You are here
Home > ஆசிரியர் மேசை > அறமும் காவலும்

அறமும் காவலும்

ஆசிரியர் மேசையிலிருந்து . . .

அறமும் காவலும் – “புதிய தலைமுறை” தொலைக்காட்சி விவாதம்.

aramum

               29/10/2013 ஆம் நாளன்று ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்து அறநிலையத்துறை தொடர்பாக சட்டமன்றத்தில் ஒரு சட்ட திருத்த முன்வடிவு முன் வைக்கப்பட்டிருக்கிறது. அது பற்றிய ஒரு விவாதம் ‘நேர்பட பேசு’ என்கிற நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது. அதில் தாங்கள் கலந்து கொண்டு கருத்தளிக்க முடியுமா என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இரவு 9-00 மணி நிகழ்ச்சிக்கு மாலை 4-00 மணி அளவில் வந்த திடீர் அழைப்பு இது. அடியேன் கலந்து கொள்வதாக ஒப்புக் கொண்டேன்.

      விவாதத்தில் அடியேன், பேராசிரியர் சுபவீரபாண்டியன், பேராசிரியர் அருணன், வழக்கறிஞரும் விஸ்வ இந்து பரீட்சத்தின் மாநிலப் பொறுப்பாளரான திரு.சீனிவாசன் அவர்களும் கலந்து கொண்டோம். ஒரு மணி நேர நிகழ்ச்சி இது.

      விவாதப் பொருளாக இந்து அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத் திருத்த முன் வடிவின் சாராம்சம் இது தான்: அதாவது இந்துக் கோயில்களில் அறங்காவலராக பணியமர்த்தல் செய்யப்படுபவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது தான்.

      இந்தத் திருத்தம் ஏன் கொண்டு வரப்படுகிறது? இதன் நோக்கம் என்ன என்று இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சட்ட மன்றத்தில் வைத்துள்ள அறிக்கை வருமாறு:

நோக்கம் – காரண விளக்கவுரை

     1) 1959 – ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 22 / 1959) இன் 26-ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவு சமய நிறுவனம் எதற்கும் அறங்காவலராக பணியமர்த்தம் செய்வதற்குரிய மற்றும் இருப்பதற்குரிய தகுதியின்மைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மேற் சொன்ன 26-ஆம் பிரிவின் (1) – ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின்மைகள் அந்தக் குறிப்பிட்ட சமய நிறுவனத்திற்குத் தொடர்புடைய தகுதியின்மைகளாக இருந்தால் மட்டும் அந்தச் சமய நிறுவனம் ஒன்றிற்கு அறங்காவலராக பணியமர்த்தம் செய்வதற்கும், இருப்பதற்கும் அது ஒரு தடையாக இருக்கும். தற்பொழுது அரசு ஒரு நபர் ஒருவரை சமய நிறுவனத்திற்கு மற்றும் நிலைக்கொடை எதற்கும் அறங்காவலராக பணியமர்த்தம் செய்வதற்கு, தொடர்ந்து இருப்பதற்கு, தடையாக உள்ள குறித்த சில தகுதியின்மைகளைக் குறிப்பிடுவதென முடிவு செய்துள்ளது மற்றும் குறித்த சில தகுதியின்மைகள் நபர் ஒருவரை சமய நிறுவனத்தின் மற்றும் நிலைக்கொடை எதற்கும் அறங்காவலராக பணியமர்த்தம் செய்தல் மற்றும் இருத்தல் தொடர்பானதாக அந்தத் தகுதியின்மை இருந்தால் தடை செய்யக் கூடியதாய் இருக்கும். அதற்கிணங்கிய வகையில் அது தமிழ்நாடு சட்டம் 22 / 1959 சட்டத்தின் 26-ஆம் பிரிவின் (1) – ஆம் உட்பிரிவை திருத்துவதென முடிவு செய்துள்ளது.

