
திரு.அ.உமாமகேஸ்வரன்,
பணிப்பாளர்,
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
பேரன்புடையீர்!
வணக்கம். திருவாவடுதுறை ஆதீனம் மேலகரம் சுப்பிரமணியதேசிகரைச் சந்தித்து
அளவளாவி விட்டு மாயூரம் திரும்பிய முன்சீஃப் வேதநாயகம் பிள்ளை,”ஊர் வந்து
சேர்ந்தேன் என்றன் உளம் வந்து சேரவில்லை ,ஆர் வந்து சொலினும் கேளேன் அதனை
இங்கு அனுப்புவாயே” என்று சீட்டுக்கவி எழுதினார். இன்று அடியேனுடைய நிலையும்
அதுவே! நான்காம் அனைத்துலக முருக பக்தி மாநாடு நடந்து முடிந்து
இலங்கையிலிருந்து திரும்பிசென்னை வந்து சேர்ந்தேன்; என் உள்ளத்தைத் தேடுகின்
றேன். அது அங்கே யே உங்கள் வசம் உலாவிக்கொண்டிருக்கிறது.தயவு கூர்ந்து அதை
அனுப்பிவைக்கவும்.
எந்தக் கணத்திலும்.பரபரப்பும்,பதட்டமும் இன்றி ,பொறுமை
காத்து,புன்னகைபூத்து,நயமும் விநயமுமே வடிவாக நின்ற தங்கள் முகமே என் முன்
நடமாடுகிறது. எனது உபாசனா மூர்த்தியான திருவேலிறைவனது தெய்வத்திருவருள்
தங்களது இடத்தும் வலத்தும் இருபுறமும் சூழ்ந்து துணை செய்யுமாக!
வாழ்த்துப்பா
நறுமா மகேச்சுரனை நல்லிலங்கை கண்டால்
உறுமா உபாயமொன் றுண்டு சிறிதளவில்
தள்ளியே நின்றிடுவீர் தன்பொற்பால் தாக்கிநந்தம்
உள்ளமே கொள்ளைகொள் வான்
அன்பன்,
மு.பெ. சத்தியவேல் முருகன்.