சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களுக்கு
1) பழனி மலைக்கோயில் ஆகம விதிப்படி கட்டப்பட்டதா? ஆம் என்றால் என்ன ஆகமம்
2) பழைய வரலாறுகள் பழனி குறித்து எங்கு கிடைக்கும்?
3) History Professors உதவி செய்யவார்களா?
தாங்கள் அடியேனிடம் கருத்து பெறக்கேட்டவை மேலன. இவற்றை வாட்ஸ் ஆப்பில் வரப்பெற்றேன்.
கேள்விகளின் உள்ளுறைகளை அவற்றின் இயைபு வரன்முறைப்படி இறுதியதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
1) சரித்திர ஆசிரியர்கள் இக்கேள்விகளுக்கு விடைபெற உதவுவார்களா என்றால் உதவுவார்கள். ஆனால் ஆகம் நோக்கில் அவர்கள் இதைப் பார்த்திருக்கவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. அதே நேரம் அவர்களை அறியாமல் சிதறல்களாக சில அவர்களிடமிருந்து பெற்று இணைத்துக் கொள்ள இயலும்.
குறிப்பாக “சேர மன்னர் வரலாறு” என்ற நூலைக் குறிப்பிடலாம். இந்நூல் வரலாற்றாசிரியர் உரை வேந்தர் ஒளவை சு. துரைசாமி அவர்களின் நூல்.
பழனி சேரர் நாட்டைப் பழங்காலத்தில் சோந்ததாகக் கூறுவர். எனவே, சேர மன்னர் வரலாறு சொன்னதாலும், சொல்லாமல் விட்டதாலும் இருவகையாலும் உதவும்.
சேர மன்னர்களின் குலமுறை கிளத்திப் புலவர்களால் பாடப்பட்ட சங்க இலக்கிய நூல் பதிற்றுப் பத்து. அதில் 8 சேர மன்னர்கள் இடம் பெறுகிறார்கள். ஆனால் ஒருவர் கூட பழகி கோயிலின் தொடர்புடையவர்கள் அல்லர்.
அதற்காக அதற்குப் பின் வந்த சேர மன்னர்கள் பழநி கோயிலுடன் தொடர்புடையவர்கள் அல்லர் எனக் கூற முடியாது.
திருவாவினன் குடித் திருப்புகழில்,
“சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடதில்” அருணகிரியார் பழநிப் பகுதியைக் குறிப்பிடுகிறார். அதோடு, பழநி மலைக்கோயிலில் நுழையும் போதே ஒரு விநாயகர் சந்நிதி உண்டு. அந்த விநாயகருக்கு சேர விநாயகர் என்று பெயர். அதன் அருகிலேயே ஒரு சேரன் குதிரை மேல் அமர்ந்த நிலையில் ஒரு சிறு சந்நிதியும் உண்டு.
எனவே, பழநிக் கோயிலை ஏதோ ஓர் சேரர், சங்கம் மருவிய காலத்தில் புதுப்பித்திருக்க கூடும். காரணம், கோயிலைக் கட்டியவர் போகர் என்ற சித்தர் என்பதற்கு ஆதாரமாக மலைக்கோயிலுக்குள்ளேயே போகர் சமாதிக் கோயில் இருக்கிறது.
போகர் திருமூலரின் சீடரான ஒரு சித்தர், சீனர், சீனப்பெருஞ்சுவற்றில் போகருக்கும், திருமூலர்க்கும் ஒரு மாடச் சந்நிதி உண்டு. எனவே, திருமூலரின் சீடர் சீனரான போகர் என்பதை மறுக்க இயலாது. திருமூலரின் காலம் வழக்கம் போல பலவாறாகப் பேசுப்படுகன்றன. பெரும்பான்மையாக கி.பி.5ம் நூற்றாண்டு என்கின்றனர். அப்படியானால் பழநிக்கோயில் கி.பி.5ற்கும், 6ற்கும் இடைப்பட்ட காலமா? ஆராய வேண்டும்.
புகழ் பெற்ற திருமந்திர உரையாசிரியர் துடிசை கிழார் திருமூலரின் காலம் தமிழின் கோலெழுத்துக் காலம் என்றும் அது இராமாயண காலம் என்றும் கூறி திருமூலரின் காலம் கி.மு. 5500 என்கிறார். அதற்கேற்ப திருமந்திரத்தில் தமிழ் எழுத்துக்கள் 51 என்று பாட்டு வருகிறது.
அப்படியானால் இதன்படி பழநி மலைக் கோயில் போகரால் சற்றேறக் குறைய கி.மு. 5100 என்ற கால கட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம். போகர் 5000 என்ற மருத்துவ நூல் இதனை ஏற்கக் கூடியதே என சாடை காட்டுகிறது.
