You are here
Home > சர்வ ஞான > சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில்

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில்

 

– தொடர்ச்சி

முருகப் பெருமான்: அப்பா! தவிர்க்க முடியாதபடி இடைவேளை நீண்டுவிட்டது இல்லையா!

சிவபெருமான்: ஆம், மகனே! இருபெரும் அடியார்கள்; ஒருவர்க்கொருவர் தொடர்பில்லாமல் இருந்தார்கள்; அவர்களைத் தொடர்புபடுத்தச் சென்று வந்தேன்; அதனால் இடைவேளை அமைந்து, அது நீண்டும் விட்டது. சரி, வட உபநிடதங்கள் மற்றும் வேத வேள்விகள் எல்லாம் எம்மை மறைப்பவை; அதில் யாம் உறைந்திருந்தாலும், யாம் அதில் மறைந்திருக்கின்றோம்; உண்மையில் சொல்லப் போனால் உபநிடதங்கள் எம்மை அரைகுறையாக அடையாளம் காட்டுபவை; வேத வேள்விகளோ எம்மை முற்றிலுமாக மறைப்பவை; மறைப்பதோடு எம்மை இல்லை என்றே பறை சாற்றுகின்றன; இன்னும் சொல்லப் போனால் எதிர்மறையாக நிந்திக்கின்றன. அதனால் அவற்றில் எவர் மூழ்கினாலும் அவர்களால் எம்மைக் காணவும் இயலாது; கண்டு இரண்டறக் கலக்கவும் முடியாது; மாறாக எவன் எல்லாப் பொருள்களிலும் எம்மைக் காண்கின்றானோ அவனே அப்பொருள் வழியாகவே எம்மோடு இரண்டறக் கலக்கும் வாய்ப்புடையவன் என்பதை இடைவேளைக்கு முன்னால் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா?

முருகப் பெருமான்: ஆம், தந்தையே! நினைவில் இருக்கிறது.

சிவபெருமான்: இப்போது நீ கேளாமலே ஒரு தகவலை இதையொட்டி விளக்குகிறேன். எந்தப் பொருளிலும் எவன் என்னைக் காண்கின்றானோ அவன் அந்தப் பொருள் வழி எம்மில் இரண்டறக் கலந்து முத்தியின்பம் பெறுவான் என்று தானே முன்னே சொன்னேன்?

முருகப் பெருமான்: ஆமாம்!

சிவபெருமான்: ஆன்மாவும் ஒரு பொருள் தானே!

முருகப் பெருமான்: ஆம்.

சிவபெருமான்: அப்படியானால் ஆன்மா வேறு ஒரு பொருளில் அழுந்தி எம்மை அறிவதை விட தன்னிலேயே அழுந்தி எம்மைக் கண்டால் மிக எளிதாக முத்தியடையலாம் தானே!

முருகப் பெருமான்: ஆமாம்! சரியாகச் சொன்னீர்கள்!

சிவபெருமான்: (சிரித்துக் கொண்டே) சரியாகச் சொன்னால் தான் அப்பா கடவுள்! சரி! விஷயத்திற்கு வருவோம். மிகப் பெரிய எடையை உடைய கப்பலைப் பல்வேறு புள்ளிகளில் இணைத்து ஒரு புள்ளியை எளிதாக இழுத்து கப்பலை மேல் எழச் செய்தால் என்ன சொல்வர்? எந்திர லாபம் என்பர்; அது போல வேறு வேறு பொருள்களில் அழுந்தி எம்மைக் காண்பது மிக அரிதான முயற்சியாக இருக்கும்; ஆனால் ஆன்மா தன்னிலேயே அழுந்தி எம்மை அறிவதும் அறிந்து இரண்டறக் கலப்பதும் எளிதல்லவா? இதைத் தான் ஆன்ம லாபம் என்பர்.

இதற்கு ஆன்மா தன்னைத் தானே காண வேண்டும். தன்னையே ஆன்மா காண்பது எப்படி? தனது ஊனக் கண்களாலா? இல்லை, அது முடியவே முடியாது. அதற்கு ஆன்மா தனது உடலில் உள்ள கருவி கரணங்களை எல்லாம் நீக்கித் தானே தானேயாய் பார்க்க வேண்டும். இதை, அதாவது தன்னை மட்டும் பார்ப்பது விசிட்டமாய் பார்ப்பது.

ஒரு வேடிக்கையைப் பார்! இந்த ஆன்மா அறியும் பொருள் ஆனாலும் தானே அறியும் பொருளன்று; அறிவிக்க அறியும் பொருள். எனவே வேறு யாராவது அறிவிக்க உதவ வேண்டும். அப்படி ஆன்மா தன்னையே காண உதவுவது எது தெரியுமா? எமது அருட்சத்தி தான். அது தான் ஞானக் கண்ணாக உதவி செய்து ஆன்மாவிற்கு ஆன்மாவையே காட்டும். இதைத் தான் ஆன்ம ரூபம் என்று அறிந்தோர் கூறுவர். ஆக மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத ஆன்மாவை அருள் என்னும் கண்ணால் கண்டு அதில் தோய்ந்து அதன் மேல் அனுபவங்களைப் பெற்றால் அன்றி எம்மைக் காணவோ, கண்டு இரண்டறக் கலந்து இன்பம் துய்க்கவோ ஆன்மாவால் ஆகாது.

எனவே தான் ‘அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால், இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே’ என்று எனதடியான் அப்பரடிகள் என்பான் பாடி வைத்தான்.

‘தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்

மாயப் படலம் கீறித் தூய

ஞான நட்டம் பெற்றபின் யானும்

நின்பெருந் தன்மையும் கண்டேன் காண்டலும்

என்னையும் கண்டேன்’

என்று மற்றொரு அடியான் பட்டினத்தான் இதையே வேறு சொற்களில் வடித்தான்.

ஆகவே ஆன்மாக்கள், உய்ய வேண்டுமானால், உபநிடதங்களை விடுக; வடவேத வேள்விகளை விடுக; தன்னையே அருளால் காண முயற்சி செய்து ஆன்ம ரூபம் கண்டு ஆன்ம லாபம் பெற்று பரசிவமாகிய எம்மோடு ஒன்றி பரசிவமாகவே மாறி அடையும் முத்தியின்பத்தைப் பெறுவது பற்றி சிந்திப்பனவாக!

முருகப் பெருமான்: ஓ! உயிர்கள் ஆன்ம ரூபமாகிய ஆன்ம லாபம் பெற்று அருளால் பரசிவ இன்பத்தில் மூழ்குவதே சரியான முயற்சி, வேறு முயற்சிகள் வீண் என்கிறீர்கள்!

சிவபெருமான்: ஆம்.

     ( இக்கருத்தை உள்ளடக்கிய 19-ஆம் பாடல் இதோ! )

         ஆன்மாவே பரமசிவம் என உண்மையாக

அறிகின்றான் அவன் எந்த அவத்தையடை யினும்அவ்

ஆன்மாவே பரமுத்தி எளிதடையும் இந்த

ஆன்மலா பத்தைஒத்த லாபம்வே றில்லை

ஆன்மாவே விசிட்டகர ணாதீத வாக்கு

மனாதீத சருவக்ஞன் ஆன பூரணனாம்

ஆன்மாவே பரமசிவ சொரூபம்ஆ கலினால்

ஆன்மரூ பத்தையே சிந்திக்கக் கடவன்.

– தொடரும். . .

 

 

Top