You are here
Home > சர்வ ஞான > சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில் பகுதி 14

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில் பகுதி 14

– செந்தமிழ்வேள்விச் சதுரர்

முருகப்பெருமான்: “சிவோகம் பாவனை என்று உயிர்கள் செய்ய வேண்டிய பாவனை எது என்று விளக்கிக் கூறினீர்கள், தந்தையே! இன்னும் சற்று விளக்கமாகக் கூறினால் உலகம் பயன் பெறும்.”

சிவபெருமான்: “சிவன் வேறல்ல; தான் வேறல்ல என்று பாவிக்க வேண்டும் என்று கூறியது உண்மை தான்! ஆனால் சிவம் எது என்று சரியாகத் தெரிந்தால் தானே அதனோடு ஒன்றி நிற்க முடியும்?”

முருகப்பெருமான்: “ஆமாம்! அது உண்மை தான். சிக்கலே இங்கே தான் தொடங்குகிறது. உயிர்களுக்குக் கடவுள் எது என்பது தான் தெரிவதில்லை. கண்டவற்றைக் கடவுள் என்று எண்ணிக் கலங்கி விடுகிறது.”

சிவபெருமான்: “சிலர் பிரம்மாவைக் கடவுள் என்று ஏமாறுகிறார்கள்; அதையொட்டி பிரம்மாவையே கடவுள் என்று பல நூல்கள் புராணங்கள் எல்லாம் உருவாக்கித் தாமும் மயங்கி பிறரையும் மயங்க வைத்து ஒருவனாகிய என்னை அதாவது சிவனை விட்டு தூர விலகிச் செல்ல வைத்து விடுகின்றனர். இன்னும் சிலர் திருமாலையே கடவுள் என நினைத்து ஏகப்பட்ட நூல்களையும், புராணங்களையும், தத்துவங்களையும் உருவாக்கி உயிர்களை அலைக்கழிக்கின்றனர். இப்படியே பலப்பல தெய்வமல்லாத உயிர்களைத் தெய்வமாகக் கருதச் செய்து காலத்தை வீணடித்து விடுகின்றனர். காலம் போகட்டும், பிறவிகள் எத்தனை ஏறுகின்றன! கடவுள் என்றால் அவருக்குப் பிறப்பு இறப்பு இருக்கக் கூடாது என்பதையே மறந்து விடுகின்றனர்.”

முருகப்பெருமான்: “ஆமாம்! சங்க இலக்கியங்கள் எல்லாம் சிவமாகிய கடவுளை அதாவது தங்களை ‘பிறவா யாக்கைப் பெரியோன்‘ என்று சரியாகத் தான் அடையாளம் காட்டுகின்றன. நான் வேறு, தாங்கள் வேறல்ல என்பதை நாமறிவோம்; இன்னும் சில மெய்ஞ்ஞானிகள் அறிவர். அதனால் தான் என்னைப் பாடிய கந்தரநுபூதி கூட ‘பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்று சரியாகத் தான் சொல்லுகிறது. ஆனால் இந்த உயிர்களில் பல இதை உணர்வதே இல்லை. கருத்தில் இருத்தாமல் கை நழுவ விட்டு விடுகிறார்கள். கடவுள் என்றால் அவர் ஒருவரே; அந்த ஒருவர் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்பதைச் சௌகரியமாக மறந்து விட்டு யார் யாரையோ கடவுள், தெய்வம், தேவர் என்று கூறி வழிபட்டு தாங்கள் ஏறி வர வேண்டிய பாதையைத் தாங்களே அடைத்துக் கொள்கிறார்கள்.”

சிவபெருமான்: “சரியாகச் சொன்னாய் முருகா! இவர் தேவர் அவர் தேவர் என்று இரண்டாட்டம் செய்யாது மகாதேவர் ஒருவரே என்று சிவத்தை வணங்குங்கள் என்று என்னடியான் மணிவாசகன் பாடியும் இவர்கள் திருந்துவதாயில்லை என்பதே என் கருணையை மேலும் தூண்டி நிற்கிறது.”

