You are here
Home > கட்டுரைகள் > பியந்தைக் காந்தாரம் – ஓர் ஆய்வு

பியந்தைக் காந்தாரம் – ஓர் ஆய்வு

முருகா

பியந்தைக்காந்தாரம்ஓர்ஆய்வு

செந்தமிழ் வேள்விச்சதுரர்

மு.பெ.சத்திய வேல் முருகனார், B.E., M.A., M.Phil.

தமிழிசைச்சங்கத்தின் தமிழ் இசைக் கல்லூரியும், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும், IMG_20150225_100925செவ்விலக்கியங்களில் காணப்படும் பண்களுக்கான பயிற்சிப் பயிலரங்கத்தில் இன்று காலை பியந்தைக் காந்தாரப் பண் பற்றிய ஆய்வுச் சொற்பொழிவு ஆற்ற அழைக்கப்பட்டதை அரும்பெரும் பேறாகக் கருதுகிறேன்.

 

பியந்தைக்காந்தாரம்அருளரசப்பண் :

பொதுவாக பண் உள்ளுக்குள் என்னென்னவெல்லாம் செய்து கொண்டு வெளிவரும் என்று ஐந்தொகையாம் பஞ்சமரபில் ஒரு செய்யுள் உண்டு. உடம்புக்குள் எட்டு இடங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டு வருமாம், ஆட்டிப் படைப்பதும் எட்டுவிதமாக ஆட்டிப் படைக்குமாம்.

நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உத்டு, பல், தலை ஆகிய எட்டு இடங்களில், எடுத்தல், படுத்தல், நவிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு ஆகிய எட்டு வகையாக தொட்டாடி வரும் என்று பாட்டு கூறுகிறது.

 

பாவோ டணைதல் இசையென்றார் பண்ணென்ற

        தோவாப் பெருந்தானம் எட்டானும்பாவாய்

        எடுத்தல் முதலாய் இருநான்கும் பண்ணில்

        படுத்தமையால் பண்ணென்று பார்.

 

இதில் கூறப்படும் எட்டு உடலுறுப்புகளையும் எல்லாப் பண்களும் தொட்டு வர வேண்டும் என்பதில்லை. ஒவ்வொன்று ஒரு சிலவற்றில் பதிந்து வரும் பண் வகையாகும். ஆனால் இந்த எட்டு உடலுறுப்புகளையும் ஏறிச்சவாரி செய்வது பியந்தைக் காந்தாரப் பண். பியந்தை என்பது முதுகுப் புறத்தில் அமைந்த பிடரி அல்லவா? பண்களிலேயே இதை ஓர் அரசப் பண் என்று கூறலாம்.

பெயர்காரணம்:

இதைப் பாடியவரும் அருளரசாகிய சம்பந்தர் தாம். அதிலும் அருட்புலத்தில் முத்துப் பல்லக்கு, முத்துக் கொடை, முத்துப்பந்தர் ஆகியவற்றைக் கொண்டு முதலரசியற்றியவர் சம்பந்தர் என்று வள்ளலார் இவரை அடையாளம் காட்டுகிறார்.

முத்தியற் சிவிகை இவர்ந்தருள் நெறியின் முதலரசியற்றிய துரையேஎன்று ஆளுடைய பிள்ளை அருள்மாலையில் வள்ளலார் போற்றுகிறார்.

இந்த முதலரசாகிய சம்பந்தர் தன் தந்தையின் முதுகின் மீது ஏறி முதுகரசு செய்து பாடிய பண் அல்லவா பியந்தைக் காந்தாரம்? எனவே இதை அருளரசுப் பண் என்று போற்றுவது பொருந்திய பொருளுடைய மரபு.

பியல் – முதுகின் பின்புறம், அதாவது பிடரி. யாருடைய பிடரி? தந்தையின் பிடரி. பியல் + தந்தை என்பது பியந்தை என்றாயிற்று.

ஞானசம்பந்தர் குழந்தையாக இருந்தபோதே தலங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடினார். ஞானக் குழந்தையின் கால் நோகக் கூடாது என்பதாலும், குழந்தையின் கண்ணுக்கு கோபுரம் முதலாக அனைத்துக் காட்சிகளும் கண்ணுக்கெட்டினால் தானே முழுமையாக அவற்றைக் கருத்தில் பதித்து பாட முடியும் என்பதாலும் சிவபாத இருதயர் சம்பந்தக் குழந்தையைப் பிடரியில் ஏற்றித் தாங்கிச்சென்றார். அது போது சம்பந்தர் இறைவனைக் காந்தாரப் பண்ணில் பாடினார். பியந்தையிலிருந்து பாடிய காந்தாரம் பியந்தை காந்தாரம் ஆயிற்று.

