You are here
Home > செய்திகள் > தீபாவளி உள்ளுறை

தீபாவளி உள்ளுறை

தீபாவளி vazhipadu

தமிழர்தம் பழம்பெரும் பண்டிகைகள்

தீபாவளி vazhipadu
நூலின் விலை ரூ.30

                                    பண்டிகை என்ற சொல்லைப் பண்டு+கை என பிரிக்கலாம். அதாவது பண்டைய கொள்கை, வழக்கு என்று பொருள். பண்டு தொட்டு வருகின்ற இறைவழிபாடு என தொடர்ந்து வருகின்றது. ஒவ்வொரு பண்டிகையும், ஒவ்வொரு காரணம் பற்றி ஒவ்வொரு தெய்வ மூர்த்தங்கள் (அதி தேவதைகள்) வழிபடப்படுகின்றன. நடைமுறையில் அவை கொண்டாடப்படுகின்றன. ஆனால் அவை கால மாற்றத்தால், அயல் இன அரசர்களால் கொள்கையளவில் மாற்றம் பெற்று இன்று பொருளற்ற பண்டிகையாய், வெறும் பலகாரங்களால் மட்டுமே அடையாளப் படுத்தப்படுகின்றன.

முன்னோர்கள் ஒவ்வொரு பண்டிகையையும் அறிவார்ந்த அடிப்படையால் ஒவ்வொரு காரணம் பற்றி வெவ்வேறு வழிபாட்டு முறைகளுடன், வித விதமான வெவ்வேறு பலகாரங்களுடன் வழிபட்டு வந்தனர். அயல் சமய தாக்கத்தால் இவை முற்றும் மாறி இன்று பல்வேறு பண்டிகைகள் வெறும் பலகாரங்களுடன், துணிமணியுடன், பொருள் புரியாத வெறும் கொண்டாட்டமாக மாறியுள்ளது.

இவற்றை நுணுகி ஆராய்ந்து பண்டைய சங்க வரலாறு, சைவாகமம், பன்னிரு திருமுறைகள், நாலாயிரத் திவ்ய பிரபந்தம், பத்தி இலக்கியங்கள் மற்றும் தமிழர் நெறியான சைவ சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு காரண காரியத்துடன் பண்டிகைகள் இங்கே முறைப்பட வகுத்து அமைக்கப் பட்டுள்ளது.  ஒவ்வொரு பண்டிகையும் தத்துவ விளக்கத்துடன் தொடங்கி அதற்குரிய காலம், இடம் ஆகியவற்றின் அதிதேவதைகளை வணங்கும் சிவாகம வழிபாட்டு முறையுடன் வகுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பண்டிகையின் நோக்கமும்,செயல் முறையும் உயிரோட்டமாக இருப்பதைஅனைவரும் இவற்றை படிக்கும் போதும், செயல்முறையில் உணர்வோட்டமாகவும் உள்ளதை நடைமுறை சுய அனுபவத்தில் கண்டுணரலாம்.

பண்டிகையின் முழுப்பொருளை அறிவார்ந்த அடிப்படையில், குடும்பத்தில் உள்ள அனைவரும் செயல்முறையில் அனுபவிக்கலாம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதையே நமது சமயாச்சாரியார்களின் தலைவரான திருஞான சம்பந்தர்

நுண்ணிறிவால் வழிபாடு செய்வார்க்கு உடையான்’

அறிவொடு வழிபடும் அடியவர் குழுமிய
செறிதரு
கலசையில் வருதரு சிவனே’

– சிவஞான முனிவர்.

அறிவால் அறிந்துன் இருதாள் இறைஞ்சும்

அடியார் இடைஞ்சல் களைவோனே

-அருணகிரிநாதர்.

