You are here
Home > சேய்த்தொண்டர் > சேய்த்தொண்டர் புராணம் பகுதி 26 பொய்யாமொழியார் வரலாறு

சேய்த்தொண்டர் புராணம் பகுதி 26 பொய்யாமொழியார் வரலாறு

செந்தமிழ் மாருதன்

“இம்பரெலாம் பரவுறுபொய் யாமொழியார்க் கடியேன்”

       இந்த உலகம் தோன்றி நின்று அழிவது என்பது சித்தாந்தம் நிறுவும் கொள்கை. ஆனால் இந்த உலகில் காணப்படும் உயிர்கள் அநாதி அதாவது என்று தோன்றியது என்று கூற இயலாததாய் என்றும் உள்ளது என்று சித்தாந்தம் கூறுகிறது. உயிர் மட்டுமல்ல, உயிர்களையும் உலகையும் இயக்குகின்ற இயவுள் எனப்படும் கடவுளும் அநாதி என்றும், அதாவது ‘என்றும் உள்ள பொருள்’ என்பது சித்தாந்தம். அவ்வளவு தானா? வேறு ஏதாவது அநாதிப் பொருள் உண்டா என்று கேட்டால், ஆம், அது தான் மூன்றாவதான மாயை என்கிறது சித்தாந்தம்.

       மாயையா? அது என்ன? என்று கேள்வி எழலாம். மாயை என்பது வேறொன்றுமில்லை, அது உலகத்தின் மூலம் என்று பதில் வருகிறது. இதென்ன ஆச்சரியமாக இருக்கிறதே, உலகம் தோன்றி நின்று அழிவது என்று கூறிவிட்டு அதற்கு மூலமான மாயை என்றும் உள்ள பொருள் என்பது எப்படி? என்று கேட்கத் தோன்றுவது இயல்பு.

       பொன் என்பது ஒன்று, அதைக் கொண்டு பலப்பல நகைகளைச் செய்யலாம். காலத்திற்கு ஏற்ப பெண்கள் நகைகளை அழித்து அழித்து புதிது புதிதான மாதிரிகளில் (மாடல்களில்) செய்து கொள்கிறார்கள். பாட்டி நகையை அப்படியே எந்தப் பெண் அணிந்து கொள்வாள்? எனவே அவ்வக்கால நாகரிகத்திற்கு ஏற்ப நகைகள் மாறுகின்றன. இங்கே பொன் மூலம்; நகை அதன் வடிவமைப்பு. அதாவது பொன் காரணம்; நகை காரியம். காரியம் தோன்றி நின்று அழியலாம்; காரணம் அழிவதில்லை. அது என்றும் உள்ள பொருள். அது போல மாயை காரணம்; அது என்றும் உள்ள பொருள்; ஆனால் அதைக் கொண்டு இறைவன் வடிவமைக்கின்ற உலகம் காரியம் ஆதலால் தோன்றி, நின்று, அழிவதாய் மாறுதலுக்கு எப்போதும் உள்ளாவது; நிலைக்காதது.

    இது தான் பிரச்சினையே. நமக்கு எது நிலைத்தது, எது நிலைக்காதது என்றே தெரிவதில்லை. இது எவ்வளவு பேதைமை! அதனால் தான் வள்ளுவர்,

       நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

       புல்லறி வாண்மை கடை.

என்று பாடினார்.

    இப்போது கேள்வியே இது தான். நிலைத்த உயிர்கள் நில்லாத இந்த உலகில் தம் பெயரை நிலைக்கச் செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? பெயரோ தோன்றி நின்று அழியும் உடலுக்கு உரியது.

    இப்போது மீண்டும் சித்தாந்தம் கூறுவதற்கு வருவோம். அது மூன்று பொருள்கள் என்றும் உள்ள பொருள்கள் என்கிறது. ‘பதியினைப்  போல், பசு, பாசம் அநாதி’ என்பது திருமூலர் கூறும் வாக்கு. திருமூலர் பாடிய திருமந்திரம் சித்தாந்தக் கருத்துக்களையே மூலமாகக் கொண்டு பரப்புவது. பதி = இறைவன்; பசு = உயிர்; பாசம் = மாயை. இவை மூன்றும் என்றும் உள்ள பொருள்கள்.

