தெய்வமுரசு
ஆசிரியர் மேசையிலிருந்து…
(செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்)
ஆடை – ஆலயம் – அவசரத்தீர்ப்பு – ஓர் ஆய்வு
தீர்ப்பும் விவாத விவரமும்
புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையானது கோயில்களில் உடைக்கட்டுப்பாடு பற்றி ஆணை பிறப்பித்திருக்கிறது; அது பற்றி விவாத மேடையில் கலந்து கொண்டு தங்கள் கருத்தைக் கூற முடியுமா என்று 01.01.2016-ஆம் நாள் என்னைக் கேட்டார். அன்று வேறு நிகழ்ச்சிக்காக வெளியூர் செல்கின்றேன் என்பதால் வர இயலவில்லை என்று கூறிவிட்டேன். உடன் ‘இமயம்’ தொலைக்காட்சியிலிருந்து இதே விவாதம் பற்றி கலந்து கொள்ள இயலுமா என்று கேட்டு அழைப்பு வந்தது. அவர்களுக்கும் இதே போன்று என் இயலாமையைத் தெரிவித்தேன்.
ஆனால் அதன்பிறகு நீதிமன்றத்தின் தீர்ப்பை இணையதளத்திலிருந்து பெற்றுப் படித்துப் பார்த்தேன். ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாக இருந்தது. நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அவர்கள் தீர்ப்பை அளித்திருந்தார். அதில்தான் கோயில்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறை தனது அதிகார வரம்பில் நிர்வாகப் பொறுப்பேற்றிருக்கிற அனைத்துக் கோயில்களிலும் அந்த உடைக்கட்டுப்பாட்டினை 01.01.2016 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அறிவிப்பு செய்திருந்தது. இதையொட்டியே தொலைக்காட்சியில் இது பற்றிய விவாதம் எழுந்தது.
சரி, இது எந்த வழக்கில் எழுந்த தீர்ப்பும் ஆணையும் என்று அலசிப் பார்த்தேன். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மருங்காபுரி வட்டத்தில் அமைந்த ஆக்கியம்பட்டி கிராமத்தில் உள்ள அ/மி செண்பக விநாயகர் திருக்கோயிலில் 23.11.2015-ல் நடைபெற இருந்த கிராமிய ஆடல் பாடல் விழாவிற்கு திருவரங்குறிச்சி காவல் நிலைய உதவி – ஆய்வாளர் விதித்த தடையை எதிர்த்து திரு.ராசு என்பவர் எண்.20559/2015-ல் மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் தொகுத்த வழக்கில் தான் மேற்குறித்த இந்த தீர்ப்பை நீதிமன்றம் அளித்திருந்தது.
இந்த வழக்கில் திரு.ராசு கோயிலில் உடைக் கட்டுப்பாடு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று மனுச் செய்திருந்தாரா என்று பார்த்தால் அப்படி எந்தவொரு கோரிக்கையையும் அவர் முன் வைக்கவில்லை என்று தீர்ப்பில் இருந்து தெரிய வருகிறது.
இந்த வழக்கில் இந்து அறநிலையத்துறையைச் சார்ந்த அரசின் செயலாளர் நீதிமன்றத்தால் தாமாகவே எதிர் தரப்பில் இணைக்கப்பட்டிருந்தார்.
சரி ! திரு.ராசுவின் விண்ணப்பம் தான் என்ன? அது தீர்ப்பின் முதல் பத்தியிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் வருமாறு:
விண்ணப்பம்:
‘இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226-ன் படி கொடுக்கப்பட்ட இந்த ரிட் மனுவானது திருவரங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் (3-வது எதிர்தரப்பாளர்) பிறப்பித்த சர்ச்சைக்குரிய ஆணையின் தொடர்பாக உள்ள அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தின் முன்கொணர்ந்து அவற்றில் பிறப்பிக்கப்பட்ட தடையாணை செல்லாது என உத்தரவிடுவதோடு, திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பாளையபாளையம் அஞ்சல், ஆக்கியம்பட்டி கிராமப்பகுதியில் அமைந்துள்ள அ/மி செண்பக விநாயகர் திருக்கோயிலில் 23.11.2015 அன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள கிராமிய ஆடல் பாடல் விழாவிற்கு உரிய காவல்துறை அனுமதி அளிப்பதோடு காவல்துறையின் பாதுகாப்பையும் அளிக்க உத்திரவிட வேண்டுதல்”.
இந்த விண்ணப்பத்தின் மீது உயர்நீதி மன்றம் ஓர் இடைக்கால ஆணையை சில நிபந்தனைகளுடன் பிறப்பித்து குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என்று உத்திரவிட்டுள்ளது. அதில் பத்தி-2ல் குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளில் அரசியல் ரீதியாக அமைந்தவை தவிர இந்தக் கோயில்களில் உடைக் கட்டுப்பாடு பற்றிய நிபந்தனைகளே இங்கு நம் கவனத்திற்குரியவை.
நிபந்தனை 10:
ஒரு தெய்வத்தை (அ) தேவதையைக் கும்பிட வரும் பக்தர்களிடையே ஆன்மீகச் சூழலை மேம்படுத்தும் விதமாக கோயிலில் கூடும் ஆண், பெண், குழந்தைகள் ஆகியோர் அணியும் ஆடையில் கட்டுப்பாடு விதிப்பது அவசியமாகிறது. அதன்படி இவர்கள் அணிய அனுமதிக்கப்படும் ஆடை பற்றிய விவரம் வருமாறு:
ஆண்: வேட்டி (அ) பைஜாமா மற்றும் மேலுடுப்பு
பெண்: புடவை (அ) தாவணியுடன் ஜாக்கெட் (அ) சுடிதாருடன் துப்பட்டா.
குழந்தைகள்: முழுக்க உடலை மறைக்கும் உடுப்புகள்.
நிபந்தனை 11:
காவல்துறையினர், இந்துக் கோயிலின் உள்ளே பெர்முடாக்கள், அரைக்கால் சட்டை, மினி ஸ்கர்ட்ஸ்,மிடீஸ், கை வைக்காத மேலுடுப்பு, இடுப்பிற்குத் கீழே அணியும் ஜீன்ஸ், குட்டை டி-சர்ட் போன்றவற்றை பக்தர்கள் அணிந்து வருவதை அனுமதிக்கக் கூடாது.
