பதிப்பாசிரியர் வீட்டில் பதினோராந் திருமுறை முற்றோதல்
– பவனிப்புலவன்
“உமாபதி ஐயா! எங்கே கிளம்பிட்டீங்க!” நான் திரும்பிப் பார்த்த போது நன்கு பழக்கமான ஒரு திருமுறை அன்பர் நின்றிருந்தார்.
போகும் போதே எங்க கிளம்பிட்டீங்க என்று ஒரு கேள்வியா? உருப்பட்டா மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டேன். வீட்டிற்குள் திரும்பி ஒரு டம்ளரில் தண்ணீர் குடித்து விட்டு வரலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த அன்பர் கேட்டார்:
‘ஐயா! ஒரு சோடா குடிக்கலாமா? சோடாவும் தண்ணியும் ஒன்று தான்!’ என் மனதில் ஓடிய எண்ணத்தை எப்படியோ மோப்பம் பிடித்தவர் போலக் கூறினார்.
புறப்பட்டு மறுபடி எதற்காக திரும்ப வேண்டும், இவர் சொல்வது போல போகிற வழியில் ஒரு சோடா சாப்பிட்டு விட்டுப் போனால் போயிற்று என்று அவருடன் சென்றேன். ஒரு கடையில் நின்று அவர், ‘இரண்டு பன்னீர் சோடா!’ என்றார். சாப்பிடறது தான் சாப்பிடுகிறோம், வெறும் சோடா எதற்கு? இனிப்பா ஒரு பன்னீர் சோடா சாப்பிடுவோமே’ என்றார். சரி போகட்டும் என்று விட்டேன். பன்னீர் சோடா குடித்து முடித்தவுடன் ‘ஐயா காசு கொடுப்பார்’ என்று கடைக்காரரிடம் அவர் சொன்ன போது திடுக்குற்றேன். ‘நானே கூட கொடுத்துவிடுவேன், ஆனா, அவரவர் சகுனத் தடைக்கு அவரவர்களே காசு கொடுத்தால் தான் தீரும் இல்லையா’ என்று அவர் சிரித்த போது பல்லைக் கடித்துக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டேன். இவர் சகுனத் தடை இல்லை, சகுனத்தடையே உருவெடுத்து வந்த சகுனி’ என்று நினைத்துக் கொண்டேன்.
அவர் சிரித்துக் கொண்டே கூறினார்: ஐயா! நீங்கள் மனத்திற்குள்ளாக என்னை நன்றாக வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீங்க பதினோராந் திருமுறை முற்றோதல் ஒன்றிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். எனக்கு அந்த முற்றோதலுக்குச் சென்று கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால் அது எந்த இடத்தில் நடக்கிறது என்று தெரியாது. அதனால் தான் இந்த உத்தி செய்து உங்களோடு கூட வந்து கொண்டிருக்கிறேன்!
எனக்குள் ஏற்பட்டிருந்த முரண்பட்ட மனோநிலை எல்லாம் பறந்தோடிவிட்டது. ‘மண்ணினிற் பிறந்தார் பெரும்பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்க்கு அமுது செய்வித்தல்’ அல்லவா? அமுது செய்விக்காவிட்டாலும் ஓர் அடியார்க்குப் பன்னீர் சோடா வாங்கிக் கொடுத்தாலும் அதுவும் ஒரு பேறு தான்.
‘ஐயா !’ என்றேன் நான்.
அதற்குள் அவர், ‘சத்தியமாக பன்னீர் சோடாவுக்கு மேல் எதுவும் கேட்க மாட்டேன்’ என்றார்.
குபீரெனச் சிரித்து விட்டு, ‘இல்லை ஐயா! பதினோராந் திருமுறை தெய்வமுரசு பதிப்பாசிரியர் திரு.பா.சீனிவாஸ் அவர்கள் இல்லத்தில் நடைபெறுகிறது. அவரது அன்னையார் மறைந்த திதியில் ஒவ்வோர் ஆண்டும் அவர் இப்படித் தான் திருமுறை முற்றோதல் நடத்தி அடியார்களை எல்லாம் அழைத்து வந்து அன்னைக்கு வழிபாடாற்றி மிகச் சிறப்பாக அடியார்க்கு அமுது செய்வித்து வருகிறார். ஒரு திதியை நினைவு நாளாக எப்படி சிவத்துவமாகக் கொண்டாட வேண்டும் என்பதற்கு இவர் எல்லோர்க்கும் முன்மாதிரியாக இருக்கிறார். அவர் வீடு பக்கம் தான். நாம் இப்போது அங்கே தான் போய்க்கொண்டிருக்கிறோம்’ என்றேன்.
கேட்ட அந்த அன்பரின் கண்கள் கலங்கின. பதறிப் போய் ஏனென்று கேட்டேன். அவர் சொன்னார்: ”ஐயா! எனக்கோ வயது ஏறிக் கொண்டே பேகாகிறது. தோற்றம் உண்டேல் மரணம் உண்டு. நானும் வேளை வரும் போது மறைந்து விடுவேன். எனக்கு முன்னே என் புதல்வர்கள் விபத்தில் மறைந்து விட்டார்கள். எனக்கும் திதி வரும். அப்போது எனக்கு யார் இப்படிப் பயனுள்ள முறையில் திருமுறை முற்றோதல் நடத்தி நினைவு நாளைக் கொண்டாடப் போகிறார்கள்!”
