You are here
Home > செய்திகள் > திருமாலும் சிசி டிவியும்

திருமாலும் சிசி டிவியும்

தமிழ்ப் புலவர்களின் கற்பனைக்கு ஈடாக உலகின் வேறெந்த மொழிப் புலவனின் கற்பனையையும் கூற முடியாது. ஒன்று புலவனின் கற்பனை வளம்; மற்றது தண்டமிழ்த் தனி வளம்.

தமிழ் நாட்டில் திருவீழிமிழலை என்று ஒரு தலம். அங்கே திருமால் சிவபெருமானை வணங்கிப் பூசை செய்தாராம்! சும்மா ஒரு நேர்த்திக் கடன்! வேறெவரிடமும் இல்லாத மிக உயர்ந்த ஆயுதமான சக்ராயுதம் வேண்டி செய்த பூசை! அரிய ஆயுதம் வேண்டுமென்றால் பெரிய பூவால் தானே பூசை செய்ய வேண்டும்? 1008 அர்ச்சனையை 1008 தாமரைப் பூவில் செய்ய பூசையில் அமர்கிறார் திருமால். சிவபெருமான் வேண்டுமென்றே ஒரு பூவை மறைத்து விடுகிறார். மறைப்பதை அவருக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? அவர் செய்யும் ஐந்தொழிலில் ஒன்று மறைத்தல் தொழிலாயிற்றே! தொழில் மட்டுமா? அது அவருக்கு ஒரு விளையாட்டு கூட! ஓட்டை மறைப்பார்; கோவணத்தை மறைப்பார்; மாம்பழத்தை மறைப்பார்; அந்த விளையாட்டில் வென்றவர்களை நாயன்மார்களாக ஆக்கி உயர்த்தி விடுவார். இங்கே அவரது விளையாட்டில் மாட்டிக் கொண்டார் திருமால்.

காணாமல் போன பூவிற்கு எங்கே போவது? பூசை நடுவில் எழுந்து போக முடியாது; யோசிக்கிறார். தன் கண்ணை எல்லோரும் தாமரைக்கண் என்பர். ஏன், இதைத் தோண்டி எடுத்து அர்ச்சனை செய்துவிட்டால் என்ன! படாரென எண்ணியதைச் செயல் படுத்தி தன் ஒரு கண்ணை சிவன் பாதமலர்ப் பாகத்தில் வைத்து விடுகிறார்; பரமனுக்கு பரம சந்தோஷம் ! கேட்ட சக்கரத்தைக் கொடுத்து விடுகிறார். அந்தச் சக்கரம் தான் திருப்பதியில் சுழலுகிறது என்று வையுங்கள்! இது தான் கதைக் கரு! இதை வைத்து நம் புலவர்கள் என்னென்ன விளையாட்டு விளையாடுகிறார்கள்! ஒவ்வொன்றும் தேமதுரத் தீந்தமிழ்க் கற்பனை!

மேலே கூறிய புராணக் கற்பனை வரலாற்றை வேறு ஒரு புராணக் கற்பனை வரலாற்று உருளைமேல் வைத்து கற்பனை வண்டியை ஓட்டித் தொடங்குகிறார் மணிவாசகர். என்ன சார்! புராண வரலாறுகளை கற்பனை என்கிறீர்களே என்று ஆதங்கப் படவேண்டாம். அந்தக் கற்பனையில் ஓரு தற்பரன் தத்துவ உண்மை ஒளிந்திருக்கும். சிலருக்கே இறைவன் உணர்த்துவான். அப்படித் தான் வள்ளலார்க்கு இறைவன் உணர்த்தினான் என்று இவை எல்லாம் “ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி, உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே” என்று பாடினார் வள்ளலார். உணர்ந்து உள்ளொளி பெருக்குவது ஒரு புறம்; குழைந்து தீந்தமிழ்க் கற்பனையில் இழைப்பது இன்னொருபுறம்.

எங்கே விட்டோம்! ஆம்! மணிவாசகர் தொடங்கிய கற்பனையில் விட்டோம். திருமால் கண்ணை இடந்து பூசித்ததோடு ஒட்டிய வரலாற்று உண்மை ஒன்றுண்டு என்று அதனைக் காட்டுகிறார். அது வேறொன்றுமில்லை; திருவண்ணாமலையில் நடந்தது அந்த நிகழ்ச்சி. அங்கே சிவஜோதி ஒன்று அண்ணாமலையாய் எழ திருமாலும் அவரது மகனும் அந்த ஜோதியின் அடிமுடி தேடிய போட்டி அது. பிரமன் முடியையும் திருமால் அடியையும் தேடி கிளம்பினார்கள். வேதவாயன் பிரம்மா, பொய்சொல்லி தண்டனை பெற்றான். திருமால் உண்மையாக அடியைத் தேடி பூமியைத் தோண்டிப் புறப்பட்டான். சுரங்கம் போல தோண்டி வந்தவன் சிதம்பரம் பக்கம் வந்த போது எழுந்த ஆரவாரம் கேட்டு நிலத்திற்கு மேலே வந்தால் அங்கே நடராசப் பெருமான் நடனம் ஆட பக்தர்கள் வணங்கிக் கொண்டிருந்தார்கள். பக்தர்களை விலக்கிப் பார்த்தால் நடராசராகிய சிவன் காலைத் தூக்கி ஆடும்போது அவரது இடக்காலைப் பார்த்துவிட்டான். அடடா! இதைத்தானே தேடி வந்தோம்; இதோ, ஒரு காலைப் பார்த்தாயிற்று; இனி அடுத்த காலையும் பார்த்தால் போட்டியில் தான் வென்று விடலாம் என்று எண்ணி சிதம்பரத்திலேயே நடராசர் சந்நிதி முன்னாலேயே படுத்துக்கொண்டு பழி கிடந்தான் என்றும் அது தான் அங்கு காணப்படும் கோவிந்த ராஜர்! என்று மணிவாசகர் கற்பனையை உருட்டி விடுகிறார். இந்தப் பொருளில் பாடிய திருக்கோவையார் பாடல் இதோ!

புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியாது
இரங்கிடுஎந் தாயென்று இரப்பத்தன் ஈரடிக்கு என்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற்று ஆங்கது காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே!

அடடா! இங்க வாங்க! திருமால் திருவீழிமிழலையில் செய்த பூசையின் உட்ப்பொருள் இங்கிருந்து தொடங்குகிறது என்று குதிக்கிறார் ஒரு புலவர்! இனி, அவரது கற்பனை!

திருமால் நெடுநாள் தில்லையில் காத்துக் கிடந்தாராம், மணிவாசகர் கூறியபடி. ஆனால் ஒரு பலனும் இல்லை. நடராசர் அடுத்த காலைத் தூக்கிக் காட்டவே இல்லை. இங்கே காட்டாவிட்டால் என்ன? வேறே ஓர் ஊரில் காட்டலாம் அல்லவா? தில்லையிலே நடராசராக ஆடுகிறார்; திருவாரூரில் தியகராசராக ஆடுகிறார் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே திருவாரூர்க்குப் போய் பார்ப்போம் என்று திருமால் கிளம்பிவிட்டார். வழியில் திருவீழிமிழலைக்கு வந்தார். அங்கே பளிச்சென்று ஓர் உத்தி தோன்றியது. இங்கே பூசை செய்துவிட்டுத் திருவாரூர்க்குப் போவோம். இப்படி எண்ணி திருமால் திருவீழிமிழலையில் பூசித்தது, கண்ணை இடந்து அர்ச்சித்தது, சக்கரம் பெற்றது என்பதெல்லாம் அறிந்த கதை. அங்கே சக்கரம் பெற்றதெல்லாம் ஒரு சாக்கு; உளவு வேறே!

திருமாலுக்கு சிவபெருமானின் திருவடியை முழுமையாகப் பார்ப்பது தான் நோக்கம். திருவாரூரில் தியாகராசர் ஆடும்போது இரண்டு திருவடியையும் பார்த்துவிட முடியுமா? அங்கேயும் நினைத்தது நடக்கவில்லை என்றால்? யோசிக்கிறார்: “காலில் கண் இருந்தால் கன இருட்டிலும் நடக்கலாம்” என்பது பழமொழி. பழங்காலத்தில் இருட்டில் நடக்கும் போது மின்மினிப் பூச்சியைக் காலணியில் ஒட்டி நடப்பார்களாம். ஒன்று செய்வோம்! சிவ பெருமானின் பாதத்திலேயே நம் கண்ணைப் பதித்துவிட்டால்? ஆம்! அப்படித்தான் செய்ய வேண்டும்! வரும் 21ஆம் நூற்றாண்டில் இரவில் தெருவில் என்ன நடக்கிறது என்பதை அறிய ஒவ்வொரு தெருவிலும் கண்ணுக்கு புலனாகாதபடி சிசி டிவி (CC TV) என்ற குறும் காமெரா பதித்து வைத்து நிகழ்வுகள் அதில் பதிவாக பின்னர் வேண்டும் போது அதை எடுத்துப் பார்த்துப் பதிவுகளை அறிந்து கொள்ளவார்களாமே!

அப்படி சிவபெருமானின் பாதத்திலேயே நமது கண்ணாகிய காமெராவைப் பதித்து வைத்து விட்டால், அவர் எப்போது எங்கே ஆடினாலும் திருவடிகள் நன்றாகத் தெரிந்துவிடும் என்று அதற்குத் தான் திருமால் தன் கண்ணை இடந்து சிவன் காலடியில் பொருத்தி விட்டாராம்; அடடா! என்ன சமத்து ! என்று புலவர் திருமாலைப் புகழ்கிறார்.

இது தெரியாமல் பலர் திருமால் சக்கரத்திற்காகத் தன் கண்ணை இடந்து அர்ச்சித்தார் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்கிறார் புலவர். அற்புதமான அந்தப் பாடலை பாருங்கள்!

கங்குலிலே நடப்பார்க்குக் காலிலே
     கண்வேண்டும் கண்டீர் அந்தச்
சங்கரனார் திருத்தாளில் கண்ணிடந்து
     சாத்திவைத்த சமத்தைப் பாரீர்!
அங்கணனார் ஆரூரில் ஆடவே
     கிங்கிணிகால் அருமை எல்லாம்
செங்கண்நெடு மால்தனக்கே அல்லால்மற்
     றொருவருக்குந் தெரிந்தி டாதே!

(கங்குல் – இரவு)

இந்தப் புலவரின் கற்பனையைப் பாராட்டுவதா? பிற்கால அறிவியல் அடிப்படைக்கு முன்னமே இடம் தந்து கற்பனையைக் கவின் தமிழில் காட்டில் திறத்தைப் பாராட்டுவதா? யார் யாரையோ தீர்க்கதரிசி என்றும் மகாகவி என்றும் பாராட்டுகிறோம்! உண்மையில் இவரல்லவா அவர்!

இவண்

மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top