                                   இவ்வாறு அருளாளர்கள் வாக்கிற்கேற்ப இறைவனை அறிவால் அறிந்து நமது பண்டிகைகளை உணர்வுபூர்வமாக மேற்கொள்ளுவோம். தீபாவளி (வீடு பேற்றடைந்த நம் முன்னோர்) வழிபாட்டு முறைமை (download pdf)

தீபாவளி  உள்ளுறை

தெய்வமுரசு ஆசிரியர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 13-9-2005 முதல் 23-9-2005 வரை 11 நாட்கள் மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மலேசியாவின் தபங என்கிற ரேடியோ டெலிவிஷன் மலேசியா என்கிற மலேசியா அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் அழைப்பின் பேரில் தீபாவளி பற்றி ஒரு சிறப்புப் பேட்டி அளித்தார். வரும் தீபாவளி கொண்டாட்டத்தில் அதன் பொருள் பற்றி அறிந்து கொள்ள மங்கல தீபம் வாசகர்களுக்கு இப்பேட்டி உதவும் என்பதால் அதன் தொகுப்பு இங்கே அளிக்கப் படுகிறது. ஏற்கெனவே 1-8-2005 ஆம் நாள் ஆசிரியரின் முந்தைய மலேசியப் பயணத்தில் மலேசிய வானொலியில் மகளிர் நிகழ்ச்சியின் பொருட்டு ஆசிரியர் அளித்த பேட்டி 5 முறை மறு ஒ−பரப்பாகியது குறிப்பிடத் தக்கதுன.

பேட்டியாளர் திருமிகு மனோன்மணி : ஐயா! தங்களை மீண்டும் சந்தித்துப் பேட்டி எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது மலேசியத் தமிழர்களில் வரும் தீபாவளியின் பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்தத் தீபாவளி கொண்டாட்டத்தின் அடிப்படையைப் பற்றி சற்று எடுத்துச் சொல்லுங்கள் ஐயா!

தெய்வமுரசு ஆசிரியர் : அம்மா! தங்களை மீண்டும் ஒரு பேட்டிக்காகச் சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சி தீபாவளிப் பண்டிகை என்பது 200 அல்லது 300 ஆண்டுகளாக தமிழர்களிடையே மிக்க பிரபலம் அமைந்திருப்பது உண்மைதான்.

பே : இது பற்றிக் கூறும்போது இது நரகாசுரனைக் கிருஷ்ணன் கொன்ற நாள் என்றும் அதையே மக்கள் கொண்டாடுகின்றனர் என்றும் கூறுகிறார்களே! இதைப்பற்றி தங்கள்கருத்து என்ன ?

தெ ஆ : ஒருவர் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவது என்பது நாகரிகம் ஆகாது. அது காந்தியே ஆனாலும் அல்லது கோட்சேவே ஆனாலும் எவர் ஒருவர் சாவிலும் இனிப்பு கொடுத்தும் கொண்டும் கொண்டாடுவது அநாகரிகமான செயலே. இறந்தவன் கெட்டவனே ஆனாலும் அவன் செய்த ஓரிரண்டு நல்ல செயல்களைக் கூறி அவனுக்காக அழுவது உலகியல்பு. அல்லாமல் இப்படியாக இன்னொருவர் வாழக்கூடாது என்று இவன் சாவில் நாம் பெறும் படிப்பினையாக இருக்கட்டும் என்றாவது சொல்வார்களே ஒழிய ஒருவன் மரணத்தில் இனிப்பு உண்டு மகிழ்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.

பே : ஆனால் புராணம் இப்படித்தான் சொல்கிறது என்கிறார்களே ?

