You are here
Home > செய்திகள் > மாசிவனிரவு – சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை

மாசிவனிரவு – சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை

சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை

 இதோ வந்துவிட்டது! சிவராத்திரி என்கிற சிவனிரவு. இது மாதச் சிவனிரவல்ல. ஆண்டுச் சிவனிரவு; மாசிவனிரவு. இதன் சிறப்பும் உண்மைப் பெருளும் ஏற்கெனவே தெய்வமுரசு இதழில் பலமுறை வெளிவந்து விட்டது என்பதை வாசகர்கள் அறிவர். எனவே, அவற்றை மனத்தில் இருத்தி சிவனிரவில் செய்ய வேண்டிய ஒன்றை இங்கே சிந்திப்போம்!

மாசிவனிரவு பெரும் பேரொடுக்கத்தை, லயத்தைக் குறித்தது. அங்கே செய்ய வேண்டியது சிவநாம செபம் அன்றி வேறு ஒன்றும் கிடையாது. இதை நன்கு சிந்தித்து கற்பனைக் களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நூல் சிவநாம மகிமை. வடிவில் சிறியது; முடிவில் பெரியது. பத்தே பாடல்கள்.

இதனை அன்பர்கள் ஆர அமர ஓதி சிவனிரவை வழிபட உதவியாக பொருளுடன் அந்நூல் கீழே தரப்படுகிறது.

 

வேதம் ஆகமம் வேறும் பலப்பல
ஓதி நாளும் உளந்தடு மாறன்மின்
சோதி காணிருள் போலத் தொலைந்திடும்
தீதெலாமும் சிவசிவ என்மினே
                                                       1

(இ-ன்) வேதம் ஆகமம் என்றும் வேறுள்ள புராணம், உபநிடதம் என்று நாளும் ஓதி, ஐயோ! இவற்றின் கரை காணுவது எந்நாள் என்று உள்ளத்திலே தடுமாற்றம் கொள்ளுதல் வேண்டாம். சிவ சிவ என்று இருமுறை செபியுங்கள். அதுவே அதிசூக்கும ஐந்தெழுத்து. அதை ஓதினால் ஒளியைக் கண்ட இருள் அக்கணமே தொலைந்தோடுவது போல உமக்கு வரும் தீமையெல்லாம் ஓடிப்போகும்.

 

புல்லராயினும் போதக ராயினும்
சொல்வ ராயிற் சுருதி விதித்திடும்
நல்ல வாகும் நவையென் றகற்றியும்
செல்லல் தீரும் சிவசிவ என்மினே.
                                                           2

(இ-ன்) புன்மையே வடிவெடுத்தவரானாலும் பிறர்க்கு உபதேசம் செய்து தான் கடைப்பிடிக்காத பேதையாயினும் சிவசிவ என்று சொல்லி விட்டால் தமிழ் வேங்கள் கூறும் நல்லன எல்லாம் கூடும்;  குற்றங்கள் என்பனவற்றை அகற்றி துன்பங்களை எல்லாம் ஓடச் செய்துவிடும்.

 

நாக்கி னானும் நயனங்க ளானுமிவ்
வாக்கை யானும் அருஞ்செவி யானுநம்
மூக்கி னானும் முயங்கிய தீவினை
தீர்க்க லாகும் சிவசிவ என்மினே
                                                  3

(இ-ன்) நாக்கினால், கண்களால், இந்த உடம்பால், செவியால், மூக்கினால் இவ்வாறு பலவகையாலும் தீவினையை திளைத்துச் செய்திட அத்தீவினைப் பயன் சிவசிவ என்று செபிப்பதால் ஒழியும்.

 

சாந்தி ராயணம் ஆதி தவத்தி னால்
வாய்ந்த மேனி வருந்த இறந்திடாப்
போந்த பாதக மேனும் பொருக்கெனத்
தீந்து போகும் சிவசிவ என்மினே
                                                                4

(இ-ன்) சாந்திராயணம் முதலிய தவச் செயல்களால் சரீரத்தை வாட்டினாலும், அழியாது தொடரும் பாதகம் எதுவாயினும் சிவசிவ என்று செபிப்பதால் பொருக்கென்று உடனே தீர்ந்து போகும்.

 

வில்லி தென்ன விளங்குந் திருநுதல்
வல்லி பங்கன் மலரடி காணிய
கல்வி நல்கும் கருத்து மகிழ்வுறும்
செல்வம் நல்கும் சிவசிவ என்மினே
                                      5

(இ-ன்) புருவம் ஒருவில் என்பது போல விளங்கும் நெற்றியை உடைய உமையம்மையின் கூறு இடப்பாகத்தில் உள்ள சிவபெருமானின் திருவடிகளைக் கண்டவனுக்கு எப்படி எல்லாம் வந்து சேருமோ அது போல, சிவசிவ என்று செபித்தவனுக்கு மிகச் சீரிய கல்வியும் கருதியதைக் கருதியவாறே அளித்து மகிழ்ச்சியைத் தவறாது நல்கும் செல்வமும் வந்து சேரும். எனவே சிவசிவ என்று  செபியுங்கள்!