     இம்மூன்றும் அநாதி என்று கூறிய திருமூலரே இறைவனை “முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையாக” இருக்கின்றான் என்று பாடி இருக்கிறார். அதனால் தான் ‘என்றும் உள தென்றமிழ்’ என்று உலகம் தமிழை அடையாளம் கண்டிருக்கிறது. ஆக, இறைவன் அநாதி என்பதாலும், இறைவனே தமிழோசையாக இருப்பதாலும், தமிழும் அநாதி; அதாவது என்றும் உள்ள மொழி.

     ஆகவே, என்றும் உள்ள உயிர் தோன்றி நின்று அழிகிற உடலின் துணைக்கொண்டு என்றும் உள்ள இறைவனுடன் இரண்டறக் கலந்து நிலைப்பது போல, தோன்றி நின்று அழியும் ஓர் உடலின் பெயரை என்றும் உள்ள தென்தமிழில் இரண்டறக் கலந்துவிட்டால் அந்தப் பெயர் நிலைத்து விடும்.

      இந்த நுட்பத்தை உணர்ந்ததால் தான் முன்னாளில் மன்னர்கள் எல்லாம் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்துப் புலவர்களால் தமிழ்ப் பாடல்களில் இடம் பிடிப்பதற்காக புலவர்களைப் பரிசில் கொடுத்து ஆதரித்தார்கள். அதனால் தான் ஒரு மன்னன் இந்தப் போரில் நான் வெற்றி பெறாவிட்டால் புலவர்கள் என்னைப் பாடாது விடுவார்களாக என்று சூளுரைத்ததாக புறநானூற்றில் ஒரு பாடல் (புறம் – 72) வருகிறது.

      ஒரு முறை ஔவையாரை ஒருவன் தன்னைப் பாடுமாறு கேட்டான். பாடலில் இடம் பெறுவது அவ்வளவு எளிதா? உன்னைப் பாடும்படி நீ என்ன செய்து விட்டாய் என்று பாடினார்.

   “மூவர் கோவையும் மூவிளங் கோவையும்

   பாடிய என்றன் பனுவல் வாயால்

   என்னையும் பாடுக என்றனை எங்ஙனம்

   பாடுதும். . .  ”

என்று அவர் பாட்டு செல்கிறது. பாட்டின் சிறப்பு என்ன என்றால் யாரிடம் ஔவையார் அப்படிச் சினந்து பாடினார் என்று அவன் பெயரை அந்தப் பாட்டில் இடம் பெறச் செய்யாமலே பாடினார். அதனால் இன்று வரை அப்படி ஔவையாரிடம் திட்டு வாங்கினவன் யார் என்று தெரியாமலே போயிற்று. திட்டித் தமிழில் பாடினாலும் அவன் பெயர் நின்று விடும் என்பது ஒன்று; ஒருவனை இழித்து அவனுக்கு எதிராக நின்று விடக் கூடாது என்று அவன் பால் கொண்ட கருணை ஒரு புறம் என்பது மற்றொன்று.

      ஆக, தமிழ்ப் பாட்டில் இடம் பெற்றால் தன்பெயர் நிலைத்து நிற்கும் என்று பலர் அலையாய் அலைந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இப்படித் தான் பிற்காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. மதுரையில் மிகப் புகழ் பெற்ற புலவர் மருதனார் என்ற பெயரில் விளங்கினார். அங்கேயே மிகப் புகழ் பெற்ற அரசர்க்கும், அவர் உறவினர்களுக்கும் மருத்துவம் செய்கின்ற சொக்கலிங்கம் என்ற வைத்தியரும் இருந்தார். வைத்தியருக்குப் புலவரிடம் ஒரு பாடலில் தம் பெயர் இடம் பெறப் பெறவேண்டும் என்ற ஆவல். அது நிறைவேறாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார் புலவர். ஆனால் புலவர்க்கு ஒரு முறை கடுமையான நோய் தாக்கிய சூழலை வைத்தியர் பயன்படுத்திக் கொண்டார். ஏறத்தாழ மருத்துவர் உதவியினால் செத்துப் பிழைத்த ஏழைப் புலவர் மருத்துவருக்கு என்ன பணம் கொடுப்பது என்று திணறினார். மருத்துவர், ‘பணம் வேண்டாம்; என்னைப் பற்றிப் பாடுங்கள் போதும்’ என்றார். மருத்துவர் சொக்கலிங்கம் வீரபத்திரன் என்பவருடைய மகன். புலவர் உடனே இவ்வெண்பாவில் அதை அமைத்து இப்படிப் பாடினார்:

     மிக்கமது ரைச்சிவனும் வீரபத்தி ரன்சுதனும்

     சொக்கர் இருவரெனவே தோன்றினார் – அக்கோன்

     பிறவாமல் காப்பான் பிறந்தவரை மீண்டும்

     இறவாமல் காப்பான் இவன்.

