You are here
Home > செய்திகள் > முருகன் திருக்கோயிலில் தம்பிரான் சுவாமிகளை தாக்கியதைக் கண்டிக்கிறோம்

முருகன் திருக்கோயிலில் தம்பிரான் சுவாமிகளை தாக்கியதைக் கண்டிக்கிறோம்

கண்டன அறிக்கை

16-5-2024 ஆம் நாளிட்ட ஒரு கண்டன அறிக்கையை சுவிட்சர்லாந்து சைவ நெறிக்கூடம் வெளியிட்டதை வாட்ஸ் ஆப்பில் கண்டோம். அக்கண்டனத்துக்குரிய செய்தியை IBC தமிழ் தொலைக்காட்சியும் உறுதி செய்துள்ளது.

அதாவது, டென்மார்க் அ/மி சிறீ வேல்முருகன் ஆலயத்தில் தமிழ் வழிபாட்டிற்கென அக்கோயில் அறங்காவலர் குழு தருவிக்க இலங்கையில் இருந்து வந்து அப்பணி மேற்கொண்டிருந்த தம்பிரான் சுவாமிகள் சிலரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தமிழ் எதிர்ப்புச் செய்தியை மேலவற்றால் அறிந்து, ஆயிரக்கணக்கில் உலகெங்கும் தமிழ்க் குடமுழுக்குகளை ஆற்றி வந்து கொண்டிருக்கும் இந்த அறக்கட்டளை, ஆற்றொணாத வேதனை மீதூர தனது கண்டனத்தை இதன் மூலம் பதிவு செய்கிறது.

தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல; அதனோடு தெய்வம் நெருங்கிய தொடர்புடையது; எனவே தான் தமிழைச் சான்றோர் தெய்வத்தமிழ் என்றே வழங்கி வருகின்றனர். கோயில்களுக்கே உரிய ஆகமமும் தமிழே, இறைவனால் படைப்புக் காலத்தில் அருளப்பட்ட உலக முதல் மொழி என்று அறுதியிட்டுக் கூறுகிறது. இதனால் தமிழின் தெய்வத் தொடர்பு உறுதியாகிறது.

அறியாமையால் இறைபணி ஆற்றும் ஆன்றோர்க்கு இடர் செய்தால், “தெய்வம் நின்று கொல்லும்” என்பர்; தெய்வத்தமிழும் அப்படியே! கைக்கூலிக்காக கடவுளோடு விளையாடலாமா?

தான் படைத்த தமிழால், தமிழர்கள், தமிழ்க்கடவுளான தனக்குக் கோயில் கண்டு, தமிழால் வழிபாடு செய்கையில் அதற்கு இடையூறு செய்வதைப் போன்ற அறிவீனமான செயல் வேறு இருக்க முடியுமா என்று முருகன் சிரிக்க மாட்டானா? அப்படிச் செய்பவர்கள் பிறப்பினால் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிந்தால் உலகம் சிரிக்காதா?

எனவே, டென்மார்க்கில் தமிழ்க் கடவுள் முருகன் திருக்கோயிலில் தமிழ் வழிபாடு ஆற்றும் தம்பிரான் சுவாமிகளை தாக்கியதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். தமிழில் வழிபாடென்றால் முருகன் டன் மார்க் (Ton Mark) அளிப்பான் ; தடையென்றால் டௌன் மார்க் (Down Mark) தான் என்பதை தொடர்புடையவர்கள் நினைவில் வைப்பது நலம்!

தம்பிரான் சுவாமிகள் விரைவில் நலம் பெற்று எழவும், நற்றமிழால் மீண்டும் அங்கே தொழவும் எல்லாம் வல்ல வடிவேல் இறைவனை இறைஞ்சுகிறோம்!

முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் முருகனார்

தெய்வத்தமிழ் அறக்கட்டளை

Top