You are here
Home > சேய்த்தொண்டர் > அருணகிரி நாதர் (பகுதி 2)

அருணகிரி நாதர் (பகுதி 2)

– தொடர்ச்சி

அருணகிரி நாதர்

    அருணகிரி நாதரின் வரலாறு பற்றி சரிவரத் தகவல்கள் பதிவாகவில்லை என்று தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், ‘அருணகிரி நாதர் வரலாறும் ஆராய்ச்சியும்’ என்ற தமது நூலில் ஏக்கத்துடன் எடுத்துரைத்ததைப் பார்த்தோம். ஆனால் சேதுபதி அரசர் நடத்திய நான்காம் தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராய் வீற்றிருந்த மூதறிஞர் ராவ்சாகிப் மு.இராகவையங்கார் அவர்கள் அரிதில் முயன்று சில தகவல்களைத் தமிழ்ச் சங்கத்தின் இதழான ‘செந்தமிழ்’ என்ற இதழில் எழுதினார். அந்தத் தகவல்களை இங்கு காண்பது பொருத்தம் என்பதால் அதனைக் கருத்தில் கொள்வோம்.

1)   அருணகிரியார் பாரதம் பாடிய வில்லிப்புத்தூரார் காலத்தில் அவரொடு நேர்ந்த வாதில் அவரை வெல்லும் நிமித்தமாக கந்தரந்தாதியைப் பாடினார் என்றும் அதில் ‘திதத்தத்தத்’ எனத் தொடங்கும் தகரவர்க்கப் பாடலுக்கு விளக்கம் கூற முடியாமல் வில்லிப்புத்தூரார் திகைத்தார் என்ற செய்தி உலகறிந்த செய்தி. எனவே அருணகிரியார் வில்லிப்புத்தூரார் காலமான கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்கும் 15-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவர் என்பது தெரிகிறது.

2)   அருணகிரி நாதர் திருவண்ணாமலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன் பிரபுடதேவ மாராயன் என்பவரைப் பாடி இருக்கிறார். பாடல் வரி வருமாறு:

‘உதயதாம மார்பான ப்ரபுடதேவ மாராயன்

உளமுமாட வாழ்தேவர்             பெருமாளே’

எனவே பிரபுடதேவ மாராயர் காலத்தவர் அருணகிரியார் என்பது புலனாகிறது. பிரபுடதேவ மாராயர் என்ற சிற்றரசர் பற்றி I.M.P. N.A. No.208 சாசனம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் விஜய நகர கிருஷ்ண தேவராயரின் பிரதிநிதியாக முதற் பிரபுடதேவ ராயர் எனத் தெரிகிறது. இவர் தன் பெயரால் அந்தணர்க்குத் தானம் செய்து, அதாவது ‘பிரபுடதேவ ராய புரம்’ என்ற பெயரில் தானம் செய்த ஊர் அன்று முல்லண்டிரம் என்றும் இன்று அதன் பெயர் தேவிகாபுரம் என வழங்கப் பெறுகிறது என்றும் தெரிகிறது. இந்தப் பிரபுட தேவராயரின் காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி கி.பி.15-ஆம் நூற்றாண்டு வரை செல்கிறது. எனவே அருணகிரியாரும் இக்காலத்தைச் சேர்ந்தவரே எனலாம்.

3)   அருணகிரியார் தாம் பாடிய திருப்புகழ் ஒன்றில் சோமநாதன் மடம் என்ற ஒன்றைப் புகழ்ந்து இங்கு தினம்தோறும் அருணகிரிநாதர் பூசை நடைபெறுகிறது என்று பாராட்டி இருக்கிறார். பாடல் வரிகள் வருமாறு:

‘அரிவையொரு பாகமான அருணகிரி நாதர்பூசை

அடைவுதவ ராதுபேணும்            அறிவாளன்

அமணர்குல காலனாகும் அரியதவ ராசராசன்

அவனிபுகழ் சோமநாதன்           மடமேவும்  . . . முருக’

இந்தச் சோமநாதன் மடம் உள்ள தேவிகாபுரம் ஊருக்கு மிக அருகில் உள்ள புத்தூர் எனப்படுகிறது. இந்த மடத்தை நிறுவிய சோமநாத ஜீயர்க்கு பிரபுடதேவராயர் தானம் செய்த செய்தி M.E.R. 1913 என்ற சாசனத்தால் அறிய வருகிறோம். எனவே அருணகிரியாரின் காலம் பிரபுடதேவராயர், சோமநாத ஜீயர் ஆகியோர் சமகாலத்தவர்கள் எனத் தெரிகிறது. எனவே அருணகிரியார் கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.15-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமே என்பது உறுதியாகிறது.