நிபந்தனை 12:
2-வது எதிர்தரப்பாளராகிய மணப்பாறை வட்ட டி.எஸ்.பி உடனே நிகழ்ச்சிக்கு மேற்காணும் நிபந்தனைகளை விதித்து அனுமதி அளிக்க உத்தரவிடப்படுகிறது.
இந்த நிபந்தனைகள் நீதிமன்றம் தாமாகவே விதித்துள்ளவை. இவை சட்டரீதியாக, தர்க்க ரீதியாக, சமய ரீதியாக மற்றும் சமூக ரீதியாக நின்று பயன் தரத்தக்கவையா என்பது ஆய்வுக்குரியது.
I. சட்டரீதியான ஆய்வு
மேற்காணும் தீர்ப்பின் 10, 11, 12 ஆகிய நிபந்தனைகள் சட்டரீதியானது தானா, இவற்றை எந்தச் சட்டப்பிரிவின் கீழ் விதிக்க நீதிமன்றம் அதிகாரம் பெற்றிருக்கிறது என்பன சிந்தித்தற்குரியவை.
முதலில் 10-ஆம் நிபந்தனையைப் பார்ப்போம். இந்துக் கோயில்களில் வாழும் பக்தர்களுக்கிடையே ஆன்மீகச் சூழலை மேம்படுத்த என்று கூறி ஆடைக்கட்டுப்பாடுகளைப் பிறப்பிக்க நீதிமன்றம் எப்போது ஒட்டு மொத்த இந்து மதத்தின் அதிகார மையமாயிற்று?
ஒரு நீதிமன்றத்தின் வேலை ஒரு குறிப்பிட்ட சமயத்தின் ஆன்மீகச் சூழலை மேம்படுத்துவதா? அரசாங்கமே மதச்சார்பற்றதாக இயங்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கும் போது, அரசு இயற்றும் சட்டங்களின் படி ஓர் அரசு (அ) அமைப்பு (அ) தனிமனிதன் தொடர்புடைய வழக்குகளில் சட்டமீறல் இருக்கிறதா என்பது பற்றி மட்டுமே சீர்தூக்கிப் பார்த்துத் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம் எப்படி சட்டத்திற்கு விரோதமாக, ஒரு மதச்சார்பாக இந்து மதக் கோயில்களில் நடைமுறைப்படுத்த வேண்டியவற்றை தானே சில விதிமுறைகளை அறிமுகப்படுத்துவோம் என்று இறங்க முடியும்? அடுத்து இசுலாம், கிறித்துவம், சீக்கியம், சமணம் போன்ற இதர மதங்களின் நடவடிக்கைளிலும் இறங்கி விதிமுறைகளை நீதிமன்றம் இயற்றுமா? இயற்றத்தான் முடியுமா? இதென்ன நீதிமன்றமா அல்லது மதங்கள் அனைத்தின் கூட்டதிகார (Federal) நிறுவனமா? என்ற கேள்வி எழாதா?
அப்புறம், அவரவர் மதநம்பிக்கையில் அரசு குறுக்கிடாது, மதநம்பிக்கையைப் பொறுத்தவரை அவரவர் விருப்பப்படி ஒவ்வொன்றை ஏற்றொழுக அவரவர்க்குச் சுதந்திரம் உண்டு என்று அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25-ம் 26-ம் அளிக்கிற அடிப்படை உரிமைகள் என்ன ஆவது? காற்றில் பறக்க விட்டு விடலாமா?
நம்பிக்கை எதுவானாலும் சமூக கட்டமைப்பிற்கும், பொது அமைதிக்கும், கண்ணியத்திற்கும் எவ்விதப் பாதிப்பும் வரக்கூடாது என்று தான் அரசியல் சட்டம் சொல்லலாம்; சொல்லி இருக்கிறது. அதன்படி அந்தந்த சமயத்தவர்கள் அவரவர் வழிபாட்டிடங்களில் ஆடைக்கட்டுப்பாடுகளை அமைத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து கூறலாமே ஒழிய, அதற்கோ அல்லது வேறு எதற்குமோ நீதிமன்றம் விதிமுறைகளை வகுப்பதோ உரிய சட்டங்களை இயற்றவோ, அல்லது இப்படி சட்டங்களை இயற்று என்று கூறவோ அதிகாரம் இல்லையே !
இவ்வாறு தனக்கே அதிகாரம் இல்லாதபோது நீதிமன்றமே ஒரு சமயச் சார்பான நடவடிக்கைக்கு காவல்துறையைப் பொறுப்பாக்கி அதனிடமிருந்து ஓர் ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றோ, அதை மீறினால் காவல்துறையே அனுமதி கொடுக்க மறுக்கலாம் என்றோ அதிகாரங்களை எப்படி வழங்க முடியும்? ஆனால் இந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் இப்படிச் செய்திருக்கிறதே என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது!
இதைவிட வேடிக்கை என்னவென்றால் நீதிமன்றமே இந்த ஆடைக்கட்டுப்பாடு பற்றி விதிகளை இயற்றி அவையடங்கிய உத்தரவை அறிவிக்க அரசுக்கும், இந்து அற நிலையத்திற்கும் கருத்துரையை தீர்ப்பின் 4-ஆம் பத்தியில் கூறிவிட்டு அதற்கு முன்னரே 2-ஆம் பத்தியில் இது பற்றிய உத்தரவை தீர்ப்பாக வெளியிடுவது எப்படிச் சரியாகும்? காவல்துறையே நீதிமன்றத்தின் நேரடி உத்திரவின்படி இது பற்றிய அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொள்ளலாம் என்றால் பிறகு அரசு எதற்கு? இந்து அறநிலையத்துறைதான் எதற்கு?
