You are here
Home > சைவக் கேள்வி > சைவக் கேள்விச் சிற்றம்பலம்

சைவக் கேள்விச் சிற்றம்பலம்

சிற்றம்பல அன்பர்: ஐயா! நாங்கள் சில மாதங்கள் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து விட்டோம். அதனால் கேள்விச் சிற்றம்பலத்தில் இடைவேளை நீண்டு விட்டது. நல்ல வேளை! இறைவன் திருவருளால் மீண்டும் சிற்றம்பலம் இன்று கூடி இருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத்தில் மாயாவாதம் எனப்படும் சங்கர வேதாந்தத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினோம். பின்னர் சில மாதங்கள் மாயாவாதத்தின் மயக்கமோ என்னவோ சில மாதங்கள் சிற்றம்பலம் மயங்கிக் கிடந்தது. இப்போது தெளிந்து வந்திருக்கிறோம். சங்கர வேதாந்தத்தைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறோம்.

அறிவாகரர்: சரியாகச் சொன்னீர்கள்! அதைத் தொடங்கினாலே மயக்கம் வருவது உண்மை தான். நாம் ஏற்கெனவே வேதங்களும், உபநிடதங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளால் முட்டிக் கொள்கின்றன என்பதைப் பார்த்தோம்.

வேதத்தின் கர்ம காண்டத்தை உபநிடதங்கள் எதிர்ப்பவை; ஆனால் உபநிடதங்கள் கூறுவனவற்றிலேயே தெளிவு காணப்படவில்லை. அது மட்டுமன்று உபநிடதங்களுக்குள்ளேயே ஒன்றுக்கொன்று முரணான வசனங்கள் உண்டு.

இந்த முரண்பாடுகளை எல்லாம் நீக்கி ஒருமைப் படுத்த வேண்டும் என்று முதன் முதலில் முயன்றவர் பாதராயணர் என்பவர். இவரை வியாசர் என்றும் கூறுவர். கவனிக்க வேண்டியது என்னவெனில் இந்த வியாசர் மகாபாரதத்தில் வரும் வியாசர் அல்லர்; இவர் மிகப் பிற்பட்ட காலத்தில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வேதங்களைத் தொகுத்தார் என்பர்.

வேதங்களையும், உபநிடதங்களையும் தொகுத்த பாதராயணருக்கு இவற்றின் விரிவினாலேயே பல முரண்பாடுகள் இவற்றிடையே தோன்றிவிட்டன என்ற எண்ணம் எழுந்தது. எனவே இவற்றில் உள்ள கருத்துக்களைச் சுருக்கி சூத்திரங்கள் இயற்றி ‘பிரம்ம சூத்திரம்’ என்ற பெயரில் வெளியிட்டார்.

சிற்றம்பல அன்பர்: ஓ! பிரம்ம சூத்திரத்தைப் படித்தால் வேதம் உபநிடதங்கள் ஆகியவற்றைப் படித்ததாக சொல்லிவிடலாம் இல்லையா?

அறிவாகரர்: ஆம். அப்படி எண்ணித் தான் பிரம்ம சூத்திரத்தைப் பாதராயணர் எழுதினார். ஆனால் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் சொன்னால் தான் அது புரியும் என்று ஆகிவிட்டது. காரணம், பிரம்ம சூத்திரம் சூத்திர வடிவில் மிகச் சுருக்கமாக செய்யுள் வடிவில் இருந்ததால், அதற்கு உரையாசிரியர்கள் உதவி தேவைப்பட்டது.

சிற்றம்பல அன்பர்: இது நல்ல வேடிக்கை! ஒருவர் சொன்னது புரியவில்லை என்று சொல்லும் போது அதை நான் சொல்கிறேன் என்று மற்றும் ஒருவர் கிளம்பினாராம். கடைசியில் இவர் சொன்னதும் புரியவில்லை என அதற்கு வேறு சிலர் உரை சொல்லக் கிளம்பினார்களா! அந்த உரையாவது புரிகிற மாதிரி இருந்ததா?

அறிவாகரர்: அதை ஏன் கேக்கறீங்க! பாதராயணர் பிரம்ம சூத்திரத்தில் இதைத் தான் சொன்னார் என்று மூன்று பெரியவர்கள் மூவேறு விதமாக விளக்கங்கள் எழுதப் போய் மூவேறு மதக் கொள்கைகளே உருவாகி விட்டன. ஒரே பிரம்ம சூத்திரத்திற்கு சங்கரர் ஒரு விதமாகவும், இராமானுஜர் ஒரு விதமாகவும், மத்வர் ஒரு விதமாகவும் விளக்கிட ஒன்றுக்கொன்று முரணான ஏகான்ம வாதம், விசிட்டாத்துவித வாதம், துவித வாதம் என்ற மூன்று கொள்கைகளும், அவற்றைப் பின்பற்றும் மதவாதிகளும் உலகில் உருவாகிவிட்டனர். இவங்களுக்குள்ளே ஏற்படும் மதச்சண்டைகளும் ஏராளம்! ஒரு வேளை, பாதராயணர் மீண்டும் பிறந்தால், இம்மூவரில் எவரை ஆதரித்து நான் சொன்னது இது தான் என்று சொல்வார் என்பது அவருக்கே வெளிச்சம்.

சிற்றம்பல அன்பர்: சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூவரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்களா? அவர்களுக்குள்ளே அவர்கள் சந்தித்து இருக்கிறார்களா?

அறிவாகரர்: இல்லை, மூவரும் வெவ்வேறு காலத்தவர்கள். இவர்களில் சங்கரர் தான் பழையவர்; கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இராமானுஜர் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; மத்துவரும் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இராமானுஜரும், மத்துவரும் சந்தித்துக் கொண்டதாக வரலாறில்லை.

