You are here
Home > அறத்தமிழ் > அறத்தமிழ் வேதம் பகுதி 13 கானமயில் ஆட. . .

அறத்தமிழ் வேதம் பகுதி 13 கானமயில் ஆட. . .

மூதுரை

       இளம்பூரணன்

அன்புச் செல்வங்களே!

        இன்று நாம் பார்க்க இருக்கும் பாடல்: மூதுரையில் வரும் 14 – ஆவது பாடல். இந்தப் பாடல் மிகவும் புகழ் பெற்றது; பலரும் மேற்கோள் காட்டக் கேட்டிருக்கலாம். அந்தப் பாடல் இதோ!

      கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி

      தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்தன்

      பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே

      கல்லாதவன் கற்ற கவி.

          கலைகள் எல்லாம் நமக்குக் கைவர வேண்டுமென்றால் இரண்டு வேண்டும்: 1) முற்பிறவியில் அந்தக் கலையில் சற்றுப் பழகி இருக்க வேண்டும் 2) இந்தப் பிறவியில் அந்தக் கலையினை முறையாக மீண்டும் பழக வேண்டும்.

          இதைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் திருநாவுக்கரசு நாயன்மார் வரலாற்றில் சரியாக அடையாளம் காட்டினார். திருநாவுக்கரசு சுவாமிகள் தமது குழந்தைப் பருவத்தில் கலைகளைப் பயின்றது பற்றி இப்படிச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்:

          பொருள்நீத்தம் கொளவீசிப் புலன்கொளுவ மனமுகிழ்ப்ப

          சுருள்நீக்கி மலர்விக்கும் கலைபயிலத் தொடங்குவித்தார்.

          அதாவது திருநாவுக்கரசுக் குழந்தைக்கு ஏற்கெனவே முற்பிறவியில் பயின்ற கலைகள் சுருள்களாக உள்ளே மொட்டிட்டு இருந்தனவாம். அவற்றை மனமானது பற்றி முகிழ்க்க அம்மொட்டுக்களை மலர்த்தி விரிக்கும் வண்ணம் கலைகளை இப்பிறவியில் பயிலத் தொடங்கினார் என்று சேக்கிழார் கூறுகிறார். இது எல்லாருக்கும் எல்லாக் கலைகளுக்குப் பொருந்தும்.

          குழந்தைகளே! முற்பிறவியாவது ஒண்ணாவது என்று சிலர் உங்கள் மனதை அலைக்கக் கூடும். ஆனால் அதில் ஏமாந்து விட வேண்டாம். முற்பிறவி உண்டென்று விஞ்ஞானமே விளம்புகின்றது. டார்வின் என்ற ஒரு விஞ்ஞானி உயிர்கள் முதலில் மீனாக நீரில் பிறந்தன என்றும் பிறகு இருக்கிற உறுப்புக்களிலேயே சில மாற்றம் பெற்று திமிங்கலமாகவும், ஆமையாகவும், டைனசோராகவும், இப்படிப் பலப்பல வடிவ மாற்றங்களை எடுத்து எடுத்து உள்ளது சிறந்து மனித வடிவிற்கு முன்னாக குரங்கு வடிவில் இருந்து மனிதன் தோன்றினான் என்று கூறினார். இதை டார்வின் கருதுகோள் என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது. அப்படியானால் உள்ளது ஒன்றே சிறந்து சிறந்து வெவ்வேறு உடல்களைப் பெற்றிருந்தால் தானே உள்ளது சிறந்தது என்று கூறலாம். வெவ்வேறு உடல்களைப் பெறுவது தான் வெவ்வேறு பிறவி! கடைசியில் டார்வின் தன்னை அறியாமல் முற்பிறவிகளை ஒப்புக்கொண்டார்; அதன் வழியில் தான் உள்ளது சிறத்தல் (Theory of Evolution) என்ற விஞ்ஞானக் கொள்கையை உலகிற்கு அறிவித்தார். உலகம் அதை ஏற்றுக் கொண்டது.

