அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024ல் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆற்றிய சிறப்புரை
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவ பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும் மருவடிவான வதனங்களாறும் மலர்க்கண்களும் குருவடியாய் வந்தென்உள்ளம்குளிர குதிகொண்டவே.
யாமோதிய கல்வியும் எம்அறிவும்
தாமே பெறவேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே!
என்று திருவேல் இறைவனின் ஆணை பெற்று நாமேல் நடக்க தொடங்குகின்றேன்.
இந்தப் பக்கம் அருளும் ஆட்சியும் கூடிக் கூட்டணி போட்டுக் கொண்டு குலுங்குகிறது. எதிரே அறிவு குலுங்கும் அடியார்கூட்டம். இரு பாலவர்க்கும் எனது வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.
“நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே பறப்பது நன்று”
என்ற குறள் இப்போது நினைவுக்கு வருகிறது. நாம் இரண்டு நாட்களாகப் பெருந்திரளாகக் கூடி முத்தமிழ் முருகன் அருளில் மூழ்கி மெய் மறந்து நிற்கிறோம். நன்றி சொல்ல வேண்டும். எனவே, நன்றியுணர்வு பொங்கும் நல்லுரையோடு என் உரையை தொடங்குகின்றேன். நன்றி, யாருக்கு?இரண்டு ஆளுமைகளுக்கு, ஒன்று, தமிழ்நாடு அரசின் முதல்வர் அவர்கள்; இரண்டு நமது அறநிலையத்துறை அமைச்சர் என்பதை நாம் எல்லாரும் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம்.
எனது முதல் நன்றி, தமிழ் நெறியாம் முருகன் நெறி தரணியெங்கும் பரவிட வேண்டும் என்று முழுதுலக முருகன். அடியார்களையும், பழுதறக்கற்ற ஆய்வறிஞர்களையும் ஒருங்கமர வைத்து இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024-ஐக் கண்ட தமிழ்வீறுடையார் தமிழ்த்தாயின் தனித்தமிழ் தளபதி தமிழ்நாடு அரசு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும். எனவே, தமிழ் கூறும் நல்லுலகின் சார்பில் அவருக்கு என் நன்றியை முதலில் சமர்ப்பிக்கிறேன்.
அடுத்த ஆளுமை, நாமெல்லாம் போற்றும் நமதுஅறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு P.K.சேகர்பாபு அவர்கள்.
எனக்கு இப்போது இராமாயணத்தில் வருகின்ற இரண்டு பாத்திரங்கள் நினைவிற்கு வருகிறன. அதாவது இராமனும், அவன் தம்பி இலட்சுமணனும். அண்ணன் இராமன் உற்ற துயரத்தில் பங்கு கொண்டு காட்டிற்கு உடன் செல்கிறான் இலட்சுமணன். அவன் அங்கே இருக்க நேர்ந்த 14 ஆண்டுகளும் உறங்காமல் அண்ணனைப் பாதுகாத்தான் என்பது இராமாயணம். நம்மால் நம்பமுடியவில்லை. எப்படி 14 ஆண்டுகள் உறங்காமல் இருக்க முடியும்? ஆனால், இது சாத்தியமே என்பதற்கு சாட்சியாக நமது அமைச்சர் இருக்கிறார். இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தத் திட்டமிட்ட முதல் நாளிலிருந்து இன்று வரை சிலபல மாதங்கள் அமைச்சர் தூங்கி இருப்பாரா என்பதே சந்தேகம். இது சாத்தியமானால், அதுவும் சாத்தியமே!
உறங்காமல்,அயராமல், தளர்வின்றி இம்மாநாட்டினை இவ்வளவு பொருட் பிரமாண்டமாக நாட்டி, அருட் பிரம்மாண்டத்தை நமக்கொல்லாம் ஊட்டி, அதற்கு வெற்றிமுகம் காட்டிய அவருக்கு இங்குள்ள முருகன் அடியார்கள் அனைவரின் சார்பாக எனது இதயத்திலிருந்து பீறிட்டெழும் இரண்டாவது நன்றியைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.
இந்த மாநாடு இத்துணை வெற்றிகரமாக நடப்பதன் இன்னொரு இரகசியத்தையும் சொல்கிறேன். மாநாட்டில் போற்றப்படும் முருகன் தேவசேனாபதி; அதாவது தெய்வத் தளபதி. அவனது அருந்தமிழ் நெறி பரவ மாநாட்டை எடுத்த தமிழ்நாடு அரசு முதல்வர் தனித்தமிழ் தளபதி. இரண்டு தளபதிகள் கூடி முடிவெடுத்து இம்மாநாடு நடக்கிறது என்றால், அதன் வெற்றிக்குக் கேட்க வேண்டுமா? அதன் வெற்றியில் யாருக்கும் சந்தேகம் வரவாய்ப்பே இல்லை என்பதைப் பதிவு செய்வது என் கடன்!
