாத்தி பொருத்தமின்றிக் கலகம் செய்து வருத்தத்தில் அன்பர்கள் வாடுவது உண்மை இறைக் கொள்கைக்கு ஏற்றதல்ல என்று இந்த ஆய்வை நிறைவு செய்கிறேன்.
இவண்
மு.பெ.சத்தியவேல் முருகன்