    அது மட்டுமா? பிறந்த குழந்தை பிறந்தவுடனே அம்மாவிடம் பால் குடிக்கிறது. அம்மாவின் மார்பகத்தை இப்படிச் சுவைக்க வேண்டும்; இப்படிச் சுவைத்தால் பால் வரும்; பால் பசியைப் போக்கும் என்றெல்லாம் அந்தக் குழந்தைக்கு யார் எந்த மொழியில் கற்றுக் கொடுத்தார்கள்!

    எனவே, குழந்தைகளே! விஞ்ஞானமும், நடைமுறையும் முற்பிறவியை உண்டு என்று உறுதிப்படுத்துகின்றன. அதனால் முற்பிறவியெல்லாம் கிடையாது என்று சிலர் கூறினார் அதில் மயங்கி விடாதீர்கள்!

    ஆக, முற்பிறவியில் படிந்த கலையின் சுருளை முறையாகக் கற்கும் கல்வியில் தான் விரித்துத் தேர்ச்சி பெற முடியும்.

    குழந்தைகளே! இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றும். இப்போது சொன்னபடி ஒரு கலையைப் பயில வேண்டுமானால் முற்பிறவித் தொடர்ச்சி இருக்க வேண்டும்; இல்லையென்றால் அந்தக் கலையைப் பயிலாமல் விட்டு விடலாமா?

    இல்லை கண்மணிகளே! ஏதாவது ஒரு கலையில் ஏதாவது ஒரு பிறவியில் அடிப்படை போட வேண்டுமல்லவா? அது தானே பின்னால் தொடரும்? எனவே எந்தக் கலையில் உங்களுக்கு விருப்பம் நிகழ்கிறதோ அந்தக் கலையைப் பயிலத் தொடங்குங்கள்! ஆனால் முறையாகப் பயிலுதல் வேண்டும்! அது என்ன முறையாகப் பயிலுதல்? நன்னூல் இதை விளக்குகிறது: தலைப்பு – பாடம் கேட்டல் மரபு.

      கோடல் மரபே கூறுங் காலை

      பொழுதொடு சென்று வழிபடல் முனியான்

      குணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து

      இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்

      பருகுவன் அன்ன ஆர்வத்தான் ஆகிச்

      சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச்

      செவி வாயாக நெஞ்சு களனாகக்

      கேட்டவை கேட்டவை விடாது உளத்தமைத்துப்

      போவெனப் போதல் என்மனார் புலவர்.

         இந்த நூற்பாவின் விரிவெல்லாம் உரிய ஆசிரியரிடம், உரிய நேரத்தில் விரிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள்! ஆனால் ஒன்று மட்டும் இப்போது உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தாகம் வந்தவன் எப்படி ஆர்வத்தோடு தண்ணீர் குடிப்பானோ அப்படி ஆர்வத்தோடு ஆசிரியரிடம் கலையை வாங்கிப் பருக வேண்டுமாம்! ஆசிரியர் சொல்லும் போது கூர்த்த எண்ணத்தோடு அவரையே ஒரு சித்திரம் போல இருந்து பார்த்து கலை நுட்பங்களைத் தேர்ந்து கொள்ள வேண்டுமாம்! அந்த நேரத்தில் செவி வாயாகி விட வேண்டுமாம்! கலையே அப்போது அந்தச் செவியின் உணவு; அந்தக் கலையுணவை வாங்கிக் கொள்ளும் நெஞ்சு தான் வயிறு.

         இப்படி எல்லாம் ஆசிரியரிடம் ஒரு கலையைக் கற்றுக் கொள்வது தான் முறையாகப் பயிலுதல். இது எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும்.

         இப்படி முறையாகப் பயிலாத கல்வி கல்வியே அல்ல; அந்தந்தக் கலைக்குரிய சத்தங்களை எழுப்புவது என்று வேண்டுமானால் சொல்லலாம். இப்படி முறையாகக் கல்லாமல் வெறும் சத்தங்களை எழுப்புபவர்கள் தான் உலகில் அதிகம். இவர்களால் தான் போலிகள் உருவாகி உலகை அடைத்துக் கொள்கிறார்கள்.

