You are here
Home > சைவக் கேள்வி > சைவக் கேள்விச் சிற்றம்பலம்

சைவக் கேள்விச் சிற்றம்பலம்

சைவக் கேள்விச் சிற்றம்பலம்

செந்தமிழ் வேள்விச்சதுரர்

பகுதி – 12

ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி . . .

அறிவாகரர்: அன்பரே! யோகம் என்பதைப் பதஞ்சலி முனிவர் தான் முதலில் கண்டு பிடித்ததாகக் கூறியது எத்தனை பெரிய பொய் என்பதைச் சான்று காட்டி விளக்கினால் அம்பலத்தார் எல்லாம் ஆச்சரியப் படுவீர்கள்.

சிற்றம்பல அன்பர்: சொல்லுங்கள் ஐயா! நாங்களும் இன்னும் எங்களைப் போல இன்னும் உலகில் பலரும் எவ்வளவு அறியாமையில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தங்களிடம் விவரங்களைக் கேட்க கேட்க உணர்ந்து வருகிறோம்.

அறிவாகரர்: ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகத்தார் ‘ஸ்ரீபதஞ்சலி யோக சூத்ரம்’ என்ற இந்த யோக நூல் சூத்திரம் முழுமையும் பதிப்பித்திருக்கிறார்கள். இதன் ஆசிரியர் ஸ்வாமி என்கிறவர்; இவர் ஒரு வைணவர்.

இந்த நூலில் 25-ஆம் பக்கத்தில் யோக சூத்ரம் எழுதிய பதஞ்சலி முனிவரின் காலம் கி.மு.2-ம் நூற்றாண்டு என்கிறார். அதாவது இன்றைக்கு 2200 ஆண்டுகளுட்கு முன் இந்நூல் யோகம் பற்றி எழுதப்பட்டது பதஞ்சலி முனிவரால் என்கிறார். அவரே 2500 ஆண்டுகட்கு முன்னரே புத்த மதத்தில் சாங்கிய மதக் கலப்பற்று யோகமும் ஒரு விதத் தியானமும் (வைபாசனா) இருந்து வந்துள்ளது என்று எழுதுகிறார். ஆக, பதஞ்சலி முனிவர் தான் முதன் முதலில் உலகிற்கு யோகத்தை எடுத்துரைத்தவர் என்று பரவலாகக் கூறப்பட்டு வரும் கருத்தை அவரே மறுத்த அவரது ஒப்புதல் வாக்குமூலம் தான் மேலே சுட்டியது.

சரி, இதை ஆராய்ந்தோமானால் புத்தர் அதற்கு முன்னரே யோகத்தைப் பரப்பிவிட்டவர் ஆகிறார். எப்போது என்றால் இவரது கணக்குப் படி பதஞ்சலி முனிவர்க்கு 300 ஆண்டுகட்கு முன்னரே புத்தர் யோகம் பற்றிக் கூறிவிட்டார் என்று ஆகிறது.

இது ஒரு புறம் இருக்க, சிந்து சமவெளி நாகரிகத்தைக் கண்டு பிடித்து வெளியிட்ட மேலை நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த நாகரிகம் அங்கு வாழ்ந்த தமிழர் நாகரிகம் என்றும் அது அநேகமாக கி.மு.3500 ஆண்டுகட்கு முந்தையது என்றும் அறிக்கை வெளியிட்டார்கள். அதோடு அவர்கள் கண்டெடுத்து வரிசைப் படுத்திய பொருள்களில் யோகம் செய்து கொண்டிருக்கிற நிலையில் சில சிலைகளும், நாணயத்தின் முத்திரைகளும் கிடைத்துள்ளன என்றால் அந்த அறிக்கைப் படியும், முத்திரைப் படியும் 2000+3500=5500 ஆண்டுகட்கு முன்னரே தமிழர்கள் யோகம் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

மேற்படி பகுதியில் சுமார் 15 ஆண்டுகட்டு முன்னர்  மீண்டும் இந்திய அரசு (அப்போது பி.ஜே.பி. அரசில் இருந்தது) ஆய்வு நடத்தியது. அதன் மூலம் சிந்து வெளி நாகரிகம் கி.மு. 7500 –ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று விஞ்ஞான ரீதியாகக் கண்டுபிடித்து அதனை இந்திய அரசே வெளியிட்டது. எனவே முன் கூறியபடி 5500 ஆண்டுகள் அல்ல – 9500 ஆண்டுகட்கு முன்னரே தமிழர்கள் யோகம் பற்றி அறிந்திருந்தார்கள் என்பதோடு ஒரு நாணயத்தில் அதை முத்திரையாகப் பதிக்கும் அளவில் அவர்களிடையே அது பரவி இருந்தது என்றும் அறிகிறோம்.