நான் அவரை அப்படியே அணைத்து ஆறுதல் கூறி ‘நான் இருக்கிறேன்’ என்று தேற்றினேன். இதோ! பதிப்பாசிரியரின் வீடு வந்து விட்டது. வீட்டில் ஏற்கெனவே பல அடியார் பெருமக்கள் கூடி இருந்தார்கள். உரிய முறையில் அன்னையார் மற்றும் அவரது தந்தையாரின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு வழிபாட்டுப் பொருள்கள் எல்லாம் சூழ வைக்கப்பட்டிருந்தன. வழிபாடுகள் தூய தமிழில் நடைபெற்றன. திரு.ச.மு.தியாகராசன் அடியார் பெருமக்கள் துணையோடு வழிபாடுகளைச் செய்தார். தெய்வமுரசு ஆசிரியர் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் முன்னிலை வகுத்து வழிபாட்டிற்கு நெறி காட்டினார். தூய தமிழால் நடைபெற்ற அந்த வழிபாட்டின் இனிமையில் அடியார்கள் எல்லாம் மெய்மறந்தனர்.
வழிபாட்டின் முடிவில் தெய்வமுரசு ஆசிரியர் பதினோராந் திருமுறை முற்றோதலைத் தொடங்கினார். அடியார்கள் அனைவர்க்கும் பதினோராந் திருமுறை நூல் வழங்கப்பட்டிருந்ததால் அனைவரும் முற்றோதலை முட்டின்றிச் செய்ய இயன்றது. முற்றோதல் செய்யப்பட்ட பகுதி அதிராவடிகள் இயற்றிய மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை ஆகும்.
அக்கோவையில் கிடைத்த 23 பாடல்களும் முற்றோதிய பின் சில பாடல்களுக்குத் தெய்வமுரசு ஆசிரியர் விளக்கம் கூறினார். அதில் ஒரு பாடலுக்கு அவர் கூறிய விளக்கத்திற்கு ஈடு இணையே கிடையாது. அந்த விளக்கத்தை ஆங்காங்கே குறிப்பெடுத்து வைத்துக் கொண்டேன். அதனால் இந்தச் சைவ உலகமே ஏன் தமிழ் கூறும் நல்லுலகமே பயன் பெறவேண்டும். எனவே அந்தப் பாடலை முதலில் கூறி விடுகிறேன்:
மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஓவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவது எவனோ, அவனேல்
பிறந்ததிவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே (7ஆம் பாடல்)
இனி, இப்பாடலின் விளக்கமாக அவர் கூறியவற்றின் குறிப்பை அவர் வாய்மொழியாகவே கேளுங்கள்!
இந்தப் பாடலில் அதிரா அடிகள் மூத்த பிள்ளையாரான விநாயகப் பெருமானை வழுத்துவதோடு தான் ஏன் விநாயகப் பெருமானை வழுத்துகிறேன், அதாவது வணங்குகிறேன் என்று ஒரு காரணம் கூறுகிறார். ‘யாம் வழுத்துவது எவனோ’ என்று அவரே ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்கிறார்; யாரை வழுத்துவது? துளைக்கைக் கடவுளை! அதாவது விநாயகப் பெருமானை. விநாயகப் பெருமான் துதிக்கை உடையவர்; அக்கையுள் ஓட்டை இருக்கும்; அப்படியே வாய்வரை அது போகும். எனவே துதிக்கைக்குப் புழைக்கை என்று ஒரு பெயர் உண்டு. புழை என்றால் ஓட்டை. பல புலவர்கள் விநாயகப் பெருமானைப் புழைக்கைக் கடவுள் என்று பாடி இருக்கிறார்கள். அதிரா அடிகள் தாம் முதன்முதலில் துளைக்கைக் கடவுள் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகிறார். புழை என்ற சொல் எல்லோருக்கும் தெரியாது. ஆனால் துளை என்ற சொல் எல்லோருக்கும் தெரிந்த வழக்குச் சொல். அதைப் பயன்படுத்தி இந்தத் துளைக்கடவுளை நான் ஏன் வணங்குகிறேன் தெரியுமா என்று கேள்வியை எழுப்புவாராக ‘துளைக்கைக் கடவுளை யாம் வழுத்துவது எவனோ?’ என்று பாடியுள்ளார். எவனோ என்பது பழைய சொல். எவனோ என்றால் ஏன் தெரியுமா என்று பொருள்.
சரி, அதிராவடிகள் விநாயகப் பெருமானை வணங்குகிறாராம்? அவனேல், என்று விநாயகப் பெருமானைப் பற்றிய செவிவழிச் செய்தி ஒன்றைக் கூறி அதனால் தான் விநாயகரை வணங்குகிறேன் என்று விளக்குகிறார். நமக்கு அச்செய்தியை அறிய ஆவல் கூடுகிறது. அச் செய்தி தாங்கிய வரிகளை முதலில் பார்ப்போம்:
“. . . அவனேல்
பிறந்ததிவ் வுலகின் பெருமூதாதை
உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.”
இதற்கு உரை எழுதியவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள்?
“அவர் இல்லையேல் பாரததக்கதை தோன்றியிராது. நான்முகனின் தலையைக் கொய்த சிவனாருக்காக மேருமலையின் மீது பரதவன் மகளான பரிமளகந்தியின் மகனான வியாசர் கூறிக்கொண்டே வர விநாயகப் பெருமான் எழுதினார் என்க” – பி.ரா.நடராசன் (உமா பதிப்பகம்)
இந்த உரைக் கருத்தையும் அதைத் தான் பாடல் வரிகள் சொல்கின்றனவா என்பதையும் சொல், சொல்லாக ஆராய்வதற்கு முன் இந்த உரையில் வெளிப்படும் பொருளைத் தொகுத்துப் பார்ப்போம்.
