You are here
Home > செய்திகள் > பதைக்கையில் ஒரு பைந்தமிழ்ப் பரிந்துரை

பதைக்கையில் ஒரு பைந்தமிழ்ப் பரிந்துரை

இது நடந்தது ஒரு கப்பல் பயணத்தில். மொரீஷியஸ் நாட்டிற்கு விருந்தினராகச் சென்ற போது அன்பர்கள் ஒரு பெரிய உல்லாசக் கப்பலுக்கு அழைத்துச் சென்றனர். திடீரெனப் பெருமழை பெய்ததால் ஒரு நாள் இரவு கப்பலிலேயே தங்க வேண்டி இருந்தது. அன்பர்களின் அபரிமிதமான உபசரிப்பில் நன்றாகத் தூங்கிப் போனேன். திடீரெனப் பார்த்தால் புராணப் படங்களில் வருபவர் போல ராஜகம்பீரமாக ஒருவர் என் அருகே வந்தமர்ந்தார். சரியாகக் கணித்து விட்டீர்கள்! கனவு தான்!

நான் படுக்கையிலிருந்து எழ முயன்றேன். என்னை அமர்த்தி விட்டு அவர் கேட்டார்.

“நீங்கள் தமிழ்நாடா?”

“ஆம்!”

“புலவரா?”

“ஆம்! விரும்பி அடிக்கடி புலவு சாப்பிடுவேன்!”

“எப்படியோ! ஒரு தமிழ்ப் புலவரிடம் என் குறையைக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்று நெடுநாட்களாகக் காத்திருந்தேன்!” அவர் கண்ணைக் கசக்கிக் கொண்டார். (அந்த மஸ்லின் துணியில் எப்படித் துடைத்துக் கொண்டார்? இதை தனியே விசாரிக்க வேண்டும்.)

“நான் சமுத்திரராஜன். தொல்காப்பிய இலக்கணப்படி என் பெயர் வருணன்!”

“என்ன பிரச்சனை? அழாமல் சொல்லுங்க!”

“அழவில்லை, கடல் தண்ணீத் தெறிக்கிறது! இருந்தாலும் என் குறையைச் சொல்லத்தானே வந்திருக்கிறேன்! எவ்வளவோ உபகாரம் செய்தாலும் இந்த உலகம் மறந்து விடுகிறது” அவர் தொடர்ந்தது இது தான்:

“சிவபெருமான் அணிந்திருக்கிறாரே பிறை! அது நான் கொடுத்தது. திருமால் டம்பமா பாஞ்சசன்ய சங்கு வச்சிருக்காரே அதையும் லட்சுமியோடு கொடுத்தது நான்! குபேரனுக்கு சங்க நிதி பதும நிதி, தேவலோகத்திற்கு பால் பிரச்சனை தீர காமதேனு பசு, இதெல்லாம் கொடுத்தது நான்! தேவர்களுக்கு நரை திரை மூப்பு மரணம் வராமலிருக்க கடைந்தெடுத்து அமுதம் கொடுத்தது நான்! நரை, திரை, மூப்பு வராமாலிருக்க அதை பூசிக்கக் களிப்பாகவும், மரணம் வராமல் இருக்க உள்ளுக்குச் சாப்பிடவும் கொடுத்தது நான்! இதையும் மீறி திடீர்னு எதிர்பாராத விதமாகக் கொரோனா மாதிரி புதுசு புதுசா எதுவும் வந்துட்டா என்ன பண்றதுன்னு நம்பத் தகுந்த தேவ மருத்துவர்களான அசுவினி தேவர்களையும் உபரி உறுதுணையாக தேவர்களுக்குக் கொடுத்தது நான் தான்! அவர்கள் எந்த நோய்க்கும் மருந்தை உடனே கண்டுபிடித்து விடுவார்கள்! எல்லாம் என் கடல் விளைவு! ஆனா எனக்கு ஒரு நெருக்கடி வந்த போது இவங்க எல்லாம் என்னைக் கைவிட்டுட்டாங்க! ஒரு நாள் கத்திரிக்காய்க்குக் கால் முளைச்ச மாதிரி அந்த அகத்தியர் வந்து உள்ளங்கையில் எடுத்து என்னை விழுங்கி விட்டார். எனக்கு ஏழுகிளைகள் உண்டு; ஏழுகடலையும் அந்தக் குள்ளமுனி குடிச்சிட்டுது!