முருகப்பெருமான்: “அறியாமை உயிர்களை ரொம்பத் தான் ஆட்டிப் படைக்கிறது! திருமாலைத் தெய்வமாக வணங்குகிறவர்களே திருமாலுக்குப் பத்துப் பிறப்பு உண்டு என்று கூறுகிறார்கள். இதிலே என்ன விசித்திரம் என்னவென்றால் இன்னும் திருமாலுக்கு ஒரு பிறப்பு வரவே இல்லை என்கிறார்கள். ஆனால் இன்னும் வராததை வந்ததாக எண்ணி திருமாலின் தசாவதாரம் என்று கூறிக் கொள்கிறார்கள். இது வரை திருமால் எடுத்தாகக் கூறுவது நவாவதாரம் தான்; பத்தாவதோடு அவர் பிறப்பு முடியுமா முடியாதா என்றும் உறுதிபடச் சொல்வதற்கில்லை. ஏனென்றால் அது பிறந்ததன் பின் தானே முடிவாகும்? இதையெல்லாம் உயிர்கள் சிந்திக்கவே செய்யாவா? ஆச்சரியமாக இருக்கிறது!”

சிவபெருமான்: இந்தப் புராணப் புனைவுகளை விடு! உண்மை என்னவென்று உனக்கும் எனக்கும் தெரியும்! ஏன் என்னைப் பாடிய அருளாளர்களுக்கும் தெரியும்! அவர்களில் ஒருவரான அப்பர், ‘நூறு கோடி பிரமர்கள் நொந்தினர்; ஆறு கோடி நாரணர் அங்ஙனே’ என்று பாடவில்லையா? ஆறு கோடி நாராயணர்கள் பிறந்து இறந்திருக்கிறார்கள் என்றால் திருமாலுக்குத் தசாவதாரம் என்று பேசும் பேச்சும் புராணமும் தவிடு பொடியாகிறதே! ஒரு புறம் தசாவதாரப் பேச்சும் உலகில் கேட்கிறது; மறுபுறம் ஆறு கோடி நாரணர்கள் இது வரை பிறந்து இறந்திருக்கிறார்கள் என்ற பேச்சும் உலவுகிறது. என்ன விசித்திரம் பார்த்தாயா! அண்ட வெளியில் பல கோடி உலகங்கள் உள்ளன. அவ்வுலகங்கள் ஒவ்வொன்றையும் படைக்கத் தகுதி பெற்ற உயிரான ஒரு பிரம்மாவையும், காக்கத் தகுதி பெற்ற உயிரான ஒரு திருமாலையும் அமர்த்தியுள்ளோம். இவர்களுக்கெல்லாம் அந்தந்த உலகங்களுக்கு மேல் அதிகார வரம்பில்லை.

    அதனால் தான் இவர்கள் எழுதி வைத்துள்ள புராணத்திலேயே திருமால் மூவுலகை அளந்தான் என்று தான் எழுதி வைத்திருக்கிறார்கள். இப்படித் தான் திருமாலே கடவுள் என்று வணங்கும் வைணவனும் கூறுகிறான். இந்த அண்டவெளியில் இருப்பது மொத்தம் மூன்று உலகங்கள் தானா என்ற கேள்வியைக் கேட்டால் திருமாலின் வரம்பு சுருங்கியது, அவர் அண்டவெளி அனைத்திற்கும் ஆட்சி படைத்த கடவுளாக இருக்க முடியாது என்ற தெளிவு தானாகவே பிறக்குமே! திருமால் என்பதும், பிரம்மா என்பதும் இந்திரன் என்பதும் பதங்கள், அதாவது பதவிகள் என்பதைக் கேட்டும் உலக உயிர்கள் மயங்குகின்றன. 