‘யான் விநாயகப் பெருமானை வணங்குவதற்குக் காரணம், வியாசர் சொல்லச் சொல்ல விநாயகப் பெருமான் மகாபாரதத்தை எழுதினார் அல்லவா, அதற்காகத் தான்!‘
இது வேடிக்கையாக இல்லை! ஒரு நூலை எழுதியதற்காக ஒரு கடவுளை வணங்குகிறேன் என்பது எப்படி அறிவுக்குப் பொருத்தமான காரணமாகும்? அந்த நூலை அவரே இயற்றினாரா என்றால் அதுவும் இல்லை! வியாசர் இயற்றினார்; விநாயகர் சுருக்கெழுத்தாளர் எழுதிக் கொள்வது போல படி எடுத்தார். ஒரு நூலை இயற்றியதற்காகக் கூட அல்லாமல் படி எடுத்ததற்காக அந்தக் கடவுளை வணங்குகிறேன் என்பது சிறிது கூட அறிவு பொருந்தியதாக இல்லையே! இதையா அதிராவடிகள் கூறியிருப்பார்! சிந்திக்க வேண்டிய விஷயம்! சிந்திப்போம்! இது பற்றிய செய்தி செவி வழிச்செய்தி தான். உறுதி செய்ய சான்றுகள் வகையில் எதுவும் இல்லை. இந்தச் செய்தி எப்படி செவி வழியாகக் கசிந்து வருகிறது? மகாபாரதத்தை எனது குருநாதர் வாரியார் சுவாமிகள் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். அதில் முதலாவதாக வரும் ஆதிபர்வம் என்ற பகுதியில் இது பற்றிய விவரம் கூறப்படுகிறது. அதனை அப்படியே தருகிறேன்:
“வியாச முனிவர் விநாயகப் பெருமானை வேண்டித் துதி செய்தார். ஐந்து கரமும் ஆனை முகமும் உடைய கணபதி அவருக்குக் காட்சியளித்தார். வியாசர் அப்பெருமானைப் பன்முறை வணங்கி, ‘ஐயனே!! அடியேன் உலக நன்மைக்காக மகாபாரதத்தைப் பாடுகிறேன். நீர் மேரு மலையிலே அதனை எழுத வேண்டும்” என்றார்.
விநாயகர், ‘என் எழுதுகோல் ஒரு கணப்பொழுதாயினும் நில்லா வண்ணம் பாடுவாயானால் யான் எழுதுதற்கு இசைகிறேன்’ என்றருளினார்.
வியாசர் “பெருமானே! அப்படியே தங்கள் எழுதுகோல் தாமதிக்கா வண்ணம் பாடுவேன். பொருள் தெரிந்தே நீர் எழுத வேண்டும்” என்றார்.
விநாயகர் அதற்கு இசைந்து எழுதத் தொடங்கினார். வியாசர் விநாயகருடைய எழுத்தாணியைத் தாமதிக்கச் செய்யும் பொருட்டுச் சிந்தித்தாலன்றிப் பொருள் விளங்காத கடின பதங்களை அமைத்து ஒரு சுலோகம் பாடுவார். இதற்கு என்ன பொருள் என்று விநாயகர் சற்று சிந்திப்பதற்குள் பல்லாயிரம் சுலோகங்களை மனதில் பாடிக் கொள்வார். இப்படி விநாயகருடைய எழுத்தாணியைத் தாமதிக்கச் செய்ய இடையிடையே கடினமான 8,800 சுலோகங்களைப் பாடினார்.
“இந்த 8,800 சுலோகங்களுக்குப் பொருள் எனக்குத் தெரியும்; சுகருக்குத் தெரியும்; சஞ்சயனுக்குத் தெரியுமோ தெரியாதோ” என்று வியாசர் கூறியுள்ளார்.” – ஆதிபர்வம்; தெய்வத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள்; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் பதிப்பு; பக்கம் 6-7.
ஒரு நூலினைப் பதிக்கும் போது நூலில் உள்ளது உள்ளவாறு பதிப்பிக்க வேண்டும். அந்தப் பணியினை வாரியார் சுவாமிகள் நேர்மையாகச் செய்துள்ளார். ஆனால் இந்தச் செய்தியில் வாரியார் சுவாமிகளுக்கு உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. இது பற்றி ‘கைத்தல நிறைகனி’ எனத் தொடங்கும் திருப்புகழுக்கு விரிவுரை எழுதும் போது தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
அந்தத் திருப்புகழில், ‘முத்தமிழ் அடைவினை முற்படுகிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே!’ என்று ஒரு வரி வரும். அதற்குச் சுவாமிகளின் உரை வருமாறு:
“தமிழ் இலக்கணங்களை அகத்தியர் கூற விநாயகர் எழுதினார் என்பது கன்ன பரம்பரை (செவிவழிச் செய்தி). முத்தமிழடைவு என்பதை மஹாபாரதம் என்று வலிந்தும் பொருள் கொள்ளலாம்.
சகல தேவர்களுக்கும் முதற்கடவுளாகத் திகழ்வதாலும், சிவபுத்திரரில் முதல்வராக விளங்குவதாலும், யாவர் எக்காரியத்தைத் தொடங்கினாலும், முதலில் நினைந்து பூசிக்கும் முன்னைப் பழம்பொருள் என இலகுவதாலும் முதல்வன் என்றனர்.”
திருப்புகழமிர்தம் காரியாலயம் பதிப்பு (1964) – பக்கம் 11; வாரியார் சுவாமிகள்.
இதனால் விநாயகர் வியாசர் சொல்ல மகாபாரதம் எழுதினார் என்பது வலிந்து சொல்வதாகும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார் வாரியார் சுவாமிகள்.