இதனால் 2200 – ஆம் ஆண்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்ரம் எழுதுவதற்கு முன்னே, 2500 – ஆம் ஆண்டில் புத்தர் யோகத்தைப் பரப்புவதற்கு முன்னே, ஏறத்தாழ ஏழாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழன் யோகம் பற்றி அறிந்திருந்திருக்கிறான். இந்நிலையில் ஆரிய முனிவரான பதஞ்சலி தான் உலகிற்கே யோகம் என்பதை அறிமுகப் படுத்தியது போலவும், பதஞ்சலியின் யோக சூத்திரம் தான் முதல் யோக நூல் போலவும், அதுவே யோகத்திற்கு ஆணைச் சான்று (Authority) போலவும் சிலர் பரப்பி வருவது  எத்தகைய மோசடி என்பதையும், பசப்புரை என்பதையும் நடுநிலையோடு ஆயும் எவர்க்கும் எளிதல் விளங்கும்.

அவை மட்டுமல்ல; தொல்காப்பிய உரைகளிலேயே யோகத்தின் எட்டுறுப்புகள் கூறப்படுகின்றன. அது தூய தமிழில் ‘ஓகம்’ எனப்பட்டது. அவற்றை எடுத்துக் கொண்டு அட்டாங்க யோகம் என்று ஏதோ இவர்கள் புதிதாகக் கண்டுபிடித்தது போல் பசப்புகிறார்கள்.

தொகைநிலையை பிரத்தியாகாரம் ஆக்கினர்; ஒன்றுதலை தாரணை ஆக்கினர்; உள்குதலை தியானம் ஆக்கினர்; நொசிப்பை சமாதி ஆக்கினர். வளிநிலை என்பதை பிராணாயாமம் ஆக்கினர்; இருக்கையை ஆசனம் ஆக்கினர்; நல்லது செய்தலை நியமம் ஆக்கினர்; அல்லது ஓம்பலை இயமம் ஆக்கினர். இப்படி ஓகத்தின் எட்டுக் கூறுகளுக்கும் உள்ள தூய தமிழ்ப் பெயர்களே இந்நெறி தமிழ்ச் சிந்தையில் முகிழ்த்தது என்பதற்கு அழியாத சான்றாகும்.

சிற்றம்பல அன்பர்: ஐயா! கேட்கக் கேட்க தமிழர்கள் எம் மூதாதையர் என்று ‘ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே’. பாரதியின் இந்த வாக்கு வேறு எதற்கோ நிகழ்ந்தாலும் இப்போது எம் தமிழ் இனத்திற்கே இது மிகப் பொருத்தம்!

அறிவாகரர்: கி.பி.7- ஆம் நூற்றாண்டில் கூட ஓகத்தை நம் திருமுறை அன்பர்கள் பலவாறாக அதன் தூய தமிழ்ப் பெயர்களோடு ஆண்டிருக்கிறார்கள். அப்பர் சுவாமிகள் பிராணாயாமத்தை உயிராவணம் என்று தமிழ்ச் சொல்லில் கூறினார். ‘உயிராவணமிருந்து உற்று நோக்கி’ என்பது அவர் வாக்கு. அடுத்து ‘ஒன்றியிருந்து நினைமின்கள்’ என்று தாரணையைப் பாடியுள்ளார். ‘உள்கினேன் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி’ என்று தியானத்தை உள்குதல் என்று தூய தமிழ்ச் சொல்லால் அடையாளம் காட்டி இருக்கிறார். சம்பந்தரும் உள்குவது பற்றிப் பாடியுள்ளார். சுந்தரர், ‘சிம்மாந்து சிம்புளித்து சிந்தையினில் வைத்து’ என்று பாடியதில் பிரத்தியாகாரத்தைச் சிம்புளித்து என்று தூய தமிழ்ச் சொல்லால் அடையாளப் படுத்தி உள்ளார். நால்வர் பெருமக்கள் எல்லாம் இவ்வாறு ஓகத்தின் கூறுகளுக்குத் தமிழ்ச் சொல்லைப் பெய்து இது தமிழ்நெறி என்று காட்டியிருக்க தமிழர்கள் அதிலிருந்து விலகி தியானம், சமாதி என்பன போன்று வடமொழிச் சொற்களையே பயன்படுத்துவதால், ‘யோகம் என்றாலே பதஞ்சலி முனிவர் தான்; அவர் தான் முதலில் யோக சூத்ரத்தை எழுதியவர்’ என்று பிறரால் மிக எளிதாகப் பசப்ப முடிகிறது.

சிற்றம்பல அன்பர்: ஐயா! நாம் இழந்ததை எண்ணி ஏங்கவா? பாராமுகம் செய்து ஒதுங்கியதை எண்ணி பதைக்கவா?

அறிவாகரர்: இன்னும் கேளுங்கள்! பதஞ்சலியின் நூலில் சமாதிபாதம், சாதனாபாதம், விபூதிபாதம், கைவல்யபாதம் என நான்கு பாதங்கள் வருகின்றன. மொத்தம் 195 சூத்ரங்கள் உள்ளன.