       என்ன அற்புதமான பாட்டு! அந்தச் சொக்கலிங்க மருத்துவர் இப் பாட்டால் நிலைத்து இன்றும் பேசப்படுகிறார். எழுதி வைத்த சொத்து கூட இப்படி தொடராது இல்லையா! இது தான் தமிழ்ப் பாட்டின் சிரஞ்சீவித் தன்மை!

     இவ்வாறு தமிழ்ப்பாட்டில் – அதாவது குறிப்பிட்ட ஒரு புலவரின் தமிழ்ப்பாட்டில் – இடம் பெற வேண்டும் என்று முருகப்பெருமானே தவித்துத் திரிந்தது தான் பொய்யாமொழிப் புலவர் புராணம்! இதனால் அந்தப் புலவரும் நிலைத்தார்; தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் தமிழ்த்தொடர்பும் விருப்பமும் நிலைத்து நின்றது. இனி, பொய்யா மொழிப்புலவரின் வரலாற்றைப் பார்ப்போம்!

     பொய்யாமொழிப் புலவரின் ஆசிரியர் தம் மாணவரைப் புகழ்ந்து பாடிய பாடல் ஒன்றிலிருந்து அவரது ஊர் செங்காட்டங் கோட்டத் துறையூர் என்று தெரிய வருகிறது. பாடல் வருமாறு:

      பொதியில் அகத்தியனாய் பொய்யா மொழியாய்

      சிதைவில் புலவர் சிகையாய் – துதிபெருகு

      செங்காட்டங் கோட்டத் துறையூ ரெனுந்தலத்துத்

      தங்காட்டங் கொண்டிருப்பாய் தான்.

    பொய்யா மொழியின் ஊர் செங்காட்டங் கோட்டத் துறையூர் என்று தேனூராரும் சேய்த்தொண்டர் புராணத்தில் கூறுகிறார்.

     அந்த ஊர்ப் பகுதியினை ஆளும் அரசனின் சேனாபதியின் பெயர் காளிங்கராயன். அவன் போரின் தொடர்புக்கேற்ப முரடனாய் இருந்தான். பொய்யாமொழியின் ஆசிரியர்க்கு உரிய சோளக் கொல்லை ஒன்று இருந்தது. அதனைக் கால் நடைகள் மேய்ந்துவிடா வண்ணம் ஆசிரியரின் மாணவர்கள் முறையமைத்துக் காவலில் ஈடுபடுத்தப்பட்டனர். அன்று அது பொய்யாமொழியின் முறை. கொல்லையில் காவல் காத்த பொய்யாமொழியார் சற்று அசந்து உறங்கிவிட்டார். அந்த நேரம் பார்த்து காளிங்கராயனின் குதிரை கொல்லையில் வந்து சோளப் பயிர்களைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தது. சிறுவராகிய பொய்யாமொழியார்க்கு அந்த முரட்டுக் குதிரை அடங்கவில்லை. செய்வதறியாது புலம்பிய பொய்யாமொழியார் அந்தக் கொல்லை நடுவே இருந்த காளி கோயிலுக்குச் சென்று முறையிட்டு அழுதார். முன்னை நல்வினை திரண்ட காரணத்தால் காளி காட்சியளித்து பொய்யாமொழியார் நாவில் சூலத்தால் எழுதி அளவிறந்த தமிழாற்றலைப் பரிமாற்றம் செய்தாள்.

    அவ்வளவு தான்! காளியை வணங்கி உடனே பொய்யாமொழியார் வீறுடன் ஒரு வெண்பாவைப் பாடினார். அது வருமாறு:

          “வாய்த்த வயிரபுர மாகாளி யம்மையே

          ஆய்த்த அருகாம் அணிவயலில் – காய்த்த

          கதிரைமா ளத்தின்ற காளிங்க ராயன்

          குதிரைமா ளக்கொண்டு போ.”

