புதிய தி இந்து தமிழ் நாளிதழ்க்கு
பேருவகையுடன் தெய்வமுரசு வாழ்த்துக்கள்!
16-9-2013-ஆம் நாள் காலை இனிதாக விடிந்தது! காலையில் கையில் தி இந்து என்ற புதிய தமிழ் நாளிதழ்! 135- ஆண்டுகட்குப் பின்னர் இந்து குழுமத்திற்கு தமிழ் நாளிதழினை நற்றமிழில அ நாடுலாவச் செய்திட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி முன்னம் வந்திருப்பது தமிழ் அன்னையின் திருவருளே! தெய்வமுரசு என்கிற விண்பதிப்பின் ஆசிரியர் என்ற முறையில் இந்நாளேடு புதியதாய் தொடங்கப்பட்டாலும் தமிழ் மக்கள் மனதில் பதிவதாய் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.
சிந்தையில் உதித்த இரு கருத்துக்களை சுட்டிப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். தமிழ நாளிதழ் ஒன்றில் “தி”என்கிற ஆங்கிலச் சொல் நெருடுகின்றது. “தமிழ் இந்து ” என்றோ “இன்தமிழ் இந்து” என்றோ பெயரிட்டால் இம் மண்ணிற்கும் மனதிற்கும் இயைந்து மக்களிடையே விரைந்து பதியும். அடுத்து “உலகம் உயிர் பெறும் ,உங்கள் மொழியில்” என்றவிளம்பர ஈர்ப்பு முழக்கத்தில் உங்கள் மொழி என்ற சொற்கள் இந்து குழுமத்தை தமிழ் மக்களிடமிருந்து அயன்மைப் படுத்துவதாக உள்ளது. பதிலாக “உலகம் உயிர் பெறும்,்உளமகிழ் தமிழில்”என்றுகொள்ளலாம்.
“எவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் எங்களின் நீண்ட அனுபவம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அநாகரிகமான அந்தரங்கச் செய்திகள் ஒரு போதும் இடம் பெறாது.”என்று நாளேட்டின் ஆசிரியர் உறுதி அளித்திருப்பது ஆறுதலையும் அகமகிழ்வையும் அளிக்கிறது.
ஆன்மிக இதழ் நடத்துகிற யாங்கள் ஆன்மிகத்தைப் பற்றி சில சொல்ல வேண்டி உள்ளது. ஆன்மிகம் மிக உயர்ந்தது. அதில் ஆயிரமாயிரம் மூட நம்பிக்கைகளைக் கலந்து வணிகம் செய்கின்றன சில இதழ்கள். தஙகள் நாளிதழ் இதில் தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து தன்னேரிலாத தமிழ் நாளிதழாக ஒளிர எங்களது வாழ்த்துக்கள்!