You are here
Home > செய்திகள் > வரலாற்றில் மறைந்த வேலையாள்!!

வரலாற்றில் மறைந்த வேலையாள்!!

உண்மையில் ஒருவர்க்கு வேலையாள் அமைவது என்பது உயர்ந்த வரம்; எல்லோருக்கும் அமையாது! சபாபதி என்று ஒரு பழங்கால திரைப்படம்; முதலாளி சோடா உடைத்துக் கொடு என்பார்; உடனே சபாபதி சோடா பாட்டிலை உடைத்து நீட்டுவான். இந்தக் கொடுமையை என்ன சொல்ல! ஆனால் திரைப்படம் முழுவதும் முதலாளி அந்த வேலையாளொடு தான் உழலுவான்! அந்தப் படமே அந்த வேலையாளின் முட்டாள்தன புராணம் தான்!

இப்படி இருந்தும் அந்த வேலையாளை முதலாளி இறுதிவரை நீக்கவில்லை. ஏன்? பாரதியார் சரியாகச் சொன்னார்: “சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடப்பதில்லை!”

மாறாக சிறந்த வேலையாளை நாம் தலையில் வைத்துக் கொண்டாடுவதும் இல்லை. இப்படி சரித்திரத்தில் மறைந்து போன சேவகர்கள் எத்தனையோ பேர்! அப்படி ஒருவரைத் தான் நாம் இங்கு காணப் போகிறோம். உலகிற்கு இவரைக் காட்டுவது நம் கடன்!

அப்பர் அடிகளின் வரலாற்றில் வந்து போகிறார் இந்த சேவகர்! அப்பர் வரலாற்றைக் கூறும் எவரும் இவரைக் கண்டுகொள்வதே இல்லை! ஆனால் சேக்கிழார் இவரை மிக உயர்ந்த நிலையில் காட்டுகிறார்.

நேரடியாக நிகழ்விற்கு வந்து விடுவோம். அப்பர் அடிகள் கொடிய சூலை நோயினால் பாதிக்கப்படுகிறார். கோலிக் டிசீஸ் (Colic disease) என்று ஆங்கில மருத்துவம் அடையாளம் காட்டும் இந்த நோய்க்கு இன்று வரை சரியான மருந்து இல்லை; அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்று கூறுகிறது மருத்துவ விஞ்ஞானம்! நோய் வந்தவர்கள் புரண்டு புரண்டு வலியால் துடிப்பர். அப்பர் “குடரோடு துடக்கி முடக்கி இட” என்று பாடுகிறார்.

இந்நோயை அப்பர் தரும சேனராய் சமண் சமயத் தலைவராய் இருந்த போது சந்திக்கிறார். சமண சமயத்தில் அவருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது மந்திர சிகிச்சை தான். மந்திரங்கள் எல்லாம் வடமொழி மந்திரங்கள்! அவற்றைக் கொண்டு நோய் நீங்க தாமே ஓதினார் அப்பர். ஒன்றும் பலனளிக்கவில்லை அதன் பின் அவரை யடுத்துள்ள சமண குருமார்கள் மந்திரங்களை ஓதி மயிற்பீலியால் தடவுகிறார்கள். முன்னையிலும் வலி கூடுகிறது. “இது நம்மால் போக்கரிது” என்று அவர்களும் கைவிட்டார் என்று சேக்கிழார் பாடுகிறார்.

எல்லோரும் கைவிட்ட நிலையில் அப்பருக்குத் தன் தமக்கையார் நினைவு வருகிறது. இது தான் உலக இயற்கை. தாங்கரும் துன்பம் வரும்போது தான் உறவிடம் செல்வோம். ஏன் ? இறைவனாகிய நீங்கா உறவிடம் கூட துன்பம் வரும்போது தானே ஓடுகிறோம்! எப்படி தமக்கையாரிடம் செல்வது? அவரோ எதிர் முகாமில் இருக்கிறார்; தாமோ இந்த முகாமின் தலைவர்! மேலும் இப்போது உடல் நலிந்த நோயாளி!

அறைக்குள் யாரோ நுழைகிறார்கள்; பார்த்தால் உணவு கொண்டு வந்து நிற்கிறார் அந்த பணியாளர்! இத்தனை நாள் உணவை வைத்துவிட்டு போவார்; நோய் வந்தபின் அவர் அப்பருக்கு உணவைக் கவளம் கவளமாக ஊட்டுவிப்பாராம்; மிகவும் கனிவோடும் பணிவோடும் ஊட்டுவாராம்! பளீரென மின்னல் போல ஓர் உணர்வு தோன்றுகிறது. இவரை அனுப்பி தமக்கையாரை இங்கே தருவிக்கலாமா? சேக்கிழார் இதனை இப்படிக் கூறுகிறார்.

“பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியர் உளராக்
கொண்டவர் பால்ஊட்டுவான் தனை விட்டார் குறிப்புணர்த்த”

இங்கே தான் அந்தப் பணியாளர் பெயரே குறிப்பிடப்படாமல் அப்பர் வரலாற்றில் அறிமுகமாகிறார்.

இவரைப் பார்த்தவுடன் ஒரு தெய்வக் குறிப்பு கிடைக்கிறதாம் அப்பருக்கு. சேக்கிழார் ஓரிரு வரிகளில் ஓராயிரம் உண்மைகளை கூறும் ஆற்றல் உடையவர். இந்தப் பணியாளன் பெயரைச் சொல்லாமல் அவனது செய்கையால் ஊட்டுவான் என்று ஒரு பெயருடன் அவனை அறிமுகப்படுத்துகிறார். காரணம், ஊட்டுவான் என்பதற்குப் பல உட்பொருள்கள் உண்டு. சில இங்கே கூறலாம்.

சமண சமய மந்திரங்கள் மற்றும் குருமார்கள் கைவிட்டனர். இனி, இவனை பார்க்கிறேன். இவன் என் வாயில் உணவை மட்டுமா ஊட்டுபவன்? இவன்தான் என் தமக்கையாரிடம் என்னைச் சாரும்படியான நல்லூழையும் ஊட்டுபவன். நோயின் தீர்வு மட்டுமா ஊட்டுபவன்? இவனே பிறவி நோயையும் தீர ஊட்டுபவன்! ஆ! பண்டை உறவை ஊட்டுபவன்; நோயின் தீர்வை ஊட்டுபவன்; உடனாக பிறவி நோயையும் தீர்க்கும் நன்மையையும் ஊட்டுபவன்! எனவே சேக்கிழார் அவன் பெயரையே “ஊட்டுவான்” என்று சொன்னதை என்ன சொல்லி பாராட்டுவது?

அடுத்து அந்த ஊட்டுவானுக்கு தமக்கையாரிடம் சென்று அழைத்துவா என்று சொல்ல வேண்டும். ஆனால் அப்பரோ பேசும் நிலையில் இல்லை; சுடுகின்றது சூலை! சைகையால் குறிப்பு காட்டுகிறார்.

இங்கே தான் அந்தப் பணியாளனின் பெருமை விளங்குகிறது!. சைகையைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமே! இறந்து போகிறவர்கள் சைகைகள் எல்லாம் சொன்னவர் நினைப்பிற்கு மாறாக என்னென்னவாக உருவெடுக்கின்றன என்ற கூத்துக்கள் எல்லாம் நாம் அறிந்தவையே!

அப்பரின் பணியாளர் இங்கே அப்பரின் சைகையை சரியாகப் புரிந்து கொண்டாராம்! ஓ! அக்காவை அழைத்து வரச் சொல்கிறார் என்று அவரின் குறிப்பை உணர்ந்தாராம்! அந்த குறிப்புணர்ந்ததால் அப்பர் தமக்கையார்பால் ஊட்டுவான் தனை செல்ல விட்டார் என்பதை ” ஊட்டுவான் தன்னை விட்டார் குறிப்புணர்த்த” என்று பாடினார் சேக்கிழார். இங்கே “குறிப்புணர்ந்த” என்று கூறாமல் “குறிப்புணர்த்த” என்று சேக்கிழார் கூறியதற்குள்ளும் ஒரு பொருள் இருக்கிறது. அதாவது இருவரும் குறிப்பால் உணர்த்திக் கொள்ள என்பதை இருவருக்கும் இடையில் குறிப்புணர்த்த என்று பாடினார். வளவள என்று விவரிக்கவில்லை சேக்கிழார். குறிப்பால் உணர்த்திக் கொண்டனர் இருவரும் என்பதை குறிப்பாலேயே உணர்த்துகிறார் சேக்கிழார்.

முடிவில் குறிப்பு சரியாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டது என்ற உறுதி தோன்றிய பிறகு ஊட்டுவானை, சரி! போய்விட்டு வா! என்று அனுப்பி வைத்தாராம் அப்பர். இதனை, “ஊட்டுவான் தனை விட்டார்” என்று கூறினார் சேக்கிழார்.

“ஏவா மக்கள் மூவா மருந்து” என்பர். சோடா உடை என்றால் சோடா பாட்டிலை உடைக்கக் கூடாது; குறிப்புணர்ந்து பணி ஆற்றவேண்டும். குறிப்புணர்வில் கை தேர்ந்த அந்த ஊட்டுவான் அப்புறம் என்ன செய்தார் ?

தொடரும்……..

இவண்

மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top