திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும்
ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார்
மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன்
நூலாசிரியருடைய பரந்துபட்ட அறிவு செந்தமிழ் இசையின் நீள அகலங்களைக் கண்டு இறுதியில் ஆழ்ந்து அதன் ஆழத்தை ஆழ்ந்து நோக்கி அதன் எல்லையை அளந்து காட்ட முனைவது அவருடைய பேராராய்ச்சித் திறனுக்கு இந்நூல் மற்றுமோர் சான்றாகும். பேரருட் திறனால் நமக்குக் காட்டிய தமிழிசைக் காட்சியே முதன் முறையாக இந்நூலாக மலர்ந்துள்ளது. இதில் பண்டைய தமிழிசைச் சங்கம், இசைக் கருவிகள், கலைஞர்கள் அவர்தம் திறம், நிலத்துக்கேற்ற பாட்டு, பண், என இசைநூல்கள் கடல் கோள்களில் மறைந்தன. பின் தோன்றிய திருமுறை இசை அதில் காணப்படும் பழைய பண்ணமைதி, பழைய தமிழிசையே மீட்டுருவாதல் இன்றைய ஓதுவார் நிலை என பலப்பட தமிழிசையின் தொன்மையையும் சிறப்பையும் நிலைநாட்டுகிறார்.
இதை ஒரு பக்கம் தமிழிசை மாணவர்களுக்குப் பாடநூலாக பார்க்கலாம். இன்னொரு பக்கம் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக பார்க்கலாம். இந்நூலின் சிறப்புகளை இனிப் பார்க்கலாம்.
கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்தியத் துணை கண்டம் முழுவதிலும் ஒரே இசை முறை தான் நிலவி வந்திருக்கிறது. அது தான் தமிழ்நாட்டு இசை முறை. அது தான் இன்று கர்நாடக இசை என இன்று வலம் வருகிறது. சர் ஜான் மார்ஷல் என்ற ஆங்கிலேயரின் சிந்துவெளி அகழ்வாராய்ச்சியின் அடிப்படைச் செய்திகள் நம் தமிழிசையை நிறுவுகின்றன. மொகஞ்சதாரோ, அரப்பாவில் வெண்கலத்தை உருக்கி வார்த்துச் செய்யப்பட்டுள்ள நடனப் பெண்ணின் சிற்பம் வியக்கத் தக்கதாகும். சிந்துவெளித் தமிழர்கள் இசையிலும் நடனத்திலும் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே மிகவும் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே கடைக்கோடி தமிழர்கள் இசையில் மிகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே தமிழிசையே தரணியில் தோன்றிய முதல் இசை என்று துணிவுடன் கூறலாம்.
தமிழகத்தில் ஒவ்வொரு வகை நிலத்தில் ஒவ்வொரு வகை யாழும், ஒவ்வொரு வகை பறையும் இருந்துள்ளன என்றதின் மூலம் 20,000 ஆண்டுகள் முற்பட்ட முதல் தமிழ் சங்க காலத்திலேயே இவை இருந்தன என்பதை என்ப என்ற சொல் சுட்டிக் காட்டுகின்றது. தொல்காப்பியத்தில் இயலுக்கும், இசைக்கும் இலக்கண சூத்திரங்கள் ஒன்றாக உள்ளன. சான்றாக, தமிழ் நெடில் எழுத்துக்கள் ஏழும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள என்பன தமிழ் இசைக்குரிய ஏழு சுரங்களாகும். இவற்றை விதவிதமாகப் பண்ணிப் பாடியதால் அதனை பண் என்றனர். இவையே பின்னால் மாறி ‘சரிகமபதநி’ என்று மாறின. பின்னால் வந்த சாம வேதம் முதலில¢ 3 சுரங்களில் பாடப்பட்டன. பின் இதுவே 6 ஆக மாறியது. அதுவும் வெறும் எண்ணிக்கை அடிப்படையில் தான் என்பது செய்தி.