இனி, மகாபாரத நூலில் வரும் செவி வழிச் செய்தியைப் பார்ப்போம். அதில் வரும் தகவல்படி விநாயகருக்கு 8,800 சுலோகங்களின் பொருள் முதலில் புரியவில்லை; மிகக் கடின முயற்சியில் தான் விநாயகருக்கு அவற்றின் பொருள் புரிந்துள்ளது. இது எப்படி முற்றறிவு என்ற குணம் இருக்க வேண்டிய ஒரு கடவுளுக்குப் பொருந்தும்? விநாயகராகிய கடவுளுக்குத் தெரியாதாம்; அல்லது குறைந்தளவில் உடனே புரிந்து கொள்ள முடியவில்லையாம்! அப்படியானால் அவர் கடவுளாக இருக்க முடியாது. அதை விட வேடிக்கை என்னவென்றால் கடவுளுக்குத் தெரியாத அந்த அறிவு ஒரு மகாபாரதக் கதையை எழுதுகிற மனிதனாகிய வியாசருக்குத் தெரியுமாம்! இதென்ன கதை! நல்ல வேளை! அதிராவடிகள் பாடல் வரியில் விநாயகரைத் துளைக்கைக் கடவுள் என்றே கூறியுள்ளார். எனவே கடவுளாகிய விநாயகர் ஒரு மகாபாரதக் கதை எழுதிய, அதிலும் படி எடுத்தல் மட்டும் செய்ததை அதிரா அடிகள் கூறி இருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலே பார்த்த உரை பொருந்தி வரவில்லை.
அதிலும் இன்னொன்றும் கவனத்திற்கு உரியது; ஏதோ ஒன்றை எழுதியதற்காகவே அதிரா அடிகள் விநாயகரை வணங்குகிறேன் என்பது புரிகிறது. அதை எழுதியது கூட சிவபெருமான் பொருட்டு அவர் எழுதினார் என்று பாடல் வரி வருகிறது.
“பிறந்து இவ்வுலகின் பெருமூதாதை உரந்தரு சிரம்” என்ற பாடற்பகுதிக்குப் பிரமன் சிரம் என்று உரை கூறப்பட்டு, அவனது சிரத்தை அரிந்தவனாகிய சிவபெருமான் என்று பொருள் பட ‘உரம் தரு சிரம் அரிந்தவற்கே’ என்று பாடல் வரி நீளுகிறது.
பிரமன் ஓர் உயிரினம் என்பதை இருசொற்களால் அதிரா அடிகள் குறிக்கிறார்: 1) பிறந்து 2) பெருமூதாதை. பிரமன் பிறந்திறக்கிற உயிர் என்பதைப் பிறந்து என்பதால் குறித்தார். இவ்வுலகின் பெருமூதாதை என்பதால் பிரமன் மனித குலத்தின் பெரு மூதாதையாய் இவ்வுலகம் படைத்தவன் என்று கூறிவிட்டார்.
பிரமனுக்கு 5 தலை இருந்ததாகவும் அதில் ஒன்றைச் சிவபெருமான் கிள்ளி எறிந்ததாகவும், கிள்ளி எறிந்த ஊர் திருக்கண்டி என்றும் அது சிவனது எட்டு வீரட்டச் செயல்களில் ஒன்று என்றும் சிவபுராணங்கள் கூறும். எனவே பிரமன் தன் சிரமரிந்த சிவன் என்று பாடல் வரி சிவனைக் கூறி அவற்கே வரைந்தது என்றதனால் சிவபெருமான் கட்டளையின் பொருட்டு விநாயகர் எழுதியது என்பது பாடலில் வருகின்ற நேர்பொருளாக நிற்கிறது.
சிவபெருமான் மகாபாரதத்தை எழுது என்று விநாயகருக்குக் கட்டளையிட்டதாக சிவபுராணங்களிலும் இல்லை, விநாயகபுராணத்திலும் இல்லை, ஏன் மகாபாரதத்திலேயே இல்லை.
எனவே மகாபாரதத்தை எழுதியதற்காக விநாயகரை வணங்குகிறேன் என்று அதிரா அடிகள் பாடி இருக்கவே இயலாது; அப்படி உரை எழுதி இருப்பது மிகவும் தவறு என்பது திண்ணம்.
அது மட்டுமல்லாமல் வியாசர் எழுதிய மகாபாரதம் ஒரு சில மன்னர்களின் வரலாறு; அதைப் பரம்பொருள் எழுத வேண்டியதில்லை. அந்த வரலாறும் வடமொழியில் வியாசர் சொன்னது. ஆனால் விநாயகர் எழுதியது வடமொழியில் அல்ல என்பதும் தமிழில் தான் எழுதினார் என்றும் அருணகிரிநாதர் “முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வன்” என்று பாடி இருப்பதிலிருந்து உறுதி ஆகிறது.
எனவே ஏதோ ஒரு முத்தமிழ் அடைவினை விநாயகர் எழுதியதற்காகவே, அதை எண்ணியே, அதிரா அடிகள் அவரை வணங்குகிறேன் என்று கூறினார் என்று கொள்வதே அறிவுக்குப் பொருந்திய ஒன்று. மகாபாரதம் முத்தமிழ் அடைவு என்று எண்ணிப் பார்க்கவும் இயலாது.
ஆனால் இதே அருணகிரிநாதர் தானே விநாயகர் மகாபாரதத்தை மேரு மலையில் எழுதினார் என்று நேரிடையாகவே பாடி இருக்கிறார் என்று திருப்புகழைக் கற்றுணர்ந்தவர்கள் இந்தத் திருப்புகழ் வரிகளை எடுத்துக் கூறலாம்:
“பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
கோடொடித்த நாளில் வரைஇ வரைஇபவர்
பானிறக் கணேசர் குவா குவாகனர் இளையோனே ”
இந்தப் பாடல் வரிகள் ‘சீர் சிறக்கு மேனி’ என்று தொடங்கும் பழமுதிர் சோலை திருப்புகழில் வருகின்றன.