இந்த மாநாட்டில் ஒரு தீர்ப்பு இப்போது தான் கிடைத்திருக்கிறது. அதாவது தமிழ்நெறி என்பதே முருகநெறிதான் என்ற தீர்ப்பை எனக்கு முன் பேசிய நீதியரசர் தர்க்கரீதியாக, லாஜிக்கலாக மிக விரிவாக ஓர் ஆய்வரங்கமே நடத்தித் தீர்பளித்து விட்டுச் சென்றிருக்கிறார். எனவே நல்ல தீர்ப்பை இன்று நாம் பெற்றதே ஒரு வெற்றி எனலாம்.
அடுத்து இந்த அவையைப் பார்க்கிறேன். எனக்கு ஒன்று நினைவிற்கு வருகிறது. அருணகிரிநாதப் பெருமான் அருள்விசாவில் அடிக்கடி தேவ லோகத்திற்குப் போய் வருபவர். ஒருமுறை தேவலோகத்தில், இந்திரன் தனக்கு வெற்றி ஈட்டித் தந்த முருகனுக்கு நன்றி சொல்ல அவையைக் கூட்டினான். முருகன் முன்னிலையில் தேவேந்திர அவை கூடியது. அதைப் பார்த்து வியந்த அருணகிரிநாதர் அந்த தேவசபையின் பெருமையை விவரித்து “தேவேந்திர சங்க வகுப்பு” என்பதைப் பாடினார்.
“தரணியில் அரணிய முரண்இரணியனுடன்
தனைநக நுதிகொடு சாடோங்கு நெடுங்கிரி
யோடேந்து பயங்கரி தமருகபரிபுர ஒலி கொடு”
என்று சந்தம் கொப்புளித்து ஓடும் அந்தத் தமிழருவி ! அந்த தேவேந்திர சபையை நான் அச்சில் படித்திருக்கிறேன். அந்த தேவேந்திர சபையை நான் இங்கே அச்சாக பார்க்கிறேன் .எத்தனை எத்தனை பெரியோர்கள்; எத்தனை எத்தனை சான்றோர்கள்! இந்த தேவேந்திர சபைக்கு முதலில் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சபையை நான் பார்க்கும் போது என் நினைவில் ஒன்று நிழலாடுகிறது.
ஒரு புலவர் ஒருமுறை முயன்று தவமிருக்க முன்னியது முடிக்கும் முருகன் அவர் முன்னே வந்து நின்றான். என்ன வேணும் என்றான். இப்போது கூப்பிட்டவுடன் வந்து காட்சி அளிக்கிறாய். இதுபோல எப்போதெல்லாம் நான் வேண்டி அழைக்கின்றேனோ அப்போதெல்லாம் வந்து காட்சி அளிக்க வேண்டும் என்றார் புலவர் – சாமர்த்தியமாக.
முருகன் சிரித்துக் கொண்டே, அப்படியே ஆகட்டும் என்றான். இதற்குப் பிறகும் புலவர் தயங்கினார். என்ன என்று முருகன் கேட்க, புலவர், “உன் முகவரி வேண்டும் பெருமானே என்றார்” “முகவரியா”, முருகன் மீண்டும் சிரித்தான்.
புலவர் சொன்னார்; “படைவீடு, படைவீடா ஆறுபடை வீட்டுக்கும் என்னால் அலைய முடியவில்லை முருகா! அதெல்லாம் உன்னுடைய Contact Address! சிலநேரம் உன்னைக்காண முடியாமலும் போகலாம். எனவே, உன்னுடைய Permanent Address சொல்லுப்பா என்றார்”.
“பொருப்பது பொடிப்பட விடுத்திடுகைவேலா
இருப்பிடம் உனக்கெது எனக்கருள் இயம்பாய்”
என்று பாடிக் கேட்டார்.
“முருகன் சொன்னான்; எனது Permanent Address – ஆ? குறித்துக்கொள்! எவர் எவர் எல்லாம் திருப்புகழை உள்ளம் உவந்து ஒதுகிறார்களோ அவர்களது உள்ளமே எனது Permanent Address என்றான்”, இப்படி,
“உருக்கம்நல் விழுக்குலம் ஒழுக்கம் இலரேனும்
திருப்புகழ் படிப்பவர் மனத்தினுள் இருப்பாம்”
இவ்வாறு புலவர்க்கு “முருகன் தனது Permanent Address முகவரி அட்டையை அதாவது விசிட்டிங் கார்டைக் கொடுத்தானாம்”.
அந்த வகையில் பார்த்தால், இந்த அவையில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அன்பர்கள் அனைவரும் திருப்புகழை அன்போடு ஓதுபவர்கள். அதனால் இந்த அவை தான் முருகப் பெருமானின் விசிட்டிங் கார்டுகள். எனவே, மீண்டும் ஒரு முறை உங்களை எல்லாம் முருகப் பெருமானின் பெர்மனென்ட் விசிட்டிங் கார்டுகளே! என்று அன்போடு அழைத்து வணங்கிக் கொள்கிறேன்.