இதற்கு மேலும் ஒன்று அதிசயமாக ஆணையிடப்பட்டுள்ளது. மிக மிக முக்கியமான இந்தக் கொள்கை முடிவை அரசிடமிருந்தும், உரிய துறையிடமிருந்தும் பிடுங்கி காவல்துறையிடம் ஒப்படைத்ததே தவறுடைத்தாகத் தெரியும் போது காவல்துறையிலும் இந்த கொள்கை முடிவு பற்றிய உத்தரவை அத்துறையின் உச்ச அதிகாரியிடமிருந்து அனுப்பச் சொல்லாமல், ஒரு கீழ்நிலை அதிகாரியான டி.எஸ்.பியிடமிருந்து அனுப்பச் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை அல்லவா! ஆணை, தொடர்புடைய இந்து அறநிலையத்துறை அல்லவா பிறப்பிக்க வேண்டும்? வேண்டுமானால் அறநிலையத்துறை ஆணையை நடைமுறைப்படுத்த காவல்துறையின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுதானே சரியான நிர்வாக நடைமுறையாக இருக்கும்?
அதிசயத்திற்கும் மேலாக அதிசயமாக இன்னொன்றும் நடந்துள்ளது. அது என்னவென்றால், எதிர் தரப்பினருக்காக வாதாடிய அரசின் சிறப்பு வழக்கறிஞர் இந்த ஆடைக்கட்டுப்பாடு பற்றி அரசிற்கும், இந்து அறநிலையத்துறைக்கும், ஓர் கருத்துருவை அனுப்பி முடிவெடுக்க வேண்டும்; காரணம் இது ஒரு கொள்கை முடிவு என்று நீதிமன்றத்தில் எடுத்துக் கூறிய பிறகும் நீதிமன்றம் அதை அறிந்தே தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்து நேரடியாகக் காவல்துறை கீழ்நிலை அதிகாரியிடமிருந்து இப்படி ஓர் ஆணை பிறப்பித்துள்ளது அதிசயத்திலும் அதிசயம் அல்லவா?
எல்லாவற்றிற்கும் மேலாக தீர்ப்பின் 11-ஆம் பத்தியில் அரசு இந்த ஆடைக்கட்டுப்பாடு பற்றி உடனே முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் வற்புறுத்தியுள்ளது.
ஆக ஒரு கொள்கை முடிவை அரசு எடுக்கு முன்பாகவே நீதிமன்றம் அந்த முடிவை எடுத்து, அந்த முடிவை அரசு எடுக்கும்வரை, அது மாறாக எடுக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கும்போதும், அதுவரை 01.01.2016 முதல் தான் எடுத்த தன்னிச்சையான முடிவு நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்று தீர்ப்பின் 11-ஆம் பத்தியிலேயே உத்தரவிட்டுள்ளது எந்தச் சட்டஅடிப்படையில் என்றே புரியவில்லை. நீதிமன்றத்திற்கு இது பற்றி ஏன் இவ்வளவு அவசரம் என்றும் புரியவில்லை.
சரி! வழக்கு தொடர்ந்தவர் இந்த ஆடைக்கட்டுப்பாடு உடனே அமுலுக்கு வரவில்லை என்றால் கோயில் வழிபாடுகளே நடைபெற முடியாத அளவிற்கு கோயிலை இழுத்து மூடவேண்டிய அவசரம் உள்ளது என்று மனுவில் எங்கேயாவது விண்ணப்பம் வைத்திருக்கிறாரா என்றால், அவரோ இது பற்றிய பேச்சையே மனுவில் எடுக்கவில்லை. ஒரு வேளை மனுதாரரின் நிகழ்ச்சிக்குத் தடை விதித்த காவல்துறை இந்த ஆடைக்கட்டுப்பாட்டையோ அல்லது அதன் அவசர அவசியத்தைக் காட்டியோ அனுமதி மறுத்ததா என்றால் அது பற்றியும் தீர்ப்பில் பேச்சையே காணோம்.
பின்னர், இந்த ஆடைக்கட்டுப்பாட்டு விஷயம் எப்படி தீர்ப்பில் நுழைந்தது? தீர்ப்பின் பத்தி 7-ல்,சோம்நாத் கோயிலில் அமுல்படுத்தப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு பற்றியும், பத்தி 8-ல் கிறித்துவ சர்ச்சுகளில் அமுல்படுத்தப்படும் ஆடைக்கட்டுப்பாடு பற்றியும், பத்தி 9-ல் இசுலாமியர்களின் மசூதிகளில் அமுல்படுத்தப்படும் ஆடைக்கட்டுப்பாடு பற்றியும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. ஆக, இவற்றின் தாக்கத்தால் உந்தப்பட்டு நீதிமன்றம் இந்த வழக்கைப் பயன்படுத்தித் தன்னிச்சையாக தமிழக இந்துக்கோயில்களிலும் ஆடைக்கட்டுப்பாடு என்ற இந்த விஷயம் தீர்ப்பில் கையாளப்பட்டுள்ளது என்று கருத இடமுள்ளது. எப்படி இருந்தாலும், வழக்கில் இல்லாத ஒன்றை நீதிமன்றம் எப்படி நுழைத்துக் கொண்டு அதன்மீது தீர்ப்பு வழங்க இயலும் என்பது புரியாத புதிராக உள்ளது.
இது பற்றி உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்த்தோமானால் அண்மையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது பற்றிய வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் சட்டக்கருத்துக்கள் இங்கே நினைவு கூரத்தக்கவை.
தீர்ப்பு பத்தி 36:“Often occasions will arise when it may become necessary to determine whether a belief or a practice claimed and asserted is a fundamental part of the religious practice of a group or denomination making such a claim before embarking upon the required adjudication. A decision on such claims becomes the duty of the constitutional court. It is neither an easy nor an enviable task that courts are called to perform. Performance of such tasks is not enjoined in the court by virtue of any ecclesiastical jurisdiction conferred on it but in view of its role as the constitutional arbiter. Any apprehension that the determination by the court of an essential religious practice itself negatives the freedoms guaranteed by Articles 25 and 26, will have to be dispelled on the touch stone of constitutional necessity”.