தெ ஆ : விஷ்ணு புராணத்திலும், தேவி பாகவதத்திலும் இந்தக் கதை கூறப்படுவது என்னவோ உண்மைதான். ஆனால் அங்கே கூட நரகாசுரனின் தாயாகிய பூமாதேவி அவனை மன்னித்தருள் என்றுதான் கேட்டதாகக் கூறப்படுகிறதே ஒழிய (விஷ்ணு புராணம் லிப்கோ பதிப்பு பக்கம் 401) அவன் இறந்ததை இந்த பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டதாக கூறப்படவில்லை. அதுதான் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்கிற குறிப்பும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் பூமாதேவி திருமாலின் இன்னொரு மனைவி. வராக அவதாரத்தில் திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. திருமாலோ தேவர்களில் ஒருவர்.அவருக்குப் பிறந்தவன் எப்படி அசுரனாவான்? அகலிகையை தொட்டுக் கெட்ட இந்திரனைப் போல இவனும் ஒரு கெட்ட தேவனாகலாமே ஒழிய இவன் அசுரன் ஆவது எப்படி? புராணக் கூற்றில் இதுவே முரண்பாடு.

அதற்கப்புறம் மகனைத் தந்தை கொன்றதும் அவ்வளவு சரியானதாகக் கூற முடியாது. அப்படியே கெட்டதொரு மகனைத் தம் கையாலேயே கொன்ற நீதியின் மிக்க தந்தைதான் திருமால் என்றாலும், கொல்லலாம்!ஆனால் இதைப் பூமியில் உள்ளவர்கள் கொண்டாடுங்கள் என்றா ஒரு தந்தை கூறுவார்?கொல்வது வேறு; அதைக் கொண்டாடுவது வேறல்லவா?

எனவே நரகாசுரனை அவன் தந்தை நாராயணன் கொன்றதைக் கொண்டாடுவதே தீபாவளி என்பது விஷ்ணு புராணத்திற்கும் அறிவிற்கும் உலகியலுக்கும் பொருந்தாமல் யாரோ வடநாட்டினர் கட்டிவிட்ட புரளி என்பதே உண்மை.

ஏனென்றால் வட இந்தியாவில்தான் இன்று கூட இராவண லீலா என்று இராவணனை எரித்து அவன் மரண ம் கொண்டாடப்படுகிறது. இது முற்றிலும் வட இந்திய வழக்கம். தமிழரிடம் இந்த அநாகரிகம் எப்போதுமே படிந்ததில்லை.

பே : ஐயா! விஷ்ணு புராணத்தில் உள்ளதாகத் தாங்கள் கூறியவை உண்மைதான். வானொலியில் கூட ஒரு புராண நாடகம் ஒலி பரப்பினோம். அதில் நரகாசுரனின் தாயான பூமித்தாய் தனக்கும் திருமாலுக்கும் பிறந்த மகனின் சாவுக்கு திருமாலே காரணமாகிவிட்டது பற்றிப் புலம்புவதாகவும், தன் மகனின் குறைகளைப் பொறுத்து மன்னிக்க வேண்டும் என்றும், அவன் சாவை யாரும் கொண்டாடுவது கூடாது என்றும் புலம்பி வேண்டிக் கொண்டதாக வரும். ஆக ஐயா சொன்னது சரிதான்! அப்படியானால் தீபாவளிப்பண்டிகையின் பொருள்தான் என்ன?

தெ ஆ : தீபாவளி என்ற சொல் வடசொல். ஆவளி என்றால் வரிசை. நாமாவளி என்பது நாமங்களின் வரிசை என்பது போல தீபாவளி என்றது தீபங்களின் வரிசையை குறிக்கும். இத் தீப வழிபாடு சிவ விரதங்கள் எட்டில் ஒன்று. இதை அடிக்கடி வாரியார் சுவாமிகள் கூட கூறுவார். தீபாவளியின் பொருட்டு எடுத்த ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூட அவர் இப்படித்தான் கூறினார் என்பது நோக்கத்தக்கது. அவர் தீபாவளி என்றால் அது நரகாசுரனின் சாவைக் கொண்டாடுவது என்று ஒரு முறைகூட தப்பித் தவறிக்கூட அவர் சொல்லிக் கேட்டதில்லை. சமய உலகில் வாரியார் வாக்கிற்கு தனி ஒரு மதிப்பு உண்டல்லவா? ஆக தீபாவளி என்பது நரகாசுரன் வதத்துடன் தொடர்புடையது அல்ல என்று ஆதாரத்துடன் ஆன்றோர் வாக்குடனும் காணத் தெளிவாகியது.