    2) 22 / 1959 தமிழ்நாடு சட்டத்தின் 53-ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் தகுதியின்மைகள் இருப்பதன் பேரில் சமய நிறுவனம் ஒன்றின் அறங்காவலர்களை இடைநீக்கம், விலக்கம் மற்றும் முழுவதுமாக நீக்கி விடுவதற்காக வகை செய்கிறது. இறுதியாக தமிழ்நாடு சட்டம் 22 / 1959 –ன் 26-ஆம் பிரிவிற்கு கருதப்பட்ட திருத்தத்தின் பேரில் அது மேலும் 22 /1959 தமிழ்நாடு சட்டத்தின் 53-ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவின் (e), (i). மற்றும் (j) கூறுகளைத் திருத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

    3) அதன் பின்பு 22 / 1959 தமிழ்நாடு சட்டத்தின் 26-ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின்மை அறங்காவலராக பணியமர்த்தம் செய்வதற்காக மற்றும் அறங்காவலராக இருப்பதற்குத் தகுதியின்மைகளாக இருக்கின்றன. அது சமய நிறுவனம் எதற்கும் அறங்காவலராக இருப்பதற்கும் மற்றும் பணியமர்த்தம் செய்வதற்கும் குறித்த சில தகுதிகளை குறிப்பிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்கிய வகையில், அது சமய நிறுவனம் எதற்கும் அறங்காவலராக பணியமர்த்தம் செய்வதற்காக அல்லது அறங்காவலராக இருப்பதற்கான தகுதிகளைக் குறிப்பிடும் புதிய பிரிவு ஒன்றினைப் புகுத்துவதென முடிவு செய்திருக்கிறது.

    4) இச் சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் அளிப்பதற்கு விழைகிறது.

                                            பூ.செந்தூர்ப் பாண்டியன்

                        இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்.

       மேலே கண்ட நோக்க விளக்கவுரையைப் படிப்பவர்கள் அடியேனை மன்னிக்க வேண்டும், கொஞ்சம் தலை சுற்றல் ஏற்படும். ‘சட்டம் ஓர் இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் விளக்கு’ என்ற வாசகம் பலரும் அறிந்தது. சட்டத்தை விடுங்கள்! சட்ட வாசகம் ஒரு ஜாங்கிரி சுற்றல்; அதில் பிழைக்கத் தெரிந்த வக்கீல் வேண்டியதைப் பிட்டுக் கொள்வார் என்பது தான் உண்மை.

       வக்கீல்கள் எப்படியோ போகட்டும்; நாம் நமக்கு வேண்டியதை இதில் பிட்டுக் கொள்வோம்.

1)    புதியதாக புகுத்தப்படும் பிரிவு 25-A. அதன் உட்பிரிவுகள் வருமாறு:

        அறங்காவலரின் தகுதிகள்:

a)   அவர் கடவுள் நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும்.

b)   அவர் நன்னடத்தையும், நற்பெயரையும் குறிப்பிட்ட வட்டாரத்தில் மதிப்பும் உடையவராக இருக்க வேண்டும்.

c)   அறங்காவலர் பணிகளைச் செய்வதற்குப் போதுமான நேரம் உடையவராக இருக்க வேண்டும்.

d)   இப்பணிக்கு ஏற்ற பிற சிறப்புகளையும் உடையவராக இருக்க வேண்டும்.

     2)  திருத்தப்படும் 26-ஆம் பிரிவின் உட்பிரிவு (1) – தகுதியின்மைகள்

a)   அவர் இந்து சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாதவராய் இருத்தல்.

        ஏனையவை ஏற்கெனவே உள்ளவை அப்படியே.

3)     53-ஆம் பிரிவில் செய்யப்படும் திருத்தங்கள்.

      இவை புகுத்தப்படும் புதிய 25-A பிரிவுக்கும், திருத்தப்படும் 26-ஆம் பிரிவின் உட்பிரிவின் (1) ஆகியவற்றிற்கும் ஏற்ப 53-ம் பிரிவில் சொற்களைத் திருத்தியமைத்தல்

     இவற்றில் மூன்றாவதாகக் குறிப்பிட்டுள்ள 53-ம் பிரிவின் சொல் திருத்தங்கள் இங்கே விவாதத்திற்குத் தேவையில்லை. அவை சட்டத் திருத்தத்திற்குத் தேவை. அடுத்து முதலாவது 25-A பிரிவு என புதிதாக சேர்க்கப்படும் தகுதிகளில் (b), (c), (d) ஆகியவை பற்றி எவரும் குறை கூற முடியாது. அவற்றை யாரும் விவாதப் பொருளாக ஆக்கவில்லை. என்றால், இப்போது விவாதத்திற்கு உள்ளானவை 25-A பிரிவின் (a) உட்பிரிவும், 26-ஆம் பிரிவின் உட்பிரிவு (1) a-வில் குறிப்பிட்டதும் தான் விவாதத்திற்கு உள்ளானவை.