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘பல நேரங்களில் தீர்ப்புகளைக் கூற அமர்வதற்கு முன், இதுதான் எங்கள் சமய வழக்கம் என்று ஒரு குறிப்பிட்ட சமயப்பிரிவினர் முன் வைக்கும்போது அந்த சமய நம்பிக்கை அல்லது வழக்கம் அந்தச் சமயத்தின் அடிப்படையான கருப்பொருள் தானா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது. இது பற்றிய முடிவை நீதிமன்றம் நீதி வழங்குவதற்கு அடிப்படையாகக் கொள்வது கடமை ஆகிறது. இது அவ்வளவு எளிதான பணி என்றோ எங்களுக்கே உரியது என்று பெருமைக்குரிய பணியாகவோ கருதிக் கொள்ளவோ முடியாது. உண்மையில் நீதிமன்றங்கள் தாம் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்ற பணிக் கட்டாயம் இல்லை. காரணம் சமயக்கருத்துக்களை தீர்மானிக்கிற வேலை நீதிமன்றத்திற்குப் பணிக்கப்பட்டு இருப்பதாகக் கருதமுடியாது. ஆனால் நீதிமன்றம் இது போன்றவற்றில் ஒரு நடுவராகப் பணியாற்றலாம். இவ்வாறு சமயக்கருத்துக்களை நுழைத்துத் தீர்ப்பளிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 25 மற்றும் 26-ல் அளிக்கப்பட்ட சமயச் சுதந்திரத்தில் தலையிடுவதாக ஆகாதா என்று அச்சப்படத் தேவையில்லை. இது குறித்த எவற்றிலும் சட்ட உரிமைகள் எதுவும் மீறப்பட்டிருக்கிறதா என்று உரசிப்பார்த்து உறுதிப்படுத்துவதே நீதிமன்றம் செய்யத்தக்கது”.
இதன் மூலம் நீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 25 மற்றும் 26-ல் கூறப்பட்ட சமயச் சுதந்திரத்தில் தலையிட முடியாது. ஆனால் அதே பிரிவுகளில் உறுதி செய்யப்பட்டுள்ள சமூக அமைதி, நல்லிணக்கம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஒரு சமய நடவடிக்கை பாதகமாக இருக்கிறதா என்பதை ஒரு நடுவர் நிலையில் நின்று பார்த்து தீர்வுக்கு வழிவகுக்கலாமே ஒழிய அதுவே ஒரு சமயநீதிபாலன நிறுவனமாக (Ecclesiastical Judicatory) செயல்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது.
ஆக, இதன்படி கோயிலில் ஆடைக்கட்டுப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது அந்தந்தக் கோயிலைச் சார்ந்த சமய அமைப்புகள் நிர்ணயிப்பது. அப்படி அவை நிர்ணயித்ததில் சமூக நல்லிணக்கம், பொது அமைதி, பொதுக் கண்ணியம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று குறிப்பிட்ட அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளின்படி ஆய்ந்துரைக்கத்தான் ஒரு நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதை விடுத்து அந்த ஆடைவிஷயமாக பல செய்திகளால் உந்தப்பட்டுத் தாமே ஒரு முடிவுக்கு வந்து தாமே அதைத் தன்னிச்சையாக நிர்ணயித்து அறிவித்தும் அதன்மீது ஆணை பிறப்பித்தும் செயல்பட முடியுமா என்பது இங்கே சிந்தித்துப் பார்க்கத் தக்கது.
உண்மை நிலை இப்படி இருக்க நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் இந்துக் கோயிலின் ஆன்மீகச் சூழலை மேம்படுத்த என்று ஒருநிலைப்பாட்டை, அது ஏதோ ஒரு சமயநீதிபாலன நிறுவனம் போலத் தன்னைக் கருதிக் கொண்டு எப்படி ஓர் உத்தரவைப் பிறப்பிக்க முடியும்? அப்படியே பிறப்பித்தால் அதை எப்படி சட்ட அங்கீகாரம் உடையதாக ஏற்க முடியும்?
II. தர்க்க ரீதியான ஆய்வு
அடுத்து தீர்ப்பின் பத்தி 2-ல் முன்னதாகவும், பிறகு பத்தி 10-ல் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆடைக்கட்டுப்பாடுகள் தர்க்க ரீதியாகவாவது ஏற்புடையதா என்று இனி பார்ப்போம்.
தீர்ப்பின்படி ஓர் ஆண் வேட்டியும், பைஜாமாவும் தான் இடுப்புக் கீழே அணியலாம். பைஜாமாவை அனுமதித்த தீர்ப்பு பத்தி 2-ல் மருங்காபுரி நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் பேண்ட்டை அனுமதிக்கவில்லை அல்லது பேசவே இல்லை? தீர்ப்பு தந்த நீதியரசர்க்கே வெளிச்சம்! இன்னும் சொல்லப்போனால் வேட்டியை விட உறுதியாக இடுப்பைக் கவ்விப்பிடித்து நழுவாமல் இருப்பது பேண்ட் தான்! பேண்ட் வெள்ளைக்காரன் அறிமுகப்படுத்தியது என்பதால் ஒரு வேளை ஆக்கியப்பட்டி செண்பக விநாயகருக்கு அது பிடிக்காதோ? அது கடவுளுக்கே வெளிச்சம்! அப்படியானால் பைஜாமா தமிழகத்திற்கு அயலான வடநாட்டுச் சரக்காயிற்றே! பைஜாமா ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலமாக தமிழகத் திரைப்படக் காதல் மன்னன் பயன்படுத்திய உடையாதலால் மருங்காபுரி பிரம்மச்சாரி விநாயகருக்கு இந்தக் காதல் பைஜாமா போதும், என நினைத்த அத்தெய்வம் என் கோயிலில் பிற எதற்கு என்று நினைத்ததோ என்னவோ! இல்லை, தீர்ப்பு தந்தவர் இதுபற்றி இப்படியெல்லாம் எண்ணினாரா என்றும் தெரியவில்லை.
ஆனால் இதையெல்லாம் பின்னால் உணர்ந்து தானோ என்னவோ தீர்ப்பின் பத்தி 2-ல் பேண்ட்டைப் பற்றிக் கூறாமல் தவிர்த்து, தீர்ப்பின் பத்தி 10-ல் பேண்ட்டும்,சர்ட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டதோ என்னவோ!