         சரியான முறைப்படி இசையைக் கல்லாதவன் அரைகுறை பாட்டுக்காரன்; சரியான முறைப்படி சோதிடத்தைக் கல்லாதவன் அரைகுறை சோதிடன்; சரியான முறைப்படி இலக்கியத்தைக் கல்லாதவன் அரைகுறை அறிஞன்; சரியான முறைப்படி கவி எழுதத் தெரியாதவன் அரைகுறை கவிஞன். இப்படி உலகில் பல அரைகுறைகள்!

        இந்த அரைகுறைகளை ஔவையார் வான்கோழி என்று பாடலில் கூறுகிறார். வான்கோழிக்கு வால்புறத்தில் சுமார் நாலங்குலத்தில் சிறு தோகை இருக்கும். அதைச் சமயத்தில் விரித்து ஆடும். இந்தத் தோகை மயிலின் வண்ணமிகு விரிந்த தோகை ஆகுமா? ஒரு மயில் தனது தோகையை விரித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? அப்படி விரித்த தோகையுடன் மயில் ஆடும் பொழுது இன்னும் எவ்வளவு அழகாக இருக்கும்!

peacock

       ஒரு மயில் இப்படித் தனது தோகையை விரித்து ஆடியதை ஒரு வான்கோழி கண்டதாம்! ஆ! உனக்கு மட்டும் தோகை உண்டா? எனக்கும் தான் உண்டு. இதோ நானும் தோகை விரித்து ஆடுகின்றேன் என்று தனது நாலங்குலத் தோகையை விரித்து ஆடினால் யாராவது அதை மதிப்பார்களா? சிரிப்பார்கள்!

       அதைப் போல முறையாகக் கல்வியும், கவியும் கற்காத ஒருவன் பல அறிஞர் முன்னே தானும் ஒரு கவிஞன் தான் எனக் காட்டிக் கொள்ளத் தானே எழுதியோ அல்லது வேறு ஒரு கவியைத் திருடி சில சில மாற்றம் செய்தோ கவி பாடினால் உண்மைக்கவிஞர் உலகம் என்ன சொல்லும்? வான்கோழி தோகை விரித்து ஆடுகிறது என்று நகைக்க மாட்டார்களா? ஏதோ எழுதி வந்ததைச் சொல்லிவிடலாம்; அதில் கேள்வி கேட்டால் – போச்சு! சரிந்து சாய்ந்து விட வேண்டியிருக்கும்!

turkey

       ஒரு நடந்த நிகழ்ச்சியை உங்களுக்குச் சொன்னால் இன்னும் நன்றாக விளங்கும். உங்களுக்கெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தாத்தா இருக்கிறார். அவர் தமிழ் தாத்தா! அவர் இல்லையானால் நமக்கு தமிழ்ப் புதையல்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் கிடைத்திரா. அவர் பத்துக் கம்பன் என்று பாராட்டப் பெற்ற மகாவித்துவான் மீனாட்சிச் சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவர். பிள்ளை அவர்களிடம் பயிலும் மாணவர்களின் குழுவுடன் அவர் பட்டீச்சுரத்தில் ஆறுமுகத்தாப் பிள்ளை என்ற செல்வந்தரின் ஆதரவில் சில காலம் இருந்தார்.

       ஆறுமுகத்தாப் பிள்ளைக்கு ஒரு மைத்துனர். அவர் பெயர் சுப்பையா பண்டாரம். இவருக்குக் கல்வியறிவு அதிகம் இல்லை. ஆனாலும் சில பல பாடல்களை மனனம் செய்து சந்தர்ப்பத்திற்கு ஏற்ப சில செல்வந்தர்களிடம் சொல்லி பரிசில்கள் பெற்று வந்தார். ஆறுமுகத்தாப் பிள்ளை இவரை அடிக்கடி ஏளனமாகப் பேசி வந்தார். ஒரு முறை இருவர்க்கும் இது பற்றி பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு அது ஒரு பந்தயத்தில் முடிந்தது.