பே : அப்படியானால் இந்தப் பண்டிகையின் பொருள் தான் என்ன? விஷ்ணுபுராணம் இதைக் கூறவில்லை என்றால் சிவபுராணங்கள் இதைப் பற்றி ஏதாவது கூறுகின்றனவா?

தெ ஆ : சரியாகக் கேட்டீர்கள்! இது முழுக்க முழுக்க கௌரி நோன்போடு தொடர்புடையது. கௌரி நோன்பு நவராத்திரியோடு தொடர்புடையது. நவராத்திரி புரட்டாசி அமாவாசையிலிருந்து தொடங்கும். அன்றிலிருந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி கொலு கொண்டாடப்படும். கொலுவில் பலவிதமான பொம்மைகள் வைத்துக் கொண்டாடுவார்கள். அது எதைக் குறித்தது என்றால் அம்பிகையாகிய சிற்சக்தி சிவப்பரம் பொருளிலிருந்து பிரிந்து வந்து இந்த உலகில் பல்வேறு வடிவங்களில் உயிரினங்களைப் படைப்பதைக் குறித்தது. அந்தப் படைப்பை ஒன்பது சக்திகளாக அதாவது மனோன்மணி (நீங்கள் தான் என்று ஆசிரியர் கூற பேட்டியாளர் சிரிக்கிறார்) சர்வ பூததமணி, பலப்ரதமணி, பலவிரகரணி, கலவிகரணி, காளி, ரௌத்திரி, சேட்டை, வாமை, என்கிற ஒன்பது சக்திகளாகப் பிரிந்து ஐம்பெரும் பூதங்களையும், சூரியனையும், சந்திரனையும், உயிர்களின் உடல்களையும் படைக்கிறாள். அதனால்தான் இதை ஒன்பது ராத்திரிகளில் வைத்துக் கொண்டாடினார்கள்.

இதன்பின் அம்பிகை சிவபரம்பொருளிடம் இருந்து பிரிந்த நிலை மாறி சிவபரம் பொருளிடம் சென்று சேர்கிறாள். அதாவது மீண்டும் சிவபரம்பொருளை அடைய நவராத்திரி ஒன்பதாம் நாள் தொட்டு 21 நாட்கள் தவமிருந்து நோற்று மெல்ல மெல்ல சிவ பரம்பொருளை அடைகிறாள். இதைத்தான் அம்பிகை தவமிருந்து இடப்பாகம் பெற்றாள் என்று குறிப்பிட்டார்கள். இதையே கேதார கௌரி விரதம் என்றார்கள். ஆகவேதான் வருடாவருடம் நவராத்திரியின் ஒன்பதாம் நாள் ஆகிய ஆயுத பூசை நாளிலிருந்து 21-ஆம் நாளில் கேதார கௌரி நோன்பும் அதையொட்டி தீபாவளியும் வரும். இதை எல்லாம் எமது இதழான தெய்வமுரசின் இதழ் ஒன்றில் தெளிவாக விவரமாகக் குறிப்பிட்டுள்ளேன். அதன் சுருக்கத்தைத்தான் இங்கே கூறுகிறேன்.

ஐந்தெழுத்தில் சி என்கிற எழுத்து சிவ பெருமானைக் குறித்த எழுத்து. வ என்கிற எழுத்து அம்பிகையாகிய சத்தியைக் குறித்த எழுத்து. உயிர்கள் உள்பட உலகம் அனைத்தும் பிரளய காலத்தில் சிவனிடம் அடங்கி நிற்கும். அந்த நிலையைக் காட்டும் ஐந்தெழுத்தில் சி என்பது மட்டும் ஏனைய எல்லா எழுத்துக்களையும் உள்ளடக்கி தனியே நிற்கும். இதை நாயோட்டும் மந்திரம் என்பார் திருமூலர். அதாவது நாய் அருகே வந்தால் நாம் சீ! என்று துரத்துகிறோம் அல்லவா? அப்படி ஒரு குறியீடு செய்து அதை நாயோட்டும் மந்திரம் என்பார் திருமூலர். அது ஏனையவற்றை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டு நிற்பதால் அதனை எழுத்தை அழுத்தும் எழுத்து என்றும் கூறுவர்.