     அதாவது அறங்காவலராகப் பணியமர்த்துவதற்கான தகுதி, அவர் கடவுள் நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும் என்பதும், தகுதியின்மை, அவர் இந்து சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாதவராய் இருப்பது என்பதும் தான்.

     இது குறித்த விவாதத்தை மேற் கூறிய ‘நேர்பட பேசு’ நிகழ்ச்சியில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு.வேங்கட பிரகாஷ் அவர்கள் தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட நால்வரையும் இது பற்றிய கருத்தைக் கேட்டார். பேராசிரியர் சுப வீரபாண்டியன், பேராசிரியர் அருணன், அடியேன் ஆகிய மூவரும் அறங்காவலர் பொறுப்பின் எல்லை கோயில் வருமானத்தையும் செலவுகளையும் மேற்பார்வை செய்யும் நிதி நிர்வாகத்தோடு மட்டுமே தொடர்புடையது என்பதால் அவர் கடவுள் நம்பிக்கை உடையவரா இல்லையா என்பதற்கும் அவரது பணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவர் நேர்மையானவராகவும், நன்னடத்தை உடையவராகவும் இருந்தால் போதும் என்றும் அதனால் இந்தச் சட்டத் திருத்த முன்வடிவு தேவையற்றது என்ற கருத்தை அவரவர் நோக்கிலும் பாணியிலும் எடுத்து வைத்தோம். கோயில் கணக்குகளை ஆடிட் செய்யும் ஆடிட்டருக்குத் தெய்வ நம்பிக்கை இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா என்றும் கேட்டோம். திரு.சீனிவாசன் மட்டும் அறங்காவலர் கடவுள் நம்பிக்கை உடையவராய் இருப்பது மிகவும் அவசியம் என்றும் அதனால் இந்தச் சட்டத்திருத்த முன் வடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றும் வாதிட்டார்.

        இதையொட்டி பின் வந்த சுற்றுகளில் விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அதன் முழு விவரத்தையும் இங்கே விவரிக்க ஏடு இடந் தராது. எனவே இதழ் வாசகர்களின் வசதிக்காக அந்த நிகழ்ச்சியின் ஒளிப் பதிவை இதனுடன் இணைத்திருக்கிறோம். அன்பர்கள் அதனை முழுமையாகப் பார்த்துக் கொள்ளலாம். எனினும், இது பற்றி அடியேன் விவாதத்தில் கூறிய கருத்துக்களையும், அங்கு நேரக் கட்டுப்பாட்டால் சொல்லாமல் விடுபட்ட கருத்துக்களையும் இங்கு தொகுத்து அளிக்கிறேன்.

        இன்று உள்ள சட்டப்படி கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கோயில்களில் அறங்காவலர்களாக பணியாற்றலாம்; பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். காரணம் இன்றுள்ள அறங்காவலர்களில் பெரும்பாலானோர் பரம்பரை அறங்காவலர்கள். அவர்களிலும் பாதிக்கு மேல் அரசியல் சார்புடையவர்கள். ஏதோ ஒரு வகையில் ஒரு கட்சியின் சார்புடையவர்களாகவும், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாநகராட்சி, வட்டார ஆட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் தாம். வேறு சிலர் கட்சி சார்பில்லாமல் பரம்பரை செல்வாக்கு காரணமாக அறங்காவலராகப் பணியாற்றுபவர்கள். பரம்பரை அறங்காவலர்கள் இல்லாத அல்லது அமையாத இடங்களில் அரசாங்கம் புதிதாக அறங்காவலர்களை நியமிக்கிறது. அதுவும் அநேகமாக ஆளுங் கட்சியின் சார்பானவர்களாகவே அமைந்து விடுகிறது.

     சட்டப்படி பார்த்தோமானால் பரம்பரை அறங்காவலர்களை நடைமுறையில் உள்ள வேறு சட்ட விதிகளின் படி பதவி நீக்கம் செய்ய முடியாவிட்டால் அவர்கள் பதவியில் நீடிப்பதை அரசு ஒன்றும் செய்ய முடியாது. குறிப்பாக அப்படிப்பட்ட அறங்காவலர்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான கட்சிச் சார்புடையவர்களாக இருக்கையில் அரசுக்கு சங்கடமாய் இருக்கிறது. எனவே கூடுதலாக இப்படி ஒரு விதியைச் சேர்த்து இதில் அவர் சிக்கினால் பதவி நீக்கம் செய்து விடலாம் என்பது சட்டத் திருத்த முன்வடிவின் உள்நோக்கமாக இருக்கலாம். சட்டத் திருத்த முன்வடிவில் நோக்கம் கூறப்பட்டுள்ளது; உள்நோக்கம் கூறப்படவில்லை. கூறினால் அது உள்நோக்கமாகாது அல்லவா?

