You are here
Home > கட்டுரைகள் > முழுமுதற் கடவுள் விவாதம் – செய்திகள்

முழுமுதற் கடவுள் விவாதம் – செய்திகள்

செய்தி 1

 ‘ஓசையின் ஆன்மிகம்’ என்ற மலேசிய இதழில் ‘ஐயம் தெளிக’ 167 / 12-8-2014 என்னும் தலைப்பில் சிவத்தமிழ்ச் செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் க.சிவபாலன் / கிள்ளான் என்ற அன்பரின் ஓர் ஐயத்திற்கு விடையளித்திருந்தார். இதில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள், சிவனே பரம்பொருள் என்றும் உமையம்மை, விநாயகன், முருகன் ஆகியோர் சிறுதெய்வங்களே என்றும் சாதித்திருந்தார். இதனால் மலேசியாவில் இருக்கும் அன்பர்கள் மனதில் பெருங்குழப்பம் ஏற்பட்டது.

       இந்தச் சர்ச்சையில் தெளிவு பெறுவதற்காக 2014 செப்டம்பர் 1 திங்கட்கிழமை அன்று மலேசியாவில் வசிக்கும் சைவ சித்தாந்த ஆசிரியர் சிவத்திரு.சண்முகம் அவர்கள் உள்ளிட்ட அன்பர்கள் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் தெய்வமுரசு அலுவலகத்தில் இருக்கும் செந்தமிழ்வேள்விச்சதுரர் தெய்வமுரசு இணையதள ஆசிரியர் மு.பெ.சத்தியவேல் முருகனாரை இணைய தளம் வழியாகத் தொடர்பு கொண்டனர். சுமார் இரண்டு மணிநேரம் அன்பர்களின் ஐயங்களுக்குத் திருமுறைகளிலிருந்து மேற்கோள்களுடன் தக்க பதில்களைத் தந்தார் தெய்வமுரசு ஆசிரியர். இதற்கான நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரலைக் காணொலியை சென்னையில் தெய்வமுரசு பதிப்பாசிரியர் திரு.பா.சீனிவாஸ் அவர்களும் மலேசியாவில் திரு.தில்லைத்தமிழ் அவர்களும் ஒருங்கிணைத்துச் செவ்வனே பணியாற்றினர்.

       இணையம் மூலமாக ஒருவர் முகத்தை மற்றொருவர் கண்டு அளவளாவ முடியும் என்றாலும் முருகனார் எப்போது மலேசியாவிற்கு நேரில் வருவார் என்ற ஏக்கம் மலேசிய அன்பர்கள் மத்தியில் இருப்பதை அப்போது உணர முடிந்தது.

செய்தி 2

 ‘முருகன் முழுமுதற் கடவுளே’ என்னும் உண்மையை நிலைநிறுத்த ஒரு நெடுந்தொடர் 2014 செப்டம்பர் 1 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணியளவில் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் தெய்வமுரசு அலுவலகத்தில் ஆசிரியர் செந்தமிழ்வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல்முருகனார் அவர்களால் செவ்வேட்பரமனுக்கு 108 முத்தமிழ் முருகன் போற்றி செய்து மலர் அர்ச்சனையுடன் தொடங்கப்பட்டது.

       தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போன உள்ளங்களுக்குப் புத்துணர்ச்சியைத் தருவதாக இந்த ஆன்மிக நெடுந்தொடர் அமைந்தது. பல்வேறு சமய உண்மைகளை வெளிக் கொணரும் வகையில் ஆழமான அடித்தளம் அமைத்துத் தலைப்பை ஒட்டி விரிவானதொரு முன்னுரையை வழங்கினார் தெய்வமுரசு ஆசிரியர். இறைவனைப் பற்றி சைவ சித்தாந்தக் கண்ணோட்டத்தில் அமையும் இந்த நெடுந்தொடரின் முதல் சொற்பொழிவைக் கேட்டவுடன் இதன் அடுத்த அமர்வு எப்போது வரும் என்ற ஆவல் நமக்கு ஏற்பட்டது.

      இதனைத் திருவருள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பும் நோக்கத்தில் சிவத்திரு.வாசு அவர்கள் பதிவு செய்தார்கள். அவ்வமயம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சார்பாக முருகவேள் பன்னிரு திருமுறையை அண்மையில் மீண்டும் வெளியிட்ட திரு.சுப்பையா அவர்கள் வந்திருந்து வாழ்த்துரை வழங்கினார். பாலம் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்து நிகழ்வைச் சிறப்பித்தார்கள். அடியார் பெருமக்களும் எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராய அருட்சுனைஞர்களும் திரளாகக் கலந்து கொண்டு செவியமுதம் பருகினார்கள். திருமதி சங்கராந்தி சீனிவாஸ் அவர்கள் வந்திருந்த அடியார் பெருமக்கள் அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார்கள்.

Top