சிற்றம்பல அன்பர்: பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய சங்கரர் தானே உரை எழுதினாரா? அதாவது இராமலிங்க வள்ளலாரைப் போல ஓதாது உணர்ந்தவரா?

அறிவாகரர்: இல்லை, சங்கரருக்கு ஆசிரியர் உண்டு; அவர் பெயர் கோவிந்தர் என்பவர்; அவருக்கு ஆசிரியர் கௌடபாதர். இந்த கௌடபாதரின் கருத்துக்களை ஒட்டியே சங்கரர் ஏகான்ம வாதத்தைப் பிரம்ம சூத்திர உரையில் எடுத்துரைத்தார். இந்தக் கௌடபாதர் ‘மாண்டூக்கிய காரிகை’ என்ற ஆய்வு நூலை எழுதினார். அது மாண்டூக்கிய உபநிடதத்தை ஆய்வு செய்து எழுதப்பட்டது. பெரும்பாலும் இந்த நூலின் கருத்துக்களை ஒட்டியே சங்கரர் தமது வாதங்களுக்கு அடிப்படையாக்கிக் கொண்டார்.

சிற்றம்பல அன்பர்: சங்கரர் எடுத்து வைத்ததை ஏகான்ம வாதம் என்றீர்கள். அவர் உரைத்ததை அதே நேரத்தில் மாயாவாதம் என்றும் சொல்கிறார்கள். இதில் எது சரி?

அறிவாகரர்: இரண்டும் சரி தான். ஏகான்மவாதம் என்பதும் மாயாவாதம் என்பதும் ஒன்றிற்கொன்று மாறுபட்டதல்ல. சங்கரரின் கொள்கையின் இரண்டு கூறுகளால் அப்பெயர்கள் வந்தன.

சிற்றம்பல அன்பர்: புரியவில்லையே!

அறிவாகரர்: தத்துவ ஆராய்ச்சியில் ஆராயப்படுகிற பொருள்கள் மூன்று அல்லவா? அதாவது, உலகு, உயிர், இறை என்ற மூன்று பொருள்கள் அல்லவா?

சிற்றம்பல அன்பர்: ஆமாம்! முன்னமே விளக்கி இருக்கிறீர்கள்.

அறிவாகரர்: மேற்கூறிய மூன்றில் உலகம், உயிர் ஆகிய இரண்டும் இல்லை; பரமான்மாவாகிய இறைவன் ஒருவனே உண்டு என்று சங்கரர் வாதித்தார்; எனவே அதனை ஏகான்ம வாதம் என்று பெயரிட்டனர். அடுத்து, கண்ணுக்குத் தெரிகிற உலகத்தைப் போய் இல்லை என்கிறீர்களே, என்று கேட்டதற்கு அது ஒரு மாயத் தோற்றம் என்றார் சங்கரர்; எனவே அதனை மாயாவாதம் என்றும் கூறுவர். ஆகவே ஒன்றிற்கொன்று மாறானதல்ல. இரண்டும் சங்கரரின் கொள்கையையே குறிக்கும். இப்போது புரிகிறதா?

சிற்றம்பல அன்பர்: இரண்டும் ஒன்றே என்பது இப்போது புரிகிறது. ஆனால் உலகத்தில் இருந்து கொண்டே உலகத்தில் வாழ்ந்து கொண்டே உலகத்தையும், உயிரையும் இல்லை என்று சொன்னார் சங்கரர்! இது தான் புரியவில்லை!

அறிவாகரர்: இல்லை என்று சொன்னால் கேட்கிற உங்களைப் போன்றவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவார்கள் என்று புரிந்து கொண்டு சங்கரர் அதை நேரடியாகச் சொல்லாமல் உலகத்தை ஒரு தோற்றம்; அதாவது மாயத் தோற்றம் என்றார்.

சிற்றம்பல அன்பர்: மாயத் தோற்றம் என்று சாமர்த்தியமாகச் சொன்னாலும், உலகம் இல்லை என்பது தானே அதன் முடிவாகும்! எப்படிச் சொன்னால் என்ன?

அறிவாகரர்: சங்கரரை அவ்வளவு எளிதாக எடை போட்டு விடாதீர்கள். ஒன்று இல்லாமலேயே இருப்பது போலத் தோற்றம் காட்டுவது தான் மாயத் தோற்றம். அது போல உலகம் இல்லாமலே இருப்பது போல தோற்றம் காட்டிக் கொண்டிருக்கிறது என்றார்.

சிற்றம்பல அன்பர்: இது எப்படி நடைமுறைக்கு ஒத்து வரும்? ஒரு பொருள் இல்லாமலே ஒரு தோற்றம் மட்டும் எப்படி காட்ட முடியும்?

அறிவாகரர்: இதைப் புரிந்து கொள்ள சங்கரர் ஓர் உதாரணம் சொன்னார். கானல் நீர் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா?

சிற்றம்பல அன்பர்: ஆமாம்! கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன், நேரிலேயே பார்த்திருக்கிறேன்.

அறிவாகரர்: எங்கே பார்த்திருக்கிறீர்கள்?

சிற்றம்பல அன்பர்: வெய்யில் காலங்களில் காரில் தார் ரோட்டில் போகும் போது பார்த்திருக்கிறேன். காருக்கு முன்னாலே வெகு தூரத்தில் ஒரு நீரோட்டம் ஓடுவது போல தெரியும். கிட்டே போகப் போக அந்த நீரோட்டம் மறைந்து இன்னும் சிறிது தூரத்தில் இருப்பதாகத் தெரியும்.

அறிவாகரர்: அங்கே இல்லாதது இருப்பது போலத் தெரியவில்லையா?

– தொடரும். . .

 

 

 

 

 

Top