அடுத்து ஆண்கள் வேட்டியும்,மேலாடையும் அணிதலைக் குறிப்பிட்டதையும் கருதிப் பார்க்கலாம். உண்மையில் தென் மாவட்ட பெரிய கோயில்களில் எல்லாம் இந்திய ஜனாதிபதியே ஆனாலும் மேலாடையைக் கழற்றி விட்டுத்தான் கருவறைக்கு அருகில் வணங்க வரலாம் என்று ஒரு வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் அந்தக் கோயில்களின் கட்டுப்பாட்டை உடைத்து இந்தத் தீர்ப்பு மேலாடை அணிவதையும், சட்டை அணிவதையும் வற்புறுத்தி உள்ளது. ஆனால் பின்னினைவு வந்து பத்தி 11-ல் அரசு இது பற்றி முடிவெடுத்து அறிவிக்கும் வரை ஆண்கள் மேலாடை இல்லாமலும், சட்டையைக் கழற்றியும் வணங்குவது தொடரலாம் என்று தீர்ப்பு கூறுகிறது.
எப்படியோ, இந்தத் தீர்ப்பின்படி இனி, கோயில்களில் பாடும் ஓதுவார்கள், கருவறை மற்றும் சந்நிதிகளில் அர்ச்சகப் பணியாற்றும் அர்ச்சகர்கள் கூட இனி மேலாடை (அ) சட்டை அணிந்தே தத்தம் பணியை ஆற்ற வேண்டும். காரணம், கடவுளை வணங்கும் இடத்தில் சரியான ஆன்மீகச் சூழலைக் கடைப்பிடிக்க வேண்டாமா என்று தீர்ப்பின் பத்தி 11 கூறுகிறது. அதோடு காவல்துறையினரும் அவர்களை உள்ளே விடமாட்டார்கள்!
இங்கே இன்னொன்றும் நம் நினைவுக்கு வராமல் இல்லை. அதாவது வணங்கப்படும் கடவுளர்கள் கூட மேலாடை இல்லாமல் தான் இருக்கிறார்கள்;மூலவர் மட்டுமல்ல, நால்வர் மற்றும் ஏனைய பரிவார தேவதைகள் அனைவருமே மேலாடை இல்லாமல் தான் இருக்கிறார்கள்! நாலுபேர் வந்து வணங்கும் பொது இடத்தில் இப்படி மேலாடை இல்லாமல் சரியான சூழலைக் காக்காமல் இருக்கும் சிலைகளை இனி என்ன செய்யலாம்? எல்லாவற்றையும் மாற்றி விடலாம் அல்லது எல்லாச் சிலைகளுக்கும் பேண்ட், சட்டை மாட்டி விடலாம்! அல்லது பைஜாமா சட்டைக்குள் அவை புகுந்து கொள்ளலாம் !
அடுத்து பெண்களின் ஆடை பற்றி தீர்ப்பு என்ன கூறுகிறது என்று பார்ப்போம்!
பெண்கள் புடவை அல்லது தாவணி அணிந்து நிச்சயமாக ஜாக்கெட் போட்டிருக்க வேண்டும். சில கிழவிகள் ஜாக்கெட்டே அணிவதில்லை! குறிப்பாக கிராமங்களில் கோயில்களில் மட்டுமல்ல, ஊர்ப்புறங்களில் நடமாடும் போதே ஜாக்கெட் தைத்துக் கொள்ள வேண்டும்! தைத்து அணிந்து வர வேண்டும்! ஜாக்கெட் இல்லாமல் இது என்ன ஆபாசம் என்று சமூகம் கிழவிகளைப் பார்த்துத் திட்டக் கூடாதல்லவா?
இது போக தென்மாவட்டங்களில் கேரள எல்லைக்கு அருகில் உள்ள தமிழகக் கோயில்களில் எல்லாம் மலையாளப் பெண்கள் வெறும் முண்டு அணிந்து கொண்டு வருவதுண்டு. அவர்களை எல்லாம் இனி என்ன செய்யலாம்? அவர்களைப் பற்றி தீர்ப்பு ஒன்றும் கூறவில்லை. எனவே அவர்கள் எல்லாம் நீதிமன்றம் இது பற்றி ஓர் ஆணை பிறப்பிக்கும் வரை கோயில்களை எட்டிப் பார்க்கக் கூடாது. ஏனென்றால் தீர்ப்பின் பத்தி 2-ல் கூறியபடி காவலர்கள் அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டார்களே! நீதிமன்றம் காவலர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்து விட்டதல்லவா?
அடுத்து, சுடிதார் போட்டு வருவதைப் பார்ப்போம். இப்படி வரும் பெண்கள் மேலே துப்பட்டா அணிந்து வர வேண்டும். அது கீழே அவ்வப்போது நழுவி விடுமே! பின் (Pin) போட்டுக் கொள்ள வேண்டும்! இல்லாவிட்டால் கூட்டத்திற்குள் புகுந்து இதைக் கவனித்து கவனித்து காவலர்கள் தீர்ப்பின்படி விரட்டி விடக்கூடும்! பின் காவலர்கள் எதற்கு இருக்கிறார்கள்! கோவிலின் புனிதத்தைக் காப்பதையும் ஆன்மீகச் சூழலை மேம்படுத்துவதையும் நீதிமன்றம் காவலர்களிடம் தானே நேரடியாக ஒப்படைத்திருக்கிறது – இந்தத் தீர்ப்பின் மூலம் !
அடுத்து கோவிலில் உள்ள பெண் தெய்வங்களின் சிலைகளுக்கு வருவோம் !
அவை ஒன்று கூட ஜாக்கெட்டே போட்டிருப்பதில்லை! இதற்கு நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது? அரசு இதுபற்றி எல்லாம் முடிவெடுக்கும் முன் தானே முடிவெடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நீதிமன்றம் இதுபற்றி எந்தக் கருத்தும் கொள்ளாமலா இருக்கும்? எனவே இது பற்றிய முடிவை நீதிமன்றத்திற்கே விட்டு விடுவோம் ! இன்னொரு ரிட் மனுவில் அது வெளிவந்துவிடும்.
மூன்றாவதாக குழந்தைகளின் ஆடைக்கு வருவோம் !
குழந்தைகள் முழுமையாக உடலை மறைக்கும் ஆடையை அணிந்திருக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறுகிறது. குழந்தைகளின் வயதைப் பற்றி தீர்ப்பு எதையும் வரையறுத்துக் கூறவில்லை. எனவே தாய் மடியில் உள்ள குழந்தை கூட உடல்மூடி உடை அணியவில்லை என்றால் அது ஆபாசம் இல்லையா? இதைப் பார்த்தால் உடனே காவலர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் அவை கதறக் கதறக் கோயிலுக்கு வெளியே விட்டு விட்டு வந்துவிடுவார்; ! நீதிமன்றத் தீர்ப்பின்படி கோவிலின் புனிதத்தை அவரல்லவா காப்பாற்ற வேண்டும்!
