You are here
Home > செய்திகள் > நற்றமிழும் நகைச்சுவையும்

நற்றமிழும் நகைச்சுவையும்

நகைச்சுவை மட்டும் இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்று மகாத்மா காந்தி சொன்னார்; ஓஷோ சொன்னார் இன்னும் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்றெல்லாம் நகைச்சுவைக்கு ஓட்டு சேகரித்து தான் நகைச்சுவையை நாம் வாழ வைக்க வேண்டும் என்றால் முதலில் நகைச்சுவை தற்கொலை செய்து கொள்ளும். நகைச்சுவை சிபாரிசு செய்து வருவதில்லை; இயல்பாக வரும். அதனால் தான் சிரிப்பை அடக்க முடியவில்லை, சிரித்து விட்டேன் என்று சொல்வதை அவரவர் அனுபவமாகவே பார்க்கிறோம்.

நகைச்சுவையை இட்டுக் கட்டிச் சொல்லி தயவு செய்து சிரித்து விடுங்கள்; உடனே இல்லாவிட்டாலும் ஒரு வாரம் கழித்தாவது என்று கெஞ்சி கேட்டுக் கொள்ள வருவதா நகைச்சுவை! ஒருத்தர் கேட்டுக் கொண்டார் அதனால் ஒரு மாதத்திற்குப் பின் சிரிக்கிறேன் என்று யாராவது சொன்னால் நிச்சயம் அவரைப் பார்த்துச் சிரிப்போம்.

அறிமுகமான இருவர் சந்தித்திக் கொண்டார்கள். சந்தித்த உடனே ஒருவர் மற்றவரைப் பளார் என்று அறைந்து விட்டார். அடிவாங்கினவர் ஒன்றும் புரியாமல் இப்ப எதுக்கு அடிச்ச என்று கேட்டார். நீ என்னை தேவாங்கு அப்படீன்னு ஆறு மாதத்திற்கு முன்னாள் திட்டின இல்லையா, அதுக்காக அடிச்சன்னு அடிச்சவன் சொன்னான். “ஆறு மாசத்துக்கு முன்னாலே திட்டினத்துக்கு இப்ப வந்து அடிக்கிறயே” என்றான் அவன். அதற்கு அடிச்சவன் சொன்னான், “நான் நேற்றைக்கு தான் தேவாங்கைப் பார்த்தேன்!”. அடிவாங்கினவன் இயல்பாக தன்னையும் மறந்து சிரித்து விட்டான். துக்கத்தில் கூட இப்படி இயல்பாக வருவது தான் நகைச்சுவை.

இப்படி மிக மிக இயல்பாக நகைச்சுவை வருவதற்கு மொழி வளமும் முக்கியமான காரணம். ஒருவன் தான் வளர்த்த நாய் இறந்து விட்டது என்று அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் நண்பன் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தான். அவனிடம், “எவ்வளவு செல்லமா டைகர்னு பேர் வைச்சேன்” என்று புலம்பினான். நண்பன் சொன்னான், “பெரு வைச்ச சரி! சோறு வைச்சியா?” என்றான். உடனிருந்த அனைவரும் கொல் என்று சிரித்து விட்டார்கள். “அழுதவனையே “கொல்” என்று சிரிக்க வைத்து விட்டாயே! என்றான் வேறொருவன். அதற்கு மற்றொருவன் “கொல்ல வேண்டாம்; நாம் ஏற்கெனவே செத்துப் போச்சு! என்றான். மறுபடியும் சிரிப்பலை!

ஆக, மொழியின் வளத்தாலேயே நகைச்சுவை மிளிரும். அவ்வாறு நகைச்சுவை மிக இயல்பாக வருவதற்கு ஏற்ற மொழிகளில் உலகிலேயே தலைசிறந்தது தமிழ் மொழி.

நான் அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது செம்பியன் என்று தமிழ்ப் பெயர் சூட்டிக்கொண்ட ஒரு ரஷியரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்கிற தமிழ் நாவலை ரஷிய மொழியில் மொழி பெயர்த்தவர். அவர் சொன்னார்: “தமிழ் மொழிக்கு நகைச்சுவை மிக இயல்பாகக் கைவருகிறது. என்ன தான் கல்கியின் நாவலை ரஷிய மொழியில் மொழி பெயர்த்தலும் தமிழில் உள்ளது போல் அதில் நகைச்சுவையை இயல்பாக வெளிப்படுத்த இயலவில்லை. இது தமிழுக்கே உள்ள சிறப்பு!” என்றார்.

நற்றமிழ் இலக்கியங்களில் நகைச்சுவை எப்படி எழுந்து நடனமாடுகிறது என்பதை ஒண்றிண்டில் வைத்து இனி பார்ப்போம்.

பொதுவாக ஆண்களைவிடப் பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்று ரஸ்கின் பாண்ட் என்ற ஓர் ஆங்கில எழுத்தாளர் ஒரு நாவலில் குறிப்பிடுகிறார். தமிழன் அப்படித் தன் சரி பாதியை குறைவு செய்யமாட்டான். ஆண்களைவிட பெண்களுக்கே நகைச்சுவை அதிகம்; நான் சொல்வது “நகை”சுவை! என்று அதிலும் சுவைப்படச் சொல்லுவான்.

