சிறியேன் சிறுவயதிலிருந்தே ஒரு பெருமை குறித்து மார்தட்டிக் கொள்வது உண்டு. அது நான் பிறந்த வேலூர் பற்றியது. உலகில் எந்நாட்டிலும் மண்ணில் ஏதேதோ விளைய, இங்கு மட்டும் மண்ணில் தமிழ் முருகனின் தனிவேல் முளைக்கிறதாம். சிறுபாணாற்றுப்படையில்,
திறல்வேல் நுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூர்.’
– (சிறுபாணாற்றுப்படை வரி 172 – 173)
இத்தகைய சங்கப்பாட்டில் இடம் பெற்ற பெருமையுடைய வேலூரில் ஓர் ஆறு ஓடுகிறது; பெயர் பாலாறு. இன்று இது ஓடிய அடையாளத்துடன் நிற்கின்ற ஓர் ஆறு. இதற்குப் போய் பாலாறு என்று எப்படி பெயர் வந்தது? ஒரு வேளை ஒரு காலத்தில் பாலாய் ஓடி இருக்குமோ? இப்போது பால்போல் மணல் தான் விரிந்து பறந்து கிடக்கிறது. இது என் மனதை எப்போதும் குடைந்து கொண்டே இருக்கும். ஊரால் மார் தட்டிக் கொண்ட நான் ஆறால் மாரை குத்திக் கொள்வதுண்டு. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழாரும் பாலாற்றின் நிலைமை அப்படித் தான் என்று உறுதி செய்கிறார். ஆனால் அதற்கு ஒரு காரணம் கூறுகிறார் பாருங்கள்! அது தான் தமிழ் மற்றும் தமிழரின் சிறப்போ சிறப்பு!
பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்துகை வருட
வெள்ள நீரிரு மருங்குகால் வழிமிதந் தேறிப்
பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி.
வழக்கம் போல் பாட்டின் பதவுரை தாண்டி, போந்த கருத்திற்கு வந்து விடுவோம்.
பச்சிளங் குழந்தை தாய் முலையைப் பசிக்காக கைவைத்து வருடிட பால் சொரிவது இயற்கை. அதற்கு மாறாக தாய்முலையில் எப்போதும் பால் ஒழுகுமானால் அது நோய். அது போல் உழவர்களாகிய மன்னர்கள் எப்போதெல்லாம் பாலாற்றின் மணற்பரப்பில் கை வைத்து மணலை வருடினாலும் ஊற்று நீரை தாய் போல் வெள்ளமாகச் சுரக்கும் என்பதால் இதற்கு பாலாறு என்று பெயர் வந்தது என்கிறார் சேக்கிழார். அவர் தொண்டை நாட்டுக்காரர்! தன் நாட்டில் ஓடும் ஆற்றை விட்டுக் கொடுப்பாரா? ஓர் ஆற்றில் தண்ணீர் எப்போதும் ஓடிக் கொண்டிருந்தால், அது நோய் பீடித்த தாயின் முலை, பாலை ஒழுக்கிக் கொண்டே இருப்பது போலவாம்! குழந்தை கைவருட தாய் முலைப்பால் சுரப்பது போல சுரந்து காப்பதால் இந்த ஆற்றிற்கு பாலாறு என்று பெயர் வந்ததாம்.
இதற்கு மாறாக ஒரு காலத்தில் இதில் பாலாக ஓடியது என்று நினைத்தால் அது உங்கள் தவறு என்கிறார் சேக்கிழார். பாலாற்றின் பெயர்க்கு இப்படி உலகியலுக்குப் பொருந்த ஒரு காரணம் காட்ட இடம் கொடுப்பது தான் தமிழின் சிறப்பு! அதை வைத்துப் பெயரிடுவது தான் தமிழிரின் சிறப்பு!
இவண்
மு.பெ.சத்தியவேல் முருகன்.