ஏழைத் தாயொருத்தி குழந்தைக்குச் சட்டை போடப் பணமில்லை ஐயா, என்றால் அதற்குக் காவலரா பொறுப்பு ! அப்படி ஒரு நிலைமை இருக்குமானால் அந்த ஏழைத்தாய் தீர்ப்பின்படி கோயிலுக்கு வரக்கூடாது ! அவ்வளவுதான் !
ஆனால் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் இறுக்கமான சீருடையை அணிந்தவராய் கோயிலில் கூட்டத்தின் உள்ளே வலம் வரலாம் – தீர்ப்பின்படி அவருக்கு மேலே துப்பட்டா எல்லாம் தேவை இல்லை ! என்னையா இது ! மற்ற பெண்கள் சுடிதாருடன் துப்பட்டா போடாவிட்டால் அனுமதி மறுக்கின்ற காவல்துறை பெண் காவலர்கள் துப்பட்டா இல்லாமல் இறுக்கமான ஆடை அணிந்து வருவதை மட்டும் அனுமதிப்பது என்ன நியாயம் என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஒழுக்கத்தை நிலை நாட்ட வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரம் அல்லது நீதிமன்றம் அனுமதிக்கின்ற சுதந்திரம்.
ஒருவேளை, காவல்துறை அடையாளச் சின்னங்கள் எல்லாம் இல்லாமல், ஆனால் அதே போல் இறுக்கமான பேண்ட், சட்டைகளுடன் பொதுமக்களைச் சார்ந்த பெண்கள் கோயிலுக்கு வந்தால் நீதிமன்றம் அதை அனுமதிக்குமோ என்னவோ ! ஆனால் இது பற்றி நீதிமன்றத் தீர்ப்பில் எதுவும் இல்லை.
இப்படி தீர்ப்பை ஆய்ந்து பார்த்தால் பல இடங்களில் அது தர்க்க ரீதியாகப் பொருந்தி வரவில்லை.
III. சமயரீதியான ஆய்வு
இனி, ஆடைக் கட்டுப்பாடு பற்றி தீர்ப்பு கூறுவதை சமயரீதியான சிந்தனைகளுடன் வைத்து உரசி ஆய்வோம்.
சிவபெருமானை சைவ சமய அருளாளர்கள் பல இடங்களில் நக்கன் என்றே விளித்து வணங்கி இருக்கிறார்கள். நக்கன் என்றால் ஆடையே அணியாமல் நிர்வாணமாய் இருப்பவன் என்று பொருள். குணம், குறி இல்லாத பரம்பொருளுக்கு எதை மறைக்க ஆடை அணிய வேண்டும் என்பது அதன் உள்ளுறை. ‘ஆணல்லை, பெண்ணல்லை, அலியுமல்லை’ என்பது அப்பர் வாக்கு. ‘பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி’ என்று மணிவாசகர் பாடுகின்றார். இப்படி ஆயிரமாயிரம் மேற்கோள்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதற்காக, பரம்பொருள் சட்டையே இல்லாமல் திரிந்தார் என்றும் சொல்லவிட முடியாது. அருவமான பரம்பொருள் உருவம் எடுத்து வரும்போது கோவணம் மட்டும் கட்டி வந்திருக்கிறது. மேலே யானைத் தோல் போர்த்தியும் வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மேலே சட்டை கூட போட்டுக் கொண்டு வந்திருக்கிறது. ‘வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர் அன்னே என்னும்’ என்று திருவாசக வரிகள் கூறுகின்றன. குப்பாயம் என்ற சொல்லுக்கு சட்டை என்று பொருள். சீர்காழியில் உள்ள சுவாமிக்கு சட்டைநாதர் என்றே பெயர்.
ஆக, கடவுள் ஆடை அணிந்தும் வந்துள்ளார்; ஆடை அணியாமல் நிர்வாணமாயும் வந்துள்ளார். ஏன் இறைவனோடு ஒன்றுவதையே நிர்வாணம் என்றும் சொல்கின்றனர்.
ஓ! வணங்கப்படும் பரம்பொருளுக்கு ஆடை இல்லாதபோது அப்பரம்பொருளை வணங்கச் செல்லும் பக்தர்கள் ஏன் ஆடை அணிய வேண்டும் என்று யாரும் வாதிட முடியாது. காரணம், வணங்கச் செல்லும் பக்தர்கள் பரம்பொருள் அல்லர்; குணம், குறி இவைகளை உடைய உயிரினங்கள். அடுத்து கடவுள் எவ்வித ஆடையும் ஏற்பவர் என்பதால் தர்க்க ரீதியாகப் பொருந்தும் வகையில் ஆடையில் ஒரு சமூகக் கண்ணியத்தைக் குலைக்காத குறைந்தபட்ச வரம்பு இருக்க வேண்டியது அவசியம் என்பது சமயச் சிந்தனைகளாலும் வலியுறுகிறது. எனவே சமயரீதியாக பக்தர்களுக்கு ஆடையும் அதற்குரிய சமூகம் ஒப்புக்கொள்ளும் கட்டுப்பாடுகளும் தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் வகையில் இருத்தல் அவசியம் தான் என்று திண்ணமாகச் சொல்லலாம்.
IV. சமூகரீதியான ஆய்வு
இனி, ஆடை பற்றிய வரம்புகளை எல்லாம் சமூகமே நிர்ணயிக்கும் தகுதி உடையது. எனவே சமூகம் எதையெதை எல்லாம் எவ்வெக் காலங்களில் எல்லாம் ஆடை பற்றிய வரம்பாகக் கொண்டிருந்தது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பழங்காலங்களில் அரசனேயானாலும் இடுப்பிற்கு மேல் நகைகளை வேண்டுமானால் அணிந்து வருவானே ஒழிய சட்டை எல்லாம் மேலே போட்டுக் கொள்வது கிடையாது. இதுவே தமிழரின் பழக்க வழக்கம். இதை யாரும் ஓர் ஆபாசமாகக் கருதியதே இல்லை. மேலே எப்போதாவது துண்டு போட்டுக் கொள்வது என்றால் அது ஏதாவது சிறப்பு நிகழ்ச்சியாகத் தான் இருக்கும்.