     இப்படி அவர் பாடியவுடனே குதிரை உடனே கீழே மடிந்து விழுந்து மடிந்து போயிற்று. செய்தி சில மணி நேரத்தில் ஆசிரியர்க்கும் போயிற்று. அவர் பதைத்துப் போனார். சோளக் கொல்லைக்கு ஓடி வந்தார். குதிரை மாண்டு கீழே கிடப்பதைப் பார்த்தார். ‘ஐயோ! செய்தி அறிந்தால் அந்த முரட்டுக் காளிங்கராயன் தன் கொல்லையையும், தன் மாணவர்களையும், தன்னையும் தீயிட்டு அழித்து விடுவானே என்று பதைபதைத்துக் கொண்டிருக்கும் போதே காளிங்கராயன் அவ்விடத்திற்கு வந்து விட்டான்.

     ஆசிரியரின் அச்சத்தைக் கண்ட பொய்யாமொழியார் அவரை அஞ்சற்க என்று ஆறுதல் கூறி முன் பாடிய அந்த வெண்பாவையே சற்று மாற்றிப் பாடினார்.

          “வாய்த்த வயிரபுர மாகாளி யம்மையே

          ஆய்த்த அருகாம் அணிவயலில் – காய்த்த

          கதிரைமா ளத்தின்ற காளிங்க ராயன்

          குதிரைமீ ளக்கொண்டு வா.”

     அவ்வளவு தான்! குதிரை ஏதோ துயிலில் இருந்து எழுந்தது போல் உயிர் பெற்று எழுந்து நின்றது. பார்த்தவர் அனைவரும் அதிசயித்தனர். பொய்யாமொழிச் சிறுவர்க்குக் காளிங்கராயன் சிறந்த தந்தப்பல்லக்கும் தண்டிகையும் பலபரிசுகளையும் கொடுத்து சிறப்பு செய்தான். பொய்யாமொழியாரின் புகழ் தமிழ் உலகெங்கணும் பரவியது.

    பொய்யாமொழியாரின் புகழ் கேட்ட ஒரு முருகனடியார் அவரை அணுகி அவர் தம் திருவாயால் தனக்குகந்த முருகப்பெருமானைப் புகழ்ந்து ஒரு துதிநூல் செய்து தந்து தமக்கு உதவ வேண்டும் என்று பணிந்து கேட்டார். ஏதோ ஒரு முந்தை வினையால் பொய்யாமொழியாரின் சிந்தை திருகியது. உருகி முருகனைப் பெருகப் பாட வேண்டியவர் தாம் சிவனைத் தவிர வேறு யாரையும் பாடுவதில்லை என்றார். அம் முருகனடியார் மனமுருக மீண்டும் இறைஞ்சி வேண்டினார். “ஐயா! கோழியைப் பாடும் வாயால் அதன் குஞ்சைப் பாடுவதில்லை” என்று வீம்புடன் உரைத்தார். சேய்த்தொண்டர் புராணம் இது பற்றிக் கூறும் பாடல்களைப் பார்ப்போம்.

     கொழுமதி அணையும் வேணிக் கோழிசீர் பாடும் வாய்அம்

     முழுமுதல் அருளும் குஞ்சாம் முருகனைப் பாடா தென்ன

     வழுவறு பெரியார் ஈதென் வறட்டுவா தெனவ ருந்தி

     அழுதுதாம் வழிபட் டேத்தும் அமலனை இறைஞ்சிக் கூறும்.

     என்னினி அறைவ துன்னை இகழ்ந்துரை பகர்ந்த தல்லால்

     நின்னையும் நின்னில் வேறில் நின்மல னையும்வெவ் வேறென்

     றுன்னிய புலவர் உண்மாசு ஒழித்தொளி யுறநல் காயேல்

     பன்னிரு கரத்தண் ணால்நின் பரத்துவத் திழுக்கு றாதோ.