பழம் பொதினியாகிய இப்பழநியை இரண்டு குடியைச் சேர்ந்த மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர். ஒரு குடி ஆவியர் குடி; இன்னொரு குடி காவியர் குடி. இந்த ஆவியர் குடியே இந்நாளில் வையாவிகுடி என்றும் ஆகியிருக்கிறது.
இந்த வையாவிக் குடி சேரன் தான், பழநியில் முருகனை வணங்கியவன் என்று அருணகிரியாரும் தனது திருப்புகழில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தர்க்க இயலில் பாரிசேட அளவை என்ற ஒன்று உண்டு. அதன்படி இரண்டு தகவல் பழநிகோயில் பற்றி உறுதியாகத் தெரிகிறது. ஒன்று மலைக் கோயிலைக் கட்டியவர் போகர் அந்தக் கோயிலை ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு பிற்காலத்து சேர மன்னன் புதுப்பித்திருக்கிறான்.
சேர விநாயகர் என்ற சந்நிதியைப் பார்த்து யாரோ ஒரு சிவனடியார் அது சேரமான் பெருமாள் தான் என்று குதிரைமேஸ் அவரைக்காட்டி ஒரு சந்நிதியும் அவர்க்கு ஏற்படுத்தி விட்டிருக்கிறார். இது ஏலாது காரணம் சேரமான் பெருமாள் நாயனாரின் காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு. எனில் இப்போதுள்ள பழநி மலைக்கோயில் கி.பி.9 ஆம் நூற்றாண்டில் தான் எழுந்தது என்றாகி நம்புதற்கு இயலாததாகிவிடும். காரணம், பெரிய புராணத்தில் வரும் சேரமான் பெருமாள் பற்றிய பகுதி கழறிற்றறிவார் என்ற நீண்ட பகுதி. அதில் ஓரிடத்திலும் சேரமான் பெருமாள் ‘நாயனார் பழநி முருகன் கோயிலை புதுப்பித்தார் என்றோ அவர் ஒரு முருகனடியார் என்றோ ஒரு செய்தியும் காணப்படவில்லை.
எனவே, இதில் போகர் என்ற சித்தர் தான் கட்டினார்; பெயர் தெரியாத ஒரு சேரனோ (அ) அவனுக்குப்படை ஊழியம் செய்த வையாவிக்குடி குறுநில மன்னனோ தான் பழநி கோயிலைப் பிற்காலத்தில் புதுக்கி இருக்க வேண்டும் என்பது மட்டும் மறுக்க இயலாத தெளிவான உண்மை என்பது தெரிகிறது.
இது வரை தான் வரலாற்றாசிரியர்கள், இலக்கியங்கள் கூறும் தகவல்கள் நமக்கு இது பற்றி செய்யும் உதவி.
2) பழனி குறித்து பழைய வரலாறுகள் எங்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு வருவோம்.
உண்மையில் நம்பத்தகுந்த பழைய வரலாறுகள் என்று எதுவும் இன்றில்லை. எல்லாம் 16ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு எழுதியவைதான் கிடைக்கின்றன. அவையும் வெறும் புலவர்களின் அதீத கற்பனைகளாக வலாற்று ஆதரவு ஒரு துளியும் இல்லாதவைகளே.
பழநித் தலபுராணம் என்று பழைய புராணம் ஒன்றுண்டு. தருமபுரத்தைச் சேர்ந்த ஆதினமாகிய சுவாமிநாத பரமாச்சாரியார் சிறந்த பழநி முருக பக்தர். அவர் ஒரு நூல் எழுதி இருக்கிறார். இதுவும் வரலாற்றுக்கு ஒரு துளி அளவேனும் பங்களிப்பு செய்யாத ஒன்று. ஆனால் சைவ சித்தாந்த பரமான சிறந்த நூல். ஞானக்கண் மட்டுமே பெற்ற மாற்றுத் திறனாளியான பெரும்புலவர் மாம்பழக்கவிச் சங்க நாவலர் பல நூல்கள பழநி பற்றி அளித்திருக்கிறார்.
ஏன். 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகனைக் கனவிலும் நனவிலும் கண்ட அருணகிரியார் இத்தலத்திற்கு 96 திருப்புகழ் பாடி இருக்கிறார்.
இவை ஒன்றிலும் போகரைப் பற்றிக் கூட தெளிவான தகவல்கள் இல்லை. அதை விட ஏதாவது ஒன்றிலாவது. இந்த மலைக் கோயில் ஆகமக் கோயிலா என்பது பற்றி ஒரு குறிப்பும் இல்லை.
