You are here
Home > செய்திகள் > தெரிந்த நுனியும் தெரியாத ஆழமும்

தெரிந்த நுனியும் தெரியாத ஆழமும்

கடல் பயணம் நம் எல்லோருக்கும் பழக்கமானதல்ல, நாம் எல்லோரும் கவலையே படாமல் பயணம் செய்வது பிறவிக் கடல் என்று வைத்துக் கொள்ளுங்கள்! காரணம், அந்தக் கவலையைப் பட நமக்காக இறைவன் இருக்கிறான்! அதை அவன் பார்த்துக் கொள்வான்! இப்ப, கண்ணால் பார்க்கும் கடல் பயணத்திற்கு வந்து விடுவோம்.

கடல் பயணத்தில் திடீரென சற்று தூரத்தில் ஒரு பனிக்கட்டி மிதந்து கொண்டிருப்பதைத் துருவப் பகுதிகளில் காணலாம். அப்படிக் கண்டால் கப்பலை மிகுந்த எச்சரிக்கையாக ஓட்ட வேண்டும். ஏனெனில், அது சின்ன தொரு பனிக்கட்டியாக இருக்கலாம். அல்லது, அந்தப் பனிக்கட்டியின் அடியில் ஆழமாகி செல்லும் ஒரு பனிமலையில் நுனியாகவும் இருக்கலாம். இதை உணராமல் வேகமாகக் கப்பலை ஓட்டினால் பெரிய பனிமலையில் மோதி கப்பல் சிதறுண்டு போகலாம். இதைத் தான் ஆங்கிலத்தில் “Tip of the Iceberg” என்றும், தமிழில் “தெரிந்த பனிநுனி தெரியாத ஆழம்” என்றும் கூறுவார்.

இப்படித்தான் தமிழ்ச் சான்றோர்கள் தம் அனுபவத் பிறவிக் கடலில் கண்ட பல உண்மைகளைக் காட்டி இருக்கிறார்கள். அவையே அவர்கள் கூறிய புராணப் பதிவுண்மைகள். புராணங்கள் எல்லாம் ஒவ்வொரு பேருண்மையின் நுனிகள். மேலாக மட்டும் கண்டு அதை இகழ்வுடன் இடித்தால் நமக்குத் தான் நட்டம். அதை ஆராய்ந்து பார்த்தால் அவ்வுண்மை ஆழத்தில் எங்கேயோ போகும்! அதே நேரம் புராணம் என்று இன்று புழங்கி வருபவை எல்லாம் பெருமைப் பனிமலைகள் என்று கூறிவிட முடியாது. சிறு ஆராய்ச்சிக்கும் தாங்காத பனிக்கட்டிப் புராணங்களும் உண்டு. இவை உள்ளீடற்ற புராணங்கள்; வக்ர புத்தியில் விளைந்தவை. பெரியோர்கள் கண்ட உண்மைப் புராணங்கள் உள்ளீடு உள்ளவை. அவற்றில் சிலவற்றை அப்பர் அடிகள் காட்டிய கோணத்தில் அவரது அருந்தமிழ் நயத்தோடு இனி காணலாம்.

இங்கே எடுத்துக் கொள்பவை இரண்டு புராணப் பதிவுகள்.

1) இராவணன் தடையாக எண்ணிய இமய மலையை நெம்பித் தூக்கி தகர்க்க இறைவன் அவனை முதலில் அடர்த்ததும் பின்னர் அருளியதும்.
2) மார்கண்டேயர் என்ற சிறுவனைக் காலன் காலக் கயிற்றால் கட்டி இழுத்ததும் இறைவன் அவனை எட்டி உதைத்து இறக்கச் செய்ததும்.

இவை இரண்டிலும் வரலாற்றில் ஏதோ ஒரு சிறுமுளை இருக்கும். அது அந்தப் பனிக்கட்டியின் நுனி மாதிரி. அவற்றின் ஆழத்தில் ஓர் இறையியல் பேருண்மையைப் புராணத்தில் புதைத்து வைத்தனர் பெரியோர். அதை அப்பர் என்ற பெரியோர் வெளிக் கொணரக் குறிப்புகளைக் கூறி இருக்கிறார். அவற்றை வைத்து உள்ளே சென்றால் பேருண்மைகள் புலப்படுகின்றன. அதற்குக் குறிப்புகளை உதவிய அப்பரது பாட்டு இதோ!

கறுக்கொண் டரக்கன் கயிலையைப் பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி யாற்கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர் விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே

பாட்டு சரி! இதைப் பதம் பிரித்துப் பொருள் புரிந்து கொள்ளவே பத்து நாள் ஆகும் போல இருக்கிறதே என்று அலுத்துக் கொள்ள வேண்டாம்! இறைவன் அருளால் உள்ளதனை உள்ளபடி உணரலாம் வாருங்கள்!

இராவணன் செய்தியையும், மார்கண்டேயன் செய்தியையும் வளவளவென கதைக்காமல் இரண்டு வரிகளில் சொல்லி விட்டு அதிலேயே வேண்டிய குறிப்பையும் வைக்கிறார் அப்பர்! ஆகவே நாமும் கதைக்குள் அதிகம் போக வேண்டாம்.

இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது அதன் அடியில் அவனை வைத்து அழுத்தி அலற வைத்ததும் சிவபெருமானின் திருவடி! மார்கண்டேயருக்காக காலனைக் காலால் உதைத்து அவன் உயிரை வாங்கியதும் சிவபெருமானின் அதே திருவடிதான்! ஒரே திருவடி இராவணனிடம் ஒரு மாதிரியும், மார்கண்டேயருக்காகக் காலனிடம் ஒரு மாதிரியும் செயல் படுகிறதே! அப்பர் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

இராவணன் விஷயத்தில் இறைவனது திருவடி மிக மிக இலேசாகத்தான் மலையை அழுத்தியதாம்! அதை “இறைச் செற்ற” என்ற சொற்களால் காட்டினார். இறை என்றல் இங்கே மிக இலேசாக என்று பொருள். அதற்கே இராவணன் மலையடியில் மாட்டிக் கொண்டு “ஓ” என்று அலறி அழுதான். அதனால் வடமொழியில் அலறி அழுதவன் என்ற பொருளில் இராவணன் என்று பெயரிட்டனர். தமிழில் இராவணன் என்ற சொல் இரவைப் போன்ற கரு நிறத்தவன் என்ற பொருளைத் தரும். இரண்டிலும் இரு வேறு பொருள்.

இவன் தவறு செய்து விட்டான்; அதை உணர்ந்தான்; தவறு செய்து விட்டேன் என்னைக் காப்பாற்று என்று சிவனுக்கு விருப்பமான இசையில் துதி செய்தான். இராவணன் இசையில் வல்லவன் என்று சில வரலாற்றுச் செய்திகள் கிடைக்கின்றன, எனவே இசையால் துதிக்கிறான். எதனால் இது அவனுக்கு இயன்றது? பழக்கம் தான்; அவன் சிவனடியான்; நாடோறும் சிவபூசை செய்து சிவனை இசையால் துதிப்பவன். எனவே துன்பம் வந்த போது தான் வணங்கும் சிவனைத் துதிக்கிறான். உண்மையில் அந்த மலைமேல் சிவபெருமான் இருக்கிறார் என்பதே அவன் அறியாதது; அறிந்திருந்தால் சிவபூசகனாகிய அவன் அதை பெயர்த்திருப்பானா? வலம் அல்லவா வந்திருப்பான்? அவனைப் பொறுத்த வரை இலங்கையில் நேரிமலை என்று உலகிலேயே உயரமான மலை ஒன்று பிற்காலத்து கடல்கோளில் மூழ்குவதற்கு முன் இருந்தது. எனவே இந்த மலையில் சிவன் இருப்பான் என்றோ இருந்து அவனை அழுத்தி விடுவான் என்றோ அவன் நினைக்கவே இல்லை. பலர் இது புரியாமலே சிவபெருமான் கயிலை மலைமேல் இருக்கிறான் என்பதை அறிந்தே இராவணன் அதைப் பெயர்த்தான் என்று புரியாமல் பேசுவர். அப்படிச் சொல்கிறவர்கள் அவன் சிவபூசகன் என்று சொல்லிக் கொண்டே இங்கே அதை மறந்துவிடுவது தான் ஆச்சர்யம்!

இந்த உண்மைப் பின்னணியில், இராவணன் சிவனைத் துதிக்க சிவபெருமான் அவனுக்கு இரங்கி புறப்பகை விலக்க வாளும், உட்பகை விலக்கி வாழ்நாளும் அளித்தான் என்பது புராணக்கதை. இதை மேற்கோள் காட்டாத இலக்கியமே இல்லை.

இங்கே ஒளிந்துள்ள இறையியல் இயற்கைப் பேருண்மை இது தான். எல்லா சிவனடியார்களும் ஒரே பக்குவத்தில் இருப்பதில்லை; இருக்கவும் முடியாது. எனவே பக்குவக் குறைபாட்டால் சிவனடியார்களும் தவறு செய்வதுண்டு. தவறு என்பது அறியாமல் செய்வது; தப்பு என்பது அறிந்தே செய்வது. தப்பு செய்தால் இயற்கையும், இறையும் தப்பு தப்பு என்று தப்பிவிடும். செய்த தவறு திருத்தப்படுமானால் இறையருள் உப்பி விடும். இது ஒரு மெய்ஞான இயற்பியல் உண்மை!

இங்கே இராவணன் கதையில் இந்த மெய்ஞான இயற்பியல் உண்மையாக எது ஒளிந்துள்ளது என்பதைக் காண்போம்.

1) சிவனடியார் ஆனாலும் தவறுவது இயற்கை, சுந்தரரை விறண்மிண்டரும், ஏயர்கோன் கலிக்காமரும் எதிர்க்கவில்லையா? ஆனால் முடிவில் தவற்றை உணர்ந்து திருந்தினால் அருளலாம் என்பது இறைவன் உணர்த்தும் முதல் நியதி.