4)   அருணகிரியாரும் இரட்டைப் புலவர்கள் என்று தமிழ்நாட்டின் புகழ் பெற்ற புலவர்களும் ஒரே காலத்தவர் என்பதும் பேசப்படுகிறது. இரட்டைப் புலவர்களின் காலமும் மேற்கண்ட காலம் என்று அறுதி இட்டிருக்கிறார்கள். அதனாலும் அருணகிரியாரின் காலம் மேற்கூறியதே என்பது உறுதியாகிறது.

எனவே மேற்கூறியவைகளால் அருணகிரியார் காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.15-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் என்பதை உறுதியாகக் கூறலாம். எனவே அருணகிரியார் கி.பி.15-ஆம் நூற்றாண்டிலும் இருந்தவராதலால் கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று ஐயத்திற்கு இடமின்றிக் கூறலாம்.

இவ்வாறு அருணகிரியாரின் காலம் உறுதியானாலும், அவரது குலம், தாய்-தந்தையின் பெயர், பிறந்த ஊர், இளமை வாழ்வு பற்றிய தகவல்கள் எல்லாம் இன்னும் உறுதியாக அறிய முடியவில்லை என்பது உண்மை.

ஆனால் இவர் ஒரு திண்டிமக் கவி என்பது தெரிகிறது. திண்டிமம் என்பது ஒரு வகை கைப்பறை. இப்பறையை முழக்கிக் கொண்டே ஆசு கவியாக அதாவது உடனுக்குடன் செய்யுளை சந்தக் குழிப்புடன் இயற்றி பாட வல்ல புலவராக இவர் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. திருப்புகழ் பாடல்களைக் கூட இப்படி இவரே இயற்றி இவரே திண்டிமத்தில் தாளத்தை முழக்கி முருகப்பெருமானின் கோயில்தோறும் பாடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இதனைப் பகழிக்கூத்தர் என்கிற மற்றொரு முருகனடியாரின் பிள்ளைத்தமிழ் பாடல்களால் அறிகிறோம். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் வரிகள் சில இதற்குச் சான்று பகர்கின்றன. அவை வருமாறு:

‘பண்தரு பெருங்கவிப் புலமைக்கு நீசொன்ன

படிதிண் டிமம் முழக்க’                – சப்பாணிப்பருவம் (2)

‘பாவாணர் மங்கலக் கவிவாழி பாடிப்

பரிந்து திண்டிம முழக்க’              – சிறுபறை (4)

திண்டிமக் கவியான இவர் இயல்பாகவே ஆசுகவியாக சந்தங்களில் பாடினாலும் திருஞானசம்பந்தரைப் போல சிறப்பாக சந்தப் பாக்களில் பாட வேண்டும் என்ற விருப்பம் உடையவர் என்பது அவரது பாடல்களில் தெரிகிறது. இதையே இவரது வழிபடும் தெய்வமான முருகனிடம் வேண்டி இருக்கிறார்.

‘புமியதனிற் ப்ரபுவான

புகலியில் வித்தகர் போல

அமிர்தகவித் தொடைபாட

அடிமைதனக் கருள்வாயே’

என்ற பாடல் வரிகள் சான்று.

திருஞானசம்பந்தர் 16,000 பதிகங்கள் பாடியதாக நம்பியாண்டார் நம்பி பாடி இருக்கிறார். அது போல தாமும் பாட வேண்டும் என்று மேற்பாடலில் வேண்டியவர் திருஞானசம்பந்தரைப் போலவே 16,000 திருப்புகழ் பாடியதாகக் கூறுவர். இதை மேற்பாடல் ஒன்றினாலேயே ஊகிக்க வேண்டி இருக்கிறது என்றாலும் இது ஏற்றுக் கொள்ளத் தக்கது என்றே கூறலாம். இந்த 16,000 திருப்புகழ் பாடல்களில் இன்று நம்மிடையே நிலவுவது 1311 பாடல்கள் தான் (வாரியார் சுவாமிகள் பதிப்பின் படி). தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்கள் மேலும் சில பாடல்கள் கிடைத்துள்ளன என்று அவற்றைக் கூட்டிப் பதிப்பித்திருக்கிறார்.

அத்துடன், திருப்புகழ் பாடல்களிலும், கந்தரலங்காரம், கந்தரந்தாதி, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம் சேவல் விருத்தம் போன்ற இவர் பாடியருளிய நூல்களிலும் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு அருணகிரியாரின் வரலாற்றுச் செய்திகளைத் தணிகைமணி அவர்கள் தொகுத்துத் தந்திருக்கிறார். இந்த வரலாறு முழுமையானதாக இல்லை என்றாலும் முற்றிலும் ஆதாரங்களுடன் உள்ளவை எனலாம்.

இனி, சேய்த்தொண்டர் புராணத்தில் தேனூரார் கூறும் வரலாற்றைக் காண்போம்.

– தொடரும். . .

 

Top