முருகப்பெருமான்: “ஆம்! எப்படி எப்படியோ உலக வழக்கங்களே உணர்த்தினாலும் உயிர்கள் உணராதது அறியாமையின் ஆழத்தைக் காட்டுகிறது. தமிழில் திருமாலை உலகளந்த பெருமாள் என்று அழைக்கின்றனர். அவர் பெரும் ஆள் என்றால் அவர் பெருமை மிக்க ஒரு மனிதர் தான்; ஆள் தான் என்பதை ஏன் உயிர்கள் உணரவில்லை! வடமொழியில் திருமாலைப் புருஷோத்தமன் என்று அழைப்பர். அதாவது புருஷர்களில் அவர் உத்தமன் என்று தானே பொருள்! அவர் புருஷர் தானே ஒழிய கடவுள் இல்லை என்று அச்சொல்லே விளக்குகிறதே! இராமர் வென்றதைக் கூட கவிகள் மாநுடம் வென்றதம்மா என்று தானே பாடுகிறார்கள்! மாநுடம் எப்படிக் கடவுளாக முடியும் என்று உயிர்கள் சிந்திப்பதில்லை! பிரம்மாவைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை! திருமால் உயிர் என்றால் அவரது பிள்ளையாகக் கூறப்படும் பிரம்மாவும் உயிரே, கடவுளே இல்லை என்று தனியே எடுத்து விளக்க வேண்டுவதில்லை. இவ்வாறு உயிர்கள் பலவற்றைக் கடவுளாக எண்ணி மயங்குகிற மயக்கம் உயிர்களிடமிருந்து நீங்கினால் தான் உண்மைக் கடவுளை அவை அடைய முடியும்! அதற்கு அவைகளுக்கு உண்மையான கடவுள் இலக்கணங்களைப் பற்றிய அறிவு நிகழ்ந்து உண்மையான கடவுளை அவை அடைய முயல வேண்டும்.

சிவபெருமான்: ஆம். இது தான் சிக்கலே. கடவுள் இல்லை என்பது ஒரு நிலை. பிறகு பல பிறவிகளில் தேறி கடவுள் உண்டு என்ற உணர்வு பிறக்கும். நான் கூறுவதைக் கவனிக்க வேண்டும். எண்ணம் வேறு; உணர்வு வேறு. உணர்வு உள்ளுக்குள்ளே நிகழ்வது. ஆக, கடவுள் உண்டு என்பது உணர்வாய் உள்ளே தோன்றி நிற்கும். ஆனால் அதன் பிறகு உயிர் கடவுள் இலக்கணங்கள் அறியாமல் உண்மைக் கடவுளை விட்டு தோன்றியதை எல்லாம் கடவுள் என்று எண்ணி விடும். கடவுள் ஒருவர் என்று எண்ணாமல் பல கடவுளரை வணங்கும். ஒரே கடவுளான அவருக்குப் பிறப்பு இறப்பு இருக்கக் கூடாது. பிறக்கிறது என்றால் நாம் பார்க்கிற மாயையினால் ஆன உடலுள் மாட்டிக் கொண்டது என்று பொருள். கடவுள் அப்படிப் போய் மாட்டிக் கொண்டால் கடவுளாவாரா என்று உயிர்களில் பல எண்ணுவதே இல்லை.

முருகப்பெருமான்: இங்கே ஒரு நியாயமான கேள்வி எழும். அதாவது கடவுள் மாயையினால் ஆன உடலை எடுக்க மாட்டார் என்பது சரி! ஆனால் கடவுள் உருவத்தையே எடுக்கமாட்டாரா என்பது ஒரு கேள்வி!

சிவபெருமான்: கடவுள் உருவத்தை எடுப்பார். கடவுள் இலக்கணத்தைச் சரியாக உணராதவர்கள் கடவுளுக்கு உருவம் கிடையாது என்பர். இல்லை, கடவுள் அருவம், அருவுருவம், உருவம் ஆகிய மூன்றையும் உடையவர். மூன்றையும் ஒரே நேரத்தில் உடையவர். அப்படியானால் அவர் எடுக்கும் உருவம் எப்படிப்பட்டதாய் இருக்கும்? மாயையினால் பிடித்து வைத்த உடலாக அது இராது. அருளால் அமைந்த உருவமாக இருக்கும். இதை நம்மைப் பாடிய திருநாவுக்கரசு கூட ஒரு பாடலில் தெளிவாக “அருள் காரணத்தில் வருவார்” என்று எடுத்துரைத்தான். ஆனால் மக்கள் அதை எங்கே உணர்கிறார்கள். திருமுறையைப் பாடும் போது கூட இந்த இடத்தில் கூறப்படும் மிக முக்கியமான உள்ளுறை என்ன என்பதை உணராமலே சொல்லளவில் பாடிவிட்டுப் போகிறார்கள். ஆக, மாயையினால் ஆன உடம்பைக் காயம் என்றால் அது அல்லாததைக் கொண்டு உருவம் எடுக்கும் கடவுளை உயிர்கள் அகாயர் என்று உணர வேண்டும்.

