You are here
Home > தமிழிசை > முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழிசைஞானம்

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழிசைஞானம்

                                             முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழிசைஞானம்

         கருவினிலேயே திருவாய்த்த நம் ஆசிரியர்பிரான் முதுமுனைவர் செந்தமிழ்வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பதினொரு வயதினிலேயே வெண்பா பாடும் ஆற்றல் கைவரப் பெற்றவர். 11 வயதில் 12000 தமிழ்ச்செய்யுட்களை மனனம் செய்தவர். அது மட்டுமின்றி மரபு வழிப் பாடல்களை விரைவுடன் பாடக் கூடிய ஆசுகவியும் ஆவார். பிங்கலந்தை நிகண்டு முழுமையும் 11 வயதில் மனனம் செய்து வாரியார் சுவாமிகள் முன்னிலையில் ஒப்பித்து பரிசு பெற்றவர்.

       சந்தமலி செந்தமிழ் எனச் சிறப்புப் பெற்ற திருஞானசம்பந்தரின் அனைத்துப் பதிகங்களுக்கும் இளம்வயதினிலே உரிய சந்தக்குறிப்புகளை அமைத்து வைத்துள்ளனர். அந்த நூலின் வரவினைத் தமிழ் கூறும் நல்லுலகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

      சிவவேடப் பொலிவுடன் ஒரு பழுத்த சிவனடியார் ஆசிரியரின் கனவில் – (அது கனவா ? நனவா? என்று வரையறுக்க முடியாத ஒரு கலப்பு நிலையில்) – எழுந்தருளி அப்பர் அருளிய “வடிவேறு திரிசூலம்” எனத் தொடங்கும் திருப்பூவணப் பதிகத்திற்கு ஒரு வகையான சந்தத்துடன் பாடிக் காட்டியருளினார். முதன்முறையாக அந்தப் பதிகத்தை அப்போது தான் அந்தச் சந்தத்தில் ஆசிரியர் கேட்டுள்ளார். கனவு நீங்கி விழித்தெழுந்த ஆசிரியர்  மனத்தினை விட்டு அகலாமல் அந்தச் சந்தம் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. செந்தமிழில் சிவவேள்வி ஆற்றும் போது பல்வேறு சிவமூர்த்தங்கள் எழுந்தருள அந்தப் பதிகத்தை அதே சந்தத்துடன் பாடும்படி பத்ததியை அமைத்துத் தந்துள்ளார் ஆசிரியர். ஓதுவார் மூர்த்திகளும்  சிவவேள்வியாற்றும் வேள்வியாசிரியர்களும்  அந்தச் சந்தத்தை மிகுந்த ஆர்வத்துடன் பின்பற்றி வருகின்றனர்.

    “எல்லோரும் தேவாரம் பாடலாம்” என்று ஓர் இயக்கத்தினைச் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். அதன் மூலம் பாமரர்களும் எளிதில் தேவாரத்தைப் பண்முறையில் எளிதாகப் பாடலாம் என்னும் நிலையை ஏற்படுத்தினார். அதற்காகப் பல வகுப்புகள் நடத்தி அதன் வாயிலாக நமது சமயத்தலைவர் திருஞானசம்பந்தர் காட்டிய வழியில் திருமுறைகளைச் சந்தத்துடனும் தாளகதியுடனும் பாடப் பயிற்றுவித்துள்ளார். இதைத் தமிழுலகம் கொண்டு சேர்க்க.

      பிரதோஷ வழிபாடு  – உள்ளுறை என்ற நூலை இயற்றியுள்ளார். பிரதோஷ காலத்தில்  – கழுவாய் வழிபாட்டை முறையாக,  உரிய பதிகங்களை உரிய சந்தத்துடன் அமைத்துப் பலரைப் பாட வைத்து இசை ஆல்பம் – தொகுப்பை வெளியிட்டுள்ளார். இதன் வாயிலாக தேவார இசையை உரிய சந்தத்துடன் எல்லாரும் பாட வகை செய்துள்ளார்.

