You are here
Home > சைவக் கேள்வி > சைவக் கேள்விச் சிற்றம்பலம் பகுதி 13

சைவக் கேள்விச் சிற்றம்பலம் பகுதி 13

–    செந்தமிழ் வேள்விச்சதுரர்

சிற்றம்பல அன்பர்: ஐயா! மீமாம்சை, சாங்கியம், யோகம் என்ற வடவேத சார தத்துவ மதங்களைப் பற்றித் தெளிவாக்கினீர்கள். வடவேத தத்துவ தரிசனங்கள் மொத்தம் ஐந்து என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எஞ்சிய இரண்டு யாவை?

அறிவாகரர்: நல்ல கேள்வி. எஞ்சிய இரண்டும் நியாயம், வைசேடிகம் என்பனவாம். சாங்கியத்திற்கும் யோகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போலவே நியாயத்திற்கும் வைசேடிகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே இரண்டையும் சேர்த்து நியாய வைசேடிகம் என்றே கூறுவர். இன்னும் சொல்லப் போனால் இரண்டையும் சேர்த்து தர்க்கம் என்றே ஒன்றாகவும் கூறுவர்.

சிற்றம்பல அன்பர்: ஐயா! நியாயம்னு ஒரு மதமா? கேட்கவே இனிமையாக இருக்கிறதே! இவர்கள் சொல்வதாவது நியாயமாக இருக்குமா?

அறிவாகரர்: நியாயம் என்ற சொல்லைக் கொண்டு அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடாதீர்கள்! இவர்களுக்கு நையாயிகர் என்ற பெயர் உண்டு. இவர்கள் நியாயம் போல சில சொல்லி முப்பொருள் உண்மையை நைய வைத்துவிடுவார்கள்!

சிற்றம்பல அன்பர்: அப்புறம் ஏன் இவர்கள் மதத்திற்கு நியாயம் என்ற பெயர் வந்தது?

அறிவாகரர்: அப்படிக் கேளுங்கள்! இவர்கள் உலகு, உயிர், இறை ஆகிய முப்பொருள் பற்றிய அறிவு பெற வேண்டுமானால் அந்த அறிவைப் பெறுகிற வழி சரியாக இருக்க வேண்டும் என்று அறிவு பெறும் வழிகளை ஆராய்ந்தனர். இந்த அறிவுவாயில் என்னும் பிரமாணத்தை முதலில் ஆராய்ந்தார்கள்.

    ஏதோ ஒரு வகையில் அறிவு பெற வேண்டுமானால், நம்முடைய கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய ஐந்து வாயில்களால் ஒன்றைக் கண்டறியலாம். இதைக் காட்சி என்று தமிழிலும், பிரத்யட்சம் என்று வடமொழியிலும் சொல்வர். ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஐம்பொறிகளும் கூட சில நேரங்களில் ஏமாற்றி விடுகின்றன. கண்ணால் நீரைப் பார்க்கிறோம்; ஆனால் அருகே சென்று பார்த்த பின் தான் அங்கே நீர் இல்லை என்றும், பார்த்தது கானல் நீர் என்றும் அறிந்து கொள்கிறோம். சில நேரங்களில் கயிறைக் கண் பாம்பாகக் காட்டுகிறது. ஆகவே கண்ணை முழுமையாக நம்ப முடியவில்லை. இப்படியே தான் ஏனைய காது, மூக்கு, நாக்கு, உடல் போன்ற பொறிகளினால் நாம் அறிவதும் விசாரணையில் பொய் என்று ஆகிவிடுவதைக் காண்கிறோம்.

