எற்றுக்கு விரைந்தீர்??!!!
நல்லதொரு மாலை நேரத்தில், வானம் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை கண்குளிரக் கண்டு வணங்க வரும் முருகனடியார்களை பன்னீர் தெளித்து வரவேற்பது போல நீர் தெளித்து மண்ணையும் மனதையும் குளிர வைத்துக் கொண்டிருந்தது. தமிழின் மணமும் அதன் குணமும் கொண்டு என்றும் இளமையாய் இருக்கும் அந்த மலை கிழவோனாகிய முருகப்பெருமானை நாளும் வணங்கி தமிழால் வழிபட்டு, எல்லோரையும் வழிபட நெறிவகுத்து, நனிசொட்ட சொட்ட பாடியும் பேசியும் பரவிவரும் குருபிரான் ஒருவர் தன் வாழ்க்கைத் துணையோடும்,மகன் மற்றும் கேளீரோடும் திருப்பரங்குன்ற முருகனை கண்ணாரக் கண்டு வழிபடச் சென்றார்.
அங்கே கொலுவீற்றிருக்கும், வானோர் வணங்கும் தானைத் தலைவன்; மாலை மார்பன்; நூலறி புலவன்; விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவன்; அரும்பெறல் மரபின் பெரும் பெயர் முருகன், அறிவல் நின்வரவு என்று நகைக்க, மனம் மொழி மெய்களால் வணங்கி, கண்டனன் சாமியை நான் என்று மனம் மகிழ்ந்து புறப்பட்டார்கள்.
குருபிரான் சுற்றத்தோடு மீளும்போது முன்மண்டபத்தின் தூண் ஒன்றில் அழகிய சிற்பம் கண்டு குருபிரானும் அவர்தம் வாழ்க்கைத்துணை நலமும் நின்று களிப்பேருவகையோடு வணங்கி கொண்டிருந்தனர். சிற்பத்தில் மைந்தர் ஏறு ஆகிய முருகப்பெருமான் அவசர அவசரமாக மயில் மீது ஏறிக்கொண்டிருக்கிறார். குருபிரான் முருகனை பார்த்து “என்ன முருகா!! இவ்வளவு அவசரமாக புறப்படுகிறீர்களே? இரவு நேரம் கோயில் நடை சாத்தப்படும் என்று நாங்கள் தான் வெளியேறுகிறோம், நீங்களுமா??” என்று தமிழின் பால் கொண்ட நெருக்கத்தால் உரிமையோடு உரையாட அரம்பித்தார்.
முருகன் புன்முறுவல் பூத்து, “அன்பரே! தமிழையும் என்னையும் நன்கறிந்த புலவனாகிய நீர் அறியாததொன்றில்லை. முந்து தமிழ் மாலை பாடி வேண்டுவார்க்கு வேண்டியதை தந்திபோல் விரைந்தளிப்பது எம் கொடைத்திறமன்றோ?? தகப்பன்முன் மைந்தன் வந்து பால்மொழிக் குரலோலம் இட்டிடின், அஞ்சல் ஓம்புமதி என்று அன்புடை நன்மொழி சொல்லி ஆதரிக்காவிடின் பார் நகைக்குமன்றோ?? முத்தமிழால் எம்மை வைதாலும் அங்கேயே அக்கணமே வாழ வைப்பவன் யாமென்று நீ அறியாயோ?? சரி சரி!! இதுதருணம் இக்கணமே அருள்பாலிக்க வேண்டும் இனியும் காலம் தாழ்த்தலாகாது!!! நீவீர் எல்லா நலமும் பெற்று தமிழ் போல் என்றும் வாழ்க!!! என்று குருபிரானை வாழ்த்தி முருகன் புறப்பட்டான்.
குருபிரான் நெஞ்சம் நெகிழ்ந்து உருகி மீண்டும் மீண்டும் தொழுதார். இவ்வற்புதத்தை உலகறிய சொல்லுதல் தம் கடமையன்றோ என்று எண்ணினார். குருபிரான் மறைபயின்று மரபுக்கவி இயற்றும் முதுபெரும் புலவரன்றோ, ஆகையால் அவ்வயமே பின்வரும் பாடலை இயற்றினார்:
தூணதைக் கண்டேன் திருப்பரங்குன்றத்தில் திகைத்தனன் அரியதோர் சிற்பம்
மாணெழில் மயிலின் முதுகினில் தாவிமுருகனார் வீசுகால் கோலம்
பூணுமோர் வேகம் புண்ணியா எதற்குபாரினில் பத்தரை காக்க
காணுவாய் கணமும் தாழ்த்திடேன் என்றும் குறிப்பினைக் காட்டிநின் றனையோ?
ஆஹா!! என்ன அருமை! என்ன அழகு!! அந்த சிற்பமும், குருவின் தமிழும், பாடலின் பொருளும் என்றும் இன்பம் தரும்.
இக்கட்டுரையின்கண் பேசப்படும் குருபிரான் வேறு யாருமல்ல என்னுடைய தந்தையார், செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர். திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்கள் தான். திருப்பரங்குன்றக் கோயிலின் தூணில் முருகனின் விநோத கோலத்தினை வியந்து 09-04-2016 அன்று பாடியது. இப்படி ஒரு சிற்பத்தை வேறு எங்கும் கண்டதாக நினைவில் இல்லை. இவ்வரிய உருவத்தை கருத்துச் செறிவோடு அமைத்த அந்த சிற்பியை நினைத்து வணங்குகின்றோம். அந்த தூணில் உள்ள சிற்பத்தின் புகைப்படம் இதோ!!