பிரளய  காலத்தில்  ஏற்படும்  லய நிலையில் அதாவது முற்றொடுக்க நிலையில் வ என்ற எழுத்தாகிய சத்தி எழுத்தும் சி என்ற எழுத்தில் அடங்குவதை அம்பிகை இடப்பாகம் பெற்றாள் என்று சங்கேத மொழியில் கூறினர் ஆன்றோர்.

இறைவன் இந்த உலகை விரிக்க முதலில் சத்தியை தன்னிலிருந்து பிரித்து வெளியாக்குகின்றான். அந்த சத்தி ஒன்பது சத்தியாய் பிரிந்து இந்த உலகைப் படைக்கிறாள். படைப்பின் நோக்கம் முடிந்ததும் சத்தி மீண்டும் சிவத்தில் ஒடுங்கிவிடுகிறாள்.

அதாவது உலக உற்பத்தியில் சிவ என்று ஆகும் ஐந்தெழுத்து உலக ஒடுக்கத்தில் சி என்று ஒடுங்கிவிடுகிறது. இந்த உண்மையைப் புறநானூறுகூட கூறுகிறது. பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பது புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து வரிகள். அதில் பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று என்பது சிவ என்னும் ஐந்தெழுத்தைக் கூறுவது. அவ்வுரு தன்னுள் அடக்கி கரக்கினும் கரக்கும் என்பது சி என்னும் ஐந்தெழுத்தைக் குறித்தது.புறநானூற்றிலேயே இவை வருவதைப் பாருங்கள்!

ஆக உலகமெல்லாம் ஒடுங்கும் லய நிலையில் பிரளயத்தில் என்ன ஆகிறது தெரியுமா?அரைப்பக்குவத்தில் அல்லது முக்கால் பக்குவத்தில் உள்ள உயிர்களை இறைவன் தூசுத் தட்டிஅப்படியே தன் திருவடியில் சேர்த்து முடிந்த முத்தியைக் கொடுத்து விடுவான். அவர்களுக்குத் தான் பிரளயாகலர் என்று பெயர். பிரளய காலத்தில் இரு மலங்களின் கட்டுக்களில் இருந்து நீக்கப்படுபவர்கள் என்பது அதன் பொருள். அவர்கள் ஏற்கனவே மாயா மலக்கட்டுகளிலிருந்து நீங்கியவர்களாக பக்குவம் ஏறி இருப்பார்கள்.

ஆகவே பிரளயத்தில் பல உயிர்கள் முத்தி அடைகின்றன. அதில் நமது முன்னோர்களில் சிலரும் அடங்கலாம் அல்லவா? அதற்கு வாய்ப்பு உண்டுதானே! எனவே அவர்கள் பெற்ற முத்தியொளிச் சேர்க்கையைக் குறித்தே பல அகல்களில் தீபம் ஏற்றி வரிசையாக வீட்டில் வைத்து அவற்றை வணங்குகின்றோம். அதுதான் தீபாவளி என்று ஆயிற்று. இறந்த முன்னோர்களில் பலர் இறை ஒளியில் கூடுவதைக் கொண்டாடுவது சிறப்புதானே! இதுதான் தீபாவளிக் கொண்டாட்டம் ஆயிற்று.அதனால்தான் கேதார கௌரி விரதத்தின் மறுநாள் அல்லது சில வருடத்தில் அதே நாளில் தீபாவளி நேர அது கொண்டாடப்படுகிறது. அதாவது உலகை விரித்த சத்தி முற்றிலுமாகசிவத்தில் ஒடுங்கிய பின் தீபம் ஏற்றி முன்னோர்கள் பெற்றிருக்கக்கூடிய முத்தி கொண்டாடப்படுகிறது.