முருகப்பெருமான்: அதே போன்று உயிர்கள் இன்னொரு குழப்பத்தையும் செய்து தடுமாறுகின்றன. கடவுளை நிர்க்குணப் பிரம்மம் என்று மிகவும் அறிந்தது போலக் கூறித் தர்க்கமிடுவது. கடவுள் ஒரு பொருள்; எந்த ஒரு பொருளுக்கும் குணம் இருந்தாக வேண்டும். குணமில்லாமல் குணிப்பொருள் கிடையாது. எனவே கடவுள் நிர்க்குணப் பிரம்மம் என்பது பொருளில்லாத கூற்று.

சிவபெருமான்: உண்மை, உண்மை!! இப்படிச் சிலர் மயங்கிக் கூறுவதற்குக் காரணம் உண்டு. மாயையினால் ஆன உடம்பில் குணதத்துவம் என்று ஒன்றுண்டு. அதில் மூன்று கூறுகளாக தாமசம், இராஜசம், சத்துவம் என்பவை இருக்கும். தாமசம் செயலைத் தடை செய்யும்; இராஜசம் செயலைச் செய்து இன்ப துன்பங்களை ஊட்டக் காரணமாய் இருக்கும்; சத்துவம் செயலேதும் இன்றி அமைதியாக இருக்கச் செய்து இன்பத்தை மட்டும் ஊட்டக் காரணமாய் இருக்கும். இவை மூன்றும் மாயையினால் ஆன உடலில் நாம் வைத்த ஊட்டும் உபாயங்கள். இவற்றைக் குணம் என்ற சொல்லால் கூறியது தான் பிரச்சினைக்கு மூலகாரணம். மாயையினால் ஆன உடல் கடவுளுக்குக் கிடையாது என்பதால் உடலின் கூறுகளான இம்மூன்று குணங்களும் கடவுளுக்கு இல்லையாதலால் கடவுளை நிர்க்குணன் என்று கூறலாம்; ஆனால் பொருள் என்ற வகையில் கடவுளுக்குக் குணம் இருந்தே ஆக வேண்டுமல்லவா? அதனால் தான் கடவுளை உணர்ந்தவர்கள் கடவுளை எண்குணன் என்றனர். அதனால் தான் நம்மைப் பாடிய வள்ளுவன் கூட ‘எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ கோளில்லாதது; பொறியில்லாதது; குணமில்லாதது என்று இடித்துரைத்தான். எனவே கடவுளின் இலக்கணமாக, கடவுள் மாயையின் குணமில்லாமையால் நிர்க்குணன் என்றும் அதே நேரத்தில் கடவுள் பொருள் என்ற வகையில் எண்குணன் என்றும் உணர்பவன் எவனோ அவன் தான் கடவுளை உண்மையாக உணர்ந்தவன்; உண்மையாக முயற்சி செய்து கடவுளை அடையத் தக்கவன்.

முருகப்பெருமான்: இது வரை கடவுளின் இலக்கணங்களைப் பற்றிச் சரியாக அறிந்துணர வேண்டும் என்று கூறினீர்கள். அது மட்டுமல்ல, கடவுளோடு உயிர்களுக்கு உள்ள தொடர்பைப் பற்றியும் சரியாக உணர வேண்டும். இந்தத் தொடர்பைத் தோய்வு என்று கூறலாம்; வடமொழியில் அத்துவிதம் என்பர். இந்தத் தோய்வை மூவகைத் தோய்வு என்றும் கூறலாம். ஒன்றாய், வேறாய், உடனாய் உள்ள தோய்வு. அதாவது கலப்பினால் ஒன்று போலத் தோன்றுவதாய், உண்மையில் பொருளால் இரண்டும் வெவ்வேறாய், தொழில் இயற்றும் போது ஒன்றோடொன்று உடனாக வேலை செய்வதாய் உள்ள தோய்வு. கடவுள் இப்படி எல்லாவற்றிலும் கலப்பினால் ஒன்று போலவும், பொருள் வகையால் வேறாகவும், தொழிலியற்றும் போது எல்லாவற்றின் உடனாக தொழிலியற்றுவதாகவும் தோய்ந்திருப்பார். இவ்வாறு கடவுள் உயிரோடும் தோய்ந்திருப்பார்; உலகத்தோடும் தோய்ந்திருப்பார். உயிரும் அப்படியே ஒன்றாய், வேறாய், உடனாய் உலகத்தோடு தோய்ந்திருக்கும். நன்றாகக் கவனிக்க வேண்டும் – கடவுள் உயிரோடு மேற்கூறியபடி தோய்ந்திருந்தாலும் உயிர் அதை உணராமல் உலகத்தோடு மூவகையாய் மேற்கூறியபடி தோய்ந்திருக்கும்.