இந்த அவை கூடியுள்ள அரங்கம், அருணகிரி நாதர் அரங்கம். அரங்கம் அவருடையது; என்றால், அவரல்லவா இந்த முழுதுலக அடியார்களை வரவேற்க வேண்டும்? ஒரு வீட்டுக்குப் போகிறோம். அந்த வீட்டுக்கு உடையவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார் என்றால் எப்படி இருக்கும்? உள்ளே நுழைய மனம் வருமா? அப்படியானால் இங்கே நம்மையெல்லாம் அருணகிரிநாதர் வரவேற்பாரா? சார் ! அவர் எப்படி சார்,நம்மை வரவேற்க முடியும்! அவர் கி.பி.15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று கேட்கலாம். ஆனால் உண்மை என்ன என்றால் அருணகிரிநாதர் உலகின் பல
நாடுகளில் இருந்து திரண்டு வந்துள்ள நம்மையெல்லாம் வரவேற்றிருக்கிறார்; பாடி வரவேற்றிருக்கிறார்; அருணகிரிநாதர் ஒரு கிளியாக முருகப்பெருமான் தோளில் அமர்ந்து கந்தரனுபுதி பாடியவர். இன்றும் திருத்தணிகையில் முருகப் பெருமான் தோளில் அருணகிரிக் கிளி அமர்ந்திருக்கும் சேவை நடைபெறுகிறது. இந்தக் கிளி சாதாரண கிளி அல்ல; அருளாளகிளி; சாதாரண கிளியே ஜோசியம் சொல்லுது! அருணகிரிநாதக் கிளி என்ன சொல்லாது? ஆண்டவன் தோளில் உள்ள அந்தக்கிளிக்கு தீர்க்க தரிசனம் என்று வேற்று மொழியில் கூறும் நெட்டிமைப் பார்வை உண்டு. நெட்டிமையார் என்றே ஒரு சங்கப் புலவர் இருந்தார். இந்த நெட்டிமைப் பார்வையில் (Clairvoyance) அருணகிரியார் இன்று நடக்கும் இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024ஐக் கண்டு இதில் கலந்து கொண்டுள்ள பன்னாட்டு அடியார்களையும் வரவேற்றுப் பாடி இருக்கிறார்.
மயிலையும் அவன்திருக்கை அயிலையும்
அவன் கடைக்கண் இயலையும்
நினைந்திருக்க வாருமே !
-பெருத்தபாருளீர் – வாருமே!
இப்படி பரந்த பலநாட்டு முருகனடியார்கள் உள்பட அனைவரையும் அன்போடு பெருத்தபாருளீர்! வாருமே – மயிலையும், அவன் திருக்கை அயிலையும், அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே – என்று வரவேற்கிறார்.
“வந்தா என்ன கிடைக்கும்? விரிவாகப் பாடி இருக்கிறார்” என்னென்ன எல்லாம் கிடைக்கும் என்றும்
“அலைகடல் வளைந்துடுத்த எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்”
அப்புறம்? இவ்வுலக அரசு மட்டுமல்ல, அண்ட வெளி அரசையெல்லாம் ஆள்வாய் என்கிறார்.
“அளகையரசன் தனக்கும் அமரர் அரசன் தனக்கும்
அரசென அறம்செலுத்தி ஆளலாம்”
“அரசெல்லாம் இருக்கட்டும்! இறுதியில் எமன் வருவானே” என்று அஞ்சலாம். அஞ்சேல்! அவனோடு வாதிட்டு வெற்றி பெறலாம் என்கிறார்.
“எமபடர் தொடந்தழைக்கும் அவருடன் எதிர்ந்துள் உட்க
இடி என முழங்கி வெற்றி பேசலாம்”
இதைப் போல இன்னும் பல எடுத்துக்கூறி முருகன் அடியார்களை உறுதியுடன் வரவேற்றுப்பாடி இருக்கிறார்.
அப்புறம் என்ன? அருணகிரியாரே, பெறக்கூடிய நன்மைகள் எல்லாவற்றிற்கும் உறுதி கூறி நம்மை அழைத்திருக்கிறார்! இதைவிட வேறென்ன வேண்டும்? ஒன்றே ஒன்று தான்! இன்று பெறும் நன்மைகள் எல்லாம் பெற்று, முருகநெறியாகிய தமிழ் பண்பாட்டை வளர்க்க வேண்டும். அந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தத் தமிழ்நாடு அரசு இதுபோன்ற பல மாநாடுகளை நடத்த வேண்டும். அவற்றில் எல்லாம், இன்று போல் நாம் கலந்து கொண்டு தமிழ்நாட்டை மேலும் மேலும் அருளில் பொலிய வைக்க வேண்டும் என்று கூறி, வாய்ப்புக்கும் நன்றி கூறி அமைகின்றேன். வணக்கம் !
முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகன்
உறுப்பினர் /த.நா. இந்து சமய அறநிலையத்துறை
உயர்நிலைக்குழு
Related Posts
- முத்தமிழ் முருகன் மாநாடு-2024-பழனி
w.facebook.com/watch/?v=1058238958980043 https://www.facebook.com/100077959868984/videos/1418876362122295 Invitation Palani MMM 2024
- மு பெ சத்தியவேல் முருகனாரின் வாழ்க்கைப் பயணம்
https://youtu.be/w7WMvqrr60o