மேலே எப்போதும் துணியைப் போர்த்திக் கொள்வதைத் தமிழகத்தில் முதன்முதலில் நுழைத்தவர்கள் புத்தத் துறவிகள் தாம். இதை சம்பந்தர் கூட புதிய விநோதமான வழக்கம் என்றும் இதனாலா மோட்சம் கிட்டும் என்றும் எள்ளலான தொனியில் வைத்துப் பாடியுள்ளார்.
“வேர்த்த மெய்யுருவத்து உடைவிட்டு உழல்வார்களும்
போர்த்த கூறைப் போதி நீழலாரும்”
‘மிடைபடு உடையினை விட்டுளோரும்
உடல் போர்த் துளோரும்”
இப்படி சம்பந்தரின் பாடல்கள் பலவுள. ஒருபுறம் வடக்கிருந்து வந்த சமணர்கள் நிர்வாணமாகத் திரிந்து தம்மைத் திகம்பரத் துறவிகள் என்று அழைத்துக் கொண்டார்கள். இன்னொரு புறம் வடக்கிருந்து வந்த புத்தத் துறவிகள் தமிழகத்து வெப்ப நிலைக்கு மாறாக உடல்முழுதும் காவியுடை போர்த்திக் கொண்டு வந்தார்கள்.
தமிழர்களின் நிலைப்பாடு இதில் எதுவாக இருந்தது என்றால் உடையே இன்றி உழல்வதும் பழி; உடம்பிற்குப் போதியவற்றிற்கு மேல் வறிதே உடைகளைச் சுமத்துவதும் பழி. வாழ உடுக்கின்றோமே ஒழிய உடுக்க வாழவில்லை. இதுதான் உடைபற்றி தமிழர் எடுத்தநிலை. இந்த வெப்ப நிலத்திற்கு இதுவே பொருந்துவது என்பதற்கு இங்கு வரும் மேலை நாட்டுப் பயணிகள் கூட உடம்பின் மேல் ஆடை ஏதும் இல்லாமல் பொது இடங்களில் கூட திரிவதே சான்று.
இந்த நிலை நெடுநாள் நீடித்தது. காந்தி கூட தமிழர்தம் ஆடை பற்றிய சிந்தனையை அப்படியே பின்பற்றித் தான் சட்டையைக் கழற்றி எறிந்தார். ஆனால் இந்தத் தீர்ப்பின்படி காந்தியே கோவிலுக்குள் வந்தாலும் சட்டையை மீண்டும் போட்டுக் கொண்டுதான் வரவேண்டும். இல்லையென்றால் காவலர் காந்தியைத் தடுத்து விரட்டிவிடலாம்.
அடுத்து ஆண்கள் இடுப்பிற்குக் கீழே முழங்கால் தெரிய அணியும் பெர்முடாஸ் கண்ணியமில்லாத ஆடை என்று தீர்ப்பில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கோயிலில் அர்ச்சகராய்ப் பணிபுரிவோர் எல்லாம் பஞ்ச கச்சம் கட்டி முட்டி வரை தான் துணிபுரள பணிபுரிகிறார்கள். அவர்களின் முழங்காலுக்குக் கீழே எல்லாம் துணி கிடையாது. பெர்முடாஸ் அணிவதற்குத் தடை என்றால் அர்ச்சகர் இனி முழங்காலையும் மறைக்கும் பேண்டில் வர வேண்டுமா? ஏன் வேட்டியில் வரலாமே என்றால் அது பணிபுரியும் போது அர்ச்சகருக்கு இடையூறாக இருக்கும் என்றால் பேண்ட் போட்டுக் கொள் என்று கூறுகிறதா தீர்ப்பு என்று தெரியவில்லை.
ஆனால் ஆண்கள் மேலே சட்டை போடுவது என்பது ஆங்கிலேயர் வந்தபிறகு தான் தமிழகத்தில் பரவலாயிற்று.
இதே போன்று பெண்கள் விஷயத்தை எடுத்துக் கொண்டால் பழந்தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் ஜாக்கெட்டை அறியாதவர்கள். அவர்கள் அணிந்ததெல்லாம் கச்சு என்பது தான். அதைத்தான் கோயில் சிலைகளில் கூட இன்றும் காண்கிறோம். ஆனால் அதை இப்போது வற்புறுத்த முடியுமா?
அதோடு அன்று குழந்தைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதுவரை அம்மணமாகவே திரிந்தன. அதை யாரும் ஆபாசமாக எடுத்துக் கொண்டதில்லை. இன்று கூட சம்பந்தரின் சிலைகள் அம்மணமாகவே ஞானப்பால் உண்டதாகக் காட்டப்படுகின்றன: ஓவியங்களும் அப்படியே! பெண் குழந்தைகளுக்கு அவரவர் வசதிக்குத் தக்கபடி பொன்னினாலோ அல்லது வேறு உலோகத்தாலோ ஆலிலை போன்ற அணி ஒன்று மட்டுமே இடுப்பில் அணியப்பட்டு வந்தது.
இதெல்லாம் அந்தக் கால சமூக வரம்புகள். இன்று அவை பொருந்துமா என்றால் பொருந்தாது. இவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளலாமா என்றால் மாற்றிக் கொள்ளலாம். எதை மாற்றிக் கொள்ளக் கூடாது என்றால் கொள்கையைத் தான் மாற்றிக் கொள்ளக் கூடாது. இங்கு கொள்கை என்பது சமயக் கொள்கையைக் குறிக்கும். அதை மாற்றக் கூடாது. காரணம் கொள்கை வேறு பழக்க வழக்கங்கள் வேறு. பழக்க வழக்கங்கள் காலத்துக்கேற்ப யார் தடுத்தாலும் தானாக மாறி நிற்பன. அதுவும் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதன் நிபந்தனை. இந்தச் சமூகம் என்பது எது? சமூகத்தின் எந்தப் பகுதியை சமூகம் என ஏற்றுக் கொள்ளலாம்?