‘சாமவேதம் ஒழுங்கற்ற இசை’ என்றது மனு சாஸ்திரம். ‘அடியார்க்கு நல்லார்’ சிலப்பதிகார உரை மூலம் நமக¢கு பழந்தமிழ் இசை பற்றிய பல செய்திகள் கிடைக்கின்றன. இதையே நாம் ஆவணமாக, அடிப்படையாகக் கொள்ளலாம். புறநானூற்றில் பல இடங்களில் தமிழிசைச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. பதலை, பதலா என மாறி தபலா என்று நின்றது. இளங்கோவடிகள் தமிழிசை -தொன்முறை இயற்கை ஆகும் என்கிறார். சிலப்பதிகாரத்தில் பெறப்படும் முக்கியமான தமிழிசைச் செய்திகளின் தொகுப்பை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் உரை வாயிலாக அளித்துள்ளார். அவற்றில் சில
- பழந்தமிழ்ப் பண்களின் எண்ணிக்கை 11,191.
- திருவிளையாடற் புராணத்தில் இசைவாது வென்ற படலத்தில் தமிழிசையின் முழு வீச்சைக் காணலாம். ஈழ நாட்டு பாடினிக்கும் பாண பத்திரன் மனைவியாகிய விறலிக்கும் இடையே நடந்த போட்டியில் தமிழிசை தெய்வ இசையே என்று உறுதிப்படுகின்றது.
- தமிழிசை அனைத்து ஆன்மாக்களையும் சுண்டி எழுப்புகிறது.
- வெற்றி பெறும் இசையில் இலக்கணத்தின் வீச்சை உணர முடியும்.
- யானை, பாம்பு இசை நயத்தில் ஈடுபட்டனவாகும்.
- குறிஞ்சிப்பண் மழைக்குரியது.
- விடிகாலைக்கு மருதப்பண், மாலைக்குச் செவ்வழிப் பண் (நடுநிசிக்கு யாம யாழ்) என பொழுதிற்கு ஒரு பண்ணை நாம் பார்க்கலாம்.
- வழிப்பறி கள்வர்களை மயங்கச் செய்வது பாலைப்பண்.
- வீர மரணமடைந்தவர்க்கு விளரிப்பண் (இரங்கற்பா)
- பிள்ளை பெற்ற தாய்மார்க்கு உடல் உரமிட செவ்வழிப் பண்
- தரணிமிசை தோன்றிய முதலிசை தமிழிசையே என்பதை குழல், யாழ், முழவு என்ற அடிப்படை சான்றுகளால் உணரலாம்.
- இசையை 8 வகையாகப் பண்ணிப் பாடுவதால் பண் என்றாயிற்று.
- ஐந்தொகை பெயர் மாற்றப்பட்டு பஞ்ச மரபாயிற்று.
- சரிகமபதநி – இவை தமிழிசைக் குறியீடே என்று பழைய நூல்கள் விளம்புகின்றன. சாரங்க தேவர் 12-ஆம் நூற்றாண்டின் செய்த மொழி மாற்றம், மூலமாற்றம் பெரும் புரட்டு எனலாம்.
- இசை என்பது ஒலியுடன் மட்டும் தொடர்புடையதன்று. ஐம்பூதங்களோடு தொடர்புடையது என்று பஞ்சமரபு ஆய்ந்துரைக்கின்றது. தமிழிசை இலக்கணம் பஞ்ச மரபு என்றால் தேவார திருமுறைகள், தமிழிசை இலக்கியங்களாக இன்றும் வலம் வருபவை. இவை பழந்தமிழ்ப் பண்களுக்கு உயிர் கொடுத்தவை ஆகும். கருநாடகச் சங்கீதம் என்ற சொல்லாட்சியே 18ஆம் நூற்றாண்டிற்கு பின் தான் ஏற்பட்டது.
இனி, திருமுறைத் தமிழிசையின் சிறப்புகளைப் பார்க்கலாம்.
- தமிழிசைப் பண்களைக் காலத்தால் தூக்கி நிறுத்தியவை பன்னிரு திருமுறைகளே. இசைத்தமிழ் என்பது இறைவன் மானுட உலகிற்குக் கொடுத்த இணையற்ற வரம்.
- தேவாரப் பண்களில் பகலில் பாட வேண்டிய பண்கள், இரவில் பாட வேண்டியவை, பொதுப்பண்கள் என வகை பிரித்துப் பாடப்பட்டுள்ளன. எந்த நேரத்தில் எந்தப் பண்ணைப் பாடினால் அது இனிக்கும் சிந்தையைக் கிளரும் என்று தமிழர்கள் கண்டு பிடித்து வைத்திருந்தார்கள்.