இதற்கு உரை வரைந்த வாரியார் சுவாமிகள், இப்படி எழுதினார்:
‘பாரதமென்ற பெருங்காவியத்தை வியாச முனிவர் சொல்ல மேருகிரியில் வெண்மையாகத் திகழும் கொம்பைக் கஜமுக சம்மார காலத்தில் ஒடித்த அக்காலத்திலேயே முடிவு செய்தவாறு, சூரியனைப் போல சிவந்த நிறமுடையவரும், கணங்களுக்குத் தலைவரும், திரண்ட பெருச்சாளியை வாகனமாக உடையவருமாகிய விநாயகப் பெருமானுடைய சகோதரரே!’
இந்த வரலாற்றை அருணகிரிநாதர் ‘குகையினவ’ எனத் தொடங்கும் இன்னொரு திருப்புகழிலும் அப்படியே வழிமொழிகிறார். அது வருமாறு:
“பகைகொள் துரியோதனன் பிறந்து
படைபொருத பாரதந் தெரிந்து
பரியதொரு கோடு கொண்டுசண்ட வரைமீதே
பழுதற வியாசனன் றியம்ப
எழுதிய விநாயகன் சிவந்த
பவளமத யானை பின்பு வந்த முருகோனே”
இப்போது எழும் கேள்வி என்னவென்றால் இத்தனை தெளிவாக ஈரிடங்களில் அருணகிரிநாதர், வியாசர் சொல்ல மகாபாரதத்தை விநாயகர் தனது கொம்பினால் மேரு மலையினில் எழுதினார் என்று பாடிவிட்டு கைத்தல நிறைகனி என்று முழுக்க முழுக்க விநாயகர் துதியாகவே பாடிய திருப்புகழில் விநாயகர் எழுதியது முத்தமிழ் அடைவு என்று பாடி இருப்பது ஒன்றிற்கு ஒன்று முரண் அல்லவா?
திருப்புகழிற்கு உரை எழுதிய வாரியார் சுவாமிகளும் முத்தமிழ் அடைவினை விநாயகர் அகத்தியர் சொல்ல மேரு மலையில் எழுதினார் என்று எழுதி பாரதத்தை எழுதவில்லை என்று மறுத்துவிட்டு, இந்த இரு வேறு திருப்புகழ் வரிகளுக்கு உரை எழுதிய வாரியார் சுவாமிகள் விநாயகர் வியாசர் சொல்ல மேரு மீது பாரதம் எழுதினார் என்று உரை வரைந்திருப்பது ஒன்றிற்கொன்று முரண் அல்லவா?
இங்கே தான் சற்று சிந்திக்க வேண்டும். பேசுவதைக் கூற்று என்பார்கள். இவ்வகையிலான பலவேறு கூற்றுகள் உண்டு. தொல்காப்பியத்திலே தோழி கூற்று; தோழன் கூற்று; தலைவன் கூற்று; தலைவி கூற்று என்று கூற்று அகத்துறையில் எப்படியெல்லாம் நிகழும் என்று காட்டப்பட்டிருக்கும்.
இப்படி பலவகைக் கூற்றுகளிலே ஒன்று தகவல் கூற்று. அந்தத் தகவல் கூற்றிலே இப்படி சொல்லப்படுகிறது என்று வரும். சொல்லப்படும் தகவலுக்குச் சொல்பவர் பொறுப்பல்ல; அவர் கேட்டதை அவர் இப்படிச் சொல்லப்படுகிறது என்று கூறுவார். அதனை அவர் ஏற்றுக் கொண்டவராய் சொல்லலாம்; அன்றி, ஏற்றுக் கொள்ளாமலும் சொல்லலாம்.
இதற்கு இலக்கியத்திலேயும் வழக்கிலேயும் இரு உதாரணங்களையும் பார்க்கலாம்.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
இந்தக் குறளில் திருவள்ளுவர் கடவுளை எண்குணத்தான் என்று கூறுகிறார். இதற்கு உரை வரைந்த பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.
“எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றலுடைமை, வரம்பில் இன்பமுடைமை என இவை. இவை சைவாகமத்துக் கூறப்பட்டது.
அணிமாவை முதலாக உடையன எனவும், கடையிலா அறிவை முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர்.”
குறளில் எண்குணங்கள் உடையவன் என்று சொல்லப்பட்ட கடவுளின் தாளை வணங்காத் தலையால் பயனில்லை; அது ஊனத்தலை என்பது கூறப்பட்டது.
எண்குணங்களாக சொல்லப்பட்ட கடவுள் என்பது கடவுளைப் பற்றிய தகவல். அதையொட்டி எவையெவை எண்குணங்களாகச் சொல்லப்படுகின்றன என்ற மேற்தகவல்களைப் பரிமேலழகர் எடுத்துத் தருகிறார். முதலில் சைவாகமத்தையொட்டிய தகவலைக் கூறுகிறார். அதன் பின் எட்டுச் சித்திகளே கடவுளின் எண்குணம் என்று சிலரும், கடையிலா அறிவு முதலாக அடுக்கி இவையே அருகக்கடவுளின் எண்குணங்கள் என்று சமணர்களும் கூறுவதை எடுத்துக் கூறினார்.
