You are here
Home > கட்டுரைகள் > இராமர் செய்த மணல் இலிங்கம்

இராமர் செய்த மணல் இலிங்கம்

பெறுநர்
புலவர் மா.இராமலிங்கம்,
சென்னை.

பேரன்புடைய நண்பர்க்கு, 

    வணக்கம். இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அளவளாவியமைக்கு மகிழ்ச்சி. உடன் ‘வாட்ஸ் ஆப்’பில் ஒரு காணொளிக் காட்சி அனுப்பி கருத்து கேட்டிருந்தீர்கள்.

    காணொளியில் பேசியவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் குறிப்பிட்ட பாஸ்கரராயர் பற்றி அறிவேன். சாக்த ஆகமக் கருத்துரை மற்றும் பேருரையாளர்; புதுக்கோட்டை ஊர்; சற்றேறக் குறைய 14-ஆம் நூற்றாண்டினர். புதுக்கோட்டை சித்தர்கள் கோயிலில் இவருக்கு ஒரு சந்நிதி உண்டு. புவனை கலை மேரு சக்கர வழிபாட்டினர். திருமூலரின் புவனாபதி சக்கரத்தை அடியொற்றி அச்சக்கரத்தைப் புகழ் பெறப் பரப்பியவர்.

    இவரைப் பற்றி தான் காணொளியில் அந்தப் பெரியவர் இராமேச்சுரத்தை ஒட்டி ஒரு புதுமையான செய்தியைச் செம்பாதியாக உண்மையையும் பிழையையும் கலந்து கூறினார். இதைப் பற்றி விளக்கங்களைத் தங்களைப் போன்ற அறிவார்ந்த நாடறிந்த சொற்பொழிவாளர்கள் அறிந்தால் அது நாட்டுக்கு நன்மையாகும்.

    முதலில் இராமேச்சுரத்தில் இராமன் வணங்க சீதை மணலால் இலிங்கம் பிடித்துக் கொடுத்தாள் என்பது பிழை. சம்பந்தர் இராமேச்சுரம் பற்றி இரண்டு பதிகங்கள் பாடி இருக்கிறார். அதில் ஒன்றில் கூட சீதை மணலில் இலிங்கம் பிடித்துக் கொடுத்ததாக இல்லை. அப்பரும் சரி, சுந்தரரும் சரி ஆளுக்கொரு பதிகம் இராமேச்சுரத்தைப் பற்றி ஒவ்வொரு பதிகம் பாடியுள்ளனர். அதிலும் சீதை மணலில்  இலிங்கம்  பிடிக்க அதை  இராமன்  வணங்கி  வழிபட்டான் என்ற செய்தி வரவில்லை.

சம்பந்தர் ‘அலைவளர்’ எனத் தொடங்கும் பதிகத்தில் பதிகம் முழுதும் ‘அண்ணல் செய்த இராமேச்சுரம்’ என்றே திருப்பித் திருப்பிப் பாடி இருக்கிறார். 

    அடுத்த பதிகத்தில், அதாவது ‘திரிதரு’ எனத் தொடங்கும் பதிகத்தில் முதல் பத்துப் பாடல்களில் இராவணனைக் கொன்ற பழி தீர இராமன் இலிங்கத்தை வழிபட்ட கதையே கூறப்படவில்லை. ஆனால் இப்பதிகத்தின் இறுதிப்பாட்டான பதினோராம் பாட்டில் ‘அண்ணல் நண்ணும் இராமேச்சுரம்’ என்று பாடி வேறு ஒரு தகவலைத் தருகிறார். 

    ஒரு பதிகத்தில் ‘அண்ணல் செய்த இராமேச்சுரம்’ என்றும், மற்றதில் இராமனது கதையே இன்றி இராமன் ஆகிய ‘அண்ணல் நண்ணிய இராமேச்சுரம்’ என்றும் பாடுகிறார். எனவே இரண்டிற்கும் பாரதூரமான வேறுபாடு இருக்கிறது. அதாவது ஒன்று இராமன் மணலால் செய்த இலிங்கக் கோயில். இன்னொன்று ஏற்கெனவே இருந்த ஈசன் கோயிலை இராமன் நண்ணியது – அதாவது சென்றடைந்தது. இரண்டிலுமே சீதைக்கு ஒரு பங்கும் இல்லை. காணொளியில் பேசிய பெரியவர் இங்கே பிழையாக சீதையைப் புகுத்திவிட்டார். 

    அடுத்து இராமாயணம் இது பற்றி என்ன கூறுகிறது? இதைப் பார்த்தால் தெளிவு பெற ஏதுவாகும். வால்மீகி இராமாயணத்தில் அங்கே ஏற்கெனவே ஈசன் கோயில் இருக்க அதை இராமன் தான் செய்த கொலைப் பழி நீங்க வழிபட்டான் என்று வருகிறது. இராமன் இப்படி வழிபட்டதால் பின்னால் அது இராமேச்சுரம் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்று இதனால் அறிய வருகிறோம்.

    கம்பன் இது பற்றி என்ன கூறுகிறான்? அதையும் பார்ப்போம். இதைக் ‘கம்பன் கவிநயம்’ என்ற தனது நூலில் வாரியார் சுவாமிகள் இப்படி விவரிக்கிறார்.