 

இறைவனின்இசைவடிவம்இந்தப்பண்ணே :

 

தமிழில் உயிரெழுத்து, மெய்யெழுத்து என்று இருவகை உண்டு. இரண்டின் முதலெழுத்துமாய் இறைவன் தான் இருக்கிறான் என்று தமிழாகம நூல்களான சித்தாந்த நூல்களும், தமிழ் வேதமான திருமுறைகளும் கூறுகின்றன. உயிரெழுத்தின் முதலெழுத்தான அகரமாய் இறைவன் இருக்கின்றான். உடலுக்குள் உயிருக்குயிராய் உடலை இயக்குபவனும் இறைவனே! எனவே உடலெழுத்தாகிய மெய்யெழுத்தின் முதலெழுத்தான ‘க’ – விலும் இறைவனே இருக்கின்றான். வட்டெழுத்து காலத்திலும், தமிழை அடிப்படையாக கொண்ட மலையாளத்திலும் க என்பதின் வரி வடிவத்தில் (க) சிவலிங்கத்தைக் காணலாம், இலிங்கத்தை தமிழ் இலக்கியங்கள் ‘கந்து’ என்று கூறும். அருமையான ஆண்டவன் கண்ணுக்குப் புலப்பட எடுத்த அருவுருவம் கந்துருவம். இந்த கந்துருவமான இலிங்கத்தையே சிவபிரானாக நாம் வழிபடுகின்றோம். இந்தக் கந்துருவம், கந்திருவம் ஆகி, கந்திருவம் காந்தாரமான இசை வடிவம் பெற்றது என்ற குறிப்பை அப்பர் சுவாமிகள் தருகிறார்.

கண்ணன் காண் கந்திருவம் பாட்டிசையில் காட்டுகின்ற

 ண்ணவன் காண் ண்ணவற்றின் திறலான் காண்

என்பது அப்பர் பெருமானின் அருள்வாக்கு(ஆறாம்திருமுறை; 52-ஆம் பதிகம்; 2-ஆம் பாட்டு)

ஆக, கந்திருவப் பண்ணே காந்தாரம் ஆயிற்று; காந்தாரப் பண்ணே இறைவனின் இசைவடிவமாயிற்று. அதனால் தான் இதை அருளரசப் பண் என்றனர்.

எனவே தான் குழந்தையாய் இருந்த சம்பந்தர் இறைவனின் இசை வடிவம் காந்தாரப் பண் என்பதை உணர்ந்து கோயில் தோறும் சென்று இறைவனை பாடும் போது பலபதிகங்களை காந்தாரப் பண்ணிலேயே பாடினார்.

இப்படி தந்தையின் முதுகின் மேல் அமர்ந்து காந்தாரப் பண்ணில் சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றல்ல; இரண்டல்ல. இரண்டாம் திருமுறையில் 83- ஆம் பதிகத்திலிருந்து 96- ஆம் பதிகம் வரை 14 பதிகங்களை இந்தப் பியந்தைக் காந்தாரப் பண்ணில் பாடி இருக்கிறார்.

இந்தப் பியந்தைக் காந்தாரமே இறைவனின் இசைவடிவம் என்பதால் தான் மதுரையில் நேரக்கூடிய தீங்குகளிலிருந்து தம்மை இறைவன் காப்பாற்ற வேண்டி கோளறு பதிகத்தைப் பாடியபோது சம்பந்தர் பியந்தைக் காந்தாரப் பண்ணிலேயே அதைப் பாடினார்.

காந்தாரமும்பியந்தைக்காந்தாரமும்ஒன்றா, வேறா?

இந்தக் கேள்வி விடைகாண வேண்டிய இன்றியமையாத கேள்வி. ஏனெனில் திருமுறைப் பதிப்புகளில் சில இடங்களில் காந்தாரம் என்றும் சில இடங்களில் பியந்தைக் காந்தாரம் என்றும் பதிப்பித்திருக்கிறார்கள். எனவே இரண்டும் ஒன்றா வேறா என்ற கேள்வி அவசியமாகிறது.

காந்தாரத்தை ஆறு நரம்புப் பண்ணாக பஞ்சமரபு எடுத்துரைக்கிறது.ஆகவே இது பண்ணியல் பட்டியலில் பஞ்சமரபு உரையில் தெய்வசிகாமணி கவுண்டர் பதிப்பில் காணப்படுகிறது. இந்தப் பட்டியலின் இறுதியில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. பண்ணியல் பட்டியல் பஞ்சமரபுப் படி எழுபது பண்ணியல்களைக் குறிப்பிட்டாலும் அதில் பியந்தைக் காந்தாரம் என ஒரு பண்ணியல் குறிப்பிடப்படவில்லை. அதை விளக்குவதாக மேற்படி பட்டியலின் கீழே இவ்வாறு ஒரு குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

இவற்றில் காணாத கொல்லிக் கெளவாணம், பியந்தைக் காந்தாரம், யாழ்முரி என்ற பண்கள் தேவாரத்திற் காணப்படுவது அறியத்தக்கது“.

        எனவே பஞ்ச மரபுப்படி ‘பியந்தைக் காந்தாரம்’ என தனியே ஒரு பண் இல்லை என அறிகிறோம்; காந்தாரம் என்ற பண்ணே காணப்படுகிறது. பியந்தை என்பது சம்பந்தர் தந்தையின் முதுகின் மீது அமர்ந்து பாடிய குறிப்பைத்தான் அதற்குப் பொருளாகக் குறிக்கிறதே ஒழிய அது வேறெந்த இசைக் குறிப்புடையதும் அல்ல. எனவே காந்தாரத்திற்கும் பியந்தை காந்தாரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று அறிய முடிகிறது.

