You are here
Home > செய்திகள் > நாடே பரிசாகப் பெற்ற நாவலர்

நாடே பரிசாகப் பெற்ற நாவலர்

தமிழ் எப்படி வளர்ந்தது? தண்ணீர் ஊற்றியா? தழை உரம்? பாஸ்பேட்? இல்லை. புலவர்களுக்குத் தமிழ் இன்பம் அறிந்த மன்னர்கள் அவ்வப்போது அளித்த பரிசில்களால்! ஒருவன் பெற்ற பரிசிலைப் பார்த்து இன்னொரு புலவன் தமிழ் ஆற்றல்களை எல்லாம் நாடோறும் வளர்த்து வளர்த்து மன்னர்களிடம் சென்று திறங்காட்டி, உரங்காட்டி, தெவிட்டாத இனிமை காட்டிப் பெற்ற பரிசில்களால் வளர்ந்தது தமிழ்!

சும்மா ஓர் எண்ணம் தூண்ட புலவர்கள் என்னென்ன வெல்லாம் பரிசில்களைப் பெற்றார்கள் என்று இலக்கியங்களில் தேடிப் பார்த்தேன். 36,000 சவரன் ஒரு புலவர் பரிசிலாகப் பெற்றிருக்கிறார்; நீங்கள் நினைப்பது சரி! இந்தப் பரிசில் பெற்றவர் ஒரு பெண் புலவர்தான்! யானையும் ஆள் சேனையும் பெற்றிருக்கிறார் புலவர்! பல சவரனில் செய்த தாமரை, அதாவது பொற்றாமரைப் பதக்கம் பெற்றிருக்கிறார் ஒரு புலவர்! இப்படிப் பலப்பல! ஆனால் இவற்றில் அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவது போல ஒரு புலவர் ஒரு நாட்டையே பரிசிலாகப் பெற்று அந்த நாடு இன்றும் அவர் பேராலேயே வழங்கி வருகிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா?

ஆம்! அந்த புலவர் இத்தனைக்கும் கண் இல்லாதவர்! வீரராகவன் என்று பெயர்; அதனால் அந்தகக் கவி வீரராகவர் என்று அவருக்குப் பெயர்! தொண்டை நாட்டுக்காரர், செங்குந்தர். அவர் எத்தனையோ நூல்கள் செய்திருக்கிறார் என்றாலும் அவற்றில் ஆகச் சிறந்தது திருக்கழுக்குன்ற உலா. இவர் நன்றாக யாழ் வாசிப்பார். யாழ் வாசிக்கும் பாணர் ஆதலால் அவரை யாழ்ப்பாணர் என்றும் சொல்வார்கள். ஓ! கண்டு பிடித்து விட்டீர்களா? அவர் பெற்ற நாடு தான் இன்றைய யாழ்ப்பாணம்!

பாருங்க! தற்கால அரசியல்வாதிகள் லண்டன், ஸ்வீடன் போன்ற நாடுகளில் ஒரு ஓட்டலைக் கூட வாங்கி அதைத்தக்க வைத்துக் கொள்ள முடியாமல் விசாரணை வலையில் அகப்பட்டுத் தவிக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்துப் புலவர், அதிலும் கண்தெரியாதவர் வெளிநாடாகிய இலங்கைக்குப் போய் ஒரு நாட்டையே எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் வாங்கிப் போடுகிறார். இன்றும் அது அவர் பட்டப் பெயரில் தான் இருக்கிறது. அடுத்த நாடு என்றால் பணப் பரிமாற்றம் (Exchange) எதனால் நடந்தது? நெஞ்சினிக்கும் நற்றமிழால் நடந்தது. தமிழே அங்கு நடந்த பரிமாற்றம்.

புலவர் இலங்கைக்குச் சென்ற போது அங்கே இருந்த மன்னன் பெயர் பரராசசிங்கன். குருடர்களை அரசன் சந்திக்கக் கூடாது, பார்க்கக் கூடாது என்று அந்தக் காலத்தில் ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தது. எனவே நம் அந்தகக் கவிக்கும் அரசனுக்கும் இடையே ஒரு திரை போட்டு வைத்திருந்தனர். அரசவையிலே இதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் திணறினான் புலவரின் சீடன். ஒருவழியாக உத்திக் கண்டுபிடித்து, “சிதம்பரம்” என்று குறிப்பால் உணர்த்தினான். சிதம்பரத்தில் காட்டும் சிதம்பர தரிசனத்தில் ஒரு திரை போட்டுக் காட்டுவார்கள் அல்லவா? அதைக் குறிப்பால் உணர்த்தி “சிதம்பரம்” என்றான் சீடன். உடனே அதைப் புரிந்து கொண்ட புலவர் “அண்ணாமலை” என்று கூறினார். உடனே இடையில் தொங்கவிட்டிருந்த திரை தீப்பிடித்து எரிந்து ஒழிந்தது. அண்ணாமலையில் இறைவன் தீப்பிழம்பாக அல்லவா எழுந்தான்? அதனால் திரை எரிந்து சாம்பலாயிற்று.

அவையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த சீடன் என்னவோ “சிதம்பரம்” என்றான், புலவர் உடனே “அண்ணாமலை” என்றார், உடனே திரை தீப்பற்றி எரிந்து விட்டதே! அரசனும் அவையும் அதிர்ந்து போயிற்று. ஓர் அரணிக் கட்டை, சிக்கிமுக்கிக்கல், தீப்பந்தம் என்பன போன்ற எதுவும் இல்லை! புலவர் ஒரு சொல்லால் தீப்பற்ற வைக்கிறாரே! எல்லோரும் திகைத்து நின்றார்கள்.

