You are here
Home > செய்திகள் > மந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம்

மந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம்

ஓலை எழுதுதல்

மந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம்

பிள்ளையார்ப்பித்தன் இரா.உமாபதி

ஓலை எழுதுதல்முத்தமிழ் அடைவை முற்படு கிரியில்
முற்பட வெழுதிய முதல்வ!
சத்திநி பாதம் மலபரி பாகம்
இருவினை ஒப்பினைத் தந்து
தத்துவக் கூட்டம் அனைத்தையுங் கடக்கத்
தமியனேற்(கு) அருள்வையோ! ஞான
வித்தக மூர்த்தி! விமல! மந்தார
விநாயக! விரைகழல் சரணே!                 1

 

ஓங்கார கணபதிஇருந்தமிழ் மொழிக்கே உரிய ஓங்கார
எழுத்(து)அதன் வரிவடி வோடு
பெருங்குரல் ஓசைப் பிளிறலுங் கொண்ட
பிராணியாம் மதகரி முகத்தாய்!
கரைந்துநெஞ்(சு) உருகி உனைத்தொழா(து) உவரி
கடைந்திட வந்தநஞ்(சு) அருந்தி
விருந்(து) அமிழ்(து) அளித்தோன் மைந்த! மந்தார
விநாயக! விரைகழல் சரணே!            2

 

காவிரி கணபதிநற்றமிழ் முனிவன் அகத்தியன் கரக
நதிப்புனல் கவிழ்த்திட வெள்ளை
ஒற்றை மருப்புத் தொப்பை தும்பிக்கை
ஒளித்(து) ஒரு காக்கையாய் ஆனாய்!
பற்றிடும் உலகப் பற்றினை விட்(டு) உன்
பதமலர்ப் பற்றிடும் பணியில்
வெற்றியே அருள்வாய்! விமல! மந்தார
விநாயக! விரைகழல் சரணே!          3

 

பைந்தமிழ் மன்னன் பாரியின் மகளிர்
அங்கவை சங்கவைக்(கு) ஆகச்
செந்தமிழ் வெண்பா ஔவையார் பாடத்
திருமண ஓலைகள் எழுதும்
தந்தம் ஒன்(று) உடையாய்! புந்தியில் தெளிவு
தனுவினில் வலிமை தந்(து) அருள்வாய்!
விந்தியம் செற்றோன் பணியும் மந்தார
விநாயக! விரைகழல் சரணே!           4

 

பழந்தமிழ்க் கச்சி மகேந்திர வர்மப்
பல்லவன் கொல்களி(று) ஏவச்
செழுந்தமிழ் மொழியில் சுண்ணவெண் சந்தத்
திருப்பதி கத்தினில் உனையும்
அழுந்திடப் பாடும் வியன்திரு நாவுக்(கு)
அரசரை யானைதான் வணங்கி
விழுந்(து) எழுந்(து) ஓடச் செய்த மந்தார
விநாயக! விரைகழல் சரணே!            5

 

சொற்றமிழ் பாடித் திருமுது குன்றத்
தோழன்கண் நம்பியா ரூரர்
பெற்றபொன் அனைத்தும் மாற்(று) உரைத்திட்ட
பிள்ளையார் எனும்பெயர் பெற்றாய்!
சிற்றறி வோடு சிறுதொழில் செய்யும்
சிறியனேற்(கு) அருள்வையோ! விறகு
விற்றவர் மைந்த! விமல! மந்தார
விநாயக! விரைகழல் சரணே!            6

 

வண்டமிழ்ச் செந்நா உடையநற் புலவன்
மழிசையில் இசைபட வந்தோன்
ஒண்டமிழ் வெண்பா ஒன்றினைச் சொல்ல
ஊரைவிட்(டு) ஏகிய பின்னர்த்
தண்டமிழ்ப் பாமற்(று) ஒன்றினைச் சொல்ல
சடுதியில் திரும்பிடுங் கச்சி
விண்டுவின் மருக! விமல! மந்தார
விநாயக! விரைகழல் சரணே!             7

 

தீந்தமிழ்ப் பதிகம் பாடிய மூவர்
திருமுறை வெளிக்கொணர்ந் திடவே
வேந்தன் இராச ராசன் நாரையூர்
நம்பியாண் டார்நம்பி வேண்ட
மோந்திடும் ஒற்றுப் புரிந்து நல் அடங்கல்
முறையருள் மூவறு கணங்கள்
வேந்தனே! சேந்தன் தமைய! மந்தார
விநாயக! விரைகழல் சரணே!              8

 

இன்றமிழ்ச் செய்யுள் ஆக விளங்க
இணையிலாப் பெரிய புராணம்
குன்றையம் பதிவாழ் சேக்கிழார்க்(கு) அருளைக்
கொடுத்தநற் குஞ்சரக் கன்றே!
வென்றிலேன் புலனை ஆயினும் எனைக்கை
விட்டிடேல் பிள்ளையா ரப்பா!
மின்றிகழ் சித்தி நாத! மந்தார
விநாயக! விரைகழல் சரணே!          9

அருந்தமிழ் மொழியில் விநாயகர் அகவல்
ஔவையார் இயற்றிநற் பூசைப்
புரிந்திட சேரன் நம்பியா ரூரன்
பொருப்பினை அடைவதன் முன்னம்
பெருந்துதிக் கையால் கைலையில் அந்தப்
பிராட்டியை நொடியினில் சேர்த்தாய்!
விரும்பினேன் யானும்! விமல! மந்தார
விநாயக! விரைகழல் சரணே!         10ஔவையார் கயிலை

 

 

 

 

பிள்ளையார்ப்பித்தன் இரா.உமாபதி

Top