      எப்படி இத்திருத்தம் உள்நோக்கமுடையது என்று கூறுகிறீர்கள் என்று கேள்வி எழலாம். இது வரை இருந்துள்ள சட்டத்தில் அறங்காவலர்களின் கடவுள் நம்பிக்கை பற்றிய பேச்சே இல்லை. இதற்கு முன்னிருந்த நாத்திக ஆட்சியானாலும், ஆத்திக ஆட்சி ஆனாலும் அறங்காவலர் பொறுப்பு என்பதில் வெறும் நீதி மற்றும் நிதி நிர்வாகமாக மட்டுமே சரியாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதே தவிர கடவுள் நம்பிக்கைக்கும் அப்பொறுப்பிற்கும் ஒட்டுறவு செய்யப்படவில்லை. அப்படி இருக்க இப்போது திடீரென அறங்காவலர்க்குக் கடவுள் நம்பிக்கை வேண்டும் என்பது எப்படி முளைத்தது? எனவே வேண்டாதவர்களைத் தூக்குவதற்கு இவ்விதியைப் பயன்படுத்தப் போகிறோம் என்று நேரடியாகச் சொல்ல முடியாததால் அது உள்நோக்கமாயிற்று.

      நோக்க விளக்கவுரையில் அறங்காவலர் பணிக்குக் கடவுள் நம்பிக்கை ஏன் அவசியம் என்று ஒரு காரணம் கூட காட்டப்படாததால் வெளிப்படையாகக் கூற இயலாத ஓர் உள்நோக்கம் அதில் ஒளிந்திருக்கிறது என்பது உறுதி ஆகிறது.

      விவாதத்தில் தெய்வ நம்பிக்கை உடைய தாங்கள் கோயில் அறங்காவலர் பணிக்குத் தெய்வ நம்பிக்கை என்பது அவசியமில்லை என்று கூறுவது விநோதமாக இருக்கிறது என்று அடியேனைப் பார்த்து ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது.

      ஒருவரது நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் அவரவரது தனிப்பட்ட கருத்தும் உரிமையும் ஆகும். ஆனால் எனது நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மையை மற்றொருவர் மீது திணிப்பது தான் தவறு. பண்டைய நாட்களில் இருந்த தமிழ் மன்னர்கள் எல்லாம் இதற்கு வழி காட்டி இருக்கிறார்கள். இராஜராஜ சோழன் பௌத்தன் அல்லன்; சமணன் அல்லன்; நாத்திகன் அல்லன்; ஆனால் பெளத்தர்களுக்கு நாகப்பட்டினத்தில் ஒரு விஹாரை கட்டிக்கொள்ள காத்துவர உதவினான்; சமணர்களுக்குப் பல இடங்களில் பள்ளிகள் அமைத்துக் கொள்ள நடத்தி வர உதவினான் என்றெல்லாம் கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. ஆனால் தன்னுடைய நம்பிக்கைக்கு ஏற்ப தஞ்ஞையில் பெரிய கோயில் கட்டி தனது மற்றும் தன் குடும்பத்தின் சொந்த நகைகளைக் கோயில் பராமரிப்புக்கு எழுதி வைத்தான். இவன் மட்டுமல்ல; இன்னும் பல தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகள் இதற்குச் சான்று பகர்கின்றன. வேண்டியது சமயப்பொறையே தவிர சமய நம்பிக்கை என்பது அவரவர் சொந்தக் கருத்து.

     உதாரணத்திற்கு என்று எடுத்துக் கொள்வோமானால் எத்தனையோ நாத்திகர்கள் குடியரசிலேயே எடுத்துக் காட்டலாம். காமராஜர் ஆத்திகர் என்று சொல்லிவிட முடியாது. அவரது காலத்தில் கோயில்கள் நன்கு பராமரிக்கப்படவில்லையா? புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், பேரறிஞர் அண்ணா இவர்கள் எல்லாம் கூட கடவுள் நம்பிக்கையைப் போற்றியவர்கள் என்று கூறி விட முடியாது. அவர்கள் எல்லாம் முதலமைச்சராய் இந்துக் கோயில்களைப் பராமரிக்கவில்லையா?