- எந்தப் பண்ணுக்கு எந்த இராகம், இந்த இராகத்திற்கு இந்தப் பண் என்று பிற்காலத்தில் வேற்றிசை வாணர்க்கும் நம் ஓதுவார்க்கும் ஏற்பட்ட குழப்பம், நம் தமிழிசைக்கு நேர்ந்த சோதனை என்ற ஆசிரியரின் பார்வை அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். பிற்கால தலைகீழ் மாற்றத்தை நாம¢ சரி செய்ய வேண்டும். இயற்கையோடு இயைந்த தமிழிசை நிலம், பொழுது, பருவம் இவற்றுடன் ஒத்துச் செல்வது ஆகும்.
- எனவே பண்களைத் திட்டமிட்டு சுரக் கோர்வையில் ‘சரிகமபதநி’ ஆரோசை, அமரோசை காட்டி கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழிசையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
- சம்பந்தர் இசைக்கும் இறைவனை அடைவிக்கும் மெய்யறிவிற்கும் பாலமிட்டவர் என்கிறார் தெய்வச் சேக்கிழார். ‘இசை முழுதும் மெய்யறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக’.
- திருஅம்மானை, ஆனந்தக் களிப்பு என்னும் பாடல்களைக் காவடிச் சிந்தில் பாடுவது மரபு. இது நம்மை இறைவனுடன் ஒன்று கூட்டும் பண் சீகாமரம் என்பது நாம் பெறும் அரிய செய்தி. இதை ஆசிரியர் நமக்கு அடையாளம் காட்டுகிறார்.
- சிந்தை தெளிய – சிந்தை தெளிந்தார்க்கு உகந்த பண் பஞ்சமம்.
- திருமந்திரம் பொதுவாக இந்தளப் பண்ணில் பாடப்படுகிறது.
- 11-ஆம் திருமுறையில் காரைக்கால் அம்மையார் நட்டபாடை மற்றும் இந்தளத்தில் பாடி உள்ளார்.
- 12-ஆம் திருமுறை வரலாற்று திருமுறையாதலால் பண்ணமைதி காணப்படவில்லை.
- இசைக்குரிய நாயன்மார்களாய் ஆனாய நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் காணப்படுகின்றனர்.
- சேக்கிழாரின் இந்தளப் பண் ஆராய்ச்சி தலையாயது.
- ஆனாய நாயனாரின் புராணத்தில் சேக்கிழார், தமிழிசையின் வீச்சை, குழலோசையின் சிறப்பை மூங்கில் மற்றும் குழல் தேர்வு எனத் தொடங்கி ஆனாயர் ஐந்தெழுத்து மந்திரத்தை விதவிதமாக எப்படி வாசித்தார் என்ற நுணுக்கத்தை மெய்யறிவை சேக்கிழார் வாக்கால் ஆசிரியர் எடுத்துக் காட்டும் போது எவரும் அவருடைய இசையறிவின் திறத்தில் மயங்கி நிற்பர் என்பது உண்மை.
- திருநீலகண்ட யாழ்ப்பாணரை அவருடைய தமிழ் இசைத் திறனைச் சேக்கிழார் பாடிய ஆலவாய் பாடலுக்கு நம் ஆசிரியர் காட்டும் உரை வீச்சு இன்றைய எந்த இசைவாணருக்கும் தமிழிசையின் கோடி காட்டியதாகும்.
- தமிழிசை கருவிகளுக்குள் அடங்காதது. ஏனெனில் தமிழிசை தெய்வத் தன்மை வாய்ந்தது.
- பழந்தமிழ் பண்ணிற்கு திருமுறைப் பாடல்களே ஏற்றவை. திருமுறை இசை வளர்ச்சியே தமிழிசை வளர்ச்சி ஆகும் என்பது ஆசிரியர் கூற்று.
- ‘பண்ணென்னாம் பாடற்கு இயைபு இன்றேல்’ என்ற வள்ளுவர் வாக்கை ஆசிரியர் இயைந்து காட்டுகிறார்.