 

தீய நாளொடு கோளின் செயிர்தபும்
நோய கன்றிடும் நூறெனக் கூறிய
ஆயுள் பல்கும் அறம்வளர்ந் தோங்குறும்
தீய தீரும் சிவசிவ என்மினே!                                                            6

(இ-ன்)சிவசிவ என்று செபித்தால் தீமையைத் தரும் நட்சத்திரங்களோடு தீமையைத் தரும் கோள்களும் ஆகிய இவ்விரண்டும் தரும் தீங்குகள் அகலும்; பிறவி என்னும் பெருநோய் உட்பட எல்லா நோயும் அகன்று போம்; நூறு வயது என்று கூறும் வண்ணம் ஆயுளும் பெருகும்; அறம் வளர்ந்து அதன் நற்பலன்கள் ஓங்கும். எவ்வகையில் தீங்குகள் வந்தாலும் அவை உடனே தொலைந்து போகும். எனவே சிவசிவ என்று செபியுங்கள்!

 

வருந்தி ஆற்றி வளர்த்த கதிர்த்தனை
பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே
விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின்
திரிந்து காப்பன் சிவசிவ என்மினே!
                                                         7

(இ-ன்) ஒரு வறிய உழவன் மிக வருந்தி முயற்சிகள் எடுத்து வேளாண்மை செய்து பயிர் வளர்த்து அது முதிர்ந்து கதிர் விடும் போது அதனை நாடோறும் பின்தொடர்ந்து எப்படி அக்கதிர்களுக்கு ஒரு தீங்கும் வராமல் காப்பாற்றுவானோ அது போல சிவசிவ என்று ஒருவன் செபித்துவிட்டால் விரிந்த சடைமுடியில் வெண்திங்களை சூடிய சிவபெருமான் அவனைப் பின்தொடர்ந்து திரிந்து திரிந்து காப்பாற்றுவான். எனவே சிவசிவ என்று செபியுங்கள்.

 

முந்தையோர் சொல்மொழிந்து சிவனென
நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும்
வந்த தீவினை மாற்றுவன் ஆதலால்
சிந்தை யோடு சிவசிவ என்மினே.
                                                             8

(இ-ன்) முன்னால் ஓர் கொடிய சொல்லாகச் சிவன் என்ற சொல்லை (சிசின தேவன்) என்று நிந்தையாகச் சொன்னாலும் அதனால் வரும் தீவினைப் பலன்களை அடைந்து ஆற்றாது அவதியுற்றாலும் ஒரு முறை சிவசிவ என்று செபித்தால் அத்துன்பத்தை மாற்றி அருள்புரிவான். எனவே சிவசிவ என்று செபியுங்கள்.

 

நீச ரேனும் ஈசன் நிகழ்த்தில் வான்
ஈச ரேனும் சிவசிவ என்கிலார்
நீசரே என்று இயம்புறு நின்றுஉப
தேச நூல்கள் சிவசிவ என்மினே.
                                        9

(இ-ன்) புலையராயினும் சிவசிவ என்று செபிப்பவர் சிவபெருமானால் தேவாதிபர் ஆவர். தேவாதிபராயினும் சிவசிவ என்று செபியாதவர் புலையராவர். இவ்வாறு உபதேச நூல்கள் இயம்புகின்றன. இதனை உணர்ந்தாயினும் சிவசிவ என்று செபியுங்கள்!

எண்ணி நெஞ்சிற் சிவசிவ என்பவர்
வண்ண மென்பதம் கிட்டி வணங்கவம்
உண்ண டுங்குவன் ஒண்திறல் கூற்றுவன்
திண்ணம் ஈது சிவசிவ என்மினே.
                                                              10

(இ-ன்) யார் உண்மையான உருக்கத்தைக் கொண்டு நெஞ்சம் உருகி சிவசிவ என்று செபிக்கிறார்களோ, அவர்களைக் கிட்ட நெருங்கி – தாக்கிப்பிடிக்க அல்ல- அவர்களின் பதத்தைத் தொட்டு வணங்கக் கூட இயமன் உள்ளம் நடுங்குவன். எனவே அவர்க்கு என்றும் எமபயம் இல்லை என்பது திண்ணம். ஆகவே சிவசிவ என்று செபியுங்கள்!

இந்த சிவநாம மகிமையை 16 முறை ஓதி மலர்தூவி சிவலிங்க வழிபாட்டினைச் சிவனிரவில் செய்வார்க்கு மேற்கூறிய எல்லா நற்பலன்களும் வழாமல் வாய்ப்பதோடு பேரா இயற்கைப் பேரின்பமும் பிறவி முடிவில் வாய்க்கும்.

 – சிவசிவ-

–முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல் முருகனார்

Top