You are here
Home > செய்திகள் > நயத்தமிழ் செய்த நன்மை

நயத்தமிழ் செய்த நன்மை

எதையும் நயமாகச் சொல்ல வேண்டும்; சொன்னால் அது கேட்பவருக்கு அர்த்தத்தையும் அளிக்கும்; ஆனந்தத்தையும் அளிக்கும். அதனால் நடக்காததையும் நடக்குவிக்கலாம். மனைவி இட்லியைப் பரிமாறுகிறாள்; கணவன் சொல்கிறான். “அட! தலையில் வைக்க வேண்டியதை இலையில் வைச்சுட்டியே!” என்கிறான். மனைவி என்னங்க என்று அலங்க மலங்கக் கேட்கிறாள். “ஒண்ணுமில்லை, இட்டிலி மல்லிப்பூ மாதிரி இருக்கே, அதைச் சொன்னேன்!” என்கிறான் கணவன். மனம் மகிழ்ந்து போன மனைவி இலையில் இன்னும் இரண்டு இட்டிலி வைக்கிறாள். நயமாகச் சொன்னதனாலே நாலு இட்டிலி கூட!! இல்லாட்டி, யார் கண்டா? பாத்திரத்தைக் கவிழ்த்துவிட்டுப் போயிருப்பா!

ஒரு முறை ஒளவையார் ஓர் ஊரின் எல்லைக்குப் போய்க் கொண்டிருந்த போது மழை பிடித்துக் கொண்டு, போகப் போக வலுத்துக் கொண்டே வந்தது. கிட்டத்தில் இருந்த ஒரு குடிசைக்குள் நுழைந்தார் ஒளவை. குடிசைக்குள் இருந்த இரண்டு இளம் பெண்கள் அவசரம் அவசரமாகப் பாட்டியை உள்ளிழுத்து தலையைத் துவட்டி மாற்றுடைக்காக ஒரு நீல நிறப் புடவையை நீட்டினார்கள். குளிரால் நடுங்கிய ஒளவை புடவையை வாங்கிக் கொண்டார். புடவையை மாற்றிக் கொண்ட ஒளவை மெல்ல ஆசுவாசப் படுத்திக் கொண்டு அப்பெண்கள் இட்ட பாயில் அமர்ந்து கொண்டார்.

அந்த இரண்டுப் பெண்களும் தங்களுக்குள் ஏதோ மெல்ல மெல்ல கிசுகிசுத்துக் கொண்டனர்.

“என்ன, ஏதோ உங்களுக்குள் பேசிக் கொள்கிறீர்கள்?

“ஒன்றுமில்லை! நாங்கள் உங்களை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்! நீங்கள் ஒளவையார் தானே?” என்றாள் ஒருத்தி.

ஒளவையார் சிரித்துக் கொண்டே, “ஆமாம்! நீங்கள் என்னை எங்கே பார்த்தீர்கள்?” என்று கேட்டார்.

“எங்கள் அரண்மனையில்!”

“அரண்மனையா! நீங்கள் யார்?

“நாங்கள் பாரி மன்னனின் பெண்கள். எந்தையார் இறந்தபின் ஆதரிப்பார் இன்றி இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறோம்.

ஒளவையார் பதைத்துப் போனார்: கண்கள் கலங்கின.

“பாரெல்லாம் புகழ் பரப்பிய வள்ளல் பாரியின் பெண்களா நீங்கள்?”

குடிசையின் சிறு சாளரம் வழியே நிலவு வந்து நாலாவது ஆளாக இவர்களிடையே கலந்து கொண்டது. ஆம்! மழை ஓய்ந்தது இப்போது நிலவு மேய்ந்தது.

அவர்களில் ஒருத்தி அந்த நிலவைப் பார்த்துக் கொண்டே பொருமிச் சொன்னாள், “அடடா! போன பெளர்ணமியில் நாங்கள் இருந்த நிலை வேறு; இன்றும் அதே நிலவு தான்; எங்கள் நிலை தான் மாறி இருக்கிறது!

மூவரும் குலுங்கிக் குலுங்கி அழுகிறார்கள். உடனே திடீரென நினைவு வந்தவளாக எழுந்து, “பாட்டி! எப்ப உணவருந்தினீர்கள்? கோவேந்தர்கள் போற்றப் பாவேந்தும் பாட்டி பசி ஏந்தலாமா? என்றாள்.

பாட்டி கண் கலங்கினாலும், வயிறும் கலங்குகிறதே, மறைக்க முடியவில்லை! பெண்கள் சுறுசுறுப்பானார்கள்.