தமிழிசைச் சங்கத்தின் பண்ணாராய்ச்சி கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆசிரியர் நீண்ட காலமாக பண் ஆராய்ச்சி திசை மாறி செல்வதைக் குறிப்பிடுகிறார். தமிழிசைக்கு 20,000 ஆண்டு கால வரலாறு உண்டு என்று ஆதாரங்களுடன், விஞ்ஞான முறையுடன் சான்றுகளுடன் நிறுவியது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். தமிழிசையை மூலமாகக் கொண்டு இராகங்கள் நிறுவியது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். தமிழிசையை மூலமாகக் கொண்டு இராகங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டுவது முறை என்கிறார். ஓதுவார்கள் பண்ணைத் தமிழ் மூலமாகக் கொண்டு பாடவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து தம் ஆய்வை மேற்கொண்டது அனைவரும் அறிய வேண்டிய, மாற்ற வேண்டிய நிலை ஆகும்.
- பஞ்ச மரபு என்ற ஐந்தொகை (பஞ்ச மரபு) நூலில் எட்டிப் பார்க்கின்ற வடமொழிச் சொற்கள் அமைந்த வெண்பாக்களை இடைச்செருகல்களை நமக்கு சுட்டிக் காட்டி அதை சரி செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
- தமிழ் இசை மூலங்களைப் பயன்படுத்தி வேண்டும் இடங்களில் மாற்றங் கொண்டு 72 மேள கர்த்தாக்களுடன் ‘சங்கீத ரத்னாகரம்’ என்ற வடமொழி இசை நூலைச் சாரங்கதேவர் 13-ஆம் நூற்றாண்டில் வெளியிட்டார். இதுவே இன்று எங்கும் கோலோச்சி வருகிறது.
- நமது ஓதுவார்கள் ‘சரிகமபதநி’ என்ற இசைத்தமிழ்க் குறியீடுகளை அந்நியமாக எண்ணுகின்றனர். சுரத்தோடு பண்ணைப் பாடலாம் என்று சம்பந்தரே தெளிவுப்படுத்துகிறார். இதே போன்று நாட்டியத்திற்கும் சுரம் மிக முக்கியம் ஆகும்.
- சம்பந்தர் ‘காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார் வீதித் தேந்தாம் என்றரங்கேறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே! என்று பாடுகிறார்.
- ‘சரிகமபதநி’ என்பது தான் இசைத்தமிழின் அடிப்படைச் சட்டம். இவற்றிலிருந்து தான் ஏழிசையும் பிறக்கிறது என்று பழைய இசைத்தமிழ் இலக்கண நூல்கள் ஆகிய ‘சிகண்டியும்”பஞ்ச மரபும்’ கூறுகின்றன.
புறநானூற்றில் தமிழிசைச் செய்தி
- புறநானூற்றிற்கு முன்னமே தலைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழிசை ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.
- வல்வில் ஓரியை ஒரு காட்டில் ஒருமாவீரனாக அரசன் என்று தெரியாது புலவர் வன்பரணார் கண்டு, அவன் வீரத்தை வ¤யந்து, அவன் புகழை அங்கேயே பாடுகின்றார். அதற்கு விறலியர்கள் ஒரு பண்ணமைக்கப் பலபல பக்க வாத்தியங்கள் அதற்கேற்ப முன்னேற்பாடின்றி இயைந்து வாசிக்க விறலியர்கள் ஒரே பாட்டை ஒரு பண்ணிலன்றி அதன் 21 ஜன்ய ராகங்களிலும் பாடுகின்றனர். இவ்வீரனது புகழை 1 பண்ணோடு நிறுத்த மனமின்றி 21 பண்களில் இசைக்க வைக்கிறார். இக்காட்சி தமிழிசை மேன்மையை தூக்கி நிறுத்துவதாகும். இந்தப் புறநானூறு 152 ஆம் பாடல் இதனால் தான் என்னவோ தமிழிசைக் கடலை தரைமிசைக் கடல் பொறாமையால் அன்று விழுங்கியதோ என்னவோ என்ற ஆசிரியரின் நயம் இன்புறத்தக்கது.
தொல்லிசைச் சிறப்பும் நல்லிசை ஆனாயரும்:
ஆனாய நாயனார் புல்லாங்குழலில் ஐந்தெழுத்தை விதவிதமாக வாசித்து இறைவன் கருத்தைக் கவர்ந்து அவன் கழலடியை அடைந்தார். இது எப்படி என்றால் குழலில் பல்வேறு சுரங்களை வண்டு தாது பிடிப்பது போல எழுப்பி எழுப்பி, ஊதிப் பார்த்துச் சோதித்தாராம் ஆனாயர் என்று சேக்கிழார் பாடுகிறார்.