       அந்த முருகனடியார் மனம் வெதும்பினார். முருகப் பெருமானே!; நீ வேறு; சிவன் வேறா? இப்படி நினைப்பது அறியாமை அல்லவா? இருவரும் ஒருவரே என்று கந்தபுராணமும் கற்றறிந்தோரும் கூறும் கருத்தல்லவா? இதை உணராத பொய்யாமொழியாரின் உள்மாசு ஒழிவது எப்போது? முருகப் பெருமானே! இவர் உள்ளத்தில் விரையில் ஒளியேற்றுவாயாக! உன்னுடைய முழுமுதற்றன்மைக்கு இழுக்கு நேரலாமா? இவ்வாறெல்லாம் அந்த முருகனடியார் உருகி வேண்டினார். முருகன் முறுவல் பூத்து காத்திரு என்று சொல்லாமல் சொன்னான்.

       பொய்யாமொழியார் வேறு ஒரு கவலையில் மூழ்கினார். சிவபெருமான் சங்கம் வைத்து வளர்த்த தமிழுக்கு இன்று சங்கம் இல்லையே! கடைச் சங்கமான மூன்றாவது சங்கத்திற்குப் பின் காலத்தாக்கத்தால் தமிழ்ச் சங்கம் தொடரவில்லையே! நான்காவதாக ஒரு தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து விட வேண்டும் என்று ஏங்கினார். இதை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றிட வேண்டும் என்று மதுரைக்குப் புறப்பட்டார். இவரது காலம் 13-ஆம் நூற்றாண்டு என்று வரலாற்றாசிரியர் புகழ் பெற்ற T.V.சதாசிவ பண்டாரத்தார் நிறுவி இருக்கிறார். எனவே அக்காலத்தில் ஆண்ட பாண்டியன் அநேகமாக முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி.1216 முதல் 1238 வரை) என்பவனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

      பொய்யாமொழியார் மதுரையை நோக்கிச் செல்லும் போது ஓர் ஊரில் இரவு தங்க வேண்டி வந்தது. நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். ஊரின் ஒதுக்குப் புறமாயிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். ஒரு பெண் கதவைத் திறந்தும் திறவாதும் உள்ள நிலையில் தான் குருடி என்றும், தன்னுடன் உடன்பிறந்த அக்கையும் அம்மாவும் பாட்டியும் இருப்பதாகவும், அவர்களும் அரைக்குருடு என்றும் கூறி கதவை அடைக்க முற்பட்டாள். உடனே பொய்யாமொழியார், அச்சகோதரிகளின் பெயர் கேட்டு, ஒரு வெண்பாவைப் பாடினார்:

        கூத்தாள் விழிகளிரு கூர்வேலாம் கூத்தாள்தன்

        மூத்தாள் விழிகள் முழுநீலம் – மூத்தாள்தன்

        ஆத்தாள் விழிகள் அரவிந்தம்; ஆத்தாள்தன்

        ஆத்தாள் விழிகளிரண் டம்பு.

      உடனே அந்த நால்வருக்கும் கண்பார்வை திரும்ப மகிழ்ச்சிக் கடலில் திளைத்து பொய்யாமொழியாரை உள்ளழைத்து ஆதரித்தனர். சில நாட்கள் கழித்து தம் நோக்கப் படி  பொய்யாமொழியார் மதுரை நோக்கிப் புறப்பட்டார்.

      அங்கே பாண்டியன் பொய்யாமொழிப் புலவரை புலவர் என்ற காரணத்தால் வாவேற்றான்; பரிசில் கொடுத்தனுப்ப முயன்றான்.

      பொய்யாமொழியார் பரிசிலை மறுத்து தாம் வந்த நோக்கத்தை எடுத்தியம்பினார். உடனே பாண்டியன் தமிழ்ச் சங்கத்தை மீண்டும் தொடங்க வேண்டுமானால் சங்கப் புலவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமே என்றான். உடனே பொய்யாமொழியார் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கப் புலவர் மண்டபத்திற்குப் பாண்டியன் அவரை அழைத்துச் சென்றான். அங்கே கடைச் சங்கப் புலவர்கள் 49 பேருக்கும் சிலைகள் உள்ளன. பாண்டியன் இவர்கள் தம் இசைவைத் தெவிரித்தால் தமிழ்ச்சங்கத்தை மீண்டும் தொடங்கலாம் என்றான். பொய்யாமொழியார் உடனே இந்த வெண்பாவைப் பாடினார்:

    “உங்களிலே யானொருவன் ஒவ்வுவனோ ஒவ்வேனோ

    திங்கள் குலனறியச் செப்புங்கள் – சங்கத்தீர்

    பாடுகின்ற பாடலுக்கென் பன்னூலும் ஒக்குமோ

    ஏடெழுதார் ஏழெழுவீர் இன்று.”