       பந்தயப்படி சுப்பையா பண்டாரம் பட்டீச்சுரத்திற்கு அருகில் உள்ள கும்பகோணத்திற்குச் சென்று அங்கு கல்லூரியில் பணியாற்றி வந்தவரும் மீனாட்சிச் சுந்தரம் பிள்ளையவர்களின் பழைய மாணவருமான வித்துவான் தியாகராச செட்டியாரைப் பாராட்டி கவி இயற்றி அவரிடம் பிள்ளையவர்களுக்குப் பிடித்த மாம்பழம் ஒரு கூடை பரிசாகப் பெற்று வர வேண்டும். பிள்ளையவர்கள் சுப்பையா பண்டாரத்திற்குக் கண்சாடையால் ஒப்புக் கொள்ளச் செய்து அவருக்காக தானே ஒரு கவி பாடிக் கொடுத்தனுப்பினார்.

        சுப்பையா பண்டாரம் பிள்ளையவர்களின் கவியை மனனம் செய்து கொண்டு கிளம்பினார். தியாகராச செட்டியாரிடம் தானே இயற்றியதாக அந்தக் கவியை ஒப்புவித்தார். பாடல் வருமாறு:

   புண்ணியமெல் லாம்திரண்ட வடிவென்கோ குறுமுனிவன் பொதிய நீத்திங்

   கண்ணியதோர் வடிவென்கோ தமிழிலுள பலகலைகள் அனைத்தும்கூடி

   நண்ணியதோர் வடிவென்கோ பின்னும் எந்த வடிவமென நாட்டுகோயான்

   மண்ணியமா மணியனைய தியாகரா சப்புலவன் வடிவந் தானே!

         தியாகராசப் புலவர் சந்தேகத்துடன் இந்தக் கவியை நீங்களே இயற்றினீர்களா என்று கேட்டார். சுப்பையா பண்டாரத்திற்குக் கோபம் வந்து விட்டது. நான் தான் பாடினேன் என்று சாதித்தார். அப்படியானால் இந்தப் பாடலில் என்கோ என்று அடிக்கடி வருகிறதே அதன் பொருள் என்ன? என்று கேட்டார் தியாகராசர். சுப்பையா பண்டாரத்திற்குக் கிளம்பும் போதே பாடலின் பொருளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து சொல்லித் தயாரித்து அனுப்பி இருந்தார்கள். எனவே என்கோ என்றால் என்பேனா என்று பொருள் என்றார். இது வரை தப்பித்தவர்க்கு அடுத்த கேள்வி இடியாக வந்தது.

          ‘என்கோ’ என்பதில் ஓகாரத்தை ஏற்ற மொழி எது? ஓகாரம் என்ன பொருளில் வந்தது? இலக்கணக் குறிப்பு சொல்லுங்கள் என்று கேட்டார்.

          பட்டீச்சுரத்தில் பாடலுக்குப் பொருள் தான் கேட்டு வந்தாரே தவிர பண்டாரம் இலக்கணக் குறிப்புகளை எல்லாம் கேட்கவில்லை. எனவே விழித்தார். சரி, மாம்பழத்தை நானே வாங்கிக் கொண்டு போய் விடுகிறேன் என்று சுப்பையா பண்டாரம் எழுந்தார். அது என்ன மாம்பழம் என்று தியாகராசர் விசாரித்த பின் விவரம் தெரிந்து சிரித்து தானே தனது ஆசிரியர்க்கு 2 கூடை மாம்பழத்தை வாங்கிக் கொடுத்தனுப்பினார்.

         திருப்பி வந்த பண்டாரம், ‘வேண்டுமென்றே என்னை மாட்டி விடுவதற்காகவே ஏதோ ‘என்கோ’ என்று பாடலில் எழுதி என்னை அவரிடம் நன்றாக மாட்டிவிட்டீரே! அந்த ஆள் என்னைப் பிறாண்டாத குறை தான்’ என்று பிள்ளையவர்களிடம் முறையிட்ட போது எல்லோரும் சிரித்துவிட்டனராம்.

        இப்படித் தான் ‘கல்லாதான் கற்ற கவி‘ ஒருவனைக் காட்டிக் கொடுத்து விடும். என்னவென்று? இவன் ஒரு வான்கோழி, மயிலல்ல என்று காட்டிவிடும். எனவே, செல்வங்களே! கலையை, அது எதுவானாலும் முறையாகக் கற்றுத் தேர்ந்து அதன் பயனும், பரிசும் பெறுங்கள்!

                                                  தொடரும் . . .

Top