உ
முருகா
பொங்கலும் புதுக்கதையும்
– முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
முதலில் பொங்கல் வாழ்த்துக்கள்! ஆமாம்! பொங்கலுக்கு ஏன் ஒருவர்க்கொருவர் வாழ்த்துக் கூறிக்கொள்ள வேண்டும்? ஏனைய பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்தா கூறிக் கொள்கிறோம்? விநாயக சதுர்த்திக்கு வாழ்த்துக்கள்! தைப் பூசத்துக்கு தமிழ் வாழ்த்துக்கள்! இப்படி எல்லாம் ஏன் சொல்லி வாழ்த்துவதில்லை! காரணம்,பொங்கல் வாழ்த்தைக் கூறி எதை எதையோ எழுதி வாழ்த்தட்டை அனுப்புகிறோமே அந்த பழக்கம் மிகத் தொன்மையானது! இதை சங்க இலக்கியப் பழந்தமிழனே நமக்குப் பழக்கிவிட்டான்!
ஐங்குறுநூறு என்று ஒரு சங்க நூல். எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் பொங்கல் வாழ்த்து வருகிறது. பாடலைப் பாருங்கள்.
நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
விளைக வயலே! வருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர் புல்லார்க! பார்ப்பார் ஓதுக!
பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக!
வேந்து பகைதணிக! யாண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசுமுறை செய்க! களவு இல்லாகுக!
நன்றுபெரிது சிறக்க! தீது இல்லாகுக!
மாரி வாய்க்க! வளநனி சிறக்க!
வாழிய நலனே! வாழிய நிலனே!
இப்பாடல் ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்திற்குப்பின் அடுத்து புறநிலை வாழ்த்து என்று ஒரு ஏட்டு சுவடியில் இருந்ததாக ஒரு பழைய பதிப்பு கூறுகிறது.
இதில் பார்ப்பார் என்றது பழங்காலத் தமிழ் பார்பாரை என்க. ஆனால் அப்போதே பார்ப்பார் சிலர் ஓதுவதை விட்டு வீணான பணிகளில் இருந்திருப்பார்கள் போலும்! எனவே அவர்களை ஓதுக என்று பாடல் கட்டளை இடுகிறது.
பாடலில் பொங்கல் என்று வரவில்லை என்றாலும், பொங்கல் அடையாளங்கள் அனைத்தும் விளங்கி வாழ்த்துக் கூறுவதைக் காண்கிறோம். எனவே பொங்கல் வாழ்த்து பழந்தமிழரது என்பது தெளிவாகிறது.
உண்மை இவ்வாறிருக்க, ஒரு நாளிதழில் பொங்கல் உருவான கதை ஒன்று சிற்றறிவுடைய சிறு குழந்தையும் சிரிக்கும் படி வெளியிடப்பட்டுள்ளது. அது அந்த நாளிதழில் வந்தவாறே காண்போம்.
பொங்கல் புராணம்
“மார்கழி மாதத்துப் பனி பொழிகிறது. மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதி. அங்கே நவக்கிரங்கள் ஒன்பது பேரும் எதையோ தேடிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒன்பது பேரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். பிரமன் கொடுத்த சாபம் காரணமாக அவர்களுக்குத் தொழுநோய் ஏற்பட்டிருந்தது. சாப விமோசனம் பெறுவதற்காக சிவாலயத்தை வந்தடைந்தனர்.
முறைப்படி சிவனைத் தொழுது விரதமிருந்து தவம் இயற்றினர். சரியாக 16ஆம் நாள் இறைவனுக்குப் பொங்கல் வைத்து நிவேதனம் செய்து அதைத் தாங்களும் உண்டனர். தொழுநோய் தொலைந்தது. அன்று தைமாதம் முதல்நாள். இறைவனும் காட்சி கொடுத்து அருளினார். அந்தத் தலம் திருமாந்துறை. இதுவே தைப்பொங்கல் விழா உருவான புராண வரலாறாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக திருமாந்துறையில் பொங்கல் திருநாள் அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது”
இந்த புராணக் கதையில் எதுவும் அறிவுக்கு பொருந்தியதாக இல்லை என்பதை யாவரும் ஒப்புகொள்வர். முதலில் எழுதியவர், இது எந்தப் புராணத்தில் வருகிறது என்ற ஆதரத்தையும் காட்டவில்லை. அநேகமாக திருமாந்துறை தல புராணமாக இருக்க வாய்ப்புண்டு.