     இவ்வெண்பாவைப் புலவர் பாடியதும் ஓர் அதிசயம் நடந்தது. ஆம்! சங்கப் புலவர் மண்டபத்தில் இருந்த 49 சிலைகளும் தலையசைத்துப் பழைய நிலைக்குத் திரும்பின. அதிர்ந்து போனான் பாண்டியன்! பொய்யாமொழியாரின் தமிழ் அருளாற்றல் உடையது என்பதை உணர்ந்தான்.

     உடனே அவருக்கு வேண்டிய சிறப்புகளைச் செய்து அவரைப் பணிந்து அவன் அன்றிருந்த சங்கடமான அரசியல் சூழலை எடுத்துக் கூறி சில நாள் பொறுக்கச் சொல்லி அவரை அரச விருந்தினர் மாளிகையில் தங்கச் செய்து விருந்தயரச் செய்தான்.

     இப்படியே சில நாள்கள் கழிந்தன. காலையும் மாலையும் விதவிதமான விருந்துணவுகள்; விரிவான சிறப்பு ஏற்பாடுகள்.

     இதற்கிடையில் ஒரு நாள் சிறப்புகளைச் செய்ய வந்த ஓர் அரச அதிகாரி பொய்யாமொழியார் உலாவிக் கொண்டிருந்த போது ‘புலவரே!’ என்று அவரது கவனத்தைக் கவர அழைத்தார். திடுக்கிட்டுத் திரும்பிய பொய்யாமொழியார், ‘என்னையா புலவர் என்று அழைத்தீர்!’ என்று கேட்டார். ஒரு வேளை இன்னும் வேறு ஏதாவது சிறப்பு அடைமொழிகளைக் கூறி அழைத்திருக்க வேண்டுமோ என்று பயந்து போன அந்த அதிகாரி, ‘ஆம்! அடியேன் ஏதாவது தவறாக அழைத்து விட்டேனா?’ என்று இழுத்த குரலில் இறைஞ்சினார்.

    ‘தவறு தான் செய்து விட்டீர்! அரும்பெரும் புலவர் பலர் தமிழ் வளர்த்த இந்த மதுரையில் என்னையும் புலவர் என்று அழைத்தது தவறு தானே’ என்று கூறி இப்பாடலைப் பாடினார்.

        ‘அறமுரைத் தானும் புலவன்முப் பாலின்

        திறமுரைத் தானும் புலவன் – குறுமுனி

        தானும் புலவன் தரணி பொறுக்குமோ

        யானும் புலவன் எனில்.’

     ‘அடடா! என்ன அடக்கம்! சிலைகளையும் தலையசைக்கப் பாடும் வல்லமை படைத்த புலவர் இவர்! தம்மைப் புலவர் என்று அழைக்காதீர் என்று அடக்கமாகக் கூறுகிறார். இன்று இலக்கணம் கூட அறியாத சில கற்றுக்குட்டிப் புலவர்கள் காசு கொடுத்து கவிச்சக்கரவர்த்தி என்று அவர்களே நகரெங்கும் பதாகைகளை அமைக்கிறார்கள் என்னே உலகம்!’ என்று அந்த அதிகாரி வியந்து பொய்யாமொழியாரைப் பாராட்டிச் சென்றார்.

    இந்தப் பாராட்டைப் பொருட்படுத்தாத பொய்யாமொழியார் அந்த அதிகாரியிடம், ‘உங்கள் அரசனிடம் சென்று சொல்லுங்கள்! இந்த விருந்தயர்தல் எனக்கு உவர்த்துவிட்டது. இனியும் தமிழ்ச்சங்கம் தொடங்கும் பணியில் கவனம் செலுத்தாது நாட்களைக் கடத்தினால் தலையசைத்த சிலைகளுக்கு விலை கொடுக்க வேண்டி நேர்ந்தாலும் வியப்பில்லை!’