அப்புறம்…, எப்படி இப்ப இங்க நீங்க என்று பார்க்காதீங்க, ஒரு வழியா நைச்சியம் பண்ணி (அதத்தான் இப்ப நீங்க நைசா என்று சொல்றீங்க) அகத்தியரை வேண்ட, புண்ணியவான் உமிழ்ந்தார். இப்ப நான் உங்க முன்னாலே இருக்கிறேன்.

இப்ப என்ன பிரச்சனை என்றால், இது என் மனசுக்குள்ளே ஆறாத ஆதங்கம்! இவங்க அத்தனை பேருக்கும் எவ்வளவு உதவி செய்திருக்கிறேன்? அகத்தியர் என்னை விழுங்க முயன்ற போது ஒருத்தராவது வந்து, கடலரசன் பெரிய உபகாரி, அவனை விட்டுவிடுங்கள் என்று ஒரு வார்த்தை பரிந்துரைத்தாரா?

ஆனால் தமிழர்கள் நன்றி மறவாதவர்கள். தமிழும் சாகாவரம் பெற்றது, எனவே அனைத்து ஆதங்கத்தை தமிழில் ஒரு பாடலாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இது என் நெடுநாளைய ஆசை! இதை நீங்களோ அல்லது வேறு ஒரு நல்ல புலவர் மூலமாகவோ பாடலாக்கி விடவேண்டும். அதற்காக தான் வந்தேன்!” என்றான் வருணன்.

இதைக் கனவிலேயே வேறு ஒரு புலவரிடம் சொல்ல அவர் பாடியது இது:

நீறணிந் திடுபரம சிவனுக்கு அணிந்துகொள
     நிகரில்பிறை ஒன்றீந் தனன்
நீலவண் ணன்தனக்கு ஊதவும் கூடவும்
     நிலவுநற் சங்க மோடு
கூறரிய பூமாது தம்மைஈந் திட்டனன்
     கோபதி தனக்கு நிதியும்
குளிர்பஞ்ச தருவும்மலி நற்காம தேனுவும்
     கொடுத்தனன் தேவர் கட்கு
மாறுநரை திரைமூப்பு வீவயிவை இலாததோர்
     மாஅமுதமும் கலைகள் தேர்
மன்னும்அசு வனிதேவர் இருவரையும் ஈந்தனன்
     மாவுலகர் மீதில் அன்பு
வீறுபெற வைத்திருக் கின்றஎனை அங்கைகொடு
     விரல்முனிவன் உண்ட போது
மிகுகருணை கடலரசன் உபகாரி என்றொருவர்
     விள்ளா திருந்தது என்னோ!

நாம் நினைக்கிறோம், இது இப்பத்தான் வெளிவருகிறது என்று. ஆனால் அருளாளர்கள் எல்லாம் அறிவார்கள். இதை உள்ளடக்கியே சரியான நேரத்தில், கூற்றுவன் வரும் போது, சிவபெருமானே! இவன் என் அடியான் என்று கூற்றுவனிடம் எனக்காகப் பைந்தமிழால் பரிந்துரை செய்யமாட்டாயா என்று சுந்தரர் திருப்புன்கூர் பதிகத்தில் பாடி இருக்கிறார். கடலரசனை கைவிட்டது போல விட்டுவிடாதீர்கள் என்பது குறிப்பு. இதே மாதிரி அருணகிரியார் முருகனிடம், ” அந்த மறலியொடு உறழ்ந்த மனிதன் நமதன்பன் என மொழிய வருவாயே” என்று வேண்டுகிறார். பைந்தமிழ்ப் பரிந்துரை நமக்கு வருமா?

இவண்

மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top