உலகம் போற்றிய திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலய 4ஆம் மடாதிபதி ஞானியார் சுவாமிகள் 1930களிலேயே தலபுராணங்கள் எல்லாம் அறிவுக்கொவ்வாத புரட்டுப் புனைகதைகள் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார் என்பதை அவரது நூல்களில் காண்கிறோம். அது உண்மை தான் என்பதை மேலே காட்டிய புராணம் வெட்ட வெளிச்சமாக்குகிறது.
கோள்களுக்குத் தொழுநோயாம்! ஒன்றிரண்டிற்கல்ல ஒன்பது கோள்களுக்கும் ஒரே நேரத்தில் தொழுநோயாம்! ஒரு வேளை அவற்றின் நடத்தை சரி இல்லையோ! இவைகள் தாம் நமக்கு ஒரு காலத்தில் பலனளித்தன என்றால் அந்தப் பலன்கள் எப்படி இருக்கும்! சூரியனே அடுப்பு! சூரியன் திருமாந்துறைக்குப் பொங்கல் வைக்க வந்திருந்தால் திருமாந்துறையே சாம்பலாகி இருக்காதா? அதோடு ஒன்பது கோள்களுமே ஒன்று திரண்டால் அண்ட கடாகம் முழுவதும் வெடித்துச் சிதறி அழிந்து இருக்காதா?அப்புறம் எப்படி ஒன்பது கோள்களும், நீங்களும்,நாமும்.?பொய் பேசுபவர்களை “பால் ஊறு தேன்வாய் படிறீஇ” என்று மணிவாசகர் பாடியது போல பொய்யர்க்கும் பொய்கள் ஒன்றைத் தொட்டு ஒன்று ஊறி ஊறி வருமாம். அப்படியல்லவா இருக்கிறது இந்த கதை!
தமிழர் திருநாளாம் பொங்கல் எவ்வளவு காலமாகத் தொன்று தொட்டு உயரிய நோக்கத்தோடு கட்டமைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது! இந்தத் தமிழர் திருநாளை அவர்களிடமிருந்து பிடுங்கி கோள்கள் திருநாள் என ஆக்க இப்புராணப் புரட்டை எழுதியவர்க்கு ஏதோ ஓர் உள்நோக்கம் இருந்திருக்க வேண்டும்!
தமிழர் திருநாளுக்கான காரணங்கள் மூன்று:
1) ஒளியும், வெப்பமும் மழைநீர்க்குக் காரணமும், உலகின் தட்ப வெப்ப பருவமாற்றங்களுக்கும், பயிர்களின் பச்சையத்திற்கும் காரணமாய் உள்ள சூரியனுக்கு முதல் வணக்கம்!
2) பயிர்கள் இன்றி உயிர்கள் வாழா என்பதால் பயிர்களை வித்தி வளர்க்க உதவும் மாடுகளுக்கு அடுத்த வணக்கம்
3) விளைச்சலைக் கொண்டு நெறி முறையாக அமைதியுடன் வாழக் கற்பிக்கும் சான்றோர்களுக்கு அடுத்த வணக்கம். இவையெல்லாம் தமிழன் நன்றிக்கடனாக அமைத்த நற்பண்புக் கொண்டாட்ட விழா! இதனை எவ்வளவு அதல பாதாளத்திற்குத் தள்ளிக் கொச்சைப் படுத்துகிறது மேற்படி புரட்டுக்கதை!
இந்தப் புரட்டுக்களுக்கும் இடையே உண்மையைத் தமிழர்கள் உணர்ந்து பொங்கலைப் புனிதமாகக் கொண்டாட கடவுள் அருள்வானாக!