இந்தப் புலவருக்குக் கண்கூட இல்லை. எப்படி திரை போட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்? உடனே மன்னன் ஒரு சோதனை வைத்தான். கையில் வில்லை ஒயிலாகப் பிடித்துக் கொண்டு – (ஒயில் என்ற தமிழ் தான் ஸ்டையில் என்று ஆங்கிலம் ஆனது) அப்படி ஸ்டையிலாக நின்று நான் எப்படி இருக்கிறேன் என்பதைக் கூறும் பார்க்கலாம்! என்றான். உடனே புலவர் மனக்கண்ணால் காட்சியைக் கண்டு அதை அப்படியே ஒரு பாடலில் வடித்தார்.
.

வாழும் இலங்கைக் கோமானில்லை, மானில்லை
ஏழு மராமரங்கள் இங்கில்லை – ஆழி
அலையடைத்த செங்கை அபிராமா! இன்று
சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு

.
சிலை என்றால் வில் என்று ஒரு பொருள் உண்டு. அழகிய மன்னனாகிய அபிராமனே! காலத்தால் வாழும் இராவணன் இங்கே இல்லை; மாயமான் இல்லை; ஏழு மராமரங்கள் இல்லை. ஆனால் எதற்காக இப்போது வில்லைத் தூக்கி நிற்கிறாய் என்று சொல்?

மன்னன் அதிர்ந்து போனான். இவர் ஊனக் கண் இல்லாதவர் ஆனாலும் நெற்றிக்கண் என்னும் ஞானக் கண் உள்ளவர் போலும் என்று உடனே பணிந்தான். தான் ஆளும் நாட்டின் ஒரு பகுதியை புலவர்க்கு எழுதிக் கொடுத்தான் அதுதான் இன்றைய யாழ்ப்பாணம்!

நாட்டை மட்டுமா கொடுத்தான்? தன் நெஞ்சையே புலவரிடம் கொடுத்தான். கூடவே இருந்து நீண்ட காலம் தமிழ் இன்பம் துய்த்தான். தான் அனுபவித்த அந்த செந்தமிழ் இன்பத்தை ஒரு பாடலாக வடித்தான். அது இதோ!
.
.
விரகன் முத்தமிழ் வீர ராகவன்
வரகவி மாலையை படிக்கும் போதெலாம்
உரகனும் வாணனும் ஒப்பத் தோன்றினால்
சிரகர கம்பிதம் செய்ய லாகுமே
.
.
அதாவது வீரராகவப் புலவரின் கவிகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் தலையசைத்துக் கைதட்ட வேண்டும் என்று கேட்பார் அனைவருக்கும் தோன்றும். எனக்கென்ன தோன்றுகிறது என்றால் கூடவே ஆதி சேடனும், வாணாசுரனும் இருந்தால் எப்படி இருக்கும்? ஆதி சேடனுக்கு ஆயிரம் தலைகள் என்கிறார்கள்; வாணாசுரனுக்கோ பக்கத்திற்கு ஆயிரமாக இரண்டாயிரம் கைகள் என்கிறார். இவர் பாட்டைக் கேட்டால் ஆதி சேடன் ஆயிரம் தலைகளும் சுவைத்து அசைக்க, வாணாசுரனின் இரண்டாயிரம் கைகளும் தட்டும் அல்லவா? அப்படி இரசிக்க வேண்டியதல்லவா இவர் பாட்டு?

இதைக் கேட்ட மன்னனின் மனைவி அதாவது பட்டத்து இராணி திருமதி பரராசசிங்கம், உடனே இடை மறித்து ஒரு பாடலைப் பாடினார். பாடல் வருமாறு:
.
.
போதைஅழகன் கவிவீர ராகவன் போற்றுகவி
ஓதையைக் கேட்டுக்கொண்டாடாத பேரில்லை ஓங்குபுவி
மாதை எடுக்கும் வலன்முடி சேட மகிபற்கன்றே
காதை வகுக்கிலன் வேதா சிரக்கம்பம் காண்பதற்கே!
.
.
அதாவது இந்தப் பாடலில் இராணி இடைமறித்துக் கூறியது இது தான்! “அரசே! உங்கள் ஆசை தவறில்லை. ஆனால் இதனால் என்ன ஆகும் என்று படைப்புக் கடவுளாகிய பிரமன் யோசிக்கிறான். இந்த புலவனின் கவிகளைக் கேட்டு ரசித்து ஆதிசேடன் தனது ஆயிரம் தலைகளையும் அசைத்து விட்டால் போச்சு! அந்தத் தலைகளின் மீதுதான் இந்தப் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறான் ஆதிசேடன்! உடனே பூமி பொலபொல என்று வீழ்ந்து விட்டால் என்ன ஆவது? இப்படி யோசித்துத் தான் படைக்கும் போதே பிரம்மா பாம்புக்குக் காது இல்லாமல் படைத்து விட்டான்! ஆதிசேடன் பாம்புகளின் தலைவன் தானே! அவனுக்குக் காது கிடையாது?

என்ன அற்புதமான பாடல்.! இதை ஒரு சிங்கள நாட்டு இராணி பாடுகிறாள். எதற்குப் பதிலாக? சிங்கள நாட்டு மன்னன் பாடிய பாடலுக்குப் பதிலாக! அப்படி ஒரு இனிய தமிழும் இடையறாத தமிழ் உணர்வும் இன்று நம்மிடம் இருந்தால் சிங்களர் நம் வசமாகி விடமாட்டார்களா? நல்லுறவை நற்றமிழே பேணும்!

இவண்

மு.பெ.சத்தியவேல் முருகன்

Top