தோட்டத்துக்கு அடுக்களைக்குமாகப் பரபரத்தார்கள். தோட்டத்துக் கீரைகளைப் பறித்துச் சமைத்து, வரகரிசியை உலையில் இட்டுச் சோறாக்கி சுடச்சுட வாழை இலையில் வைத்து ஒளவைக்கு உணவு பரிமாறினார்கள்.

உணவை வாயிலிடச் சென்ற ஒளவைக்குக் கண்களில் நீர்முட்ட உணவு சற்று சிந்தி புடவையில் பட்டது. அதைத் துடைத்துத் தூய்மை செய்து ஒளவை அந்த நீலப்புடவையை சற்று நேரம் பார்த்தார்.

“எத்தனையோ அரசர்கள் என்னென்னவோ உயர்ந்த புடவைகள் உங்களுக்குக் கொடுத்திருப்பார்கள்; இந்த நேரத்தில் ஏதோ எங்களால் இயன்ற ஒன்றைக் கொடுத்து இருக்கிறோம்; புடவை அவ்வளவு ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்காது!” என்றார்கள் அப்பெண்கள்.

ஒளவை சொன்னார்: “அடடா, நீங்க ஒண்ணு. இந்தப் புடவைக்கு ஈடு ஏது ? உங்க அப்பா பாரி ஒருமுறை நான் விடைபெற்றுக் கொள்ளச் சென்றபோது என் மூட்டையைப் பறித்து உள்ளே வைத்துக் கொண்டு இன்னும் சில நாள் தங்க வேண்டும் என்று கேட்டான்; இன்னொரு வள்ளல் ஆகிய காரி மன்னன் நான் போனபோது வயலில் இருந்து களைகட்டிப் பயிர் நடவு செய்து கொண்டே வருக! அம்மையே! நீரும் என்னோடு பயிர் நடுங்கள் என்று என்னிடம் நாற்றுகளைத் தந்தான்; ஒருமுறை பெரிய ஆலோசனைக் கூட்டத்தில் சேரன் இருந்த போது அதையறியாமல் உள்ளே சென்று விட்டேன். சேரன் கோபிக்கவில்லை! வாராய் அம்மையே என்று என்னை அழைத்து அமர்த்தி என்னை சிறப்பு செய்தான். இம்மூன்று மன்னர்களின் செய்கை என் நெஞ்சில் எப்போதும் இனித்து நிலைத்த பதிவுகள். ஆனால் இந்த மூன்றையும் எவ்வளவு உயர்வாக நினைக்கிறேனோ அவற்றைவிட மிக உயர்ந்தது இந்த நீலப்புடவை!

ஒளவை உடனே இதையே ஒரு பாடலாகப் பாடி அதற்குச் சாகா வரம் தந்துவிட்டார்: பாடல் இதோ

பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் – சேரமான்
வாராயென் றழைத்த வாய்மையும் இம்மூன்றும்
நீலச்சிற் றாடைக்கு நேர்

பாரி மகளிர் கண்ணீர் மல்க ஒளவைப் பாட்டி காலில் விழுந்து வணங்கினர். உணவுண்டு ஒளவை எழுந்தார்.

“தாயே! அரண்மனை விருந்துகள் ஆயிரம் பார்த்திருப்பீர்கள்! ஏதோ, எங்களால் முடிந்த அளவில் கீரையைச் சமைத்துப் போட்டோம்! எப்படி இருந்ததோ!” என்றார்கள் பாரி மகளிர்.

“என்ன கீரையா போட்டீங்க! பாரிக்குப் பிறந்து இப்படி பொய் சொல்லலாமா?”

பாரி மகளிர் திடுக்கிட்டுப் போனார்கள்.

ஒளவை சொன்னார்: ” கீரை என்று பொய் சொல்லி தேவாமிர்தத்தை அல்லவா போட்டீர்கள்!”

பாரி மகளிர் நயமான இச்சொற் கேட்டுச் சொக்கிப் போய் நின்றிருக்கையில் ஒளவையார் கண்ணை மூடி தியானித்துவிட்டு நயமான ஒரு நற்றமிழ்ப் பாட்டைப் பாடினார்.

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து -பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செறியாதோ கைக்கு. (அடகு – கீரை)

ஒளவை அறம் பாடும் வாயால் இப்படி அருந்தமிழால் பாடிய உடனே பாரிமகளிர் கைகளில் பொன்னால் செய்த வளையல்கள் மாயமாய் வந்து பொருந்தின என்பது வரலாறு. சார்! இப்படி எல்லாம் நடக்குமா என்று கேட்காதீங்க. தெய்வத்தமிழால் இதுவும் முடியும்; இன்னமும் முடியும்.!!

இவண்

மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top