     அவ்வளவு ஏன் கடவுள் நம்பிக்கையைக் காலமெல்லாம் கடிந்து ஒதுக்கிய பெரியார் கூட தனது ஊரான ஈரோட்டில் தனது உயிர் மூச்சு உள்ள வரை ஒரு விநாயகர் கோயிலுக்குப் பரம்பரை அறங்காவலராக சிறந்த பணியாற்றினார் என்று ஆவணச் சான்றுகள் கூறுகின்றன. அந்த ஊரில் இருந்த பிராமணர்களே அவர் ஒரு சிறந்த அறங்காவலராய் பணியாற்றினார் என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க.விடம் கூறி இருக்கின்றனர்.

     ஒரு பெரியார் மாதிரி எல்லோரும் பொறுப்புடன் அறங்காவலராகப் பணியாற்றுவார்கள் என்பது என்ன நிச்சயம் என்று விவாதத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அப்படியானால் நாத்திகர்கள் அனைவரும் பொறுப்பும் பண்பும் இல்லாதவர்கள் என்று கூறுவதாய், அவர்கள் அநீதி இழைப்பதாய் ஆகாதா என்று அடியேன் பதில் கேள்வியை முன் வைத்தேன். அதோடு ஆத்திகர்கள் எல்லோரும் நீதியுடன் நடந்து கொள்வார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? இந்து அறநிலையத்துறையின் முதல் ஆணையராகப் பொறுப்பேற்று நீண்டகால பணி அனுபவம் வாய்ந்த C.M. இராமச்சந்திரன் செட்டியார் அவர்கள் தமது பணிக்காலத்தில் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்டு நடந்த கொள்ளைகளை எல்லாம் தொகுத்து ‘கோயில் பெருச்சாளிகள்’ என்றே ஒரு நூல் எழுதி இருக்கிறார். அண்மையில் காஞ்சி மச்சேசர் கோயில் அர்ச்சகர் தேவநாதன் கோயிலின் உள்ளேயே நடத்திய பாலியல் அட்டூழியங்கள் அனைவரும் அறிந்ததே எனவே நாத்திகர்கள் அனைவரும் பொறுப்பும் பண்பும் இல்லாதவர்கள் என்றும் ஆத்திகர்கள் அனைவரும் பொறுப்பும் பண்பும் உள்ளவர்கள் என்றும் தீர்த்துக் கூறி விட முடியாது.

       ஓர் அறங்காவலரின் வேலை நிதிநிர்வாகத்தோடு முடிந்து விடுகிறது. அதற்கு வேண்டிய அடிப்படை நேர்மை தான். சமய நம்பிக்கையின்மையை அவர் கோயில் நடைமுறையில் திணித்து அதன் செயல்பாடுகளை முடக்க முடியாது. அப்படி முடக்கினால் அவரைப் பதவி நீக்கம் செய்யலாம் என்ற விதி ஏற்கெனவே சட்டத்தில் உள்ளது. எனவே கடவுள் நம்பிக்கை பற்றிய இந்தச் சட்டத் திருத்தம் தேவையற்றது.

       இன்னும் எண்ணியுள்ள இச்சட்டத் திருத்தத்தில் சட்ட நுட்பமான ஓட்டைகள் உள்ளன. தகுதி இது என்று விதிப்பதில் வறிதே கடவுள் நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு கடவுள் நம்பிக்கையுடைய வேற்று மதத்தவரை அறங்காவலராக நியமிக்கலாமா?

       இல்லை, இது இந்து சமய அறநிலையங்கள் பற்றியது என்பதால் வேற்று மதக் கடவுள் நம்பிக்கை இதில் பொருந்தாது என்று கூறலாம். அப்படியானால் தகுதியின்மையைக் குறிக்கும் விதியில் மட்டும் இந்து சமயக் கடவுளை ஏற்றுக் கொள்ளாதவராய் இருத்தல் என்று ஏன் குறிக்கப்பட்டது? தகுதி விதி மற்றும் தகுதியின்மை விதி இரண்டிற்குமிடையே முரண்பாடு இருக்குமானால் அந்தச் சட்டம் எப்படி செல்லும்?