- பியந்தைக் காந்தாரம் பற்றிய ஆசிரியரின் ஆய்வு சபாஷ். அனைத்து இசைவாணர்களும் அறிய வேண்டிய செய்தி. காந்தாரப் பண்ணே இறைவனின் இசை வடிவமாயிற்று. இதனால் அருளரசப் பண் என்று பெயர் பெற்றது. இது ஒரு இரங்கற் பண்ணாகும். இதனாலேயே இராவணன் இந்தக் காந்தார இசையைப் பாடியே உய்ந்து போனான். இராவணன் சாம வேதம் பாடினான் என்பது பிழை. காந்தாரம் நீர்மை உடையது. இது இறைவன்பால் கசிவை ஏற்படுத்தக் கூடியது.
- பொதுவாக பண் உள்ளுக்குள் (உடலுள்) 8 உறுப்புகளை ஆட்டிப் படைத்துக் கொண்டு வருமாம். இந்த எட்டையும் ஏறி சவாரி செய்து வருவது பியந்தை காந்தாரம் ஆகும். சம்பந்தர் தந்தையின் தோளேறி பாடியது போன்று இத்தமிழ்ப் பண்ணுக்கு எல்லா உயிரும் இசைந்தன போலும்! இறைவனே அவருக்கு ஒரு தலைமை ஏற்படுத்திக் கொடுத்து அனைவரையும் அவர் பின் போகச் செய்தது, அனைவரையும் வென்றேறி ‘சமயக் கோளரி’ என்றும் சமயத் தலைவர் என்று பேரெடுக்க கொண்டாட வைத்தது இந்த பண்.
சந்தத் தமிழிசை:
தாயும் தந்தையுமின்றி குழந்தையில்லை. அது போல தண்ணார் தமிழ்ப் பண்ணும் தாளமும் இன்றி தமிழிசை இல்லை. சந்தங்கள் – தென்பாங்கு. தெம்மாங்கு என்பது பண்டைய வழக்கு. சம்பந்தரின் 384 பதிகங்களும் சந்த அடிப்படையில் அமைந்தவையே. இதை அடியொட்டியே அருணகிரியார் 869 சந்தங்களில் திருப்புகழை பாடியுள்ளார். அருணகிரியாரே, தமிழிசையின் பெருமையை அளந்து கூறுவது மிக மிக அரிது என்று பாடியுள்ளார்.
‘பகர்தற்கரிதான செந்தமிழ்’ இசையிற் சில பாடல் அன்பொடு பயிலப் பல காவியங்களை உணராதே – இது அருணகிரிநாதர் வாக்கு!
- பண்டைய தமிழிசை அறிவுடன் பின்பற்றப்பட்டது. முதலில் சந்தங்கள் பிறகு அதற்கேற்ற சொற்கட்டு, பிறகு அதற்கேற்ப தாளக்கருவி வாசிப்பு. இதுவே தமிழிசை முறை ஆகும். இயற் புலவர்களுடன் இசைப் புலவர்கள் சேர்ந்தால் பாட்டும் கொட்டும் வரும். இதையே சுந்தரரின் கொட்டாட்டுப் பாட்டை நமக்கு அடையாளம் காட்டி அருள்வழி காட்டுகிறார்.
- சொற்கட்டு பொருளற்ற ஓசையாகவும் வரும் என்பது நாம் அறிந்த செய்தி. ஆனால் இங்கே சடப்பொருளான ஒரு தாளக் கருவி கூட தமிழ்ச் சொல்லுக்கு ஒத்து வந்து ஒரு பொருள் பெற்றுப் பேசுமாம்! என்பதை ஆசிரியர் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார்.
ஆசிரியர் முதுபெரும் புலவர் என்ற பட்டத்தை இள வயதிலேயே பெற்றவர். அவருடைய உளக்கிடக்கை நம் தமிழிசையின் சிறப்பை அறியாமல் இத்தமிழ் உலகம் நேற்று வந்த இசையில் மயங்கிக் கிடக்கிறதே என்பதேயாம். இம்மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தெற்றென உண்மையை வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் இத்தமிழிசை களஞ்சியம் வாயிலாக. இந்நூல் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய பண்பாட்டுக் களஞ்சியமாகும்.
திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும்
நூலின் விலை: ரூ.150
பக்கங்கள்: 240