இவை எல்லாம் தனித்தனியே போற்றப்படக் கூடியவை என்றாலும், ஆகமம் பற்றிய இக்கோயில் தொடர்புக்கான எந்தத் தகவலையும் பெற முடியவில்லை என்பதே உண்மை.
a) முதலில் புராணங்களைப் பார்ப்போம். புரணங்கள் வரலாற்றுச் செய்திகளுக்கு ஆதார அடிப்படையாகக் கொள்ள முடியாது.
புராணப்படி 2 செய்திகளைக் கேட்கிறோம். அதாவது மாம்பழம் போட்டிக்கதை. அந்த மாம்பழம் கிடைக்காமல் இம்மலையின் மீது எல்லாவற்றையும் துறந்து வந்தான் முருகன் என்பது கதை. எல்லாவற்றையும் துறந்து வந்தால் அவன் தனியே வந்தான் என்று ஆகிறது. எனில் தனியே வந்த முருகன் தனக்குத் தானே ஒரு கோயில் கட்டிக் கொண்டானா? கட்டினால் அந்தக் கோயிலை எந்த ஆகமத்தில் கட்டிக் கொண்டான்? இது பற்றி புராணம் கூறும் கதையில் எந்தச் செய்தியும் இல்லை.
இன்னொரு புராணப்படி இடும்பன் தனது அறியாமையால் மலை எனது என்று அங்கிருந்த முருகனிடம் போராடி அப்புறம் ஆட்கொள்ளப்பட்டான் என்று கூறப்படுகிறது. எனில், இடும்பன் தான் பழநி மலைக் கோயிலைக் கட்டினானா? எனில் எந்த ஆகமத்தில்? அவனோ அசுரன், அறியாமையில் நெளிந்த முரடன். அவனுக்கு ஆகமம் தெரியும் என்றும் கூறுவதற்கில்லை. அவனே கட்டினான் என்றால் அவன் சந்நிதி கோயிலுக்குள்ளே எங்கே? அது மலையடிவாரத்தில் அல்லவா உள்ளது.
எனவே, இடும்பன் தான் பழநிமலை கோயிலைக் கட்டினான் என்பதும் ஏற்க இயலாதது.
ஆக, புராணம் இது விஷயத்தில் கைவிட்டது.
b) அடுத்து, கோயிலைக்கட்டியவர் போகர் என்பது உறுதியான தகவல். அவர் ஒரு சித்தர் என்பதும் பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. சித்தர்கள் ஆகமத்தை ஏற்பதில்லை. எனவே, போகர் இக்கோயிலை எந்த ஆகமப்படியும் கட்டி இருக்க முடியாது. 28 ஆகமங்களில் ஒன்று சித்தாகமம். எனவே சித்தர் ஆகிய போகர் சித்தாகமப்படி பழநிக் கோயிலைக் கட்டினார் என்று ஏன் கொள்ளக்கூடாது ? அதுவும் உண்மையான காரணமாக இருக்க முடியாது. சித்தர் போக்கையே புரிந்து கொள்ள முடியாது. சித்தர் போக்கு சிவன் போக்கு என்று அதனால் ஒரு முதுமொழி உண்டு. அப்படி சித்தர் போக்கு வேறு; சித்தாகமப் போக்கே வேறு. சித்தர் பழநி முருகன் கோயிலை சித்தாகமத்தால் தான் கட்டினார் என்பதற்கு எந்த சான்றும் இல்லை. முருகன் கோயில் கட்டுவதற்கு குமார தந்திரம் என்ற உபாகமம் ஒன்றே உண்டு. அதுவும் லலிதாகமம் என்பதன் உபாகமமே தவிர சித்தாகமத்தின் உபாகமம் அன்று. எனவே, போகர் சித்தாகமத்தின்படி பழநிமலைக் கோயில் கட்டினார் என்றே கூற இயலாது.
c) எந்த ஆகமப்படி கட்டப்பட்ட கோயில் என்றாலும் அதன் சுற்றில் ஒரு சமாதி இருக்க இயலாது. இங்கே இந்தக் கோயிலிலேயே போகர் சமாதி ஒரு பகுதி. எனவே, இந்தக் கோயிலுக்கும் எந்த ஆகமத்திற்கும் தொடர்பில்லை.
d) இக்கோயிலில் கார்த்திகை விழா, கந்த சஷ்டி விழா ஆகிய விழாக்கள் நடைபெறுகின்றன. ஆனால், கோயிலில் ஒரு விழா நடைபெற வேண்டுமானால் அங்கே ஆகமப்படி ஒரு கொடிமரம் இருக்க வேண்டும். இங்கே கொடிமரம் இல்லாமலே விழாக்கள் நடைபெறுவதால் இக்கோயிலுக்கும் எந்த ஆகமத்திற்கும் தொடர்பில்லை.