பே : ஐயா! இது வரை யாரும் தெரிவிக்காத புதிய செய்தி மிக்க மகிழ்ச்சி ஐயா! அப்படியானால் பட்டாசு வெடிப்பது எதைக் குறிக்கிறது?

தெ ஆ : உயிர்களைக் கடும் பற்றாகப் பற்றிய ஆணவம் சிதைந்து உயிர் முத்தியொளி பெற்றதைக் குறிக்கவே பட்டாசுகள்வெடிக்கப்படுகின்றன.

பே : நல்ல கருத்து ஐயா! புத்தாடை புனைவதன் கருத்து என்ன?

தெ ஆ : சத்தி இடப்பாகம் பெற்று சிவத்தில் ஒடுங்கியது சத்தியும் சிவமும் இரண்டறக் கலந்ததைக் குறிக்கும். இதை சிவசத் தி திருமணம் என்பர். திருமணம் என்றால் புத்தாடை புனைவது இயல்புதானே!

பே : இதையொட்டி கங்கா ஸ்நானம் என்கிறார்களே அது பற்றியும் தங்கள் கருத்து என்ன?

தெ ஆ : கங்கையில் மூழ்குவது பிதிர்க்கள் ஆகிய முன்னோர்க்கு செய்யும் கடன் என்பது இன்றும் கண்கூடு. என்றைக்கோ இறந்த நம் முன்னோர்களுக்கு எல்லாம் கங்கையில் ஒரு சேர நீரொழுக்கி (தர்ப்பணம் செய்து) நீர்க்கடன் ஆற்றுவது இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். அது போல இந்த தீபாவளி நாள் நமது முன்னோர்கள் முத்தி பெற்ற நன்னாள் என்பதால் அன்றைய முழுக்கை அதை நினைவுபடுத்தி கங்கா ஸ்நானம் என்றார்கள். அது மட்டுமல்ல இதற்கு அடிப்படையாக ஆரம்பிக்கும் புரட்டாசி அமாவாசையை மகா பிரளய அமாவாசை என்று மேற்கூறிய பின்னணியில் சொன்னார்கள். அது மருவி மாளய அமாவாசை என்று ஆயிற்று. இவை எல்லாம் நமது முன்னோர்களுடன் தீபாவளிக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தும். இதுவன்றி நரகாசுரன் வதத்தைக் கொண்டாடுவது என்பது எள்ளளவும் பொருத்தம் இல்லாதது. நம் முன்னோர்கள் முத்தி பெற்றார்கள் என்பதையே தீபாவளியில் இனிப்புகள் உண்டு கொண்டாடுகிறோம்.

பே : மிக அற்புதமான கருத்துக்களைச் சொன்னீர்கள் ஐயா! இது எங்கள் மலேசியத் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏன் தமிழ்ச் சமுதாயம் அனைத்திற்குமே மிக்க பயனாய் இருக்கும். இன்னும் இதுபற்றி எனக்கு வேறு கேள்விகள் இல்லை. ஆனால் இதுபற்றி மேலும் விளக்கங்கள் இருக்குமானால் அதைக் கூறலாம்.