     அந்த அதிகாரி நடுங்கிப் போனார். செய்தி அரசனுக்கு எட்டியது. பாண்டியன் உறுதிச் சுற்றத்தைக் கூட்டி கருத்து கேட்டான். “நாட்டில் அரசியல் நிலைமை மோசமாக இருக்கிறது. நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து நாம் சோழர்களுக்குத் திறை செலுத்திக் கொண்டிருக்கிறோம். இப்போது சோழ அரசை ஆண்டு வரும் மூன்றாம் குலோத்துங்கன் மகன் மூன்றாம் இராசராச சோழன் கை வலுவிழந்து கொண்டிருக்கிறது என்று ஒற்றர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இச்சூழலைப் பயன்படுத்தி சோழநாட்டின் மீது படையெடுத்து வென்று திறை செலுத்தும் மானக் கேட்டினை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது. இந்நிலையில் அருளாற்றல் படைத்த பொய்யாமொழியார் தமிழ்ச்சங்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறார். அவரைப் பகைத்துக் கொள்ளவும் இயலாது. என்ன செய்யலாம்?” என்று பாண்டியன் கருத்து கேட்டான். அவர்கள் கூறியபடி அரசன் ஓர் உத்தி செய்து பொய்யாமொழியாரை அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்திற்குச் சென்றான்.

      ‘புலவர் பெருமானே! தங்கள் வேண்டுகோளை ஏற்று சங்கப் புலவர்கள் எல்லாம் தலையசைத்துத் தமிழ் சங்கத்தை மீண்டும் தொடங்க இசைவு கொடுத்து விட்டனர். ஆனால் தமிழ்ச் சங்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது சங்கப்பலகை. அஃதில்லாமல் தமிழ்ச் சங்கத்தை மீண்டும் தொடங்க இயலாது என்பதைத் தாங்களும் அறிவீர்கள். எனவே இக்குளத்தில் உள்ளதாகக் கருதப்படும் பொற்றாமரை எழுந்து அது அந்தச் சங்கப் பலகையைக் காட்டி உதவுமானால் நாம் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி விடலாம். இதில் தங்கள் கருத்து என்னவென்று அறிய விரும்புகிறேன்’ என்று மிக விநயமாக பொய்யாமொழியார் முன் ஒரு சிக்கலை எடுத்து வைத்தான் பாண்டியன். அவனும், அவனுக்கு இந்த உத்தியைக் கூறி உதவிய அவனது உறுதிச் சுற்றமும், ”பொற்றாமரையாவது, பலகையாவது, அவை எங்கே வரப் போகின்றன? இதைக் கொண்டு புலவரிடம் சில காலம் கடத்தலாம்” என்று எண்ணினர்.

      பொய்யாமொழியார் பாண்டியனும் அவனது பரிவாரங்களும் ஆகிய இருவோரின் எண்ணம் எப்படி ஓடுகிறது என்று அறிந்து அதனால் சிறிதும் கலகலத்துப் போகாமல் உடனே இந்த வெண்பாவைப் பாடினார்:

      பூவேந்தர் முன்போல் புரப்பார் இலையெனினும்

      பாவேந்தர் உண்டென்னும் பான்மையால் – கோவேந்தர்

      மாறன் அறிய மதுரா புரித்தமிழோர்

      வீறணையே சற்றே மித.

       உடனே பொற்றாமரைக் குளத்தில் மூழ்கிக் கிடந்ததாகக் கருதப்பட்ட சங்கப் பலகை மேலெழுந்து பலரும் காண மிதந்தது. அரசன் உள்பட அனைவரது கண்களும் வியப்பில் விரிந்தன.

       நடவாதது என்று நினைத்தது நடந்தே விட்டது. பாண்டியன் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தான்.

       அந்த நேரம் ஓர் ஒற்றன் தலை தெறிக்க ஓடி வந்து ஒரு செய்தி சொன்னான்: ‘அரசே! திறை கட்டாத காரணத்தால் சினந்து சோழ மன்னன் பாண்டி நாட்டின் மீது படையெடுக்கத் திட்டமிட்டுப் படைகளை ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்கின்றான்.’ ஒற்றன் அரசனிடம் மெல்லச் சொன்ன செய்தியை அரசன் புலவரிடம் புலப்படுத்தச் செய்தான். அதனால் தமிழ்ச் சங்கம் தொடங்குவதற்கு மேலும் காலம் நீட்டிப்பதன் இன்றியமையாமையைக் கூறிப் புலவரை அமைதிப் படுத்தினான்.

                                               தொடரும். . .

 

Top