       ஆசிரியருடைய நுண்மாண் நுழைபுலத்தை உணர்ந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர் திரு.பொன்னவைக்கோ அவர்கள்,  ஓதுவார் பயிற்சியினை இது வரை யாரும் செய்யாத அளவிற்கு முழுமையான ஒன்றாக ஏனைய இசைக்கலைஞர்கள் திரும்பிப் பார்க்குமாறு செய்ய பல இசைக்கல்லூரி முதல்வர்கள் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களுடன் இணைந்து செயல்பட வழிவகை செய்தார். பல்கலைகழகத்தில் நான்கு  கூட்டங்கள் நடைபெற்றன. இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பாடத்திட்டங்கள் தீட்டப்பட்டன. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் உரியவகுப்புகள்தொடங்கவில்லை என்றாலும் நம் ஆசிரியர் எழுதிக் கொடுத்த பாடத்திட்டப் பகுதிகள் ‘திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும்‘  என்ற நூலாக மலர்ந்துள்ளது. இந்நூலில் பின் இணைப்பாக தமிழிசைச்சங்கத்தில் ஆசிரியர் பங்கு பெற்ற  மூன்று கருத்தரங்கக் கட்டுரைகள் மற்றும் பண் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவன. நம் ஆசிரியர் முத்தமிழ் அறிஞர் என்பதை இந்நூலைப் படிப்பவர் அனைவரும் பாராட்டிச் சிறப்பிப்பர். மேலும் ஆசிரியர் திருவெம்பாவை இருபது பாடல்களுக்கும் உரிய நாடகப் பாணியையும் அமைத்து ஒரு சில பாடல்களை அரங்கேற்றியும் உள்ளார்.   

       தமிழிசையே தரணியின் முதலிசை என்பதைப் பரப்பி வருபவர். இடைச் சங்க காலத்தது என்னும் பஞ்ச மரபு’ என்ற தமிழிசை நூலை ஆய்ந்து அதன் செய்திகளைப் பரப்பி வருபவர்.

     சென்னை அண்ணாமலை மன்றத்தில் இயங்கி வரும் தமிழிசைச் சங்கத்தின் 64-ஆம் ஆண்டு பண் ஆராய்ச்சிக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து சிறந்ததொரு பண்ணாய்வுரையை வழங்கியவர்.

       தமிழ்த்தாய் வணக்கம் மற்றும் முத்தாய்ப்பு முத்தமிழ்ப்பண் என்று இரு சந்தப் பாடல்களைப் பாடி இசை அமைத்துப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.  இது தமிழகம் எங்கும் கொடி கட்டும் தமிழ் உணர்வை அனைவரும் கைகொள்ளும் பரவசமூட்டும் விதமாக இயலுடன், இசை சிறக்க சேர்த்து மந்திரப்பாடலாக அமைத்துள்ளார் ஆசிரியர்.

      அண்மையில் திருமந்திர விழாவில் வாழ்நாள் சாதனையாக “சைவ வைணவ போற்றி நூற்றிரட்டு என்று ஒரு வழிபாட்டுக் கருவி நூலை வெளியிட்டுள்ளார்.

     ஆசிரியருடைய இசைஞானத்துக்கு மேலும் ஒரு சான்று. மலேசியாவில் ஒரு கடவுள் மங்கலத்திலே (கோயில் குடமுழுக்கு விழாவில்) சம்பந்தரின் கோளறு பதிகம் பாடிய போது 11 பாடல்களுக்கும் வெவ்வேறு விதமான இராகங்கள் அமைத்துப் பாடிக் காட்டினார் என்பது இசைமேதைகளே வியக்கும் செய்திஆகும்.

www.dheivamurasu.org
https://www.youtube.com/dheivamurasu

https://www.facebook.com/tamizharchakar/

Top