சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில்
பகுதி – 13 – செந்தமிழ் வேள்விச் சதுரர்
ஏப்ரல் 2013 இதழின் தொடர்ச்சி. . .
இதுவரை 12 பகுதிகளில் முருகப்பெருமான் கேள்விகள் கேட்க சிவபெருமான் பதில் கூறி வருவதான சர்வ ஞான உத்தர ஆகமத்தின் ஒரு பகுதி வரை பார்த்து வந்தோம். சென்ற இதழில் பாவனை எத்தனை வகைப்படும், எந்த பாவனை பயன்படும் என்று விளக்கினார் சிவபெருமான்.
அதனை மேலும் விளக்கி துவித பாவனையை விட்டு அத்துவித பாவனையால் சிவம் நானெனப் பாவிப்பவனுக்கு முற்றுணர்வுத்தன்மை விளங்குவது திண்ணம் என்று கூறுவது இந்தப் பாடலில் (15) எடுத்துரைக்கப்படுகிறது. வழக்கம் போல் முருகப்பெருமான் – சிவபெருமான் உரையாடலாக முதலில் இதைக் காண்போம்:
முருகப்பெருமான்: மனத்தோடு கூடி நின்று பாவிப்பது, மனத்தினின்றும் நீங்கி நின்று பாவிப்பது, இந்த இரண்டிற்கும் மேலே நின்று பாவிப்பது, பசித்தவன் உண்டவன் போல பாவிப்பது ஆகிய பாவனைகள் நான்கும் பயன் தரா என்று மிக நன்றாக விளக்கினீர்கள். பாவனைகளில் இத்தனை வகை உண்டா என்று தாங்கள் கூறிய பின் தான் இந்த உலகம் சிந்திக்கும். இனி எந்தப் பாவனையில் உயிர் இறைவனோடு முற்றுமாக ஒன்றி நிற்கும்? என்று விளக்குங்கள்.
சிவபெருமான்: முன்னர்க் கூறிய நான்கு பாவனைகளிலும் உள்ள குறை இதுவே. பாவிக்கின்றதும் பாவிக்கப்படுவதும் வேறு வேறு பொருள்களாக இருத்தல் என்பதே குறை. பொருள்கள் வேறாக இருக்கும் வரை அவை எந்தப் பாவனையினாலும் ஒன்றாகவே முடியாது. எனவே சிவனாகிய நான் வேறு; உயிராகிய தாம் வேறு எனத் தொடர்பின்றி இருப்பதாக எண்ணும் வரை என்னோடு உயிர் ஒன்ற முடியாது. எனவே சிவன் வேறு; நான் சிவனின் வேறு என்று திரிவு பட வேறாக காண்பதனை விட்டால் தான் வழியேற்படும்.
முருகப்பெருமான்: அப்படியானால் சிவனாகிய தாங்களும் உயிராகிய அவையும் வேறு வேறல்லவா? இரண்டும் ஒன்றா? அப்படித் தானே சிலர் நானே கடவுள் என்று சொல்லித் திரிகிறார்கள். அப்படியானால் அதுதான் உண்மையா?
சிவபெருமான்: அறிவே வடிவானவன் நீ! ஆனால் உயிர்களின் பொருட்டு அறியாமையை ஏறிட்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறாய். கடவுளும் உயிரும் ஒரே பொருளானால் ஒன்றையொன்று அடைவது என்ற பேச்சு எப்படி நிகழ முடியும்? நானே கடவுள் என்ற அறிவிப்பே இது பொய் என்பதை நிலை நாட்டும். இரண்டும் ஒன்றானால் நானே கடவுள் என்று யார் யாருக்கு அறிவிக்கிறார்? அப்படி அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? நானே கடவுள் என்பதிலிருந்து நான் என ஒன்றும் கடவுள் என ஒன்றும் ஆக இரு பொருள்கள் உள்ளன என்பது தேற்றமாகிறது. ஆக இந்தக் கூற்று தனக்குத் தானே முரணானது; தனக்கு மரணத்தைத் தானே விளைவித்துக் கொள்வது.
முருகப்பெருமான்: அப்படியானால் இந்தச் சிக்கலுக்கு என்ன தான் வழி?
சிவபெருமான்: பொருள்கள் வேறு வேறாயிருக்க வேண்டும்; ஆனால் அவற்றிற்கிடையே தொடர்பும் இருக்க வேண்டும். அப்படியானால் தான் நம்மோடு தொடர்புடைய இது தொடர்ந்து வரும் தொடர்பினால், நான் ஏன் அதுவாகவே மாறிவிடக் கூடாது என்று பாவிக்கவும் அப்படியொரு பாவனைக்கும் இடம் தரும்.
முருகப்பெருமான்: உண்மை; உண்மை!
