You are here
Home > செய்திகள் > சிவபெருமான் சிறைக்குள்ளே!

சிவபெருமான் சிறைக்குள்ளே!

உலகமே கரோனாவால் நடுங்கி ஒடுங்கிச் செத்துக் கொண்டிருக்கிறது. உலகின் எல்லா மூலையிலும் நடுக்கம்! மக்களின் நடுக்கத்தால் பூமியே சற்று வேகமாகச் சுற்றுகிறது, நமக்கு கடவுளின் மீதே கோபம் வருகிறது. சிவனை கருணாகரன் என்பர்; ஆனால் சிவன் இப்ப கரோனாகரன் ஆகிவிட்டான். ஆதிக்க நாடுகள் கூட பாதிக்கப்பட்டு மருந்துக்காகத் திருவோடு ஏந்தி தெருவோடு திரிகின்றன. இதுதான் மருந்து என்று கூட கண்ணில் காட்டாமல் இதென்ன நோய் என்று காறி துப்பலாமா என்றால் ஐயையோ துப்பினால் தீப்போல பரவும் என்கிறார்கள். வாயிலிருந்து வந்ததா, வெளவாலிலிருந்து வந்ததா? தெரியவில்லை.

இப்படி எல்லாம் உலகமே அடங்கி உயிர்ப் பிச்சைக்காக ஓலம் இட்டுக் கொண்டிருக்கும் போது சிவன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? சிவனாகிய இந்தப் பிட்சாடனர் பிச்சைக்கு இனி, இந்த உலகம் லாயக்கில்லை என்று வேறு ஏதாவது கிரகத்திற்கு பிச்சை எடுக்கப் போய்விட்டாரோ? எங்கே போய் ஒழிந்தார்?

கடவுளைப் போய் இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று சிலர் சிணுங்கலாம், போயா! தெய்வத் திருவள்ளுவரே “இறந்து உயிர் வாழ்தல் வேண்டின் பறந்து கெடுக உலகு இயற்றி யான்” என்று திட்டி இருக்கிறார். அவ்வளவு ஏன்? சுந்தரரே இவ்வளவு நடக்கிறது; சும்மா கோயிலுக்குள் இருந்து கொண்டு என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர் என்று கொங்கு நாட்டில் இருந்து குரல் கொடுத்திருக்கிறார்; “எத்துக்கு இருந்தீர் எம்பிரானீரே?” எத்துக்கு என்பதில் இரண்டு பொருள்; எதுக்கு என்ற கேள்வி ஒரு பொருள்; மற்றொன்று ஏமாத்திக்கிட்டு இருக்கீர் என்பது. பித்தன் என்று பாடியவர் எத்தன் என்றும் சினந்து பாடுகிறார்.

சிவபெருமான் போய் ஏமாத்துவாரா? இல்லைங்க, ஏமாத்தியது உண்மை தான் என்று காஞ்சி புரத்தில் ஓர் அவசரக் கூட்டம் நடந்தது.

காஞ்சிபுரத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன் தவத்தில் பொலிந்த துறவிகள் எல்லாம் இரகசியமாகக் கூடினார்கள். எல்லாம் தவ ஆற்றலால் எதையும் சாதிக்க வல்லவர்கள்!

நடந்தது என்ன என்று தெரியுமா? என்று அவர்களில் தலைவர் போன்ற ஒருவர் தொடங்கினார்.

“இங்கேயே, இந்த காஞ்சி புரத்திலேயே ஓர் அக்கிரமம் நடந்திருக்கு! நாமெல்லாம் யாரை நம்பி தவம் இருக்கிறோம்? சிவனை நம்பி அல்லவா ? சிவ பெருமான் முன்னே என்ன செஞ்சார்? கண்வழியே நுழைந்து கலகம் செய்பவன் காமன் என்று அவனைக் கண்ணாலேயே எரித்தார் அல்லவா? அப்படி இருக்க நமக்கும் காமனுக்கும் என்ன சங்காத்தம்? நாம் உண்மையான சிவனடியார்கள் அல்லவா? இப்படி எண்ணி குடும்பத்தை விட்டு, வீட்டை விட்டு, எந்தப் பெண்ணையும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்று எல்லாவற்றையும் துறந்து விட்டு வந்துவிட்டோம்! நாம் என்ன மத்தவங்க மாதிரியா? சிலபேர் கயிலாசத் தீவுன்னு சொல்லிக்கிட்டு மயலாசைத் தீவு நடத்தறான்! ஒருத்தன் ஐம்புல யானைகளை அடக்கு என்றால் நூற்றுக் கணக்கான உண்மையான யானைகளை விரட்டி விட்டு நிலத்தை மடக்கிறான்! அவனை எல்லாம் விடுங்கள்! நாம் பெண்களின் மேல் பட்ட காற்றுக்கூட நம்மேல் படக்கூடாது என்று முகக்கவசம் போட்டுக்கிட்டு சில அடி தூரம் சமூக விலகலைக் கடைப்பிடித்து தூய தவ வாழ்க்கை வாழ்ந்து வருகிறோமா இல்லையா? யாரை நம்பி?

“சிவபெருமானை நம்பி!” கூட்டமே முழங்கியது. “ஆனா இந்தச் சிவபெருமான் செஞ்சதைப் பார்த்தீங்களா? ஒரு பெண், காமாட்சியாம்! அந்த பெண்ணோடு கம்பை ஆற்றங்கரையிலே இந்தச் சிவன் “டூயட்” பாடி ஒரே கும்மாளமாம்! 21ஆம் நூற்றாண்டு வரக்கூடிய சினிமாவில் கூட இவ்வளவு நெருக்கமான காட்சி எல்லாம் வருமோ இல்லையோ தெரியவில்லை. அந்தப் பெண் இவரை அப்படியே கட்டிப் பிடிச்சுக்குது! எவ்வளவு அழுத்தம்னா அந்தப் பெண்ணோட மார்பகச் சுவடே இவர் மேலே பதிஞ்சிட்டதாம்! அதை ஊருக்குக் காட்டிக்கிட்டு உலா வேறே!”

“அநியாயம் ! அநியாயம்!!” கூட்டம் கொதிக்கிறது.

என்ன பண்ணலாம்?

எல்லோரும் தங்களுக்குள் மெல்ல கிசுகிசுத்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

“பேசாமல் சிவபெருமானைச் சிறையில் அடைக்க வேண்டியது தான், வேறு வழியில்லை!”

உடனே எல்லாத் துறவியரும் தியானத்தில் ஆழ்ந்தார்கள். தியானத்தில் ஆழ்ந்து சிவ பெருமானை அவர்களது மனத்தில் சிறை வைத்துப் பூட்டி விட்டார்களாம்! சிவனால் இதிலிருந்து தப்ப முடியுமா? இப்படி ஒருபாடல் காஞ்சி புராணத்தில் வருகிறது.

காமனை முனிந்து நெடுஞ்சடை தரித்துக்
     கவின்றகல் லாடைமேற் புனைந்து
யாமெலாம் வழுத்தும் துறவியென் றிருந்தும்
     ஒருத்திதன் இளமுலைச் சுவடு
தோமுறக் கொண்டார் எனச்சிறை யிடல்போல்
     சுடர்மனக் குகையுளே கம்பத்து
ஓமெனும் பொருளை அடக்கி ஆநந்தம்
     உறுநர்வாழ் இடம்பல உளவால்

சரிதான்! சிவபெருமானுக்கும் க்வரன்டைன் (Quarantine)! நல்லா வேணும்!

இவண்

மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top