    எனவே, காட்சி என்னும் பிரத்யட்சத்திற்கும் மேலே அனுமானம் பல இடங்களில் அறிவு வாயிலாக உதவுவதைப் பார்க்கின்றோம். இன்னும் சில நேரங்களில் நாம் நேரடியாக அனுபவிக்காத ஒன்றை அனுபவித்தவர்கள் கூறக் கேட்டு நம்புகிறோம். அமெரிக்காவிற்குப் போக முடியாதவன் அமெரிக்காவிற்குப் போய்விட்டு வந்தவனைக் கேட்டு அந்நாட்டின் இயல்புகளை அறிந்து கொள்கிறான். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அமெரிக்காவிற்குப் போய் வந்தவன் சும்மா புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடாமல் உண்மையைச் சொல்பவனாய் இருக்க வேண்டும். சொல்லுகிறவன் உண்மையாளனாய் இருப்பது நிச்சயமானால் அவனது உரையும் நமக்கு அறிவு பெறும் வாயிலாகி விடுவதைக் காண்கிறோம்.

   இப்படி எல்லாம் அறிவு வரும் வாயில்களை ஆராய்ந்து அவற்றில் நம்பத்தக்கன இவை என்று காட்சி, அனுமானம், உரை என்ற மூன்றை நையாயிகர் அளந்து வைத்துக் கொண்டு அவற்றின் மூலம் உலகு, உயிர், இறை ஆகிய மூன்றைப் பற்றிப் பெறும் அறிவுகளை ஆய்வு செய்தனர்.

   இவற்றில் குறிப்பாக அனுமானம் என்பதை வேறு எவரும் ஆய்வதை விட மிக அதிகமாக ஆய்வு செய்து அவற்றின் முடிவுகளைக் கோர்த்து வைத்தனர். இந்த முடிவுகளைக் கைவசம் உள்ள ஆயத்தமான அனுமான முடிவுகளாகக் கொண்டு அவற்றில் ஒன்றில் பெற்ற அறிவை உரசிப் பார்த்து அதற்கொத்ததாக இருந்தால் அந்த அறிவு உண்மை என்று கொண்டார்கள்.

   உதாரணத்திற்குப் பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது ஒரு அனுமான முடிவு. இதை ஸ்தாலிபுலாக நியாயம் என்பர். ஒரு சோற்றின் பதமே மற்றைய எல்லா பருக்கைக்கும் பொருந்தும் என்பது பொருள். ஆக, எல்லாம் சமமாக இருக்கும் போது ஒன்றின் நிலையால் பிறவற்றின் நிலையையும் அனுமானித்து அறியலாம் என்பது இந்த நியாயத்தின் அடிப்படை.

    இவ்வாறு பலவேறு சூழ்நிலைகளை ஆராய்ந்து 64 நியாயங்களைக் கண்டுபிடித்துக் கூறினர். அந்த-கஜ நியாயம், அஜகளநியாயம், சுந்தோபசுந்த நியாயம், அஜகஜாந்திர நியாயம், பங்கஜ நியாயம், பிரமகீட நியாயம், சாக பசு நியாயம், தூலாருந்ததி நியாயம், கைமுதிக நியாயம், கெதானுகெதிக நியாயம் என இது போன்ற பல நியாயங்கள் எடுத்துக் கூறுவர் இம்மதத்தார். அதனால் தான் இவர்களுக்கு நியாய மதத்தார் என்றும் நையாயிகர் என்றும் பெயர் வந்தது.

சிற்றம்பல அன்பர்: இவையெல்லாம் கேட்க மிகச் சிறப்பாக இருக்கின்றனவே! இம் மதத்தை நிறுவியவர் யார்?

அறிவாகரர்: நையாயிகம் என்பதை முதலில் நிறுவியவர் அக்க பாத முனிவர் என்பவர். பின்னால் இந்த முதலாசிரியரின் கருத்தை மறுத்து ஒரு நையாயிக நூல் எழுதியவர் உதயணர் என்பவர். இவர் எழுதிய நூலுக்குக் குசுமாஞ்சலி என்று பெயர்.

சிற்றம்பல அன்பர்: ஐயா! இதெல்லாம் எங்களைப் போன்றவர்கள் அறியாத தகவல்கள். இவர்களின் நூல்கள் எல்லாம் இப்போது கிடைக்குமா?

