You are here
Home > செய்திகள் > இடக்கும் மடக்கும் (லொள்ளு)

இடக்கும் மடக்கும் (லொள்ளு)

நம் வாழ்க்கையிலேயே பலர் இடக்கு மடக்காகப் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். திரைப்படத்திலே கூட ஒரு நடிகரும் மற்றொரு நகைச்சுவை நடிகரும் தம்முள் இடக்கும் மடக்குமாகப் பேசுவதைக் கேட்டு ரசிக்கிறோம். இதை லொள்ளு என்று தற்கால இளவட்டங்கள் தொட்டிலிட்டுப் பெயர் வைத்திருக்கின்றனர். பேர் தான் புதிதே தவிர தமிழ் இலக்கியங்களில் மிகப் பழங்காலத்தில் இருந்து இது வந்து கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே ஒருவரை இடக்காகக் கேள்வி கேட்க, கேட்டவரையே மடக்குகிற வகையில் புலவர் பதில் சொல்வது போல் பல சுவையான காட்சிகளை இலக்கியத்தில் காணலாம். இது பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்துப் புலவர்களிடையே அதிகம் காண முடிகிறது.

அப்படியொரு உரையாடலை முத்துராமலிங்க சேதுபதி மன்னர், சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் ஆகியோரிடையே அடிக்கடி அரசவையில் நடக்கும். அத்தனையும் அத்துணை சுவையாக இருக்கும். ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம். எல்லாவற்றையும் சொல்வதென்றால் அதுவே ஒரு தனி நூலாகி விடும்.

சேதுபதி அரசர்: புலவரே! உணவு ஆயிற்றா? என்ன உண்டீர்?

கவிராயர்: அரசவையில் என்னை அவமானப்படுத்த எண்ணம் போலும்! அரசரைப் போல ஆடம்பர உணவா எங்களைப் போன்ற ஏழைப் புலவர்கள் உண்ண முடியும்? இன்று கீரை தான். அது என்ன கீரை என்று கூட தெரியாது. ஆனால் என் வயிற்றிற்கு அதைத் தெரியும் போலிருக்கிறது வாங்கி செரித்து விட்டது! (அவையில் சிரிப்பலை)

சேதுபதி அரசர்: கீரை என்றவுடனே எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றில் பலப்பல நிறங்கள் உண்டு. ஆனால் தாவரத்தில் மட்டும், அது உலகில் எந்த இடத்தில் விளைந்தாலும் ஒரே நிறமாக பச்சையாக இருப்பதேன்? உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து விட்டேனோ?

கவிராயர் : நல்ல கேள்வி ! மூளை உள்ளவர்கள் மூளை உள்ளவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. அரசே அதற்கு என்ன காரணம் என்று சொல்கிறேன். தாவரங்கள் அனைத்திற்கும் ஒரே அறிவு தான். எனவே அவையனைத்தும் ஒரே நிறத்தில் உள்ளன. மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றிற்கு ஐந்து வேறு அறிவுகள்; சில மனிதர்களுக்கு மேலும் ஒன்று சேர்ந்து ஆறு என்றும் சொல்லலாம். இப்படி பல அறிவு இருப்பதால் நிறமும் பலவாயிற்று. (அவையில் கை தட்டல்)

சேதுபதி அரசரும் புலவர்; சரவணப் பெருமாள் கவிராயரும் புலவர். எனவே கேள்வியையும் பதிலையும் வெண்பாவிலேயே விளாசிக் கொண்டார்கள். அது வருமாறு:
.

பூஅயனால் பூவிலுண்டாம் புன்மரங்கள் வேறுநிறம்
மேவா(து)ஒன் றாயதென்ன விள்ளுவீர் – தாவசரம்
மெய்யறிவொன் றானமையால் வேறுநிறம் இன்றுசரம்
ஐயறிவால் பன்னிறம் ஆம்.
.

அங்கே அரசர் முன் தன்கூத்துத் திறத்தைக் காட்டிப் பரிசில் பெற ஒரு கூத்தன் வந்திருந்தான். அவன் புனைந்தது சிவபெருமான் வேடம். வேடம் புனையும் போது சிவபெருமானைப் போல சடையைக் கட்டி அதில் பிறை நிலாவைச் செருகி வைக்க வேண்டும். கூத்தாடும் போது அந்தப் பிறைநிலா கீழே விழுந்து விடப்போகிறது என்று எண்ணி அதை நன்றாகச் செருகியதில் அது கொஞ்சம் தான் வெளியே தெரிந்தது. முக்கால்வாசி நிலா சடைக்குள் போய்விட்டது.

