You are here
Home > கட்டுரைகள் > சொற்பொழிவில் கேட்ட சிந்தனைத் துளிகள்

சொற்பொழிவில் கேட்ட சிந்தனைத் துளிகள்

சொற்பொழிவில் கேட்ட சிந்தனைத் துளிகள்

செல்லும் அளவு செலுத்துமின் சிந்தனையை

மு.பெ.சத்தியானந்தம்

 

» உலகம் எதனால் வாழ்கிறது?

உலகம் பண்பினால் வாழ்கிறது. அதாவது ஒப்புரவு குடிமை பேணல் மன்னுயிரைத் தன்னுயிர் போல் காத்தல் போன்ற பண்புகளால் வாழ்கிறது.

» உலகத்திற்கு வேறு பெயர் உண்டு தெரியுமா?

உலகத்திற்கு ஞாலம் என்ற பெயர் உண்டு. ஞாலுதல்-தொங்குதல் என்ற பொருள் உண்டு. வான்வெளியில் பூமி தொங்கிக் கொண்டிருக்கின்றது.

» ‘உண்டால் அம்ம உலகம்….’ சங்ககாலப் புலவர் ஒருவர் இப்பாடலைப் பாடியுள்ளார். அதில் புகழ் எனின் உயிரைக் கொடுப்பான் தமிழன். பழி எனின் உலகமே ஈடாகக் கொடுத்தாலும் கொள்ளான். எனவே, தமிழன் பண்போடு வாழ்ந்து வந்துள்ளான் எனத் தெரிகிறது.

» பண்பு என்பது நம் கண்ணுக்குப்  புலப்படாது.

ஆனால் பண்பு பண்பாளர் உருவத்தில் தெரியும்.

» வள்ளலார் தனக்கு இரக்கம் என்ற பண்பு இறைவன் திருவருளால் கிடைக்கப் பெற்றதாகவும், அதனால் இரக்கமும் உயிரும் ஒன்றாகிவிட்டதாகவும் அதனைப் பிரித்தால் தனது உயிரும் பிரியும் என்று கூறுகிறார்.

 

உருவஎன் உயிர்தான் இரக்கந்தான்

ஒன்றதே இரண்டில்லை இரக்கம்

ஒருவில் என்உயிரும் ஒருவும் என்உள்ளத்

தொருவனே நின்பதத் தாணை

 

» தொண்டு என்பதும் ஒரு பண்பு. அத்தொண்டின் உருவம் தான் அப்பர் சுவாமிகள். தொண்டென்னும் பண்பினை அப்பர் சுவாமிகளின் வடிவில் பார்க்கலாம்.

» திருஞான சம்பந்தர் அப்பர் சுவாமிகள் வடிவில் தொண்டைப் பார்த்து தொழுதார் என்று சேக்கிழார் கூறுகிறார். பாடல்:

 

 

 

“கண்ட கவுணியக் கன்றும் கருத்திற்

பரவு மெய்க் காதல்

தொண்டர் திரு வேடம் நேரே

தோன்றிய தென்று தொழுதே

அண்டரும் போற்ற அணைந் தங்

கரசும் எதிர்வந் திறைஞ்ச

மண்டிய ஆர்வம் பெருக மதுர

மொழி அருள் செய்தார்.’’

» அப்பர் சுவாமிகள் தில்லை திருக்கூத்து தரிசனம் கண்டின்புற தில்லை வந்து கொண்டிருந்த பொழுது அங்குள்ள செடி கொடிகள், நெற்பயிர், கரும்பு ஆகிய ஓரறிவு உயிரினங்கள் கூட அப்பரைத் தொழுதனவாம்.

 » மேலும் அப்பர் சுவாமிகள் உயர் தொண்டின் நிலையினைக் கண்டு அவர் திருவடி முன் பணிவொடு தொழுது அவரது நடையொடு புடைசூழ்ந்து இசையோடு ஓசை எழுப்பி அவரை வரவேற்கும் முகமாக குயிலும் ‘அரகர’ என கூவியதாக சேக்கிழார் மிக அழகாக சிறப்பித்துக் கூறுகிறார்.

மேற் கூறியவைகள் அனைத்தும் தெய்வமுரசு ஆசிரியர் அப்பர் சுவாமிகள் அருந்தொண்டு என்ற தலைப்பில் 22.05.2008 ஆம் நாள் அன்று காஞ்சிபுரம் குமர கோட்டத்து முருகன் கோவிலில் சொற்பொழிவு ஆற்றியபோது பேசியவற்றில் இருந்து எடுத்த குறிப்புகள்.

 

Top