    அதாவது கடவுள் உயிரோடு தோய்ந்திருப்பார்; உயிர் உலகத்தோடு தோய்ந்திருக்கும். உயிரின் குணம் என்னவென்றால் அது எதனோடு தோய்ந்திருக்கிறதோ அதன் வண்ணமாகவே மாறி நிற்கும். அதற்கு அடிப்படை அதன் உணர்வு. உணர்வினால் உயிர் ஒன்றித் தோய்ந்து நிற்கும் போது அது தோய்ந்த பொருளின் வண்ணமாகவே மாறி நிற்கும். கடவுள் உயிரில் தோய்ந்திருந்தாலும் உயிரின் உணர்வு கடவுள் பால் இல்லாததால் அல்லது சரியான கடவுள் பால் சரியாக இல்லாததால் உயிர் கடவுளின் வண்ணமாக மாறுவதில்லை. உயிரின் உணர்வு உலகத்தோய்வில் பாய்ந்து நிற்பதால் உயிர் உலகில் வண்ணமாகவே மாறிவிடுகிறது. ஒரு பக்குவம் ஏற்பட்டு உயிர் உலகத்தின் பால் பாயும் உணர்வை வெட்டிவிட்டு கடவுளின் பால் உணர்வைப் பாய்ச்சுமானால் உயிர் கடவுளின் வண்ணமாகவே மாறி நிற்கும். ஆக, உயிர் உலகின் பால் உணர்வோடு தோய்ந்த தோய்விலிருந்து நீங்கி, கடவுள் பால் உணர்வோடு தோய்ந்தால் கடவுளின் பேரின்பத்தில் நீங்காமல் திளைக்கலாம்.

சிவபெருமான்: இதைத் தான் நம் தாயுமானவன், ‘ஆணவத்தோடு அத்துவிதம் ஆனபடி மெய்ஞ்ஞானத் தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ?’ என்று பாடினான்.

முருகப்பெருமான்: ஆம்! தாயுமானவன் எவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தான்! ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். ஆணவத்தினோடு மூவகையாய்க் கலந்த தோய்வு உயிர் விட்டு நீங்கத் தக்க, அப்படி நீங்குகிற தோய்வு. ஆனால் இறைவனோடு உயிர் மூவகையாய் உணர்வால் கலந்து நிற்கும் தோய்வு எப்போதும் விட்டு நீங்காத தோய்வு. ஏனெனில் இறைவன் நிலையானவன் இல்லையா? ஆனால் நிலையான இன்பத்தை வேண்டுகிற இந்த உயிர்களுக்கு இது தான் புரிவதில்லை; அறியாமையின் பிடி உயிர்கள் மீது அவ்வளவு ஆழமாய் உள்ளது. இந்த அறியாமையிலிருந்து நீங்காத உயிர் மீண்டும் மீண்டும் பிறவிச் சூழலில் மாட்டிச் சுழன்று கொண்டே இருக்கிறது; இந்த அறியாமையிலிருந்து நீங்கி எந்த உயிர் கடவுளின் தோய்வில் உணர்வைச் சிவோகம் பாவனையாகப் பாய்ச்சுகிறதோ அந்த உயிரே மெய்ஞ்ஞானி எனப்படும் இல்லையா? (சிவபெருமான் ஆம் என்று தலையசைக்கிறார்.)

             இக்கருத்துக்கள் அடங்கிய பாடல் இதோ:

         எவரொருவர் மாதேவர் பிறப்பிறப்பு மில்லார்

            என்றுவே தாகமத்தால் இசைப்பவராய் இருப்பார்

         அவர்தாமே அகாயர்நிர்க் குணரவரே நானென்(று)

            அத்துவிதத்(து) ஐயமற அறியாதான் பசுவாம்

         அவனேஐந் தொழிலிற்பட் டிறந்துபிறந் துழல்வான்

           உணர்ந்த அவன் சுத்தனா யழிவிலா திருக்கும்

        சிவனேயாம் ஐயமிலை ஆதலின்ஆன் மாவைச்

           சிவாகாரமாய் அறிவன் அவனே மெய்ஞ்ஞானி.

                                                   தொடரும். . .

Top