இங்கே மூன்று தகவல்களைத் தரும் பரிமேலழகர் எட்டுச் சித்தி என்று கூறுகிற கூற்றையும், சமணர்கள் கூறிய கூற்றையும் தகவலுக்காகச் சொன்னாரே ஒழிய அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அப்படிச் சொல்கிறவர்களும் உண்டு என்று எழுதியதினாலேயே தமக்கு அது ஏற்புடைத்தல்ல என்று தெரியப்படுத்தினார்.
அடுத்து எண்குணம் இவை என்று சைவாகமத்துக் கூறப்பட்டது என்று முதலில் எடுத்தாண்ட தகவலே குறளுக்குப் பொருத்தமானது என்பதைக் குறிக்க எண்குணங்களாவன இவை என்றார். ஆனால் இந்தத் தகவலை எழுதுகிற பரிமேலழகர் ஒரு வைணவர். அவருக்குச் சைவாகமங்களில் உடன்பாடு இருக்க முடியாது. எனவே ‘இவ்வாறு சைவாகமத்துள் கூறப்பட்டது’ என்று எழுதினார்.
பரிமேலழகருக்கு உடன்பாடு இருக்குமானால் “சைவாகமத்தில் கூறியவாறு கடவுளின் எண் குணங்களாவன என்று எழுதியிருப்பார். அவருக்கு அதில் உடன்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் திருக்குறளில் கூறப்பட்டது சைவாகமங்களில் கூறப்பட்டது என்று நேர்மையாக எடுத்துரைத்து விட்டு, தான் அதிலிருந்து வேறுபட்டவன் என்பதைக் காட்ட ‘இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது” என்று உரையில் சேர்த்து எழுதினார்.
எனவே தகவல்களைத் தெரிவிக்கும் தகவல் கூற்றினை, தகவல் அளிப்பவர், ஏற்று அளிக்கலாம்; ஏற்காமல் அளிக்கலாம், பாதியளவில் ஏற்று மீதியை ஏற்காமலும் அளிக்கலாம் என்று தெரிகிறது.
அடுத்து நடைமுறையில் தகவல் கூற்று எப்படி அமைகிறது என்று பார்ப்போம்.
அதாவது தகவல்களை அளிப்பவற்றுள் இன்று முதன்மையானவை செய்தித்தாள்கள். அந்தச் செய்தித் தாள்களை நடத்துபவர்கள் சும்மா ’நடுநிலை நாளிதழ்’ என்று போட்டுக் கொண்டாலும் ஏதேனும் ஒரு சார்புடையவராக இருத்தல் தவிர்க்க முடியாது. ஆனால் செய்திகளை அளிக்கும் போது ஏதோ ஒரு அரசியல்வாதி பதவியைப் பயன்படுத்தி லட்சம் கோடி ஊழல் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது என்று தான் செய்தி போடுவார். இதில் ‘என்று கூறப்படுகிறது’ என்பது முக்கியம். இதனால் அந்தச் செய்திக்கு அந்த நாளிதழ் பொறுப்பேற்கவில்லை என்பது தெரிகிறது.
மறுநாள் அந்தக் குறிப்பிட்ட நபர் அதை மறுத்துரைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் மறுத்துரைத்தாலும் செய்தியாக அதே நாளிதழ் வெளியிடும். வெளியிடும் போது இவ்வளவு லட்சம் ஊழல் செய்தவராக பேசப்பட்ட இந்த நபர் இதை இப்படி மறுத்துரைக்கிறார் என்று வெளியிடும்.
இங்கே கூட அந்த நபர் ஊழல் செய்துவிட்டார் என்று நாளிதழ் எழுதி வழக்கில் சிக்கிக் கொள்ளாது. ஊழல் செய்ததாகப் பேசப்பட்ட அந்த நபர் என்று அடையாளம் காட்டித் தகவலைக் கூறும்.
எனவே பழந்தமிழ் இலக்கிய காலம் முதல் இன்று வரை தகவல் கூற்றில் இப்படிப் பேசப்பட்ட, இப்படி சொல்லப்பட்ட என்ற சொற்களைக் கூட்டி தகவலுக்குத் தாம் பொறுப்பல்ல என்று தகவல் தருபவர் ஒதுங்கிக் கொள்வது கண்கூடு.
அது போல் தான், அருணகிரிநாதர் பாடியிருக்கிற மூன்று திருப்புகழ் வரிகளும். ‘பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்’ என்ற வரியிலும் அருணகிரிநாதர் கூறியது என்னவென்றால் இவ்வாறு வியாசர் சொல்ல பாரதத்தை எழுதியதாகச் சொல்லப்படும் விநாயகரின் இளையவர் என்று கூறப்படும் முருகோனே என்று தான் பாடுகிறார். அதன் உண்மைக்கு அருணகிரிநாதர் பொறுப்பேற்றார் என்று கூற முடியாது. ஏனென்றால் அதற்கு முரணாக அவரே விநாயகர் முத்தமிழ் அடைவினை மேருமலையில் எழுதினார் என்று நேரிடையான விநாயகர் துதிப்பாடலிலேயே பாடி இருப்பதனால் விநாயகர் பாரதத்தை வியாசர் சொல்லி எழுதினார் என்ற சில இதிகாச, புராணங்கள் தரும் தகவலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உறுதி ஆகிறது.
இதை நன்கு உணர்ந்தே வாரியார் சுவாமிகளும் முதல் திருப்புகழிற்கு ஒரு வகையாகவும், ஏனைய இரு திருப்புகழ் வரிகளுக்கு வேறு வகையாகவும் உரை எழுதினாரே தவிர ஒன்றிற்கொன்று முரணாக வாய்ப்பில்லை.