ஆனால் உண்மை இப்படி இருக்க திருமுறைகளில் மட்டும் ஏன் இரண்டையும் வேறுபடுத்தி அச்சிட்டிருக்கிறார்கள்? இதற்குக் காரணம், காந்தாரப் பண்ணை சம்பந்தர் தந்தையின் முதுகின் மீது அமர்ந்து பாடியதை மட்டும் திருமுறைகளில் பியந்தை காந்தாரம் என்றும், வளர்ந்த நிலையில் சம்பந்தர் நின்று பாடிய காந்தாரப் பண் பாடலை காந்தாரம் என்றுமட்டும் குறிப்பித்திருக்கிறார்கள் எனக் கொள்ளலாம்.

இத்தோடு இது முடிவடைந்து விட்டது என்று எண்ணுவதற்கில்லை. ஏனென்றால், பஞ்ச மரபில் ஏழாம் சாமப் பண்களைத் தொகுத்துக் கூறும் ஒரு வெண்பா வருகிறது. அதில் பியந்த என்ற சொல் ஒரு பண்ணைக் குறித்து வருகிறது. பாடல் இதோ!

வராடி இரண்டும் வடகெவுடி நாட்டம்

        இரண்டுமியல் காந்தார பஞ்சமந்தராதலம்

        சூழவே ளாகொல்லி தற்பியந்தை இவ்வெட்டும்

        ஏழாம்சா மத்திலே எண்

பியந்தைக் காந்தாரம் என்ற ஒரு பண் பண்ணியல் எழுபதில் காட்டப்படவில்லை என்றாலும். இங்கே பஞ்ச மரபு பாட்டொன்று பியந்தை என ஒரு பண்ணைச்சுட்டிக் காட்டுகிறதே என்ற ஓர் ஐயம் படீலென எழுவது இயற்கை. ஆக, பியந்தை என்பது இசைக் குறிப்பு இல்லாத சொல்லல்ல; அப்பெயரிலேயே ஒரு பண் இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுவதும் இயற்கை. ஆனால் தெய்வசிகாமணி கவுண்டர் பதிப்பில் வெளியாகியுள்ள பண்ணியல் பட்டியலில், ‘பெயர்திறம்’ என்ற ஒரு பண்ணியலுக்கு எதிரே அதன்வேறொரு பெயர் அதாவது பரியாயப் பெயர் பியந்தை எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் பெயர்திறப் பியந்தை, யாழ்பதம் என்றும் அதைக் குறிப்பிடுவார்கள் என்றும் காணப்படுகிறது. எனவே பெயர்ந்த திறம் பியந்தை எனப்பட்டிருக்கலாம் போலும்!

எனவே , இந்தப் பெயர்திறப் பியந்தைக்கும், பியந்தைக் காந்தாரத்திற்கும் தொடர்பில்லை என்று தெளிவாக அறியக்கிடக்கிறது.

அத்துடன் காந்தாரம் முதற்காலப்பண், இந்தப் பெயர்திறமோ ஏழாம் சாமப் பண். எனவே இரண்டும் வேறு வேறு என்று தேற்றமாகக் கூறலாம்.

இதற்கெல்லாம் மேலாக திருமுறைக்கண்ட புராணத்தில் பண்களின் கட்டளைகளை தெரிவித்து அவற்றின் அடைவைக் கட்டிய உமாபதி சிவம் இவ்வாறு பாடுகிறார்.

காந்தார மாகிய பியந்தையாங் கட்டளைக்கு

        வாய்ந்தவனாக மூன்றாக்கி வன்னட்ட ராகத்திற்கு

        ஏய்ந்தவனா இரண்டாக்கி செவ்வழி ஒன்றாக்கி

        காந்தார பஞ்சமத்தின் கட்டளைமூன் றாக்கினார்.

இப்பாட்டில் காந்தாரமாகிய பியந்தை என்று தெளிவுபடப் பாடிவிட்டதால் காந்தாரமும் பியந்தைக் காந்தாரமும் ஒன்றே என்பது ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி வரையறை செய்தது ஆகிவிட்டது.

இவற்றால், காந்தாரமும், பியந்தைக் காந்தாரமும் ஒன்றே; வேறு வேறல்ல என்று உறுதியிட்டு கூறலாம்.

காந்தாரப்பண்ணின்நீர்மை :

        இனி, காந்தாரப் பண் ஏழ்பெரும் பாலையின் விளரியைச்சேர்ந்தது. அதாவது செவ்வழிப் பாலையின் பாற்பட்டது. ஆகவே இது நெய்தற் திணைக்குரியது. எனவே இதன் நீர்மை இரங்கலும், இரக்கமும் ஆகும். அதனால் காந்தாரப் பண் இரங்கற் பண். இறைவனே இந்தப் பண்ணின் வடிவம் என்று அப்பர் சுட்டிக் காட்டியதை முன்னர் பார்த்தோம். இறைவன் இரக்க வடிவினன்; எனவே இரங்கற் பண்ணாகிய கந்தாரப் பண்ணாகவே நின்றான். இதனால் இந்தப் பண்ணில் வன்சுரங்கள் வர வாய்ப்பில்லை. எல்லாம் மென்சுரங்களால் ஆன பண் இது.