    ‘(இலங்கையிலிருந்து புறப்பட்ட புட்பக) விமானத்தை விட்டு இறங்கிய இராமர் கடற்கரையில் சிவபூசை செய்யக் கருதினார். காசியில் சென்று சிவலிங்கம் கொணருமாறு அனுமாருக்குக் கட்டளை இட்டார். அனுமார் சிவலிங்கம் கொணரத் தாமதித்த படியால் மணலையே சிவலிங்கமாகப் பிடித்து சிவாகம முறைப்படி சிவபூசை செய்தார். பின்னர் அனுமார் சிவலிங்கம் கொண்டு வந்தார்.’

     இதனால் அனுமன் இலிங்கம் காசியிலிருந்து கொண்டு வரத் தாமதம் ஆனதால் தாமே கடற்கரையில் மணலில் இலிங்கம் பிடித்து இராமர் பூசை செய்து விட்டார். சிவாகமப்படி இப்படிப் பூசை செய்வது க்ஷணிகலிங்கம் என்று கூறப்படும். விதிப்படி க்ஷணிகலிங்கத்தை ஒரு பரந்த கடற்கரையில் பிடித்துப் பூசை செய்த பின் அதைக் கலைத்து விட வேண்டும். இதை வடமொழியில் ‘விசர்ஜனம்’ என்று சிவாகமம் கூறும். எனவே இராமர் செய்த மணல் இலிங்கம் இப்போது அங்கிருக்க இயலாது. மணல் கோயில் பற்றி கேட்கவே வேண்டாம்!

     அதனால், தான் செய்த மணல் இலிங்க மணல் கோயிலில் பூசை முடிந்த பின் ஏற்கெனவே சேதுக்கரையிலிருந்து சில மைல் தூரம் (30 மைல் எனலாம்) இருந்து இராமேச்சுரத்தை இராமன் நண்ணி அங்கேயும் வழிபட்டான் என்று சம்பந்தரும் பாடி இது பற்றிய மேல் தகவலைத் தந்தார். இது வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்ட தகவலுக்கும் ஒத்து வருகிறது.

     எனவே தான் பின் வருவோர் புரிந்து கொள்ள மணல் இலிங்க இராமேச்சுரக் கோயிலுக்கு ஒரு பதிகம்; அதன் பின் ஏற்கெனவே இருந்த ஈசன் கோயிலுக்கு ஒரு பதிகம் என்று இரண்டைப் பாடினார் சம்பந்தர் என்க.

     அடுத்து மணலில் இலிங்கம் பிடித்தால் அது காலம் காலமாக அபிடேகங்களுக்குக் கரையாமல் தாங்குமா என்ற செய்திக்கு வருவோம். பாஸ்கரராயர் சொன்னதாகவும் செய்ததாகவும் காணொளியில் பேசிய பெரியவர் குறிப்பிட்டது பொய்யல்ல. அதற்குச் சான்றாக பலவேறு தலங்களில் புற்றிடம் கொண்ட பெருமான் இருக்கிறார். எடுத்துக்காட்டாக திருவாரூர்க் கோயிலையும், திருவொற்றியூர்க் கோயிலையும் கூறலாம். 

     அதுவும் விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்படக் கூடியதே. அதாவது மணலின் விஞ்ஞானப் பெயர் சிலிகான். இந்தச் சிலிகானை மிக உயர்ந்த வெப்ப நிலையில் உருக்கிவிடலாம். அப்படித்தான் இப்போது கணினி சிப்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

     அதை எப்படி நம் பாஸ்கரராயர் செய்து உப்புலிங்கத்தை உருவாக்கினார்? அதற்கும் முன் நம் அருளாளர்கள் எப்படி செய்து காட்ட முடிந்தது? அருளாளர்கள் உடம்பை இரசாயன மாற்றம் செய்து வைத்திருப்பார்கள். ஒன்றைத் தொட்டு அதைத் தம் இரசாயன ஆற்றலால் அதிர வைத்து சூடாக்குவார்கள். அதில் மணலின் அணுவில் சுற்றி வரும் மின்னணுக்கள் (எலக்ட்ரான்) தன் சுற்றுப் பாதையிலிருந்து சில எண்ணிக்கை வெளியேறி வேறு ஒரு மூலகமாக மாறிவிடும். அதனால் அது இறுகினால் புயல் மழையில் சிக்கினாலும் அது கரையப் போவதில்லை.

      அஷ்டபந்தன மருந்து என்று கோயில் படிமங்களைப் பிரதிட்டை செய்யப் பயன்படுத்துவார்கள். எட்டு மூலகங்களின் கூட்டுக் கலவை அது. அதை வெல்லம், வாழைப்பழத்துடன் சேர்த்துப் பிசைந்தால் அதீத வெப்பம் வரும். அதில் கட்டி கட்டிய அஷ்டபந்தனம் உருகும். உருகியதை வேண்டிய இடத்தில் ஊற்றினால் அது சற்று நேரத்தில் பழையபடி இறுகி விடும். அதை எத்தனை புல்டோசராலும் இடித்துப் பிரிக்க முடியாது. மேற்கூறிய ஒன்று அருளாற்றல்; மற்றது பொருள் ஆற்றலால் ஆவது; அவ்வளவு தான்! இதில் ஒன்றும் அதிசயமில்லை. எல்லாமே இயற்பியல் நிகழ்வே!

     இது புரியாதவர்களுக்கு வித்தை காட்டிப் பிழைப்பவர்களும் உள்ளனர். அறிவார்ந்த மக்கள் அறிவோடு வழிபாடு செய்வார்களாக!

தமிழா வழிபடு! தமிழில் வழிபடு!

அன்பன்,  

                                         மு.பெ.சத்தியவேல் முருகன் 

27/7/2022

      

   

Top