சிவபெருமான்: எண்ணிப் பார்! வேறான உயிர்களோடு வேறான பரம்பொருள் எப்போதும் தொடர்பிலேயே உள்ளது. இதைத் தான் இரண்டற்ற கலப்பு (அத்துவிதம்) என்கிறோம். அதாவது பொருளால் இரண்டு; கலப்பினால் ஒன்று.
முருகப்பெருமான்: கலப்பினால் எப்போதும் ஒன்றாய் இருக்கும் போது மீண்டும் இறையும் உயிரும் கலக்க முயற்சி ஏன்?
சிவபெருமான்: நன்கு கேட்டாய்! உடலும் உயிரும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் உடல் உயிரல்ல; உயிர் உடலல்ல. ஆக இதுவும் ஒருவகைக் கலப்பு தான் என்றாலும் ஒன்றின் தன்மை மற்றொன்றில் தோன்றாத கலப்பு. பொருளால் ஒன்றும் கலப்பு. தன்மையாலும் இரண்டும் கலத்தல் அது வேறு கலப்பு.
முருகப்பெருமான்: உதாரணம் ஒன்றைக் கூறி விளக்கினால் மேலும் தெளிவு பெறலாம் அல்லவா?
சிவபெருமான்: (சிரித்துக் கொண்டே) சொல்லலாம் தான்! உதாரணங்களிலும் குறை உண்டு. அதனால் முற்றுவமை என்று ஒன்றிருக்க முடியாது என்பது உவமை இலக்கணம். அப்படி இருந்தால் இரண்டும் ஒரே பொருள் ஆகி விடும் என்பதும் உவம இலக்கணம். எனவே ஒருவாறு விளக்குவதே உதாரணம். அதன் அடிப்படையில் ஓர் உதாரணம் கூறுகிறேன் கேள்! இரும்பும் காந்தமும் தம்முள் ஈர்ப்புடையன. காந்தத்தில் இரும்புத்துண்டு ஒட்டிக் கொள்ளும். அவ்வாறு ஒட்டிய நிலையில் காந்தமும் துண்டும் இருப்பது பொருட்கலப்பு. சில நேரம் கழித்து அந்த இரும்புத் துண்டும் காந்தத் தன்மை ஏறி சிறிய காந்தமாகிவிடும். இது பொருட்கலப்பினால் தொடர்ந்த தன்மைக் கலப்பு. இரண்டு கலப்புகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டாயா?
முருகப்பெருமான்: நன்கு புரிந்தது தந்தையே! ஆனால் இப்படி பலவேறு இரும்புகள் காந்தமாகவே மாறி விடுவதால் அதைப் போன்று பரம்பொருளின் எண்குணங்களும் ஏறி நின்ற உயிர்களும் பரம்பொருள்கள் ஆகிவிடாதா? ஆனால் அவையும் கடவுளும் என்று பரம்பொருள் பல என்று கொள்ளலாமா? இதைத் தானே சிவசமவாதம் கூறுகிறது?
சிவபெருமான்: இது தான் உதாரணத்தில் உள்ள குறை என்று முன்னாலேயே சொன்னேன். இருப்பினும் இதையும் சற்று விளக்குகிறேன். காந்தத் தொடர்பால் காந்தமான இரும்புத்துண்டுகளும் சில காலம் கழித்து காந்தத் தன்மையை இழந்து மீண்டும் வெறும் இரும்புத்துண்டாக மாறிவிடுவதைப் பார்க்கிறோம். எனவே எப்போதும் காந்த ஆற்றலின் துணையின்றி இரும்பு காந்தமாகி விடாது. இரும்பு இரும்பு தான்; காந்த ஆற்றல் காந்த ஆற்றல் தான். ஆகவே சிவசமவாதம் நிகழவே வாய்ப்பில்லை.
முருகப்பெருமான்: ஆகவே பொருட்கலப்பு ஏற்கெனவே உடைய இரு பொருள்களிடையே தான் தன்மைக் கலப்பிற்குப் பாவனை செய்வது பலனளிக்கும் பாவனையாக இருக்க முடியும் என்பது ஒன்று. அப்படியே தன்மைகள் கலந்தாலும் காந்த ஆற்றல் இரும்பாகாதது போல உயிர்கள் கடவுளாக ஆகிவிட முடியாது என்று கூறுகிறீர்கள்..