இனி, அடுத்து ஆய்வு செய்ய வேண்டியது என்ன என்றால் அருணகிரியாருக்கும், வாரியார் சுவாமிகளுக்கும் ஏற்புடைய கருத்தின் தொகுப்பு. அதாவது விநாயகர் மேரு மலையில் முத்தமிழ் அடைவு ஒன்றினை எழுதினார் என்பது. அந்த முத்தமிழ் அடைவு என்ன என்பது ஆய்வுக்குரியது.
‘முத்தமிழ் அடைவினை முற்படுகிரிதனில் முற்பட எழுதிய’ என்று தான் திருப்புகழில் வருகிறது. இதில் எந்த இடத்திலும் யாரோ சொல்லச் சொல்ல விநாயகர் படி எடுத்தார் என்று வரவில்லை. ஆனால் வாரியார் சுவாமிகள் அகத்தியர் சொல்ல தமிழிலக்கணங்களை விநாயகர் எழுதினார் என உரைத்துள்ளார்.
வேறு எந்த புராணமோ, அல்லது இலக்கியமோ அகத்தியர் தமிழிலக்கணம் சொல்ல விநாயகர் அதனை மேரு மலையில் எழுதினார் என்று கூறக் காணோம். எனவே இதுவும் ஏற்கத் தக்கதல்ல. வாரியார் சுவாமிகள் பாரதக் கதையின் தாக்கத்தினால் அதற்கு இணையாக இங்கே அகத்தியரைக் கொண்டு தமிழின் அடைவு என்று பாடலில் வருவதனால் அதனைத் தமிழிலக்கணம் எனக் கொண்டு விட்டார் எனலாம்.
அகத்தியருக்குத் தமிழ் இலக்கணங்களைக் கற்றுத் தந்தது முருகப்பெருமான் என்று பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. எனவே முருகனிடம் அகத்தியர் தமிழிலக்கணங்களைக் கற்றுக் கொண்டு வந்து அதை அவர் விநாயகருக்குச் சொல்ல விநாயகர் படி எடுத்தார் என்பது அறிவுக்கேலாதது.
அப்படியானால் விநாயகர் எழுதிய அந்த முத்தமிழ் அடைவு தான் எது?
விநாயகர், யோக நெறியில் முதலாவதாக எண்ணப்படுபவர். மூலாதார கணபதி என்று பல தலங்களில் விநாயகருக்குப் பெயர் உண்டு. குறிப்பாகத் திருவாரூரில் உள்ள ஒரு கணபதிக்கு மூலாதார கணபதி என்று பெயர் உண்டு. யோக நெறியில் சுழிமுனை விழிப்புற்று மூலாதாரம் விழிப்புறும். அங்கே உயிரை ஆட்கொண்டு மேலேற்றுவது கணபதி என்பர். எனவே யோகிகள் மூலாதாரக் கடவுள் கணபதி என்று ஒருமித்துக் கூறுகின்றனர். ஆக, யோக நுட்பங்களை எல்லாம் முதன்முதலில் அறிவிக்கத் தொடங்கி அதன் முடிவையும் உடனழைத்துச் சென்று அறிவிப்பார் விநாயகர்.
இந்த யோக நெறியில் மூத்து முதிர்ந்தவர்கள் தமிழர்கள். கி.மு.7500-ஆம் ஆண்டைச் சார்ந்தது என்று இந்திய அரசு அறிவித்துள்ள சிந்துசமவெளி நாகரிகமான தமிழர் நாகரிகத்தில் யோக முத்திரை அடங்கிய நாணயங்கள், சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே தமிழர்களின் மிகத் தொன்மையான நெறி யோகம். இதனைத் தொல்காப்பிய தாபதப் பக்கம் என்று விளம்புகிறது.
எனவே தமிழர் நெறியின் சாரம் யோகம்; அதுவே தமிழ் நெறியின் சாரம். ஆக, விநாயகருடன் தொடர்புடன் கூடிய முத்தமிழ் அடைவு யோகமே. அதனையே தமிழர்களும், அவர்கள் மூலம் இந்த உலகமும் அறிய அறிந்து பயனுற, விநாயகர் மேருவில் எழுதி வைத்தார் என்பதே இங்கு ‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே’ என்று அருணகிரியாராகிய சிவயோகியால் எடுத்துரைக்கப்பட்டது என்பதே நேரிதான பொருள்.
இதைத் தான் அதிரா அடிகளும் மேற்கண்ட அந்த பாடலில் குறிப்பிட்டு அறியாமையில் மூழ்கிய உயிர்களாகிய நாங்கள் எல்லாம் பயன்பெறும்படி அன்று யோக நுட்பத்தை அதாவது தமிழடைவை மேருமலையில் வரைந்து வைத்தாயே, அதற்காகவே, விநாயகப் பெருமானே, உன்னை நான் வணங்குகிறேன் என்று நன்றியோடு பாடியுள்ளார் என்க.
மேற்கூறிய பாடலில் இன்னும் சிலவற்றை ஆய்ந்து அறுதியிட வேண்டியுள்ளது. அதாவது ‘வாரிச்செல்வன் மகள்மகன் மொழியே’ என்ற இறுதி வரிக்கு பரதவன் மகளாகிய பரிமளகந்தியின் மகனாகிய வியாசன் கூறிய மொழி என்ற உரை எவ்வாறு தவறு என்பதை ஆய்தல் வேண்டும்.
இங்கே பரதவன் என்பவன் வாரிச்செல்வனா என்ற கேள்வி எழுகிறது. பாரதக் கதைப்படி அவன் கங்கை நதியோடும் பகுதியில் ஒரு படகோட்டி. வாரி என்பது கடலைக் குறிக்கும். எனவே கங்கையைக் குறிக்காது. ஆகவே வாரிச்செல்வன் என்பது பரதவன் என்பவனைக் குறிக்காது. பாரதக் கதையை விநாயகர் எழுதவில்லை என்பதை மேலே நன்கு நிறுவிவிட்ட காரணத்தால் இந்தப் பரதவன் பாரதத்தில் வரும் பரதவன் இல்லை என்பது திண்ணம்.