e) இம்மலைக்கோயில் பூசை கி.பி.1444-ஆம் ஆண்டு வரை பண்டாரங்களால் மட்டும் தான் நடைபெற்றது என்று ஒரு செப்பு பட்டயம் கூறுகிறது. பண்டார பூசை ஆகமத்தால் செய்யப்பட்டது என்பதற்கு ஒரு சான்றும் இல்லை. அந்தச் செப்புப்பட்டயத்தில் அது பற்றிய செய்தி இல்லை. எனவே, பண்டாரங்களால் பூசை செய்யப்படும் வரை அங்கே நடந்தது வனமுறை வேடர் அருளிய பூசை தான்; ஆகமப் பூசை இல்லை என்பது தெளிவாகச் சான்று கிடைக்கிறது.
f) மேற்குறித்த செப்புப்பட்டயம் சாலி வாகன சகாப்தம் 1366 ஆம் ஆண்டைச் சேர்ந்தது எனில் அது கி.பி. 1444 ஆம் ஆண்டிற்கு இணை அப்போது ராமப்ப ஐயர் என்ற திருமலை நாயக்கர் தளவாய், பண்டாரங்களிடமிருந்து சிவாச்சாரியார்களுக்குப் பூசையை மாற்றினார். அந்த செப்புப்பட்டயத்தில் அப்போது கூட இனி சிவாசாரியார்கள் இந்த ஆகமப்படிதான் பூசை செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பும் இல்லை. அது சிவாச்சாரியார்களின் இஷ்டத்திற்கு விடப்பட்டிருக்கிறது. எனவே. பூசை கைமாறி வந்த பிறகு பல்லாண்டுகளாக ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆகமப்படி தான் சிவாச்சாரிகள் தொடர்ந்து பூசை செய்து வருகிறார்கள். அல்லது தலைமை குருக்களுக்கு ஏற்ப ஆகம முறைகள் மாறிக் கொண்டே வந்தனவா என்பதற்கும் தெளிவான தகவல் இல்லை.
திருமஞ்சனம், மாலை, சந்தனம்,வில்வம், பள்ளியறை கட்டியம், ஒதுவார், கந்தபுராணம், திருப்புகழ், திருவலகு, சட்டக்கால், தூபக்கால், பரிவட்டம் துவைத்தல், கொல்லச் சேவகம், உபய திருமஞ்சனம் எல்லாம் பண்டாரங்களின் பொறுப்பு என்று பட்டயப்படி தீர்வாகி இருக்கிறது எனில் பூசையில் ஒரு குறிப்பிடத்தக்க அளவுப் பங்கு பண்டாரங்கள் செய்ய வேண்டியது என்றால் பூசைப்பணி இருவரிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எனில் சிவாசாரியார் பூசையில் பணங்பங்கு வைத்துக் கொள்ளலாம் என்று எந்த ஆகமம் சொல்கிறதென்ற தகவல் இல்லை. அதோடு இங்கே பூசையே ஆகமப்படி இல்லை என்பதும் பட்டயத்தால் தெரிகிறது.
g) கோயில் போகரால் கட்டப்பட்டபோது எந்த ஆகமத்திலும் அது சேராதது என்று தகவல் ஒன்று தெளிவாக இருக்கும் போது சிவாசாரியார்கள் எந்த அதிகாரத்தில் மனம் போன போக்கில் ஏதேதோ ஆகமத்தில் பூசை செய்கிறார்கள்? அதுவும் பூசையைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கு ஆகமத்தில் எந்த ஒர விதியும் இல்லாத போது? இவ்வாறு ஆகமம் சிவாசாரியார் அவர்களாலேயே மீறப்படும்போது எந்த ஆகமத்தோடு இந்த கோயிலைத் தொடர்பு கொள்ள முடியும்?
h) இன்னும் பல சொல்லலாம். வாய்க்கும் போது அவற்றோடு இது ஒரு தனி நூலாகவே வெளி வரலாம்.
எனவே, எப்படிப் பார்த்தாலும், அதாவது வரலாறு, புராணம், ஆகம நுல் விதிகள் மற்றும் நடைமுறை வழுக்கள் என எப்படிப் பார்த்தாலும், பழநி மலைக் கோயிலுக்கும் எந்த ஆகமத்திற்கும் தொடர்பே இல்லை என்பது தர்க்கரீதியாகவும், இயற்கை நீதிப்படியும் மேலெழும் உண்மை.
அன்புள்ள.
மு.பெ.சத்தியவேல் முருகனார்