‘அத: யோகாநு சாஸனம்’

என்று முதல் சூத்ரம் தொடங்குகிறது.

‘புருஷார்த்த சூன்யானாம் குணாணாம் ப்ரதிப்ரஸவ:

கைவல்யம் ஸ்வப்ரதிஷ்டா வா சிதி சக்தேரிதி II’

என்பது இறுதியாக வரும் 195 – ஆவது சூத்ரம்.

முதலிலிருந்து இறுதி வரை நூலில் இறைச்சிந்தனையே கிடையாது. இந்நூலில் இறைவனும் ஒரு உயிரே! அதாவது விசேஷ உயிர். ஈஸ்வரன், “புருஷ விசேஷஹா” என்று அழைக்கப்படுகிறான்.

சைவர்கள் கூறும் நானெறிகளில் மூன்றாவதாக வரும் யோகம் இறைவனை இன்றியமையாதது; இறைவனைத் தன்னில் உணர்வது. இந்த யோகமும், பதஞ்சலியின் இறைச் சிந்தனையே இல்லாத யோகமும் எப்படி ஒன்றாக வைத்து எண்ண முடியும்?

பதஞ்சலி கூறும் யோகம் சைவத்தால் நிராகரிக்கப்பட வேண்டியது. சைவம் மட்டுமே இதை நிராகரிக்கிறது! பிரம்ம சூத்திரம் எழுதிய வியாசரும் இந்தப் பதஞ்சலி யோகத்தை நிராகரிக்கிறார்; என்று மேற்கூறிய பதிப்பில் 9-ம் பக்கத்தில் கூறப்படுகிறது.

‘யோக ஸ்ம்ருதியை இயற்றிய நான்முகனும் ஆன்மாக்களில் ஒருவரே. அவர் சிற்சில சமயங்களில் ரஜோ, தமோ, குணத்திற்கு அடிமையாகிறார். ஆகையால் அவர் இயற்றிய யோக ஸ்ம்ருதியும் (பதஞ்சலி யோக சூத்ரத்தின் மூலநூல்) ஏற்கத் தக்கதன்று என்று ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீபாஷ்யத்தில் தெளிவாகக் காட்டி இருக்கிறார்’ என்றும் இப்பதிப்பில் காணப்படுகிறது.

ஸ்ரீமத் சங்கரரும் யோக மதத்தைக் கண்டித்திருக்கிறார் என்று கூறுகிறது பதிப்புரை.

இவ்வாறு அந்தக் கூட்டத்தாராலேயே நிராகரிக்கப்பட்ட மதம் தான் யோக மதம் நிறுவிய இந்தப் பதஞ்சலி யோக சூத்ரம்.

இந்த யோக சூத்ரம் சைவ நானெறியில் ஒன்றான யோக நெறிக்கு மூலமாவது எப்படி? எந்தத் தொடர்பும் இல்லாத இந்த இரண்டையும் ஒன்று போல காட்டிப் பேசுபவர்களின் பசப்பையும், மோசடியையும் என்ன சொல்ல!

அது அட்டுமல்ல; இது வடவேதத்தின் அடிப்படையில் எழுந்த தரிசனங்களில் ஒன்று என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த 195 சூத்திரங்களில் ஓரிடத்தில் கூட வடவேதங்கள் பேசப்படவே இல்லை; இது எப்படி வடவேத தரிசனங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது என்பதே ஒரு மோசடி. ஒரு வேளை யோகத்திற்கும் வட வேதத்திற்கும் முடிச்சுப் போடப் பார்த்து எல்லாம் வட வேதத்திலிருந்தே வந்தன என்று காட்ட எழுந்த மோசடி என்றே கூற வேண்டும்.

இன்னொரு மோசடியும் கூற வேண்டும். வேறு ஒரு பதிப்பில் முதலிலும் இறுதியிலும் சிவபெருமான் துதியாக சுலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பதஞ்சலி முனிவர் எழுதிய யோக சூத்ரத்தில் அப்படி எதுவுமே இல்லை. சேஸ்வர சாங்கியம் தான் யோகம் என்று கூறியதால் ஒரு சிவன் துதி இடைச்செருகலாக எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேற்கூறிய இந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பின் ஆசிரியர் வைணவராதலால் நூலின் இறுதியில் “நாராயணாயேதி ஸமர்ப்பயாமி” என்று முடியும் ஒரு சுலோகத்தை மூலபாடத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் சேர்த்தளித்திருக்கிறார். எதிலும் மோசடி என்றால் என்ன சொல்வதென்றே புரியவில்லை!

எப்படியோ போகட்டும்! வடவேத தரிசனங்களில் ஒன்றான யோக மதம் என்பதன் உண்மையைத் தமிழர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் அறிந்து அகன்றால் நல்லது!

–          தொடரும். . .

Top