You are here
Home > சேய்த்தொண்டர் > சேய்த்தொண்டர் புராணம்

சேய்த்தொண்டர் புராணம்

சேய்த்தொண்டர் புராணம்

பகுதி-24

செந்தமிழ்மாருதன்

 

ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி. . .

மேல் இதழில் கச்சியப்பரின் தந்தையார் காளத்தியப்பர் காஞ்சி குமரகோட்டப் பூசையைக் கச்சியப்பரிடம் ஒப்படைத்து விட்டு விடுதலை பெற்றார் என்பதைக் கண்டோம்.

அந்த அற்புதமான கந்தன் பூசையைச் சிந்தை மகிழ கச்சியப்பர் நாடோறும் நடாத்த மேற்கொள்கிறார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி போது ஆறிலும் புவனம் புகழ பூசைகள் நடந்து வருகின்றன.

ஒரு நாள் இரவு; கச்சியப்பர் கரணமெலாம் குழைய கனவில் முருகன் காட்சி தந்தான். கந்தபுராணம் தமிழில் இல்லை என்ற குறை தீர கவினுற கன்னல் தமிழில் புராணம் இயற்றுவாய் என்று கந்தன் கட்டளையிட்டான்.

“நானோ இதற்கு நாயகம்?   நவிலும்படி நாவன்மை எனக்கில்லையே!” என்றார் கச்சியப்பர்.

“கவலற்க! புராணச் செய்திகள் அவ்வப்போது உமக்கு உணர்த்துவாம். அதற்கு அச்சாரமாக “திகட சக்கரம் செம்முகம் ஐந்துளான்” என்று புராணப் பாடலின் முதலடியை எடுத்து அமைக்கிறோம். இதைக் கொண்டு பாடுவாயாக!” என்றான் முருகன் முறுவலித்துக் கொண்டே.

 கண் மலங்க உண்ணடுங்கி உரை தடுமாறி கச்சியப்பர் கந்தனின் கால் பிடித்துக் கதறினார்.

கந்தப் பெருமான் கடுகி நெருங்கி கச்சியப்பரைத் தன் சொந்தமெனக் கொண்டாடி அவர் மார்பையும் முதுகையும் கையால் நீவி ஆறுதலையும் அசைத்து ஆறுதலைச் செய்தருளினானாம். எந்தப் பெருமான்? அங்கே கண் காணா கானகத்தே மண் காணா மா வேள்வியாற்றி மறைமந்திரங்கள் கோடி கோடி எழுப்பி ஏக்கலித்து ஊன் மெலிந்து உளம் மெலிந்து உயிர் மெலிந்து கற்பங்கள் பல கோடி செல்லச் செல்ல கனல் நடுவே ஊன்றி நின்று ஓகம் செய்து ஒருவன் என்னும் அந்த ஒருவனைக் காண புருவம் என்னும் பூட்டைத் திறந்து நாடியும் ஒளித்து நின்ற அந்தக் கந்தக் கள்வன் ஓடி வந்து பாடிடென்று கைந் நீவி நின்றான் கச்சியப்பரை! அடடா! என்ன சொல்ல! அரிய ஆண்டவன் தமிழுக்காக ஏங்கி எளிவந்த காட்சியைச் சொல்லவா? பெரியதோர் பொறுப்பினை ஏற்கப் பொற்புடையவன் நீயே என்று கந்தனே உச்சிப் புகழ் மெச்சிட நின்ற கச்சியப்பரின் மேன்மையைச் சொல்லவா!

தேனினும் இனிய தேனூராரின் தீந்தமிழ்ப் பாடல்களைப் பாருங்கள்!

நின்றநின்ற இடத்தன்பர் நீள்துயர்

  நீங்க நீலக் கலாப ரதத்தின்மேல்

சென்றுசென்றருள் மாரிபொ ழிந்திடும்

    செல்வன் அன்பர் கனாவில் எழுந்துமே

தென்றமிழ்க்கணி யாயிதைச் செப்பென

   திகடசக்கர செம்முகம் ஐந்துளான்

என்று கந்த புராணத் தியல்பெலாம்

   எந்தைபாலுறு மாறருள் கூர்ந்துமே

கோடி கோடி மகாமறை மந்திரம்

   கூறி ஈறிலும் நறும்புகழ் யாவையும்

பாடியாடிப் பரிந்திரந் தெல்லையில்

   பத்தி கொண்டுண வாதி வெறுத்துடல்

வாடியூடி வருந்திவ ணங்கிமா

   மௌனயோகத்து மற்றைய மார்க்கமும்

நாடிதேடி யொருவரும் காணொணா

   நாதன்எந்தை பொன் ஆகத்தை நீவியே!