தெ ஆ : இந்த தீபாவளிப் பண்டிகை தமிழர்களால் முதலில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்பட்டது. அதுவே கார்த்திகை தீபம் என்று இன்றும் நின்று நிலவுகிறது. பின்னர் அது ஐப்பசி மாதத்திற்கு முன் தள்ளப்பட்டது. காரணம் முன்னொரு காலத்தில் தமிழ் வருடம் என்பது சித்திரையில் தொடங்காமல் ஆவணியில் தொடங்குவதாக வைத்துக் கொண்டிருந்தனர் தமிழர். அதாவது சூரியனின் ஆட்சி இடமான சிம்ம ராசியில் சூரியன் புகும் மாதமான ஆவணியிலிருந்து முன்பு வருடம் தொடங்குவதாக அமைத்துக் கொண்டனர் தமிழர். பின்னர் வானியல் அறிவு வளர வளர சூரியன் உச்சம் பெரும் மேஷ ராசியில் சூரியன் புகும் சித்திரை மாதத்திலிருந்து வருடம் தொடங்குவதாக மாற்றிக் கொண்டார்கள். முதலில் ஆவணியில் வருடம் தொடங்கியபோது அதற்கேற்ப தீபாவளியைக் கார்த்திகை மாதத்தில் அமைத்து கார்த்திகை தீபம் என்று கொண்டாடினர். ஆனால் ஆவணி மாதத்திலிருந்து சித்திரை மாதத்திற்கு வருடத் தொடக்கம் முன் தள்ளப்பட்ட காரணத்தால் ஒரு மாதம் முன்னதாக தீபாவளியை ஐப்பசி மாதத்தில் வைத்தனர் தமிழர். ஆனால் அந்த பழைய வழக்கமான கார்த்திகை தீபத்தையும் விட மனது வராத காரணத்தாலும் அது அண்ணாமலையில் இறைவன் அருட்பெருஞ்சோதியாக வானளாவ எழுந்து நின்ற பொருத்தம் கருதியும் அந்த தீப வரிசையும் தொடர்ந்தது.

 

ஊர் இரண்டு பட்டால் யாருக்கோ கொண்டாட்டம் என்பார்கள். அதுபோல இரண்டு தீப வரிசைகள் வழக்கில் வந்தவுடன் வட இந்தியர்கள் இதில் புகுந்துக் கொண்டார்கள். கார்த்திகை தீபத்தில் தெற்கே வீடுகளிலெல்லாம் வரிசை வரிசையாக தீபம் ஏற்றிக் கொண்டாடப்படுவது கண்ணுக்கும் கருத்திற்கும் இனிமையான காட்சியாக இருப்பதால் அதைத் தழுவிக் கொண்டு தங்களுக்கு கார்த்திகை வேண்டாம்; அதை தமிழருக்கு விட்டுவிடுவோம்; அதேபோல் ஐப்பசியில் தாம் வைத்துக் கொள்வோம் என்று தழுவிக் கொண்டனர். அதற்கு என்ன காரணம் என்று காட்ட இயலாதவர்கள் நரகாசுர வதம் என்ற தம் அநாகரிகக் கற்பனையை அதில் புகுத்திக் கூறினார்கள்.

அது மட்டுமல்ல; தமிழ் நெறியில் தமிழ் அகத் துறையில் திருமணம் பெண் வீட்டில் நடப்பது தான் மரபு. இங்கே கேதார கௌரி விரதம் என்பது சிவ-சத்தி திருமணம் என்று முன்னர் காரண காரியத்துடன் விளக்கிச் சொன்னோம் இல்லையா? எனவே இத் திருமண நாளன்று மாப்பிள்ளை பெண் வீட்டில் வருகை புரிவதும் வழக்காகி தீபாவளியன்று மாப்பிள்ளைக்கு மவுசு உண்டாயிற்று.

பே : அட தீபாவளியில் மாப்பிள்ளைக்கு மவுசு உண்டான வரலாற்றுக்குக் காரணம் இதுதானா? நல்ல பல கருத்துக்களை நாங்கள் இதுவரை கேளாமல் இருந்த செய்திகளை பொருந்தியவாறு எடுத்துக் கூறியதற்கு என்றென்றும் ஐயாவிற்கு நன்றிகள்!

 

தீபாவளி (வீடு பேற்றடைந்த நம் முன்னோர்) வழிபாட்டு முறைமை (download pdf)

 

தீபாவளி vazhipadu
நூலின் விலை ரூ.30
Top