இப்படி ஒரு பெண் இலக்கியத்தில் என்ன கிண்டல் அடிக்கிறாள் பாருங்கள்! இது நந்திக் கலம்பகத்தில் வருகிறது. தலைவன் ஒருவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தை வீட்டில் தங்கி விடுகிறான். அந்த சில நிமிட இன்பம் தவிர எஞ்சிய நாள் முழுவதையும் அன்பால் நிரப்பிய தலைவியின் நினைவு வந்து மனம் திருந்துகிறான். தலைவிக்குத் தூது விட நல்லிசை வாணனாகிய ஒரு பாணனை அனுப்புகிறான். அவன் தலைவியின் பெருமனை முன் நின்று இரவெல்லாம் பாடி தூதுச் செய்தியை இசையால் தெரிவித்தான் காலையில் எழுந்து வந்து பார்த்த தலைவி சொன்னாளாம்:

“ஓ! பாணனே ! நீ யார் அனுப்பி வந்து இரவெல்லாம் என் வீட்டருகில் வந்து பாடினாய் என்று நானறிவேன். ஆனால் யார் பாடுவது என்று எம் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது. சத்தம் கேட்டு எழுந்த என்னை, “படு! காட்டில் ஏதோ ஓர் பேய் கூக்குரல் இட்டு அழுகிறது என்றாள் அன்னை! என் தோழி இல்லையம்மா! ஏதோ நரி ஊளை இடுகிறது என்று என்னை சமாதானப் படுத்தினாள். இல்லை, இல்லை! இது ஏதோ ஒரு நாய் தான்! என்றாள் இன்னொரு தோழி. நான் தான் சரியாகக் கண்டுபிடித்தேன், அவையெல்லாம் அல்ல, அது நீ என்று! காலையில் பார்த்தால் நீ நிற்கிறாய் என்றாள் தலைவி!

இப்படி ஒரு பாட்டு நந்திக் கலம்பகத்தில் உண்டு. சில பாட பேதங்களுடன் என் நினைவில் நின்றது இதோ:

ஈட்டு புகழ்நந்தி பாண!நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடியளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீஎன்றேன் நான்

என்ன கிண்டல் பாருங்கள்! அந்தப் பாணன் என்றைக்கோ பாடி பேய், நாய், நரிக்கெல்லாம் நல்ல பேர் வாங்கிக் கொடுத்து விட்டான்!

இதே மாதிரி இன்னொரு நகைச்சுவையான காட்சியைக் காட்டுகிறார் பெயரறியாத புலவர் ஒருவர். இரண்டு தண்டவாளங்களின் மேல் ஏற்றிவிட்டால் தான் புகை வண்டி ஒழுங்காக ஓடும். அப்படி தாளம் என்ற தண்டவாளத்தில் பண்ணாகிய இராகத்தை ஏற்றி ஓட்டினால் தான் இசைப் பயணம் இனிமையாக இருக்கும். தாளம் தப்பினால் இராகம் கவிழ்ந்து விடும்.

பழந்தமிழ் இசை நூலான பஞ்சமரபில் தாளமரபு என்றே ஒரு இயல் உண்டு. பேசுவது போலவே அப்படியே வீணையில் கொண்டு வரலாம். அதனால் தமிழ் இலக்கியங்களில் வீணையை “மழலை வீணை” என்று கூறுவது உண்டு. அது போல மத்தளத்தை நன்றாக வாசிக்கத் தெரிந்தால் மத்தளத்தாலேயே பேசவும் பேசலாம் என்று மேற்கூறிய தாளமரபு கூறுகிறது. இதனை கவுத்துவம் என்றும் சொற்கட்டு என்றும் சொல்கிறது அது.

       சில முழவுச் சொற்கள் எப்படி அமைகின்றன என்பதைப் பார்க்க சுவையாக இருக்கும்.

தித்தித் ததாம்      –     இன்பம் உற்றோம்
தங்கிட                  –      தாங்குவாயாக
தகுதி                     –      தக்கது
தின்னத் தோம்    –     தின்னுதற்கு தந்தோம்
ததி                         –     தருணம்
இத்ததி                  –     இத்தருணம்
கிட்டக்கிட்ட        –     நெருங்க நெருங்க
தந் ததாம்             –    கொடுத்ததாம்
தக்கிட                  –     திக்கித் திரிய

இப்படி எல்லாம் மத்தளத்தாலேயே பேசலாம். ஆனால் இதற்கெல்லாம் நல்ல பயிற்சி வேண்டும். எல்லோருக்கும் இது கைவருவதில்லை. கோவில் கச்சேரிகளில் சிலர் மத்தளம் வாசிக்கும் பொது தாங்க மாட்டாமல் சாமியே அவசரம் அவசரமாக உலா போய் விடும். ஒருத்தர் தவில் வாசித்தே பேய் ஓட்டிய வரலாறும் உண்டு. இப்படிப் பட்ட “வசதி படைத்த வித்துவான்களும் உண்டு. அப்படி ஒருவர் மத்தளம் வாசித்ததை ஒரு புலவர் பாடிக் கிண்டலடிக்கிறார். திடீரென்று தெருவில் பெண்கள் பட்டாளமே காலிக் கூடைகள் தூக்கிக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்தாராம். என்ன என்று கேட்டதில் யாரோ சாணி தட்டுகிற ஓசை கேட்கிறது; வரட்டி வாங்கி வரலாம் என்று பெண்கள் எல்லாம் கூடையுடன் படையெடுத்து வந்தார்களாம்! அவர்களைத் தொடர்ந்து போய் பார்த்தால் கடைசியில் ஒருவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தாராம்! என்ன கிண்டல் பாருங்கள்! பாடல் இதோ:

எங்கமுத்து சாமிமன்னா இங்கே ஒருவன்ம்ரு
தங்கமதை ஓயாமல் தட்டினான் – அங்கங்கே
கூடிநின்ற பெண்கள்எருக் கொள்வதற்குக் கூடைஎடுத்து
ஓடிவந்தார் நீபார்த்தா யோ!

இவண்

மு.பெ.சத்தியவேல் முருகன்

Top