அப்படியானால் இங்கே கூறப்படும் வாரிச்செல்வன் யார்? அவன் மகளாக இங்கே குறிக்கப்படுபவள் யார்? அந்த மகளுக்கு மகனாகக் குறிக்கப்படுபவன் யார்? அவன் சொன்ன மொழி எது?
இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். இங்கே யோகநூல் தான் எழுதப்பட்டது என்று மேலே நிறுவப்பட்டது என்பதால் இந்த வாரிச்செல்வன் சிவபெருமானாகத் தான் இருக்க வேண்டும். எனவே தான் சிவபெருமானுக்காக சிவனின் மகனாகிய சிவனின் கூறு எனப்படும் விநாயகர் எழுதியது என்று அதிரா அடிகள் கூறி இருக்கிறார் என்று கொள்ளலாம். எனவே சிவபெருமான் தான் வாரிச்செல்வன். அவர் எப்படி வாரிச்செல்வன் ஆவார்? வாரி என்றால் கடல்; கடலின் செல்வன் என சிவபெருமான் ஆவது எப்படி? சிவபெருமான் அறவிடை ஏறியவன். அறத்தின் நெறியால் அவனை அடையலாம். அறமோ கடல் போல் விரிவது; எனவே அந்த அறக்கடலில் ஆழ ஆழ சிவனை அதன் செல்வமாக அடையலாம். அதனால் தான் திருவள்ளுவர் கடவுளை “அறஆழி அந்தணன்” என்று குறிப்பிட்டார். அதன் வழி அறவாழி அந்தணன் ஆகிய சிவபெருமானை இங்கே அதிரா அடிகள் வாரிச்செல்வன் என்று குறிப்பிட்டார்.
இனி யோகியர்க்கு அடிப்படையானது குண்டலினி சத்தி. இது ஆதி பராசத்தியின் ஒரு கூறாய் ஒவ்வோர் உடலிலும் அமைவது. எனவே இது அம்பிகையின் மகளாகக் கொள்ளத்தக்கது. அம்பிகையோ சிவனின் பாதியாதலால் குண்டலினி சத்தி சிவனுக்கும் மகளாயிற்று. சத்தியே சிவனுக்கு இப்படி மனைவியாகவும் மகளாகவும் இப்படித்தான் உருவகம் செய்யப்படும் என்பதை மணிவாசகர் கூற்றிலும் காணலாம்.
“எம்பெருமான் இமவான் மகட்குத்
தன்னுடை கேள்வன் மகன்தகப்பன்
தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே”
என்பது அவர் வாக்கு.
திருமூலரும் இதைத் திருமந்திரப் பாடலொன்றில் (4-ம் தந்திரம்) உறுதி செய்திருக்கிறார்; பாடல் வருமாறு:
வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே!
எனவே வாரிச்செல்வனாகிய சிவபெருமானின் மகளாக இங்கு பேசப்படுபவள் குண்டலினி சத்தி என்பது உறுதியாகிறது.
இந்தக் குண்டலினி சத்தியினால் உருவாவது ஒரு சிவயோகியாகிய ஆன்மா. எனவே இந்தச் சிவயோகி குண்டலினி சத்தியின் மகன். இந்தச் சிவயோகத்திற்கு உதவும் மொழியே யோகநூல். அதனைத் தமிழின் அடைவாக எழுதியவர் விநாயகர்.
இதைத்தான், ‘வாரிச்செல்வன் மகள்மகன் மொழியே, வரைந்தது’ என்று அதிரா அடிகள் மிகச் சிறப்பாக எடுத்தோதியுள்ளார் பாடலில்.
அடுத்து இதை விநாயகர் எழுதியது மேரு மலை என்பது எதைக் குறிக்கும் என்பதை ஆய்ந்தால் பாடல் பொருள் நிறைவு பெறும்.
யோகிகள் யோகத்திற்கு உதவும் சுழிமுனை நாடியைப் பலவேறு (பரிபாஷைகளால்) குழூஉக் குறிகளால் குறிப்பிடுவர். ஆழமான மூலாதாரத்திலிருந்து நெற்றி நடுவாகிய ஆஞ்ஞைக்கு ஏறுவது மலையில் ஏறுவது போல இருப்பதால் சுழிமுனையை மேரு நாடி என்று குறிப்பிடுவர்.
எனவே யோக நுட்பத் தமிழடைவை விநாயகர் மூலாதாரத்தில் எழுதி அறிவித்து ஆன்மாவை மேலேற்றுவதை விநாயகர் மேருமலையில் எழுதினார் என்று உள்ளுறைப் பொருளடக்கிச் சொல்லி வைத்தனர்.
ஆக, சிவபெருமானை ஆன்மாக்கள் அடையும் பொருட்டு மேரு மலை எனப்படும் சுழிமுனை நாடியில் யோகநுட்பங்களைச் சிவனின் கூறாகிய விநாயகப் பெருமான் முத்தமிழ் அடைவாக எழுதி வைத்து வருவதற்காகவே அதிரா அடிகளாகிய நான் விநாயகப் பெருமானை நன்றியோடு வணங்குகிறேன் என்பதே 11-ந் திருமுறையில் மூத்தபிள்ளையார் மும்மணிக்கோவை என்ற நூலில் வரும் 7-ஆம் பாடலின் உண்மையான பொருள் என்பதை உய்த்துணர்வதே திருவருட் செயல்.