வழக்கு எனப்படுவது ‘உயர்ந்தோர் மேற்றே’ என்று தொல்காப்பியம் இதுபற்றிச் சிறந்தெடுத்துக் கூறுகிறது. எனவே சமூகத்தின் ஒரு பகுதியான உயர்ந்த சான்றோர் பெருமக்களே சமூக வரம்புகளை மரபாக நிலை நிறுத்தும் தகுதியுடையவர்கள் என்று அக்காலத் தமிழகம் சொன்னது. அது எக்காலத்திற்கும் பொருந்துவது என்பதால் இது பற்றி வரம்புக் கட்டிக் கூற வேண்டியது நீதிமன்றம் அல்ல சமூகச் சான்றோர்களே! இங்கே கோயில் நுழைவு பற்றிப் பேசப்படுவதால் தொடர்புடைய அவ்வச் சமயச் சான்றோர்களே இதற்குத் தகுதியுடையவர்கள் எனலாம்.
இனி, இங்கே சிந்தித்தவற்றை எல்லாம் ஒருங்கு தொகுத்து பார்த்தால் இந்தத் தீர்ப்பை,
1. சட்ட ரீதியாக ஆய்ந்தால் ஏற்றுக் கொள்ளத் தக்கதாய் இல்லை என்பதற்கு மேலே காட்டிய காரணங்கள் வலுவாக இருக்கின்றன.
2. தர்க்க ரீதியாக ஆய்ந்து பார்த்தால் பல இடங்களில் தீர்ப்பு பழக்க வழக்கத்திற்கும் பொருந்தாததாக இருக்கின்றது.
3. சமய ரீதியாக ஆய்ந்து பார்த்தால், வணங்கப்படும் கடவுளைப் பொறுத்த வரை ஆடை ஒரு பொருட்டல்ல: கடவுள் நிர்வாணமாய் இருப்பதிலிருந்து சட்டை போட்டுக் கொள்ளும் வரை எல்லாம் அவர்க்கு ஏற்புடையதாகவே இருக்கிறது; ஆனால் பக்தர்களாகிய உயிரினங்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அவசியம் என்று தெரிகிறது.
4. சமூக ரீதியாக ஆய்ந்து பார்த்தால் ஆடை என்பது பழக்க வழக்கமே என்றும், அது கால வகையினால் மாற்றத்திற்குரியது என்றாலும் அதைச் சமூகம் ஏற்றுக் கொள்வதாக இருக்க வேண்டும் என்றும், அதை நிர்ணயம் செய்யும் சமூகம் உயர்ந்த சான்றோர் எனப்படும் அவ்வச் சமயச் சான்றோர்களே என்றும் இவ்வாய்வால் வடிந்து நிற்கின்ற உண்மைகளே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று தெரிய வருகிறது.
தீர்வு எது?
i. எனவே, கோயிலில் நுழையும் போது உடுத்தும் ஆடைக் கட்டுப்பாட்டை அவ்வக் கோயில் தொடர்புடைய அவ்வச் சமயச் சான்றோர்களைக் கூட்டி அவரவர் கோயில்களுக்கு ஏற்பவும், சமூகத்தின் இன்றைய காலகட்டத்திற்குப் பொருந்தும் அரசு நிர்ணயம் செய்து ஓர் ஆணையையோ அல்லது சட்டத்தையோ பிறப்பிக்கலாம். இதுவே இதற்குச் சரியான தீர்வாக இருக்க முடியும் ஒழிய ஒரு நீதிமன்றத்தின் வேலை இதுவல்ல என்பது இயற்கை நீதிக்கும் சட்டத்திற்கும் ஒத்ததாக இருக்கும்.
ii. அப்படியே அரசு இதுபற்றி நிர்ணயிக்கும் போதும் சமயச் சான்றோர்களுக்கு முழு அதிகாரம் கொடுத்து விடமுடியாது; கொடுத்துவிடக் கூடாது. சமயச் சான்றோர்கள் கூறுவது சமூக அமைதிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் ஏற்புடையதாகவும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 25 மற்றும் 26-ற்கு மாறாக இல்லாமல் இருக்கிறதா என்று அரசு உறுதி செய்து கொள்வது அவசியம். அதன் பொருட்டு இது பற்றி நிர்ணயிப்பதற்காக எடுக்கும் முடிவைச் சட்டத்துறை வல்லுநர்களிடம் அனுப்பி உறுதி செய்து அரசு ஆணை அல்லது உரிய சட்டத்திருத்தம் எது ஏற்புடையதோ அதை மேற்கொண்டு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்பதே இதற்கு உண்மையான, சரியான தீர்வாக இருக்க முடியும்.
முடிவுரை
நல்ல வேளையாக முதலில் உயர்நீதி மன்றத்தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டு அதில் குறிப்பிட்ட ஆடைக்கட்டுப்பாடு 01.01.2016-ல் இருந்து நடைமுறைக்கு வரும் என்று இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டாலும் அதன்பின் தன்நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு உயர்நீதிமன்றம் அளித்த இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு வழக்குத் தொடர்ந்துள்ளது என்பது ஆறுதலான ஒரு செய்தி.
இதற்கும் மேலாக இக்கட்டுரையை முடிக்குமுன் மதுரைக்கிளை உயர்நீதி மன்றமே குறிப்பிட்ட இந்தத் தீர்ப்பிற்கு 18.01.2016 வரை இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது என்ற செய்தியும் எட்டியுள்ளது.
எப்படி இருப்பினும் இக்கட்டுரையின் கருத்துக்கள் இந்து அறநிலையத்துறை தொடுத்துள்ள வழக்கில் பிரதிபலிக்குமானால் அது சரியாக சமய நியாயமும், சட்டமும் கைகோர்த்துக் கொண்டு உருவாக்கும் உயரியதோர் ஆடைக்கட்டுப்பாட்டு ஆணை கோயில் தொடர்பாக பிறப்பிக்கப்பட ஏதுவாகும் என்று நெஞ்சார நம்புவோமாக! சங்கை ஊதி விட்டோம்! சங்கை (ஐயம்) இல்லாமல் நல்லது நடக்குமாக!
மு.பெ.சத்தியவேல் முருகனார்.
ஆசிரியர், ‘தெய்வமுரசு’