கனவு கலைந்தது; நினைவு தொடர்ந்தது. கந்தன் பூசையைக் கவினுற ஆற்றி அவனருளாலே அவன் தாள் வணங்கி அவனே அடியெடுத்துக் கொடுத்து அருளியது கொண்டு சுத்த சித்தத்தொடு கந்த புராணத்தின் முதல் பாடலைக் கீழ் காணுமாறு எழுதியருளினார்:

திகட சக்கரச் செம்முக மைந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர வின்மணி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.

பின்பு மேற்பாடலைத் தொடர்ந்து 100 பாடல்கள் எழுதினார். அவையடங்கிய ஓலைச் சுவடித் தொகுப்பைக் குமரகோட்டத்து இறைவன் தாளில் வைத்துப் பூசித்தார். இப்படியே நாளும் நூறு நூறு பாடல்கள் எழுதி பரமன் தாளில் பணிவுடன் வைப்பார். மறுநாள் ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்த்தால் அங்கே பாடல்களில் சிற்சில இடங்களில் திருத்தங்கள் காணப்படும். கருவறைக்குள் பூசகராகிய தன்னைத் தவிர வேறு யாரும் புகுவது இயலாது. அப்படியிருக்க திருத்தங்கள் எப்படி வந்தன? சிந்தித்தார்! வந்தித்து வாழ்த்தும் முருகனைத் தவிர அங்கு வேறு யாருமில்லையே! கனவில் வந்து கட்டளை தந்து கந்த புராணத் தமிழைக் காதலித்த அந்தக் கந்தனே நனவில் அப்பாடல்களில் திருத்தம் செய்து நம்மை ஆள்கிறான் போலும் என்று அளவிறந்த ஊக்கம் பெற்று ஆடினார்; பாடினார்!

குருவி சேர்ப்பது போல பணத்தைச் சேர்த்து வந்த ஏழையொருவன் ஒரு நாள் உண்டியலைத் திறந்து பார்க்கும் போது சேர்ந்த திரளைக் கண்டு சொக்கி நிற்பது போல, பத்துப் பத்துப் பாடல்களாக எழுதித் தொகுத்தவற்றை ஒரு நாள் பார்வையிட்ட போது, வியந்து நின்றார். மெல்ல மெல்ல 141 படலங்கள் முற்றின. மொத்தம் 10,345 பாடல்கள் ஆகிவிட்டன. அவற்றை ஆறு காண்டங்களாகப் பிரித்தார்.

தமிழ்க் கந்தபுராண நூலினை உரிய முறையில் அரங்கேற்ற எண்ணினார்; ஓலை போக்கினார். நாலாறு கோட்டம் என நவிலும் தொண்டை நாட்டின் 24 கோட்டங்களில் உள்ள வேளாளப் பெரியோர்களுக்கும் காஞ்சி நகரில் உள்ள பூபதிகளுக்கும், அப்பூபதிகளின் புகழ் தங்கப் பாடும் புலவர் பெருமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டன.

கூட்டமோ கூட்டம்! காஞ்சி மாநகர் கனவிலும் கண்டிராத கூட்டம்! குமரகோட்ட வளாகம் அமர இடமில்லாமல் ஆர்ப்பரித்தது. கச்சியப்பர் கந்த புராணச் சுவடிக் கோப்பிற்குப் பூசை செய்தார்! கந்தனே கைப்பட மெய்ப்பட திருத்தியதாயிற்றே!

பூசை முடிந்தது; மேடை எழுந்தது. சுவடியைப் பிரித்துக் கண்ணிலொற்றிக் கச்சியப்பர் முதல் பாடலைக் கம்பீரமான குரலில் பண்ணோடிசைத்துப் பாடினார்.