இந்தப் பண்ணைத் தான் கயிலை மலையைத் தூக்கிய இராவணன் அதனடியில் நெருக்குண்ட போது அதிலிருந்து மீள இறைவனது இரக்கம் வேண்டிப் பாடி இறைவனின் இரக்கத்தைப் பெற்று வாளும் நாளும் பெற்றான் என்பது வரலாறு. அப்பர் சுவாமிகள் இதனை அழகு தமிழில் இனிமை சொட்ட இப்படிப் பாடுகிறார்.

வந்த இருபது தோளால் எடுத்தவன் வலியை வாட்டிக்

        கந்திரு வங்கள் கேட்டார் கடவூர்வீ ரட்டனாரே [4;31;10]

கந்திருவம் என்பதே காந்தாரம் ஆயிற்று என்று முன்பே எடுத்துக் காட்டப்பட்டது. எனவே இராவணன் பாடிய காந்தார இசைக் கேட்டு அவனது பிழை பொறுத்து இறைவன் ஆண்டான் என்பது தொன்ம வரலாறு.

எனவே காந்தாரப் பண்ணின் நீர்மை நெஞ்சை உருக்கி இறைவனை நேரே நிறுத்த வல்லது என்று அறியலாம்.

காந்தாரப்பண்ணின்சுரக்கட்டமைப்பு:

காந்தாரம் அதாவது கைக்கிளை குரலாகப் பண்ணுப் பெயர்க்க வருவது காந்தாரப் பண். இங்கே வன் கைக் கிளையைக் குரலாக்கியதைக் குறிக்கும். ஆகவே காந்தாரம் வன் கைக்கிளையைக் குறிப்பதாக கூறுவர்.

அடிப்படை வட்டப்பாலை கு து1 து2 கை1 கை2 உ1 உ2 வி1 வி2 தா1 தா2
கைக்கிளை குரலாக த1 த2 நி1 நி2 ரி1 ரி2 க1 க2 ம1 ம2

இது கிளை உறவில் தோன்றுவது. அதாவது ‘ச-ம’ என்னும் படி நின்ற நரம்பிலிருந்து ஐந்தன் நரம்பை வட்டமாக அமைக்க வருவது.

இவை அமையும் வழி

ச    -> ம1

ம1 -> நி1

நி1 -> க1

க1 -> த1

த1 -> ரி1

ரி1 -> ம2

அதனால் இப்பண்ணின் நரம்பு நிரல்கள் ச ரி1 க1 ம1 ம2 த1 நி1 என்கிற அமைப்பில் அமையும். இதில் இரு மத்திமங்கள் வருவதால் இதனை இரு மத்திமத் தோடி என்று அழைப்பது மரபு. காரணம் இது பஞ்சமம் நீக்கி பிரதி மத்திமம் பெற்றதால் இரு மத்திமத் தோடி ஆயிற்று. தோடியில் பஞ்சமம் வர அதை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக பிரதிமத்திமத்தை சற்று அழுத்தி அதையே குறைந்த பஞ்சமம் போல ஆக்கினார்கள்.

பிரதிமத்திமத்தை நீக்கினால் இது ஆறு நரம்பினதாய் பண்ணியல் ஆகிவிடும். இதனை ஆசான் திறம் என்று அடியார்க்கு நல்லார் கூறுகிறார். அதாவது ஆறு சுரங்களால் இவ்வாறு ச ரி,க,ம,த,நி,  என்று அமைவது ஆசான் திறம். இதனை சுத்த காந்தாரம் என்றும் சொல்வதுண்டு. இல்லை, தாரப் பண்திறம் என்கிறார் தெய்வசிகாமணி கவுண்டர் தம் பஞ்சமரபு நூற்பதிப்பில். ஆசான் திறம் என்பது காந்தாரப் பஞ்சமத்தை குறிக்கும் என்பாரும் உளர்.

பண்ணிற்குரிசாமம்(பொழுது) எட்டு :

ஒவ்வொரு பண்ணிற்கும் அது இந்தப் பொழுதிற்கு உரியது என்று வகைப்படுத்திக் கூறுகிறது பஞ்ச மரபு. அதன் வழியே பியந்தைக் காந்தாரம் எந்தப் பொழுதிற்கு உரியது என்பதை நிச்சயிக்க வேண்டும். அதற்கு முன் பஞ்சமரபு பொழுதுகளை எப்படிப் பிரிக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதற்குரிய பாடல் வருமாறு:

காலை இளவுச்சி சாயுங்கா லையென்றே

        மாலை நடுநாள் வைகறையின்சீலமா

        எண்ணுந்தே சம்முறக் காலமா எட்டெட்டுப்

        பண்ணுங் கோர்த்தார் உலகில் பாத்து

பாடலில் 6 காலங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘காலமா எட்டெட்டுக் கோர்த்தார்’ என்று பாட்டில் பின்னே வருகிறது. அதோடு இதற்குப் பின் வரும் பஞ்ச மரபுப் பாடல்களும் எட்டுச்சாமங்களையும் பேசுகிறது. எனவே பாடலில் வரும் மேற்குறித்த சாமங்களையே எட்டாக விரித்துப் பார்க்க வேண்டியது நம் கடமை என்று பாடற் குறிப்பு கூறுகிறது.