அறிவாகரர்: இந்த நூல்கள் எல்லாம் இப்போது கிடைப்பது அரிது. பல்கலைக் கழகங்களின் தத்துவத் துறையில் சில இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிடைக்க வாய்ப்புண்டு. இவை கிடைக்கப் பெறாதவர்கள் இவை பற்றி ஆய்வு செய்து டாக்டர் இராதாகிருஷ்ணன் எழுதிய நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். அதோடு இந்த நூல்கள் எல்லாம் கிடைக்குமா என்று நீங்கள் ஏங்கத் தேவையில்லை. ஏனென்றால் வடவேத விற்பன்னர்களிடையே கூட இன்று இவை வழக்கில் இல்லை. எனவே முழுமையாகக் கேட்பதற்கு முன் எந்த அவசரமும் காட்ட வேண்டாம்.

சிற்றம்பல அன்பர்: சரி! நீங்கள் கூறியது போல நான் அவசரப்படுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். மேலே சொல்லுங்கள்!

அறிவாகரர்: அன்பரே! அடுக்கடுக்காக இவர்கள் எவ்வளவு நியாயங்களை எடுத்து வைத்தார்கள்! அறிவு வாயில்களை எப்படியெல்லாம் ஆராய்ந்தார்கள்! ‘ஊருக்கெல்லாம் பலன் சொல்லும் பல்லி கடைசியில் விழுந்ததாம் கழனிப் பானையில்’ என்பது மாதிரி இவ்வளவு நியாயங்களைக் கூறியவர்கள் உலகு, உயிர், இறை பற்றி என்ன முடிவுக்கு வந்தார்கள்? அதை அறிய வேண்டாமா?

சிற்றம்பல அன்பர்: ஆமாம், ஆமாம்! அதைக் கேட்க ஆவலாய் இருக்கிறது.

அறிவாகரர்: நையாயிகர்கள் உலகத்தைப் பிறர் கூறுவது போல ஒரு மாயத்தோற்றம் என்று கூறவில்லை; உலகம் உண்மையாகவே வெளியே இருக்கிறது என்று தர்க்க வாதத்தின் மூலம் நிரூபிக்கிறார்கள். இதைச் சரியாகத் தான் சொன்னார்கள். ஆனால் உயிர், இறை பற்றிய அவர்களின் முடிவுகள் தாம் அறிவுக்குப் பொருந்தாத கோணல் வாதங்களாக உள்ளன.

    அதாவது ஆன்மா அறிவுடைய பொருள், சைதன்யமானது என்றெல்லாம் கூறுகிற நியாய மதத்தினர் ஆன்மா உடலோடு சம்பந்தம் பெறும் போது அதற்கு அறிவுணர்ச்சி வருகிறது என்று கூறுவது வேடிக்கை! அப்படியானால் உடலில்லாத போது ஆன்மாவிற்கு அறிவு கிடையாதா என்று கேட்டால், அறிவுப் பொருள் தான் ஆனாலும் அறிவுணர்ச்சி ஆன்மாவிற்குக் கிடையாது என்கிறார்கள். இதை எந்த அறிவு வழியில் இவர்கள் பெற்றார்கள்? விடையே இல்லை. இதை டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களும் அர்த்தமற்ற பேச்சு என்று ஒதுக்குகிறார்.

சிற்றம்பல அன்பர்: அட பாவமே! அப்புறம், கடவுளைப் பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அறிவாகரர்: அதை ஏன் கேட்கிறீர்கள்? முதன்முதலில் நையாயிக நூல் எழுதிய அக்க பாத முனிவர் கடவுளை இல்லை என்று மறுக்கிறார். ஆனால் பின்னால் வந்த உதயணர், குசுமாஞ்சலி என்ற நையாயிக நூலில் கடவுள் உண்டு என்பதற்குப் பத்துக் காரணங்களைச் சொல்கிறார்.

