You are here
Home > செய்திகள் > செப்பச் சிறந்த செந்தமிழ் நயம்

செப்பச் சிறந்த செந்தமிழ் நயம்

தமிழர் கட்டடக் காலை சிறப்பு உலகில் புகழ் பெற்றது. இதனை நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி, புறநானூறு போன்ற சங்க நூல்களில் விரிவாகக் காணலாம். இப்போது ஒரு வர்ண நிறுவனம் கட்டடத்தையே ‘லேமினேட்’ பண்ணிப் பார்த்திருக்கிறீர்களா என்று சொல்வதைக் கேட்டுச் சிரிப்புதான் வருகிறது. வர்ணப் பூச்சால் அல்ல உலோகத் தகடுகளாலேயே “லேமினேட்’ பண்ணவன் தமிழன். புலிகடிமால் என்ற மன்னன் செம்பு புரி புரிசை உடையவனாம். புரிசை என்றால் கோட்டை. வீட்டை அல்ல, கோட்டையையே செப்புத் தகட்டால் ‘லேமினேட்’ செய்தானாம். தில்லைச் சிற்றம்பலத்தை ஒரு சோழனும், பேரம்பலத்தை மற்றொரு சோழனும் பொன் தகட்டால் ‘லேமினேட்’ செய்தார்களாம். இதைப் பார்த்துத் தான் மிகப் பிற்காலத்தில் சீக்கியர்களின் பொற்கோயிலே எழுந்தது.

இப்படி மிகத் தொன்மையான காலத்திலேயே கோட்டையையும், கோயிலையும் பொன்னாலும், செம்பாலும் ‘ லேமினேட்’ செய்து முன்னோடியாக விளங்கியவர்கள் தமிழர்கள்! போய்யா, போ! எங்ககிட்ட வந்து வீட்டையே ‘லேமினேட்; செய்து பார்த்திருக்கிறீர்களா என்று கேட்க வந்துட்டார் இவர்! என்று சிரிக்கத் தோன்றுகிறது.

காஞ்சிபுரத்தில் ஒரு காட்சியைக் காட்டுகிறார் சேக்கிழார். அதை கேட்டால் மேற்படி பீற்றல் பேர்வழி என்ன ஆவாரோ தெரியவில்லை. சரி! நிற்க நேரமில்லை! சேக்கிழார் அழைக்கிறார் உடன் போவோம்!

கிளரொளிச்செங் கனகமயந் தானாய் மாடு
   கீழ்நிலையோர் நீலச்சோ பானம் பூணக்
கொளவமைத்து மீதொருபாற் கன்ன சாலை
   குலவயிரத் தாலமைத்த கொள்கை யாலே
அளவில்சுடர்ப் பிழம்பானார் தம்மைத் தேடி
   அகழ்ந்தேனம் ஆனானும் அன்ன மாகி
வளர்விசும்பில் எழுந்தானும் போல நீடும்
   மாளிகைகள் உளமற்ற மறுகு தோறும்

வழக்கம் போல பாடல் கூறும் பொருளுக்கு நேரடியாகப் போய் விடுவோம். சோபானம் என்றால் படிகள்; கன்ன சாலை என்பது வாயில் மேல் உயர் நிலையில் அமைக்கும் சாளர வாயில். மாடு என்பது வாயிலின் பக்கம் நிற்கும் மரத்தூண். நான்கு சட்டமும் கொள்ளலாம்.

இந்தப் பக்கத்தூண் இரண்டும் செங்கனக மயம் என்றார். செங்கனகம் என்றால் பொன்னாலேயே ஆனது எனலாம். ஆனால் செங்கனக மயம் என்றதால் பொன் வண்ணப் பூச்சு என்று பொருள்படும். ஆக வாயிலின் சட்டம் பொன் வண்ணப் பூச்சில் ஒளிர்கிறது.

இனி, படிகள் எல்லாம் நீல வண்ணப் பூச்சால் ஒளிர்கிறது. மேலே வாயில் சாளரம் (Lintel) வயிரம் போல் ஒளிவீசும் வெண்மை வண்ணப் பூச்சில் ஒளிர்கிறது.

இதை ஏன் இப்படி தேர்ந்தெடுத்து வண்ணம் பூசப்பட்டதாக சேக்கிழார் கூறுகிறார்:

கீழே நீலப்படிகள் – நீல நிற திருமால்; மேலே வயிர வெண்மை – அன்னப் பறவையான பிரம்மா; வாயிற் சட்டத்தின் பொன்மை – சிவச் சோதியின் பிழம்பு.

ஏ, மாலே! ஏ, பிரம்மாவே! எங்கெங்கேயோ தேடி சிவனைக் காணாமல் அலைகின்றீர்களா? கவலைப் படாதீர்கள் இங்கே எங்கள் மாளிகைக்குள் வாருங்கள்! உள்ளே நீங்கள் தேடும் சிவன் இருக்கின்றான்! வாயில் சட்டத்தையே பார்த்து சிவன் என்று எண்ணி விடாதீர்கள்! அது சிவச் சோதியின் பிழம்பு! சிவன் உள்ளே இருக்கின்றான்! இப்படி அமைக்கப்பட்ட மாளிகைகள் காஞ்சியில் வீதி தோறும் இருக்கின்றன என்று கூறுகிறார் சேக்கிழார்! அது மட்டுமா ?

இப்படி ஒரு நல்ல கற்பனை கிடைத்தால் புலவர்கட்கு கேட்கவா வேண்டும் ? அதை வைத்து இன்னொரு சுவையான கற்பனையை நீட்டி விடுவார்கள்.

அப்படித் தான் சேக்கிழார்க்குப் பின் வந்த காளமேகம் சேக்கிழாரைப் பின்பற்றி இப்படி ஒரு கற்பனைக் கேலியைச் செய்கிறார். அவர் சொல்வது:

அடடா! இந்த மாலும் பிரம்மாவும் நல்ல சந்தர்ப்பத்தை விட்டு விட்டு இன்னும் சிவனைத் தேடி அலைகின்றார்களே! சுந்தரர்க்காக முன்னொருகால் பரவையாரிடம் சிவபெருமான் தூது சென்றாரல்லவா? அப்போது சிவன் அடியார் வேடத்தில் பரவையார் வீட்டு வாசற்படிக்குள் தானே நுழைந்தான்! அப்போது வாசற்படி மேல் உத்தரமாக பிரம்மாவும், கீழ் உத்தரமாக திருமாலும் ஆகி இருந்தால் சிவபெருமானின் முடியையும் அடியையும் அழகாகக் கண்டிருக்கலாம் அல்லவா? இவர்கள் வீண்! சந்தர்ப்பத்தை விட்டு விட்டார்கள் என்று காளமேகம் பாடிய பாடல் இதோ:

ஆனா ரிலையே யயனுந் திருமாலும்
கானாரடி முடிமுன் காண்பதற்கு –மேனாள்
இரவுதிரு வாரூரி லெந்தைபிரான் சென்ற
பரவைதிரு வாயிற் படி .

சேக்கிழாரின் கற்பனையை உள்வாங்கி காளமேகம் பெருகேற்றிய அழகைப் பாருங்கள்! தமிழ் இன்பம் தவிர சொர்க்கம் வேறுண்டா என்று இதனால் தான் நாலடியார் கேட்டது !!

இவண்
மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top