சிவபெருமான்: ஆமாம். எனவே உயிர்கள் தமக்கும் கடவுளுக்கும் ஏற்கெனவே உள்ள பொருட்புணர்ப்பால் அதாவது முப்புணர்ப்பு (அத்துவிதம்) என்பதில் பொருட்புணர்ப்பால் சிவத்தின் தன்மையைத் தம்மிடம் பாவிக்கத் தொடங்கினால் அதற்குச் சிவோகம் பாவனை என்று பெயர். இந்தச் சிவோகம் பாவனை தான் பலனளிக்கக் கூடிய பாவனை. இந்தச் சிவோகம் பாவனையில் சிவனே நான்; நானே அச்சிவன் என்று ஒன்றித்து சிந்திக்க வேண்டும். சிந்திக்க சிந்திக்க உயிர் எவ்விடத்தும் வியாபகம் ஆகி விடும். ஆகி வியாபகமான ஆன்மாக்களை அதாவது உயிர்களை எல்லாம் உள்ளடக்கிய சர்வான்மாவாகிய சிவனின் பெருவியாபகத்தைக் காண நேரும்.
முருகப்பெருமான்: அதாவது உயிர் வியாபகம் பெறும்; அந்த வியாபகம் இறைவனின் வியாபகத்தில் அடங்கும், அது தானே! எனில் இந்த இரு வியாபகங்களையும் விரித்துக் கூறுங்களேன்!
சிவபெருமான்: வியாபகம் என்பது வடமொழி. விரிவு என்பது அதன் பொருள். உயிரின் வியாபகம் என்பது உயிரின் விரிவு; இறைவனின் வியாபகம் என்பது இறைவனின் விரிவு. இறைவனின் விரிவில் உயிரின் விரிவு அடக்கம். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் இறைவனின் விரிவு என்பது என்றும் உள்ளது; ஏற்கெனவே உள்ளது. ஆனால் உயிரின் விரிவு என்பது சுருங்கிய நிலையில் இருந்து விரிவது. அது விரியக் கூடியதாய் இருந்தாலும் ஆணவம் என்னும் அறியாமையினால் சுருங்கி நின்றது: விரியக் கூடிய உயிரினை அணுப்படுத்தி அறியாமை அணுப்போல் சுருக்கி வைத்ததால் அந்த அறியாமைக்கு ஆணவம் என்று பெயர் வந்தது.
முருகப்பெருமான்: உயிர் சிவப்பாவனையால் விரிந்தாலும் சிவனின் முழுவிரிவை அடைய முடியுமா?
சிவபெருமான்: எப்படி முடியும்? உயிர் சிற்றறிவும் சிறுதொழிலும் உடையது ஆதலால் அதன் விரிவு சிவனின் முழுவிரிவுக்கு ஒப்பாகாது. ஒரு தாமரை முழுதாக விரிந்தது என்னும் போதும் ஒரு குடை முழுதாக விரிந்தது என்னும் போதும் தாமரை மற்றும் குடையின் முழுவிரிவு என்பது அவ்வவற்றின் அளவில் முழுவிரிவு அடைந்தன எனலாமே ஒழிய உலகளவில் முழுதாக விரிந்தன என்று கொள்ள முடியாதல்லவா? அது போலத் தான் உயிர் வியாபகம் அடையும் என்ற போதே உடனாக சர்வான்ம வியாபகனான சிவனைக் காணும் என்றேன்.
முருகப்பெருமான்: ஒரு முறை உயிர் அதன் முழுவிரிவைப் பெற்று சிவத்தின் தன்மையான முற்றறிவைச் சிவன்வழியாகப் பெற்றால் அது அப்படியே நிலைத்திருக்குமா?
சிவபெருமான்: சிவன் வேறு; நான் வேறு என்ற சிந்தனையில் இருந்து ஒழிந்த சிவோகம் பாவனையை உயிர் தொடர்ந்து செய்ய வேண்டும். இதில் விகற்பம் நேர்ந்தால் அதாவது இந்த அனன்னிய பாவனையில் மாற்றம் நேர்ந்தால் போச்சு! எப்போதும் அந்தப் பாவனையிலிருந்து பிரியாமல் சேர்ந்தே இருக்க வேண்டும்; இந்தச் சேர்க்கையே சிவயோகம் என்பது. இந்தச் சிவயோகிக்குச் சிவனது எண்குணங்கள் மேலிட்டு முற்றறிவுடன் காணும் வாய்ப்புத் தொடரும்.
இவையனைத்தையும் உள்ளடக்கிய அந்தப் பாடல், இதோ, வருமாறு:
சிவன்வேறே யென்றுநான் சிவனினும்வே றென்றும்
திரிவுபட வேறாகக் காண்பதனை விட்டு
சிவனேநான் நானேயச் சிவனெனஒன் றாகச்
சிந்திப்பான் எவ்விடத்தும் வியாபகனும் ஆகி
அவனேஅச் சருவான்மா வானசிவ சொரூபம்
ஐயமறக் காண்குவனாம் அனனியபா வனையால்
சிவனேநான் எனவிகற்பா தீதனா யிருந்த
சிவயோகிக் குச்சருவக் ஞத்துவமும் விளங்கும்.
– தொடரும்.