சிற்றம்பல அன்பர்: இதென்ன குழப்பம்!

அறிவாகரர்: இதற்கே இப்படி சோர்ந்துவிட்டீர்களே, இன்னும் இதற்கு மேலும் செய்யும் குழப்பத்தைக் கேளும்! முதலில் இல்லை என்று கூறிவிட்டுப் பின்னால் ஒப்புக் கொண்ட கடவுளால் உயிருக்கு என்ன பலன் என்று கேட்டால் ஒரு பலனுமில்லை என்கிறார்கள்.

சிற்றம்பல அன்பர்: ஐயயோ! அப்புறம் முத்தி எல்லாம் என்னாவது?

அறிவாகரர்: முத்தியாவது ஒண்ணாவது! உடலிலிருந்து உயிர் விடுதலை பெறுவதே முத்தி. அந்த முத்தியில் இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை. உயிர் இறைவனோடு சேர்ந்து இன்பம் அனுபவிப்பதும் இல்லை. உயிர் உடலிலிருந்து விடுபட்டு அதற்கு இயல்பாக ஓர் உணர்வும் இல்லையாதலால் அவர்கள் சொல்லும் முத்தியில் சும்மா, கல் போல கிடக்கும். இது தான் அவர் கூறும் முத்தி!

சிற்றம்பல அன்பர்: அடடா! இதென்ன அநியாயமாக இருக்கே! இவர்களை எப்படி நியாய மதத்தார் என்பது! அறிவு வரும் வழிகளை ஆராய வேண்டும் என்று சரியாகத் தொடங்கியவர்கள் கடைசியில் வழியில் நின்று போய்ச் சேர வேண்டிய இடத்தைக் கோட்டை விட்டுக் குழியில் விழுந்து விட்டார்களே!

அறிவாகரர்: அறிவு வழியை ஆராய்வேன் என்று தொடங்கிய இவர்கள் கடவுள் உண்டு என்று பிற்காலத்தில் நிரூபிக்க பத்துக் காரணங்கள் காட்டினார்கள் என்று சொன்னேன் அல்லவா? அதில் ஒரு காரணம் என்ன தெரியுமா?

சிற்றம்பல அன்பர்: சொன்னால் தானே தெரியும்!

அறிவாகரர்: வடமொழி வேதங்கள் எல்லாம் மிக மிக அற்புதமாக ஆக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைச் சாதாரண அறிவுள்ள மனிதர்கள் செய்திருக்க முடியாது. எனவே இந்த வடவேதங்களை உருவாக்கிய கடவுள் உண்டு என்றனர். ஐயா, இந்த வடவேதங்களில் கடவுளைப் பற்றிய பேச்சே இல்லை; போதாததற்கு வடமொழி வேதங்களை உங்களில் சிலரே சுயம்பு என்றும் கூறுகிறார்களே, இந்தப் பின்னணியில் எதை வைத்து, எந்த அறிவு வாயிலை வைத்து, வடமொழி வேதங்களை இறைவன் உருவாக்கினான் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டால் இவர்களிடம் இதற்கான விடை இல்லை.

சிற்றம்பல அன்பர்: அட, சே! இவர்கள் எந்த நியாயத்திற்கும் கட்டுப் படாமல் வடவேதத்தை மட்டும் தூக்கிப் பிடிக்கும் குழப்பக் கொள்கைக்காரர்கள் போல இருக்கிறதே! இவர்களை நியாய வாதிகள் என்று சொல்வதே தவறு! அடடா! முதலில் நான் பெயரை வைத்து ஏமாந்து போனது எவ்வளவு தவறு! ஆனாலும் நீங்கள் அடிக்கடி இடையிடையே முழுக்கக் கேளுங்கள், முழுக்கக் கேளுங்கள் என்று சொல்லி வந்ததன் பொருள் இப்போது தான் புரிகிறது!

                                                         தொடரும் . . .

Top