‘நிறுத்துங்கள்!’ குரல் வந்த திசையை நோக்கிக் கூட்டத்தினரின் கண்கள் குவிந்தன. ஒரு பெரியவர் எழுந்து நின்று,  ‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என்றால் என்ன என்று கேட்டார்.

“சிவந்த முகங்கள் ஐந்தும் அவற்றிற்கு ஏற்ப திகழும் தசகரம் என்னும் பத்துக் கரங்களும் உடைய சிவபெருமான் என்று பொருள்.”

‘திகழும் தசகரம் என்று கவியில் எங்கே வருகிறது? “

” திகட சக்கரம் என்ற சொற்றொடரில் வருகிறது.”

“திகட சக்கரம் எப்படி திகழ் தசக்கரம் ஆகும்?”

” திகழ்+தசக்கரம் என்று புணரும் போது திகட சக்கரம் என்று ஆகும்”

‘அதாவது ழகரமும் தகரமும் சேரும் போது டகரமாக மாறும் என்கிறீர்கள்?’

‘ஆமாம்!’

“இப்படி ஒரு புணர்ச்சி விதி தொல்காப்பியத்தில் அல்லது பின் வந்த இலக்கண நூல்களில் உண்டா?”

  கச்சியப்பர் திகைத்துப் போனார்! ஆமாம் இப்படியொரு புணர்ச்சி விதி தொல்காப்பியத்தில் இல்லை தான்! பின் வந்த இலக்கண நூல்களிலும் உண்டா என்ற கேள்விக்கு உண்டு என உறுதிபடக் கூற இயலாது.

இந்த முதலடி முத்தமிழ்க் கடவுள் முருகன் தந்தது. அதனால் இதில் உள்ள இலக்கணத்தை நாம் ஆராயாது விட்டோம். இப்போது இந்தப் புலவர் நெருக்குகிறார்; என்ன செய்வது? முதல் பாடலிலேயே இன்னும் சொல்லப் போனால் முதலடியிலேயே இலக்கணம் முட்டுமானால் இந்நூல் அரங்கேறுவது எப்படி? சிந்தித்தார். கொடுத்தது கந்தன்; விடுப்பதும் அவனாகத் தானே இருக்க முடியும்! இடையில் நாம் யார்? ஒரு முடிவுக்கு வந்தார்.

“குரலைக் கனைத்துக் கொண்டார். அன்பர்களே! இப்பெரியார் எழுப்பிய கேள்விக்கு விடை தர வேண்டியது எனது கடமை! ஆனால் விடை தர வேண்டுமானால் இலக்கண நூல்களை ஆராய வேண்டும். எனவே அதன் பொருட்டு எனக்கு ஒரு நாள் தேவைப்படுகிறது. ஆகவே நான் நாளை எந்தை கந்தவேளின் அருளால் இதற்குப் பதில் இயம்புவேன். நாளை கூடுவோம்!” என்று கச்சியப்பர் கனத்த இதயத்துடன் அவையைக் கலைத்தார்.

அன்றிரவு பள்ளியறை வழிபாடு நிகழ்த்தி அன்பர்களுக்கெல்லாம் அருளமுது (பிரசாதம்) வழங்கிக் கோயில் கதவைச் சாத்தினார்;  கருவறைக் கதவை நெருங்கி அமர்ந்து கந்தவேளே! காப்பது நின் கடன்! என்று ஓலமிட்டு அழுதார்.

திரைப்படங்களில் அழகே உருவாகக் காட்சியளிக்கும் நடிகைகள் அழுகைக் காட்சிகளில் நடிக்கும் கட்டம் வரும்; பொங்கிப் பொங்கி அழுவார்கள்; பே என்று விகாரமாகக் கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுதால் திரைப்படத்தை யார் பார்ப்பார்கள்? அழணும்; ஆனால் அதிலேயும் ஓர் அழகு வேண்டும்!