பாடலில் குறித்த பொழுதுகள் 1) காலை 2) இளவுச்சி 3) சாயுங்காலம் 4) மாலை  5) நடுநாள்  6) வைகறை

இதில் இளவுச்சி என்று வருவதால் முதிர்வுச்சி என ஒன்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாயிற்று. மாலைக்குப் பின்னே நடுநாள் என்பதால் அது நடுச்சாமத்தை குறித்தாக வேண்டும். அதாவது நள்ளிரவைக் குறித்ததாக வேண்டும். நடு இரவு என்பதால் அதற்கு முன்னும் பின்னும் உள்ள இரவுப் பகுதிகளை அது குறிப்பு காட்டியதாகும். எனவே மாலைக்குப் பிறகு வரும் இரவை முன் இரவு என்றும் அதற்கு அடுத்து வருவதைப் பின்னிரவு என்றும் பகுத்துக் கொள்ளலாம் என்ற குறிப்பை பாடலில் பெறுகிறோம். எனவே இக்குறிப்புகளைக் கொண்டு பொழுதுகளை வரிசப்படுத்தினால் அவை எட்டாவதைக் காண்கிறோம்.

1) காலை  2)   இளவுச்சி  3)  முதிர்வுச்சி  4)  சாயுங்காலம்   5)  மாலை   6)  முன்னிரவு

7) பின்னிரவு 8) வைகறை ஆக, பாடல் எட்டு காலம் என்று கூறியதைக் கண்டறிந்தோம்.

அடுத்து ஒரு நாளுக்கு இன்றைய கணக்குப் படி 24 மணி நேரம். அதை எட்டால் வகுத்தால் 3 மணி நேரம் ஆகும். ஆக ஒரு சாமத்திற்க்கு 3 மணி நேரம் எனத் தெரிகிறது. இன்றையக் கணக்குப் படி நள்ளிரவை 0 மணி என்கிறோம். அதிலிருந்து இன்றைய நாள் தொடங்குகிறது. இதனை எட்டாகப் பகுக்க வரும் சாமக் கணக்கு தெரிந்துவிடும்.

மணி         –       பொழுது            சாமம்

0-3    –       பின்னிரவு                  எட்டாம் சாமம்

3-6    –       வைகறை                   முதல் சாமம்

6-9    –       காலை                        இரண்டாம் சாமம்

9-12  –       இளவுச்சி                   மூன்றாம் சாமம்

12-15   –        முதிர்ச்சி          நான்காம் சாமம்

15-18  –       சாயுங்காலம்            ஐந்தாம் சாமம்

18-21  –       மாலை              ஆறாம் சாமம்

21-24  –       முன்னிரவு                ஏழாம் சாமம்

தமிழ் கணக்குப் படி ஒரு நாள் சூரிய உதயத்திலிருந்து தொடங்குவதால் பாடல் காலையிலிருந்து தொடங்கி வரிசையாகச்சென்று வைகறையில் முடிந்திருக்கிறது. அதுவே ஆங்கிலக் கணக்குப்படி மேல் கண்டதாக ஆகும். தமிழர்களுக்கு வைகறையே முதல் சாமம். இதையே முதலாவதான பிரம்ம முகூர்த்தம் என்றும் கூறுவர். எனவே சாமக் கணக்கு அதன்படி அமையும்.

 

 

 

பியந்தைக்காந்தாரத்திற்குரியபொழுது :

இனி, பியந்தைக் காந்தாரப் பண்ணிற்குரிய பொழுது எது என்று மேல் கண்ட அட்டவணையின் படி பஞ்சமரபு எதைக் குறிக்கிறது என்பதைக் காண்போம். பாடல் வருமாறு:

 

புறநீர்மை காந்தாரங் கெளசிகம் தக்கேசி

        மறநீர்மை யில்லா வராடியம்உறுநீர்மை

        இந்தளஞ்சா ளரபாணி யுடன்செந் துருத்தி

        வந்த முதற்கால வைப்பு.

 

முதற்காலம் என்பது வைகறையாகிய பிரம்ம முகூர்த்தம். அதாவது காலை 3.00 மணியிலிருந்து 6.00 மணி வரையிலான காலம். இந்த காலத்தில் பாடப்பட வேண்டிய பண்கள். பாடல்படி இவை :

1.புறநீர்மை  2. காந்தாரம்    3. கெளசிகம்    4.தக்கேசி    5.வராடி    6. இந்தளம்    7. சாளர பாணி    8. செந்துருத்தி

எனவே காந்தாரமாகிய பியந்தைக் காந்தாரம் பாடப்பட வேண்டிய பொழுது வைகறை காலமான காலை 3.00 மணியிலிருந்து  காலை 6.00 மணி வரை என்பதை உறுதியிட்டு கொள்ளலாம்.

‘பஞ்சமரபு காந்தாரத்தை வைகறை பொழுதிற்குரியதாகக் கூறுவது பெரிதும் பொருந்துவதே’ என்று இசைக் கலைச்செல்வர் வீ.பா.கா. சுந்தரம் அவர்களும் தம் நூலில் கூறுவது குறிப்பிடத்தக்கது.

எனவே தந்தையின் தோளின் மேல் ஏறி வைகறையிலே கோயில்களுக்கு சென்று சம்பந்தர் இறைவனைப் பியந்தைக் காந்தாரத்திலே பாடிப் பரவி இருக்கிறார் என்பது பஞ்சமரபு கூறும் இசை இலக்கணம் படி அமைந்துள்ளது என்பது அறிந்து இன்புறத்தக்கது.

