You are here
Home > கட்டுரைகள் > கிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா ? ஆகமக் கருத்தறிவிப்பு

கிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா ? ஆகமக் கருத்தறிவிப்பு

agama eclipse


முருகா
கிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா ?
ஆகமக் கருத்தறிவிப்பு

வரும் 31.01.2018 அன்று நிகழவுள்ள சந்திர கிரகணத்தின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா என்று ஒரு சர்ச்சை தற்போது மலேசியத் திருநாட்டில் வழிபாட்டு அன்பர்களுக்கிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது என்று அறிகிறேன். இது பற்றி ஆகமம் என்ன சொல்கிறது என்று அறிய அந்நாட்டின் பல பெரியவர்கள் என்னை அணுகி வருகின்றனர்.

கிரகணம் என்பதை ஆகமம் உபராகம் என்று கூறுகிறது. சூர்யோபராகம், சந்த்ரோபகாரம் என்று முறையே சூரியகிரகணமும், சந்திரகிரகணமும் குறிப்பிடப்படுகின்றன. காரணாகமம் இக்கிரகண காலங்களில் கோயில்களில் விசேட அபிடேக ஆராதனைகள் செய்யப்படவேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. இதுவே நாட்டிற்கு நலம் பயப்பது என்றும் கூறுகிறது. இது தவிர வேறு எந்த ஆகமத்திலும் கிரகண காலங்களில் கோயில் நடை சாத்தப்பட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.

காமிகாமகம் உத்தர பாகம் 30 – வது படலமாகிய பிராயச்சித்தப் படலத்தில் 903 – வது விதியில் கூறப்படுவதின் தமிழாக்கம் வருமாறு:

”எல்லாக் கிரியைகளிலும் சாத்திரத்தில் கூறப்படாததைச் செய்யக்கூடாது. அப்படி சாத்திரத்தில் கூறப்படாததைச் செய்தால் அரசனுக்குக் கலக்கம் ஏற்படும்.”

எனவே, ஆகமம் கூறாத ஒன்றை நாமே கற்பித்துக் கொண்டு கிரகண காலங்களில் கோயில் நடையைச் சாத்துவது மேலே காமிகாகமம் கூறியவாறு தீங்கிற்கு வழிவகுக்கும்.

கிரகண காலங்களில் விஷக்கதிர்கள் ஆகிய கழியடர் பைந்நீலக் கதிர்கள் (ultra violet rays) வெளிப்பட்டு மனிதனின் கண்ணையும், நினைவையும், உடல் உறுப்புகளை எல்லாம் இயக்கும் மூளையையும் பாதிக்கும் என்று விஞ்ஞானம் விளக்கி அந்நேரத்தில் அக்கதிர் வீச்சில் படாமல் பார்த்துக் கொள்ளச் சொல்கிறது. ஆகவே, உடலின் முக்கியப் பகுதிகளை எல்லாம் காப்புறை (insulate) செய்யும் வண்ணம் தடித்த ஆடைகளை அணிந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இயன்றவரை கறுப்போ அல்லது சிவப்பு நீங்கலாக காரடர் நிறம் (dark colour) எதுவாயினும் அமைந்த ஆடைகளை அணிதல் நல்லது. அவை கதிர் வீச்சுக்களை உறிஞ்சிக் கொண்டு உடலின் ஊடே பாயாமல் பார்த்துக் கொள்ளும்.

இவ்வாறு கதிர் வீச்சினால் வரும் பாதிப்புகள் மனிதர்களாகிய நமக்கு மட்டுமே; இறைவனுக்கு இல்லை; இருக்கவும் இயலாது. எனவே, தோஷம் என்றும் தீட்டு என்றும் அந்நேரங்களில் கோயில் நடையைச் சாத்துவது கடவுளை இழுக்கு செய்வதாகும். எப்படியோ இப்பொருந்தா வழக்கம் ஆகமத்திற்கு எதிராக நம்மிடையே பிற்காலத்தில் நோய்க்கிருமி போல் தொற்றி விட்டிருக்கிறது.

எப்பொதெல்லாம் துன்பம் நேர்கிறதோ அப்போதெல்லாம் நமக்கு இறைவனைத் தவிர வேறு புகலிடம் இல்லை. வெடித்தெழும் தொற்றுநோய் திடீரெனப் பரவித் தாக்கினால் அனைவரும் மருத்துவ முகாம்களுக்கு ஓடி நிவாரணம் தேடுகிறோம். அதுபோல வானப் பொது வெளியில் தீயகதிர்களின் வீச்சு நிகழும்போது இறைவனை அடைந்து வழிபடுவது தானே அறிவுடையவர் செயல்! இராகு காலத் தீங்கு நீங்க இராகு காலத்தில் பூசை செய்கிறோம் ! அதுபோல கிரகண காலத் தீங்கு நீங்க கிரகண காலத்தில் தானே வழிபட வேண்டும் !

எனவே, வரும் சந்திர கிரகணம் மட்டும் அன்று, இனி வரும் எல்லாக் கிரகணக் காலங்களிலும் கோயில் நடை சாத்தாமல் அன்பர்கள் அனைவரும் இறைவனை வழிபட வழி விட வேண்டும் !

குறிப்பாக, அந்நேரங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்தத் தீங்கும் வராமலும், பிறக்கும் குழந்தை கிரகணக் கதிர் வீச்சின் தாக்குதலால் ஏதோ ஒரு வகையில் ஊனமின்றிப் பிறக்கவும் கோயிலில் அந்த நேரத்தில் விசேட பூசைகளுக்கு உபயம் செய்து வழிபட்டால் சிறந்த தலைமுறை உருவாக வழி ஏற்படும்.

தமிழ் ஆகம அறிஞர்
முதுமுனைவர். மு. பெ. சத்தியவேல் முருகனார்
தலைவர், செந்தமிழ் ஆகம அந்தணர் சிறப்பவை

 

Should Temples kept closed during Lunar Eclipse ? What does Agama says.

 

Top