       சரி, இந்து சமயக் கடவுள் நம்பிக்கை என்றே எடுத்துக் கொள்வோம். சைவ சமயம், வைணவ சமயம் ஆகிய இரண்டும் இந்து சமயம் என்றே கொள்ளப்படுகிறது. ஒரு சைவர் வைணவக் கடவுளை ஏற்றுக் கொள்ளாதவராய் இருப்பது பெரும்பாலும் நடைமுறை. அதே போல் ஒரு வைணவர் சைவக் கடவுளை ஏற்றுக் கொள்ளாதவராய் இருப்பது பெரும்பாலும் நடைமுறை. இருவரும் சட்டத்தின் முன் இந்துக்களே! இவர்கள் முன் இந்த திருத்த விதிகள் செயலிழந்து போகுமே!

      எனவே ஒவ்வொரு கோயிலையும் வகைப்படுத்தியோ அல்லது அந்தந்தக் கோயிற் கடவுளரை நம்புபவராக இருத்தல் தகுதி என்றும் அப்படி அல்லாதவர் தகுதி இழந்தவர் என்றும் அல்லவா விதிகளைத் திருத்த வேண்டும்? அப்படி அல்லாத போது இந்த விதிகள் நீதிமன்றத்தில் செல்லாதல்லவா போகும்?

      இதற்கு மேல் இன்னொரு விஷயமும் விவாதத்தில் விவாதிக்கப்பட்டது. அதை அடியேன் விவாதத்தில் விரிவாக விளக்கினேன். அதாவது இங்கே நிர்வாகத்திற்கு மட்டுமே பொறுப்பான அறங்காவலர் நியமனம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் 1971-ல் அர்ச்சகர் நியமனம் பற்றிய வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் அர்ச்சகர் பணி நியமனமே மத மற்றும் வகுப்பு சார்பற்றது (Secular) என்று தீர்ப்பளித்து விட்டது. எந்தக் கோயில் அர்ச்சகர்ப் பணியோ அதற்குரிய பயிற்சி பெற்றிருந்தால் போதும் என்று தீர்ப்பு விளக்கமளித்துள்ளது. இது 2002-ல் உச்ச நீதிமன்றத்தால் மற்றொரு தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டது. அர்ச்சகர் நியமனமே செக்யூலர் என்றால் வழிபாடுகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத அறங்காவலர் நியமனத்தைப் பற்றிய பேச்சே எழாது இல்லையா? அறங்காவலர்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும் என்று திருத்தியமைக்கும் இவ்விதி நீதிமன்றத்தில் செல்லுமா என்பதும் ஐயப்பாடுடையதே!

        இறுதியாக கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் யாவரும் ஆகம வழிபாட்டு முறைகளை அறிந்தவர்கள் என்றும் ஆகம விதிகளின் படி தகுதி உள்ளவர்கள் என்றும் உறுதியாக கூற முடியாது.

        பெரும்பாலான அர்ச்சகர்களுக்கு அதாவது ஏறத்தாழ 90 சதவிகிதம் அர்ச்சகர்களுக்கு ஆகம முறைகளும் தெரியவில்லை, சமஸ்கிருதமும் தெரியவில்லை, ஆகமவிதிகளின் படி கோயிற்பூசை செய்வதற்குரிய தகுதிப்பாடுகளும் இல்லை என்று C.P.இராமசாமி ஐயர் அவர்கள் அரசுக்கு அளித்த அறிக்கையும், நீதிபதி A.K.இராஜன் குழு அரசுக்கு அளித்த அறிக்கையும் என வெவ்வேறு காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கைகளும் கூறுகின்றன.

         எனவே இன்றைய நிலையில் அறங்காவலர் பற்றி ஏற்கெனவே உள்ள விதிகளே போதுமானவை என்று அவற்றைத் திருத்துவதை விடுத்து அர்ச்சகர்களின் தகுதிகளை மேம்படுத்தல், அவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளித்து, அவர்களது வாழ்வாதாரம் மற்றும் வருவாய் நிலைகளை மேம்படுத்தினால் கோயில் நடைமுறைகள் மேம்பாடடையும் என்பதே அவசர அவசியம் என்று எடுத்துக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம். உரியவர்கள் கவனத்திற்கு கடவுள் கொண்டு செல்வாராக!


Top