இங்கே ஒன்றைக் கூறியாக வேண்டும். பஞ்சமரபு கூறும் மற்றொரு பாடல் காந்தாரப் பண்ணிற்கே வேறோரு பொழுதை உரியது என்கிறது. அந்தப் பாடல் வருமாறு:

அந்தாளி சாவகன் மேகரா கக்குறிச்சி

        கந்தாரம் துக்கரா கத்துடனேசிந்தைசேர்

        நெய்தல் குறிஞ்சிசுர நேரிசைக ளாமெட்டும்

        பைதல்நா லாஞ்சாமப் பண்.

 

இப்பாட்டில் கந்தாரம் என்பது செய்யுளில் வரும் எதுகை நோக்கி நெடில் குறிலாக குறைந்து வந்தது. அதாவது காந்தாரம் என்று வர வேண்டியது முன்வரியில் அந்தாளி என்று வந்ததற்கேற்ப காந்தாரம் என்று    வந்ததாக, இப்பாட்டின்படி காந்தாரப் பண் நாலாம் சாமத்திற்குரிய பண். இது நம் சாம அட்டவணைப்படி நடுப்பகல் 12.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணி வரை பாடப்பட வேண்டிய பண். இது முன்னுக்குப் பின் முரணாக அல்லவாய் இருக்கிறது?

 

இதை எண்ணியோ என்னவோ, தெய்வசிகாமணி கவுண்டரின் பஞ்சமரபு பதிப்பில் முந்தைய பாட்டில் முதலாம் காலத்திற்குரியது என்று கூறப்பட்ட காந்தாரத்துடன் அடைப்புக் குறியில் ‘சுத்த காந்தாரம்’ என குறிக்கப்பட்டிருக்கிறது.

 

இதனால் நாலாம் சாமத்திற்குரியதாக இங்கே இப்பாடலில் குறிப்பிடப்படும் காந்தாரம் வேறு என்று தெரிகிறது. இந்தக் காந்தாரம் என்பதற்கும் முந்தி கூறப்பட்ட காந்தாரத்திற்கும் சிறிய வேறுபாடு உண்டு என்பதும் இருப்பினும் இரண்டும் காந்தாரமே என்றும் அறிகிறோம்.

 

எனவே சுத்த காந்தாரம் என்பது பிரதி மத்திமம் நீக்கிப் பாடியது என்றும், காந்தாரம் என்பது பிரதிமத்திமத்தோடு பாடிய இருமத்திமத் தோடி என்றும் அறிகிறோம். ஆக காந்தாரம் இருவகையாகப் பாடப்பட்டு வந்திருக்கிறது; அதில் சுத்த காந்தாரம் வைகறையில் பாடப்பட்டது; காந்தாரம் இரு மத்திமத் தோடியாய் தோடியின் சாயலாகப் பாடியதற்கு ஏற்ப நெய்தற் பண்ணுக்குரிய மாலைக்கு சற்று முன்சாமத்தில் பாடப்பட்டிருக்கிறது என ஊகிக்கலாம்.

இதனால் தோடி, விளரித் தோடி என்றும் அநுமத் தோடி என்றும் இருவகைப்பட்டது என்றும் கூறலாம். அநு என்றால் உடனாக என்று பொருள். அநு – ம என்றால் இரண்டு ‘ம’ உடனாக வந்தது என்று பொருள். அதாவது ம1, ம2 என இரண்டும் வருவது.

 

பியந்தைக்காந்தாரத்திற்குஉரியஅதிதெய்வம்:

 

பஞ்ச மரபு ஒவ்வொரு பண்ணுக்குரிய அதிதெய்வங்களையும் குறிப்பிடுகிறது. அப் பாடல் வருமாறு:

பிரமன் திருமா லுருத்திரன் பெட்பார்

தரமன்னு மீசன் சதாசிவன்தாரணிக்குக்

கண்ணாம் பகல்மதியம் காயவான் என்றெண்மர்

விண்ணோர்க்கும் பண்வகுப்பார் வேறு.

 

இதன்படி,

முதல் சாமம்            –        பிரமன்

இரண்டாம் சாமம்   –        திருமால்

மூன்றாம் சாமம்     –        உருத்திரன்

நான்காம் சாமம்      –        மகேசன்

ஐந்தாம் சாமம்         –        சதாசிவன்

ஆறாம் சாமம்          –        சூரியன்

ஏழாம் சாமம்             –        சந்திரன்

எட்டாம் சாமம்         –        வானவர்.

இங்கே ஒரு கேள்வி எழும். காந்தாரப் பண்ணே இறைவன் என்று கண்டோம். அதற்கு அதிதெய்வம் வேறா என்ற கேள்வி எழத்தானே செய்யும். அதிதெய்வமாக இங்கே கூறப்படும் அனைவரும் பக்குவத்தால் உயர்நிலை பெற்ற உயிரினங்கள். இவர்கள் எல்லாம் ஒவ்வொரு காலக் கூற்றையும் நிர்வகிக்கும் இறைபணியில் இறைவனால் அமர்த்தப்பட்டவர்கள். எனவே இந்த நிர்வாக அதிதெய்வங்கள் வழி இறைவனை அணுக வேண்டும் என்பது சித்தாந்த கருத்து.