சேதுபதி அரசர்: இந்தச் சிவபெருமான் தலையில் பிறை நிலா மறைந்து கொண்டிருக்கிறதே? என்ன காரணம் தெரியுமா புலவரே!

கவிராயர்: அது ஒன்றுமில்லை அரசே! சிவபெருமானின் அருகிலேயே விநாயகரும் இருக்கிறார், பாருங்கள்! விநாயகர்க்கு இருப்பது ஒற்றைத் தந்தம். இன்னொன்றை கயமுகாசுரனைக் கொல்ல ஒடித்து விட்டார் என்பதை உலகறியும் ஆணையின் தந்தமோ பிறைநிலா போல வளைந்திருக்கும் அல்லவா? அதனால் எங்கே பிள்ளையார் சடைமேல் வைத்திருக்கிற பிறைநிலாவைக் கொடு, ஒடிந்த கொம்பில் அதை ஓட்ட வைத்துக் கொள்கிறேன் என்று கேட்டுவிடுவானோ என்று சிவன் பிறை நிலாவை சடைக்குள் மறைத்து வைத்திருக்கிறார் என்றார். (பிள்ளையார், சிவன் உள்பட அவை கை தட்டி மகிழ்ந்தது). பாடல்:
.

நஞ்சுடைய கண்டத்து நாதன் முடிமீது
குஞ்சுமதி அணிந்து கொள்வானேன் – நஞ்சமவன்
மூத்தப்பிள்ளை அன்றுமுறித்த கொம்பைக் கேட்குமென்று
சேர்த்துவைத்துக் கொண்ட திறம்.
.

[சேதுபதியரசர் கண்ணை சுழலவிட்டு அவையை நோட்டமிட்டார். அதில் ஒரு மகாபாரதப் பிரசங்கி இருந்தார் அவரை பார்த்த உடனே அரசருக்குப் பளிச்சென்று ஒன்று தோன்றியது]

சேதுபதியரசர்: புலவரே! இங்கே மகாபாரதப் பிரசங்கியார் வந்திருக்கிறார். அவரைக் கேட்டால் திரௌபதிக்குக் கணவர்கள் ஐந்து பேர் என்பார். ஆனால் என்னைக் கேட்டால் ஒரு வாய்ப்பில் ஆறு என்று கூட சொல்லலாம் என்பேன்! நீர் என்ன சொல்கிறீர்?

கவியரசர்: முழுமையாக நான் ஒப்புக் கொள்கிறேன்!

சேதுபதியரசர்: என்ன, எனக்குத் தாளம் தட்டுகிறீரா? அங்கே பாருங்கள்! மகாபாரத பிரசங்கியார் பதைக்கிறார். எப்படி என்று சொல்ல வேண்டாமா?

கவிராயர்: சொன்னால் போச்சு! கதைப்படி குந்திக்கு மாற்றாள் மகன்கள் இருவரோடு சேர்ந்து மகன்கள் ஐந்து பேர் என்பது உண்மை. ஆனால் குந்தியின் மூத்த மகன் கர்ணன் இருக்கிறானே! அவனைக் குந்தியல்லவா மறைத்து விட்டாள். அப்படிக் கர்ணனை குந்தி மறைக்காமல் இருந்திருந்தால் மற்றவர்களோடு சேர்ந்து கர்ணனும் இருந்திருப்பான். எனில் திரௌபதிக்குக் கதைப்படி கணவர்கள் ஆறு என்று ஆகியிருக்காதா? அதைத்தான் நீரும் சொன்னீர், நானும் சொல்கிறேன். (அவை கைதட்டல்; மகா பாரதப் பிரசங்கி விழித்தல்). பாடல் இதோ:
.

கச்சையிட்ட மென்முலையங் கன்னிதுரோ பதையை
மெச்சியிட்டங் கொண்டறுவர் மேவாரோ – நிச்சயமா
மின்னனை யாள்குந்தி வியந்துமுனம் பயந்த
கன்னனைநீக் காதிருந்தக் கால்!

இவண்

மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top