2) அடுத்து இயற்கையின் அமைப்பை சிதைத்தால் இறைவன் அதே இயற்கையைக் கொண்டு தண்டிப்பான். இமயமலை இராவணனை என்ன செய்தது? அதைப் பெயர்ப்பது இயற்கையைச் சிதைப்பது அல்லவா? ஆகவே அதனடியிலேயே இராவணன் மாட்டிக் கொண்டு அலறினான் என்று கதையைக் காட்டினர் பெரியோர்.

இப்போது நடப்பதும் அதுதான்! இயற்கையை நாம் மிகவும் சீரழித்து விட்டோம்! இராவணனை மலையடியில் அழுத்தியது போல கரோனாவை விட்டு வீட்டுக்குள் மனித இனத்தையே அழுத்தி வைத்திருக்கிறான் இறைவன்; இதனால் இயற்கை சீராகிக் கொண்டிருக்கிறது. வானவெளியில் உள்ள ஓசோன் ஓட்டை தானாக அடைந்து சீராகி உள்ளது. கங்கைப் பேரியாறு தெளிந்திருக்கிறது. நமக்கு அது இயற்கை; அதுவே இறைவனது செயற்கை. அதைச் சிதைத்தால் விடுவானா?

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இதில் அப்பர் இன்னொரு பாடலில் மற்றொரு உண்மையையும் உணர்த்துகிறார். “கரைந்து கைதொழு வாரையும் காதலன்; வரைந்து வைதெழு வாரையும் வாடலன்” என்று பாடுகிறார் அப்பர்.

இதன் பொருள் துதிப்பதற்காக அவன் மதிப்பவன் அல்லன்; வைததற்காக கொய்பவனும் அல்லன். இகழுரையும் புகழுரையும் அவனுக்கு ஒன்றே! அவன் தான் கடவுள்!

எனவே தன் இருப்பிடத்தைப் பெயர்த்தவன் என்பதால் இராவணனை மலையடியில் சிவன் அழுத்தினான் என்றால் அது கடவுள் செயலாகாது. அவனன்றி அணுவையும் அசைக்க முடியாது என்னும் போது சிவனை இராவணன் அசைத்துவிட முடியுமா? அப்படியானால் இதற்கு என்ன பொருள்? இயற்கை என்பது இறைவனின் ஒரு திட்டமிட்ட செயற்கை. அதைச் சிதைப்பது இறைவனது ஒரு திட்டத்தை சிதைப்பது. அதற்கு இயற்கை வழியாகவே தண்டனை உண்டு என்பதைக் காட்டியது தான் அதன் உட்பொருள். இதை உணர்ந்து தான் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு என்றும், இயற்கைக்கு மாறானது இறைக் கொள்கை ஆகாது என்றும் எழுதி வைத்தனர். அந்த கதையே தான் இராவணன் கதையும், இன்றைய கரோனா கதையும்.

பிறகு இராவணன் இசை பாடி துதித்த போது அவனுக்கு வாளும், வாழ்நாளும் கொடுத்தான் என்றால் சிவன் துதிக்கு மயங்குபவன் என்று ஆகி விடாதா என்று கேட்கலாம். இயற்கைக்கு மாறுபட்ட போது தவறாது தண்டனை! அடுத்து தவற்றைத் திருத்தி இயற்கையோடு இசைந்தான் என்பதை இசையால் உய்ந்தான் என்று காட்டியது கதை.

அதிலும் சிவனடியான் என்ற காரணத்தாலும், தவறைத் திருத்திக் கொள்வான் என்பதனாலும் திருவடி கொண்டு இலேசாக அழுத்தினான் என்பதை “இறைச் செற்ற சேவடி” என்று பாடிக் குறிப்பிட்டார் அப்பர்.

ஆனால் மார்க்கண்டேயர் கதையில் சிவனடியார் என்று அறிந்து தீங்கு செய்ததால் இலேசாக அல்லாமல், காலனை சிவபெருமான் சீறித் திருவடியால் உதைத்து நீறாக்கி விட்டான்; அதாவது உயிரையே பறித்து விட்டான் என்று பாடினார் அப்பர். ஒரே சேவடி ஒருவனை இலேசாக எற்றியது; இன்னொருவனை எட்டி உதைத்து உயிர் பறித்தது; இதன் உட்பொருள் என்ன என்று யோசி என்று குறிப்பு கொடுத்து இருக்கிறார் அப்பர் இந்த பாடலில்.

சிவனடியார் தவறு செய்து திருந்தினால் சிவன் திருவடி தட்டிச் சரிசெய்து அருள் தரும்; சிவனடியார்க்கே தீங்கு செய்தால் அதே திருவடி உயிரையே பறித்துவிடும் என்று மெய்ஞான இயற்பியல் உண்மைதான் மேற்கண்ட இரண்டு புராணக் கதைகள் மூலம் பனி நுனியாகக் காட்டின. அங்கே புகுந்து ஊடுருவிப் பார்த்தால் ஆழமான பேருண்மை புரியும் என்றதை அப்பர் அற்புதமான குறிப்புடன் பாடிக் காட்டினார்! என்னே அவரது அருட்புலமைத் திறம்!!

இவண்

மு.பெ.சத்தியவேல் முருகன்

Top