இதன் வழி, காந்தாரம் (சுத்த காந்தாரம் என்ற பண்) முதற்காலமான வைகறைக்கு உரியது என்பதால் அந்த வைகறைக்கு உரிய அதிதெய்வமான பிரமனை வாழ்த்திப் பாடி அவன் கைப்பிடித்துச்செல்ல இறைவனை இந்தப் பண்ணில் பாட வேண்டும் என்பது பஞ்சமரபு காட்டும் வழி.

 

நாலாம் சாமத்தில் பாடவேண்டிய இரு மத்திமத் தோடிக்கு அதிதெய்வம் மகேசன். அவனைப் பாடி அவன் வழி இறைவனைப் பாடுக என்பது பஞ்சமரபு உண்ர்த்தும் நெறி.

 

பியந்தைக்காந்தாரம்மங்கலப்பண்ணா?

பஞ்சமரபு எந்தெந்தப் பண்கள் மங்கலப் பண்கள் என்பதை வரையறுத்துக் கூறுகிறது. காலை மங்கலப் பண்களாக முன் எட்டுப் பண்களைக் கூறுகிறது. பாடல் வருமாறு :

தக்கேசி காந்தாரம் கெளசிகம் சாதாளி

        திக்கார் புறநீர்மை செந்துருத்திதொக்கவியல்

        செங்கயற்கட் பூங்கொடியே சீகாமரம் சிகண்டி

        மங்கலப் பண்ணாமென்னும் எட்டு.

 

அவை : 1) தக்கேசி 2) காந்தாரம் (தாரப்பண்திறம்) 3. கெளசிகம்  4.சாதாளி என்னும் சாதாரி         5) புறநீர்மை    6) செந்துருத்தி    7) சீகாமரம்  8) சிகண்டி

இதன் படி காந்தாரப் பண் மங்கலப் பண் என அறிகிறோம். இதனால் எங்கெங்கே மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவோ அங்கே காந்தாரப் பண்ணில் பாடல்கள் பாடினால் மங்கலம் பெருகி ஓங்கும் என்றறிந்து கடைப்பிடிக்கலாம். காந்தாரமே பியந்தைக் காந்தாரம் ஆதலால் மேற்கண்டது இதற்கும் பொருந்தும்.

 

பியந்தைகாந்தாரத்தைஇன்றுஎப்படிப்பாடுகின்றனர்?

கொல்லி, கொல்லிக் கெளவானம், காந்தாரம், பியந்தை ஆகிய நான்கு பண்களையும் ஓதுவார்கள் இப்போது நவரோசு ராகத்தில் பாடுகிறார்கள்.

சிலர் கொல்லியை சிந்து கனடாவிலும். காந்தாரத்தை இச்சிச்சியிலும் பாடுகிறார்கள். எப்படி நான்கு பண்களையும் ஒரே ராகத்தில் பாடுவது பொருத்தமாயிருக்கும் என்று தெரியவில்லை.

பியந்தைக் காந்தாரத்தைக் குறித்து வெள்ளை வாரணனார் எழுதிய நூலில் இது எதை சேர்ந்தது என்று திட்டமாகத் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார்.

பஞ்சமரபு ஒன்றுதான் இசைத் தமிழுக்குக் கிடைத்த மேல்வரிச்சட்டம். அதை அறிஞர்களும், ஓதுவார்களும் கடைப்பிடித்தால் பல சிக்கல்கள் தீரும்.

 

பஞ்சமரபு காட்டிய நெறியில் நின்று பியந்தைக் காந்தாரத்தை இருமத்திமத் தோடியிலோ அல்லது பிரதி மத்திமம் நீக்கிய சுத்தகாந்தாரத்திலோ ஒதுவார்கள் பாடினால் இறையருள்கிட்டும். இராவணனுக்கே வாளும் நாளும் கிட்டுமானால் உளம் கனிந்து ஓதுவார்கள் பாடினால் இறையருள் வீடுதேடி வந்து வளம் கொழிக்காதா?

 

சம்பந்தர்பாடியபியந்தைகாந்தாரக்குறிப்புகள் :

காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்

         தேந்தாம் என் றரங்கேறி சேயிழையார் நடமாடும் திருவையாறே“.

என்ற சம்பந்தர் வாக்கு பலரால் மேற்கோள் காட்டப்படும் பாடல் வரி. இது காந்தாரம் பற்றி சம்பந்தர் பாடியதில் சுவைமிக்கது. இதனுள்ளே ஒரு சிறப்பு செய்தியை சம்பந்தர் குறிப்புப் பொருளாக வைத்துள்ளார். அதனை எடுத்துக் காட்டி இந்தக் கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

‘ச1 ரி1 க1 ம1 த1 நி1’ என்ற சுரக் குறியீடுகள் பஞ்சமரபான பழந்தமிழ் இசை நூலிலேயே சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் ஏனோ ஓதுவார்கள் சுரக் கோவையோடு பாடுவதில்லை. ஆனால் இதைப் பற்றிய செய்தியைத் தான் சம்பந்தர் மேற்காணும் பாடல் வரியில் குறிப்பாக கொடுக்கின்றார்.

