You are here
Home > செய்திகள் > பெரு நடிகரும் பைந்தமிழும்

பெரு நடிகரும் பைந்தமிழும்

பெரியபுராண உரை நூலில் மூழ்கி இருந்தேன். பொதுவாக நான் படிக்கும் போது தூங்குவதில்லை. ஆனால் தூங்கும் போதும் ஏதாவது ஒரு நூலை, அதில் உள்ள பாடலை மனம் தொடர்ந்து அசை போட்டுக் கொண்டே இருக்கும். அப்படி மனனமான பாடல்கள் பல. என்னவோ தெரியவில்லை அன்று பெரிய புராணத்தை படித்துக் கொண்டே தூங்கி விட்டேன். திடீரென்று பார்த்தால் கனவில் சேக்கிழார் வந்து நிற்கிறார்; பணிந்தேன்; “வா! போகலாம்” என்று அழைக்க அவருடன் பாஸ்போர்ட், விசா இல்லாமல் வானவெளிப் பயணம்.!

திடீரென பாதி வழியில் சேக்கிழாரைக் காணவில்லை. திகைத்துப் போனேன். அட! திடீரென சேக்கிழார் திரும்பி வந்து விட்டார். ‘எங்க போயிட்டீங்க எம் தெய்வமாக் கவியே! என்று சிணுங்கினேன். அவர் சிரித்துக் கொண்டே சமாதனப் படுத்தினார்.

“ஒரு நடிகரைப் பார்த்துவிட்டு வருகிறேன்!”

“நடிகர் மயக்கம் உமக்கும் வந்து விட்டதா! சரிதான்! “

“தம்பி! அவர் சாதாரண நடிகர் அல்ல; உலக மகா நடிகர்!”

நான் ஒரு மாதிரி அவரைப் பார்த்தேன்.

அவர் உடனே,
“அப்படியெல்லாம் பார்த்து என்னைக் கொச்சைப் படுத்தாதே! நான் சொல்வது வேறு!

அவர் ஆடினால் அண்டங்கள் ஆடும்! நீயோ ஸ்டுடியோவில் ஆடுபவர்களை நினைக்கிறாய். அண்டமே அவர்க்கு ஸ்டூடியோ!”

“யார், நடராசப் பெருமானா?” வியப்பின் உச்சியில் கேட்டேன்.”

“ஆம்! இந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் ஏன், புதியவர்களை அழைத்து வருகிறார் என்று கேட்க அழைத்தாராம். இல்லை, தமிழ்த் தாய்க்கு ரொம்ப வேண்டப் பட்டவர் என்றேன். அதனால் சம்மதித்தார்.”

“மகிழ்ச்சி ஐயா! ஒரு சின்ன சந்தேகம்!”

“என்ன ?”

“திடீர்னு போய் பார்த்தீர்களே ‘மேக்கப்’ இல்லாமல் இருந்தாரா?”

“என்னப்பா இப்படிக் கேட்கிறாய்?”

“இல்லைங்க, நடிகர்னா மேக்கப் இல்லாமல் இருக்க மாட்டாங்களே! அதுக்காக கேட்டேன்!”

“மேக்கப் என்றால் என்ன? தமிழ் அகராதி எல்லாம் எனக்கு பழக்கம். இப்படி ஒரு சொல்லையே தமிழில் கேட்டதில்லையா!”

“மேக்கப்னா பவுடர் பூசறது.”

“போச்சுடா! பவுடர் என்றால் என்ன?”

“பவுடர் என்றால் அரிதாரம் மாதிரின்னு வச்சுக்கங்க! ‘மேக்கப்’, ‘பவுடர்’ என்பதெல்லாம் திசைச் சொற்கள். அகராதியில் பார்க்க முடியாது. இவையெல்லாம் தமிழில் ஏறி ரொம்ப நாளாச்சு! முதல்ல முகத்தில் ஏறி அப்புறம் தமிழிலும் ஏறிடுச்சுன்னு வச்சுக்கங்க!”

“நீ சொல்வது சரிதான்! இந்த நடிகரும் ‘பவுடர்’ பூசி ‘மேக்கப்’ போட்டுக் கொள்பவர் தான்!”

“அப்படி சொல்லுங்க! பவுடர் என்ன பிராண்ட் ? சொன்னா, நாங்களும் பூசிப்போமில்ல!”

” மயானம் பிராண்ட்! என்ன ஒரு மாதிரி பார்க்கிறாய். பிறந்த என்பதும் திசைச் சொல் என்பதும் அது எதைக் குறிக்கிறது என்பதும் எனக்கு புரிகிறது. இதை நடராசர் மயானத்திலேயே தயாரிக்கிறார். அவர் கைப்படுவதால் அந்தப் பவுடரில் வாசனை உலகமெலாம் வீசும். மக்கள் அவர்கள் மொழியில் திருநீறு என்கிறார்கள்”

“கவிக்குலத் திலகமே! கேட்பதற்கே சுவையாக இருக்கிறதே! இதை ஒரு கவியாகவே தந்துவிடுங்களேன்!”

“சரி, என்று சேக்கிழார் பாடுகிறார். அப்பாடல் இதோ!”

நடித்தல் உமக்குத் தொழிலென்றால்
     நல்ல ‘மேக்கப்’ வேண்டுமன்றே?
நடிப்பார் மேனிப் பூச்சாக
     நறுமென் ‘பவுடர்’ பூசாரோ?
பொடிக்கெங் கேநான் போவதென்று
     பெரிய மயானம் போய்நின்றாய்
நெடிதாய் ஆடும் நடவரசே!
     நன்றாய் நீற்றில் மிளிர்ந்தாயே!”

என் கனவு கலைந்தது! நினைவு இனித்தது! தினவும் தீர்ந்தது! நடராசர் நற்றமிழ்த் தாயைப் பார்த்து குமிண் சிரிப்பு செய்கிறார். இதைத் தான் அப்பரும் பார்த்து அந்தக் “குமிண் சிரிப்பை” அன்றே பதிவு செய்தாரோ!!

இவண்
மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top