அது போல நாமெல்லாம் அழுதால் விகாரமாய் இருக்கும்; என்ன சொல்லி அழுவது என்றும் தெரியாது;! திருஞானசம்பந்தர் அழ வேண்டி இருந்த கட்டம்; எப்படி அழுதுராம்? சேக்கிழார் சொன்னார்: திருஞானசம்பந்தர் அழுது அருளினார்! ஆ! அழுதது சரி! ஆனால் அருளியது ஓர் அமுதத் தமிழ்ப் பதிகம். அதுவல்லவா அழுகை! அழகான அழுகை!

அப்படி அமுதத் தமிழ் ஒழுக அழகாக அழுதாராம் கச்சியப்பர். தேனூரார் அந்த அழுகையை எல்லாம் தொகுத்து நால்வர் நெறியென நான்கு பாடல்கள் பாடுகிறார். அவற்றில் ஒன்றைச் சுவைப்போம்!

துணங்குகெட இனிதெழுந்த சுயஞ்சோதிச் சுடரே!

   துணையின்றித் தவிப்பவர்பின் தொடர்ந்தருளுந் துணையே!

             இணங்குமடி யவர்க்கருளும் இரகசியக் கனியே!

    என்பனைத்தும் ஊடுருவும் இனியகனி ரசமே!

மணங்குடிகொள் மடன்மலரே! மலர்செறியும் தருவே!

     மலர்த்தருவின் நறுநிழலே! நறுநிழலின் கனிவே!

 அணங்குதிகழ் முழுமுதலே! நின்சரிதம் அரங்கேற்(று)

      அவையில்எனக்(கு) அபசெயம்நே ராமல்எழுந் தருளே!

என இனிய மொழியலங்கல் பல பகர்ந்தாராம் கச்சியப்பர். அப்படியே அயர்ந்து உறங்கிவிட்டார். கனவில் கந்தன் அபயக் காட்சி தந்தானாம்! அன்ப! உனது இதயக் கலக்கமெலாம் தவிர்தி! என்று தேறுதல் செய்தானாம்!

“வீரசோழியம் என்று ஓர் இலக்கணநூல் உண்டு: அது தஞ்சை பக்கம் புகழ் பெற்றது. அதில் திகடசக்கரம் என்பதின் இலக்கணம் உள்ளது. அதை நாளை அவையில் ஒரு புலவன் கொணர்ந்து காட்டுவான்! கவலற்க! என்று கந்தன் கழறினானாம்!”

மறுநாள் காலை! கந்தனே கதி என்று காலைப் பூசைகளை எல்லாம் குமரகோட்டத்து முருகனுக்கு நிகழ்த்தி விட்டு அவையைக் கூட்டினார் ஆரா நம்பிக்கையோடு. அவையினர் முன்னே திகட சக்கரம் என்று தனக்கு முதல் எடுத்துக் கொடுத்தவன் முருகனே என்ற உண்மையை முதன் முறையாக வெளிப்படுத்தினார். அந்த முருகனே முன்னாள் இரவு கனவில் வந்து அதற்குரிய இலக்கணம் காட்டுவதாக அறுதியிட்டான் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவையில் ஒரு புலவன் ஓடோடி வந்தார். அந்தப் புலவரை உள்ளூரில் யாரும் பார்த்தறியார். அவரும் இப்போது தான் வேற்றூரிலிருந்து வருகிறேன் என்பது போல ஓட்டமும் நடையுமாக கூட்டத்தின் உள்ளே நுழைந்தார்.

“ஐயன்மீர்! நேற்று இந்த அவையில் ஓர் இலக்கண ஐயம் எழுப்பப்பட்டது என்று கேள்விப்பட்டேன். இதோ, என் கையில் இருப்பது வீரசோழியம் என்ற இலக்கண நூல். வீரராசேந்திரன்(1063-1070) காலத்தில் பொன்பற்றி என்னும் ஊரில் வாழ்ந்த புத்தமித்திரர் என்பவர் அந்த மன்னன் பெயரால் இயற்றிய இலக்கண நூல் இந்த வீரசோழியம். தமிழில் இது ஒன்றே ஐந்திலக்கணங்களையும் எடுத்துக் கூறும் முதல் நூல். இதற்குப் பெருந்தேவனார்(பிற்காலத்தவர்) என்பவர் உரை எழுதி உள்ளார். ஐந்திலக்கணங்களும் உள்ள தமிழ் நூல் என்பதால் என்பால் இதனை விருப்பத்துடன் வைத்துள்ளேன்.