IMG_20150225_113004

அதாவது திருவையாற்றில் சில பெண்கள் காந்தாரப் பண் சுமந்த பாடல்களைச்சிறக்க இசையமைத்து திருவையாறு வீதியில் பத்தியுடன் பாடி வந்தார்களாம். அந்த இசையால் உந்தப்பட்டு தேந்தாம் என்று தோற்கருவி விற்பன்னர்கள் தாளத்துடன் தோற்கருவிகளை வாசித்தார்களாம்.

பொதுவாக வீதியில் பெண்கள் பாடி வருவது அபூர்வம். ஆனால் திருவையாறு கோயிலுக்குச்சென்று கொண்டிருக்கிற பெண்கள் பத்தியின் மிகுதியினால் காந்தாரப் பண்ணில் இறைப் பாடல்களை பாடிச்சென்றிருக்கிறார்கள். அவர்கள் இசையமைத்துப் பாடினார்கள் என்று சம்பந்தர் கூறியிருக்கிறார். காந்தாரப் பண்ணிற்கு இவர்கள் புதிதாக இசையமைக்க வேண்டியதில்லை. எனவே காந்தாரப் பண் பாடும் போது கல்பனா சுரங்களைச்சேர்த்து இசையமைத்தார்கள் என்பது குறிப்பு. அது அவ்வளவு இனிமையாக இருந்தமையால் தேந்தாம் என்ற தாளம் சேர்ந்துக்கொண்டது என்பது குறிப்பு.

இனி அந்தக் காலங்களில் வீதிகளில் வழிவருவார் இளைப்பாற சிறுசிறு மண்டபங்களை வாய்ப்பான இடங்களில் கட்டி வைத்திருப்பார்கள்.

பெண்கள் தங்கள் கற்பனைத் திறமெல்லாம் காட்டி காந்தார இசையை விரித்து சிறக்கப் பாடியதில் உந்துதலால் தாளம் சேர்ந்து கொண்டது போல நடனத் திறம் வாய்ந்த பெண்கள் ஆர்வத்தை அடக்க இயலாமல் வீதிகளில் இருந்த மண்டபத்தில் அரங்கேறி பாடலுக்கும் தாளத்துக்கும் ஏற்ப நடனமாடினார்களாம்.

பாடல்கள் பாடப்பட்டது வீதி என்றார்; எனவே அங்கே நடனமாடும்  அரங்கு திடீரென முளைக்க இயலாது. ஆனால் சம்பந்தர் அரங்கு ஏறி என்று பாடியிருப்பதால் கட்டி வைக்கப்பட்ட ஏதோ ஒரு வாய்ப்பான மேடையில் ஆர்வம் தாளாது நடனப் பெண்கள் ஏறி ஆடினார்கள் என்று சம்பந்தர் கூறியதாகக் கொள்ளலாம்.

ஆக வீதியில் நடக்கும் இவையெல்லாம் முன்னேற்பாடான நிகழ்ச்சியோ, முன்னேற்பாடான அரங்கோ இல்லை என்றாலும் பத்தியின் உந்துதலால் தானாக நடந்தவை என்று சம்பந்தர் குறித்தாராயினார். அதாவது திருவையாறு வீதி தோறும் பத்திமணம் கமழ தானாக இந்நிகழ்ச்சிகள் நடந்தன என்கிறார். இப்போது கூட சில இசை நிகழ்ச்சிகளில் சிலர் தானாக எழுந்து ஆடுவதைக் காண்கிறோம்.

இனி பெண்கள் பாட நடனப் பெண்கள் ஆட வேண்டும் ஆனால் அதற்கேற்ப சுரக்கோவையைப் அப்பெண்கள் அவசியம் பாடி இருக்க வேண்டும். அவ்வாறானால் காந்தாரப் பண் பாடும் போது கல்பனா சுரமாக அப்பெண்கள் சுரக்கோவையை சேர்த்தே பாடினர் என்பது உறுதியாகிறது. இதனால் சம்பந்தர் இந்தப்பாடல் வரியின் மூலம் ஒரு முக்கியமான செய்தியைச்சொல்கிறார். அதாவது பழந்தமிழ் இசை மரபில் பண்களை பாடும் போது சுரக்கோவைகளை சேர்த்துப் பாடுவது வழக்கமாயிருந்தது என்ற சுவையான குறிப்பு இசைத் தமிழ் ஆர்வலர்களுக்கெல்லாம் இனிக்கும் செய்தி. இதை உணர்ந்து இன்றைய நடமாடும் இசைத்தமிழ்ப் பேழைகளான ஓதுவார்களும் பாடுமுறையில் சுரக்கோவையைக் கடைப்பிடிப்பார்களாக!

காந்தாரப் பண்ணே இறைவனின் இசை வடிவம் என்கிறார் அப்பர்; அதனால் தான் போலும் இறைவன் கூத்தரசன் ஆனார்! இறைவனையே கூத்தரசனாக்கியது காந்தாரம் என்றால், திருவையாறு பெண்கள் காந்தாரத்தால் நடனமாடியதில் என்ன வியப்பு? ஆடவரெல்லாம் காந்தாரம் ஆடவரலாம் ! மாதரவரெலாம் காந்தாரம் ஓதவரலாம்! வாழ்க காந்தாரம்!

 மு.பெ சத்தியவேல் முருகனார், B.E., M.A., M. Phil.

 

Top