You are here
Home > செய்திகள் > கூத்தில் நடந்த கூத்து

கூத்தில் நடந்த கூத்து

“எடுத்த காரியங்களில் எல்லாம் அர்ப்பணிப்புடன் பணி ஆற்ற வேண்டும்.!” என்று பெரியோர் கூறுவது மரபு. இந்தப் பொன்மொழியை எழுதி தன் அறையின் நுழைவுக் கதவில் பதித்து வைத்திருந்தார் ஓர் அரசு அதிகாரி. அவரிடம் ஒருவர் மனுவோடு முறையிட்டார்: “ரொம்ப நாளா அலையறேங்க!”

அதிகாரி சொன்னார்: “நுழைவுக் கதவை மறுபடியும் போய் பார்த்துவிட்டு வா! “மனுதாரர் பார்த்து விட்டு வந்து அந்த பொன்மொழியைச் சொன்னார்.

அப்புறம்! ‘அர்ப்பணிப்பு’ இல்லாம வேலை எப்படி நடக்கும்? என்று நமட்டுச் சிரிப்போடு கேட்டார் அந்த அதிகாரி.

அர்ப்பணிப்பு என்பது அந்த அதிகாரி செய்ய வேண்டியது இல்லையாம்! ‘அர்ப்பணிப்பு’ மனுதாரர் அதிகாரிக்கு செய்ய வேண்டியதாம்! இது எப்படி இருக்கிறது?

கொடுப்பவனைப் புகழலாம்; எடுப்பவனை உலகம் புகழுமா? எவன் ஒருவன் புகழைக்கூட எதிர்பாராமல் கொடுக்கிறானோ அப்படிப்பட்ட “ஈவார் மேல் நிற்கும் புகழ்” என்றார் வள்ளுவர். புகழுக்காக ஈவது என்பது புகழைத் தராது; மாறாக பழியைத்தரும் என்பது வள்ளுவர் கருத்து.

இது மற்றவர்களை விடக் கலைஞர்களுக்கு மிகவும் பொருந்தும். கலையால் மகிழ்ந்து மக்கள் கலைஞனுக்கு சன்மானம் தரவேண்டும்; மாறாகக் கலைஞன் தான் பேர்பெற வேண்டும் என்பதற்காக மக்களுக்குப் பணம் கொடுத்து அழைத்து அரங்காடினால் அது இழுக்கு.

பழங்காலத்தில் பாடிப் பிழைத்த பாணர் பலர் தமிழ் நாட்டில் இருந்தனர். அவர்களிடையே ஒரு மரபு உண்டு. அதாவது ஒரு பாணன் தன் ஊரை விட்டுப் புறப்பட்டு வேறு ஊருக்குப் போகும் போது உள்ளூரில் மற்றவர்களிடம் தன் மூட்டையைப் பிரித்துக் காட்டிவிட்டுத் தான் போக வேண்டுமாம். அதில் அன்றாடத் தேவைக்கான தட்டு முட்டுச் சாமான்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பணமும் இருக்கக் கூடாதாம். காரணம், நீ காசை நம்பிப் போகிறாயே தவிர உன் கலையை நம்பிப் போகவில்லை. அப்படிப் பட்ட கலைஞனுக்கு இந்த ஊரில் இடம் கிடையாது என்று ஊரில் இருந்து விலக்கி வைத்து விடுவார்களாம்!

இன்று பல நடிகர்கள் தங்கள் சொந்தக் காசைப் போட்டு திரைப்படத்தில் நுழைகிறார்கள். அதிலும் பயனில்லை என்றால் சொந்தச் சொத்தை விற்று தாமே படம் எடுத்து ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். இது எங்கே? பழந்தமிழ்ப் பாணனின் பெருமை எங்கே?

ஆமாம்! பெரிசா பேச வந்துட்டீங்க! சிவபெருமானே கூத்தர் தானே! அவர் கதை தெரியுமா உங்களுக்கு? என்று ஒரு புலவர் பாடுகிறார். அதில் அவர் காட்டுகிற காட்சியைப் பார்ப்போம்!

இடம் – திருவொற்றியூர் தேரோடும் வீதி. அதிலே தியாகராசப் பெருமான் திருக்கோலத்தில் சிவபெருமான் பவனி வருகிறார். அற்புதமான அலங்காரம்! சப்பரத்தை அடியார்கள் அசைத்து அசைத்து ஆட்டி ஆட்டிக் கொண்டு வருகிறார்கள். நடனம் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சி! தரிசித்தவர்களுக்கு எல்லாம் உடலே பூரித்து உள்ளமும் பூரித்தது. உள்ளம் ஏன் பூரித்தது? தரிசித்தவர்களுக்கு எல்லாம் தியாகராசப் பெருமான் அவரவர் வேண்டியதை உடனே தருவதாக கண்சிமிட்டி தன் அனுமதியைத் தெரிவித்து விட்டான். அது மட்டுமன்றி கேட்டதோடு கேளாத வீடு பேறு என்னும் முத்தித் திருவையும் அளித்து நிலவுலகிலேயே எல்லாம் செய்யவல்ல சீவன் முத்தியையும் கொடுத்து விட்டானாம்! அதனால் தான் உள்ளம் பூரித்ததாம்!

இப்போது புலவர் கேட்டகிறார்: கலைஞர்கள் தம் கலைத் திறமையை எல்லாம் காட்டி கூத்து ஆடி பார்வையாளர்களை மகிழ்விப்பார்கள். அதனால் மகிழ்ந்த பார்வையாளர்கள் கூத்தாடிய கலைஞனுக்குச் சன்மானம் அளிப்பது தான் உலக இயற்கை. இங்கே கூத்தில் நடப்பது வேறு மாதிரி ஒரு கூத்தா இருக்கிறதே! பார்வையாளர்களாகிய நாங்கள் தியாகரின் கூத்துக்குப் பணம் கொடுப்பது போக தியாகர் தம் கூத்தைப் பார்த்தவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து கேளாத சீவன் முத்தியையும் கொடுக்கிறாரே! ஆடியன்சுக்கு (audience) லஞ்சம் கொடுப்பது 21 ஆம் நூற்றாண்டு நடிகர்களுக்கு அல்லவா வழக்கம்! என்னவோ, இது நல்ல கூத்து! இப்படி அந்தப் புலவர் பாடிய பாடலைப் பாருங்கள்! பெற்ற அருளை என்ன நயம்பட புரிய வைக்கிறார்!

மாத்தவர்க்கு எல்லாம் உடலம் புளகிப்பவி
     நோதமாய் மகிழ ஆடும்
கூத்தவர்க்குப் பார்த்தவர்கள் கொடுப்ப தல்லால்
     பார்த்தவர்க்கே கொடுப்பார் உண்டோ?
நீத்தவர்களே கலந்து ஒற்றியூர்த்
     தியாகேசர் நிருத்தம் கண்ணால்
பார்த்தவருக்குக் கேட்டதன்றிக் கிடையாத
     பரகதியும் பாலித் தாரே!

இவண்

மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top