இதில் சந்திப்படலம் என்று ஒன்று வருகிறது. அதில் பதினெட்டாம் நூற்பாவிலே ழகரமும் தகரமும் புணரும் போது டகரம் வரும் என்று கூறி இருக்கிறது. இந்தாருங்கள்! என்று அந்தப் புலவர் நூலைக் கச்சியப்பர் கையில் கொடுத்தார். கச்சியப்பர் நூலை வாங்கினார் உடனே யாவர் முன்னிலையில் நூலைக் கொடுத்த புலவர் படீரென மறைந்தார்!

அவையினர், ஆ! ஆ!! என அதிசயித்தனர். அறுமுகக் கடவுளே வந்தவன் என்று அறுதியிட்டுக் கூறினர். அரோகரா! என்று கூவினர்.       முன்னாள் ஐயம் எழுப்பித் தடை செய்த புலவர் தன் தவற்றை உணர்ந்து ஓடோடி வந்து கச்சியப்பர் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டி மன்றாடினார்!

செய்தி காட்டுத் தீ போல பரவியது. கண்டவரும் கேட்டவரும் ஓடி வந்து கச்சியப்பர் காலில் விழுந்தனர். அவ்வளவு தான்! அன்று மாலையே தந்தச் சிவிகை ஒன்று தயாராகியது. அதிலே கந்தனின் அருளை முற்றுமாகப் பெற்ற கச்சியப்பரை எழுந்தருளச் செய்தார்கள். கச்சியப்பர் காஞ்சி வீதிகளில் பவனி வந்தார். உச்சி மேல் வைத்துப் புலவர்கள் எல்லாம் உடன் புகழ்ந்து பாடி வந்தனர்.

ஐயர் வருகின் றார்கச்சி அப்பர் வருகின் றாரம்பொன்

மெய்யர் வருகின் றார்சைவ விரதர் வருகின் றாருலகோர்

உய்யக் கந்த வேள்சரிதம் உரைத்தோர் வருகின் றாரென்று

செய்ய தமிழ்நா வலர்சாற்றிச் சிரமேல் செங்கை கூப்பிவர.

தமிழ்க் கந்த புராண அரங்கேற்றத்தின் சிறப்பை இனி எடுத்துக் கூறவும் வேண்டுமோ! அந்த அற்புத புராணந் தன்னை அன்போடு விரித்துரை செய்து ஆண்டொன்றில் இனிதே நிறைவேற்றினாராம் கச்சியப்பர்.

உரிய காலத்தில் சுந்தரர்க்கு வெள்ளையானை அனுப்பி ஏற்றுக் கொண்டதைப் போல் கந்தவேள் பூஞ்சிவிகை அனுப்பி அதில் கச்சியப்பரைக் கந்தமாதன கிரியில் தன் கழலடியில் அமர்த்தினானாம்.

அந்தப் புரமும் அறுநான்கு கோட்டகத் தாருமொன்றாய்க்

கந்தப் புராணம் பதினாயிரம் சொன்ன கச்சியப்பர்

தந்தப் பல்லக்கும் சிவிகையும் தாங்கியச் சந்நிதிக்கே

அந்தப் புராணம் அரங்கேற்றி னார்தொண்டை மண்டலமே.

என்று மேற்கூறிய வரலாற்றிற்குச் சான்று கூறுகிறது தொண்டை மண்டல சதகம்.

புராண படனம் என்று பின்னாளில் ஒருமுறை தோன்றி இப்போது அது முற்றோதல் என வழங்கி வருகிறது. பிற புராணங்களை எப்படி வேண்டுமானாலும் ஓதலாம். ஆனால் கந்த புராணத்தைக் காதலித்து ஓத வேண்டுமாம்! ஓதினால் என்ன கிடைக்கும்?

இந்திரராகிப் பார்மேல் இன்பமுற் றினிது மேவிச்

சிந்தையில் நினைந்த முற்றி சிவகதி யதனில் சேர்வர்

அந்தமில் அவுணர் தங்கள் அடல்கெட முனிந்த செவ்வேள்

கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வாரே!

                                                                                                                                                      _  தொடரும்.

Top